திங்கள், 24 ஜனவரி, 2011

நான் ஏன் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை?



இதற்கெல்லாம் ஒரு பதிவா? இந்தப் பதிவினால் தேசத்திற்கு என்ன நன்மை? இல்லை, பதிவுலகத்திற்குத்தான் என்ன நன்மை? இப்படிக் கேட்பவர்கள் எல்லோரும் தனியாக ஒரு ஓரமாக உட்காரவும். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று கடைசியில் சொல்லுகிறேன்.  மற்றவர்கள் தொடர்ந்து படிக்கவும்.

என்னுடைய ஒரு பதிவில் நான் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு ஒரு நண்பர் அப்படி என்ன பெருமை அதில் இருக்கிறது என்று கேட்டிருந்தார். பெருமைக்காக நான் அவ்வாறு சொல்லவில்லை. என்னுடைய கையாலாகாத தன்மையைத்தைத்தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். ஏன் என்னால் சினிமா விமர்சனம் எழுத முடிவதில்லை என்று யோசித்ததில் பத்து காரணங்கள் புலப்பட்டன. அவைகளை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


1.   சினிமா விமர்சனம் எழுத சினிமாவைப் பார்க்க வேண்டும். இரண்டரை மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கவேண்டும். அது என்னால் முடிவதில்லை.


2.   இப்போது நடிக்கும் நடிக நடிகைகளை எனக்கு அடையாளம் தெரிவதில்லை. டி. ஆர். ராஜகுமாரி, எம். கே. தியாகராஜ பாகவதர் இவர்களுக்கு அப்புறம் சினிமாவில் யாரையும் எனக்குத் தெரியவில்லை.


3.   இப்போது சினிமாவில் பேசம் வசனங்கள் புரிவதில்லை. புரிந்தாலோ ஆபாசமாய் இருக்கிறது.


4.   சினிமா பார்த்துக்கொண்டு இருக்கும்போது நான் தூங்கி விடுவதால் நான் விடும் குறட்டைச் சத்தம் தொந்தரவாய் இருப்பதாக போலீஸ் வரையில் கம்ளெய்ன்ட் போய் ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷனில் இருக்க வேண்டியதாய் போய்விட்டது.


5.   ஒரு தடவை இப்படித் தூங்கி விழித்தபோது திரையில் ஆக்ரோஷமாக நடந்த ஒரு சண்டையைப்பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கையை வீச அது பக்கத்து சீட்டுக்காரர் மூக்கில் பட்டு சீரியஸ் ஆகி அதற்காக ஒரு தரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன்.


6.   நடனக்காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருக்கின்றன. லலிதா-பத்மினி-ராகினி ஆடினதுதான் நடனம். மற்றவர்கள் ஆடுவது எல்லாம் ஆபாசம்.


7.   பாட்டுகளின் சொற்கள் புரிவதில்லை. மெட்டும் பிடிப்பதில்லை. எம.கே.டி அந்தக்காலத்தில் பாடியமன்மத லீலையை வென்றார் உண்டோமாதிரி ஒரு பாட்டு உண்டா?


8.   காதல் காட்சிகள் முதலிரவுக் காட்சிகளை நினைவூட்டுகின்றன. இளைஞர்கள் சினிமா பார்த்து கெட்டுப்போகாமல் என்ன செய்வார்கள்?


9.   இரவுக் காட்சிகளுக்குப் போனால் இருட்டில் தனியாக உட்கார்ந்திருக்க பயமாய் இருக்கிறது.


10. அந்தக்காலம் மாதிரி இப்போது சினிமா பாட்டுப் புஸ்தகங்கள் விற்பதில்லை.


இந்தக்காரணங்களினால் நான் சினிமா பார்ப்பதில்லை. அதனால் சினிமா விமர்சனமும் எழுதுவதில்லை.

ஒரு நண்பர் சொல்லுகிறார் - சினிமா விமர்சனம் எழுத சினிமாவைப் பார்க்க வேண்டியதில்லையே - அப்படீங்கறார். எனக்கு அந்த வித்தை இன்னும் கைவரவில்லை.


பின்குறிப்பு: ஓரமாக உட்கார்ந்திருப்பவர்களெல்லாம் எழுந்து வீட்டுக்குப் போகவும். மற்றவர்களெல்லாம் அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கவும்.






                                



 
இன்றைய சினிமா நடிகையின் நிலையைப்பாருங்கள். போட்டுக்கொள்ள         ஒரு கிழியாத துணி கூட இல்லை.