வியாழன், 17 மே, 2012

நேனோ டெக்னாலஜி


இது ஒரு விஞ்ஞானத் தொழில்நுட்பப்பதிவு. இது கொஞ்சம் படித்துப் புரிந்து கொள்வது சிரமம். படித்துவிட்டு மொக்கை என்று சொல்லாதீர்கள். சும்மா, சும்மா தாய்க்குலத்தை கிண்டல் செய்து மட்டும் பதிவுகள் எழுதினால் நான் விஞ்ஞானி என்று உலகிற்கு எப்படித் தெரியும்?

நரி வாலறுந்த கதை உங்களுக்குத் தெரியும். அது எப்படி எல்லா நரிகளையும் வாலறுக்க வைத்தது என்பதுவும் உங்களுக்குத் தெரியும்.

அது போல இப்பொழுது விஞ்ஞானிகள் ஒரு புது வார்த்தையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதுதான் "நேனோ டெக்னாலஜி" என்னும் வார்த்தை. அதாவது இந்த டெக்னாலஜி உலகத்தை அப்படியே புரட்டிப் போடக்கூடிய டெக்னாலஜி என்று சொல்லப்படுகின்றது.

இது என்னவென்று தெரிந்து கொள்ளலாம் என்று கூகுளைப் புரட்டிப் பார்த்ததில் நான் அறிந்தவற்றை இங்கே கூறுகிறேன்.

அதற்கு முன் சில விஞ்ஞான வார்த்தைகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

Atom: அணு: இந்த வார்த்தையை எல்லோரும் அறிவோம். உலகிலுள்ள அத்தனை பொருட்களும் அணிக்களால் ஆனவை. அணுக்களைப் பிரிக்க முடியாது என்று முதலில் கருதினார்கள். ஆனால் பிறகு அணுவைப் பிரிக்க முடியும். அணுவில் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்கள் இருக்கின்றன என்று கண்டு பிடிக்கப்பட்டது.

நான் இந்த அணுவைப் பற்றி என் முதுகலைப்படிப்பின் போது படித்திருக்கிறேன். பிறகு ஆசிரியரான பிறகு மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதற்காக மீண்டும் ஆழமாகவும் படித்திருக்கிறேன்.

ஆனால் இதுவரை அணுவைக் கண்ணால் பார்த்ததில்லை. அது எப்படி ஒரு பொருளைக் கண்ணால் பார்க்காமலேயே அதைப் பற்றிப் பாடம் நடத்த முடியும் என்ற கேள்வி இதற்குள் உங்கள் மனதில் தோன்றியிருக்கவேண்டும். அதுதான் தத்துவ ஞானம் என்று சொல்லப்படுவது. ஒன்றைப் பார்க்காமலேயே அது இப்படித்தான் இருக்கும் என்று பலவித ஐதீகங்களைக் கூறி நம்ப வைப்பது.

ஏறக்குறைய கடவுள் நம்புக்கை மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். கடவுளைப் பார்த்தவர்கள் ஒருவருமில்லை. ஆனால் எத்தனை தர்க்க வாதங்களுடன் கடவுள் இருக்கிறார் என்று நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள், பாருங்கள்.

Molecule: தனிமங்கள் என்றால் புரியும் என்று நினைக்கிறேன். (Elements). தனிமங்கள் பொதுவாக ஒரு அணு அல்லது இரண்டு அல்லது அதற்கு மேலும் அணுக்கள் சேர்ந்ததாக இருக்கும். இதை அணுக்கூட்டம் என்று சொல்லலாம். இயற்கையில் இதுதான் அடிப்படைக் கூறு. அதாவது எப்படி ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கு ஒரு கட்டடம் அருவாகிறதோ அவ்வாறே இந்த அணுக்கூட்டங்கள் பல சேர்ந்து ஒரு பொருளாக உருவாகிறது.

Nanometer: இது ஒரு அளவு. ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு. இதை கற்பனை செய்துதான் பார்க்கவேண்டும். அணுக்கூட்டங்களின் பரிமாணம் இந்த அளவுகளில்தான் இருக்கும்.

இப்போது ஏறக்குறைய உங்கள் தலை சுற்ற ஆரம்பித்திருக்கும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டுப் பிறகு படியுங்கள்.

