சுமைதாங்கி எனும் சினிமாவில் கண்ணதாசன் எழுதி எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்து பிபிஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் நிறையப் பேருக்கு நினைவிருக்கலாம்.
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
கண்ணதாசன் மிகுந்த பொருட்செறிவோடு எழுதிய பாடல் இது.
மயக்கம் என்பது இல்லாததை இருப்பதாக அல்லது இருக்கும் ஒன்றை வேறொன்றாக காணும் மனநிலை. இந்த நிலையில் இருக்கும் ஒருவன் எந்த ஆக்கபூர்வமான செயலையும் செய்யும் சக்தி அற்றவனாகிறான். மாயை என்னும் சொல்லிலிருந்து வந்தது மயக்கம்.
கலக்கம் என்பது மனம் தெளிவான நிலையை இழந்து நிற்கும் நிலை. இந்த நிலையில் எது சரி, எது தவறு என்று பகுத்தறியும் ஆற்றலை ஒருவன் இழந்து விடுகிறான்.
இந்த இரண்டு நிலைகளும், ஒருவன் எதிர்பாராத அல்லது மிகப்பெரிய வாழ்க்கைப் பிரச்சினைகள் ஏற்படும்போது அடையும் நிலைகளாகும். இது சாதாரணமாக பெரும்பலானோருக்கு ஏற்படும் அனுபவமே. இதிலிருந்து வெளிவந்து அந்த பிரச்சினையின் தீர்வுக்காக செயல் புரிபவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.
இந்த மயங்குதல் மற்றும் கலங்குதல் நிலையைக் கடப்பது எப்படி என்பது வாழ்க்கையின் ஒரு பெரும் சவாலாகும். மன திடம் உள்ளவர்களுக்கு இது சுலபம். மற்றவர்களுக்கு இது கடினம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான சில தீர்வுகள் இருக்கின்றன. அவரவர்களுக்குப் பிடித்தமானவற்றைக் கடைப்பிடிக்கலாம்.
முழுவதுமாக ஆண்டவன் பேரில் இந்தச் சுமையை இறக்கி வைத்து விடுவது. இது கடவுள் பக்தி உள்ளவர்களால் மட்டுமே முடியக்கூடியது. ஆண்டவன் நேரில் வந்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பானா என்ற கேள்விக்குப் பதில் இதுதான். ஆண்டவன் நேரில் வராவிட்டாலும் பிரச்சினை தீர்வதற்கு உண்டான ஏதாவது ஒரு வழியைக் காண்பிப்பான்.
உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது உதவிக்கு வந்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கலாம். அல்லது இரண்டொரு நாளில் உங்களுக்கே ஒரு வழி தோன்றலாம். எப்படியோ பிரச்சினை தீர்ந்து விடும். சிறிது நாட்கள் கழித்து நீங்களே நினைப்பீர்கள். "இந்தப் பிரச்சினைக்குப் போயா நாம் இவ்வளவு வருந