அனைத்து ரசாயன மாற்றங்களும் அணுக்களுக்குள்தான் நடைபெறுகின்றன. ஆனால் கட்டிடத்தை ஒவ்வொரு செங்கல்லாக வைத்துக் கட்டுகிறமாதிரி இல்லை. கோடிக்கணக்கான அணுக்கள் பங்கெடுக்கும் நிகழ்ச்சிதான் ரசாயன மாற்றங்கள். இந்த மாற்றங்கள் உலகில் பல்லாயிரக்கணக்கான இடங்களில் ஒவ்வொரு நொடியிலும் நடந்து கொண்டே இருக்கின்றன.

இந்த ராசாயன மாற்றங்கள் இயற்கையாகவும் செயற்கையாகவும் நடக்கின்றன. ஒர் எளிய உதாரணம் கொடுக்கிறேன். தாவரங்களின் இலையிலுள்ள பச்சையகங்கள் தன்னுள் இருக்கும் தண்ணீரையும், காற்றில் இருக்கும் கரியமல வாயுவையும் சேர்த்து சூரிய ஒளியின் சக்தியினால் ஸ்டார்ச் உற்பத்தி செய்கின்றது. பகல் நேரங்களில் ஒவ்வொரு விநாடியும் இந்த ரசாயனச் சேர்க்கை நடந்து கொண்டே இருக்கிறது.

இந்த பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளின் உணவிற்கு இந்த ரசாயன மாற்றமே அடிப்படை. ஆனால் நாம் இதை அணுவளவு கூட கண்டு கொள்வதில்லை. அது பாட்டுக்கு இயற்கையாக நடந்து கொண்டிருக்கிறது. அதன் பலனை நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

இப்போது இந்த விஞ்ஞானிகள் என்ன சொல்லுகிறார்கள் என்றால், இந்த மாதிரி தானாக நடக்கும் ரசாயன மாற்றங்கள் வருங்காலத்திற்குப் போதாது. பலவிதமான புதிது புதிதான பொருட்களின் உற்பத்திகள் தேவைப்படும். அதற்காக இந்த ரசாயன மாற்றங்களை நாங்கள் எங்கள் கட்டுக்குள் கொண்டு வரப் போகிறோம். அது எப்படி என்றால் நாங்கள் மிக மிகச் சிறிய தொழிற்சாலைகளை உருவாக்கப்போகிறோம். அவைகளில் ஒவ்வொரு அணுதான் ரசாயன மாற்றங்களில் ஈடுபடும். இப்படி நிறைய தொழிற்சாலைகளை வடிவமைத்து உங்கள் டேபிள் மேல் வைக்கக்கூடிய அளவில் கூடத் தயார் செய்து விடுவோம். அவை உங்களுக்குத் தேவையான பொருட்களை அவ்வப்போது தயார் செய்து கொடுத்து விடும்.


கொக்கு எப்படிப் பிடிப்பது என்று ஒரு கிராமத்தான் ஒரு விஞ்ஞானியைக் கேட்டானாம். அந்த விஞ்ஞானி அதற்கு என்ன சொன்னான் தெரியுமா? நல்ல வெய்யில் நேரத்தில் கொஞ்சம் வெண்ணை எடுத்துக்கொண்டு போய் அந்தக் கொக்கின் தலையில் வைத்து விடு. வெயிலில் அந்த வெண்ணை உருகி கொக்கின் கண்களை மறைத்து விடும். அப்போது போய் கொக்கை லபக்கென்று பிடித்துக் கொள்ளலாம் என்றானாம்.

அதற்கும் இதற்கும் அதிக வித்தியாசம் இல்லையென்று எனக்குப் பட்டது. புது வார்த்தைகளை உபயோகித்து மக்களை மயக்குகிறார்கள். பழைய கள், புதிய மொந்தை. இந்த நேனோடெக்னாலஜி பற்றி அதிக விவரம் அறிந்தவர்கள் உங்களில் அநேகர் இருக்கலாம். இதைப்பற்றி மேல் விவரங்கள் கொடுத்தால் நானும் இன்னும் கொஞ்சம் அறிவாளியாகிக் கொள்வேன்.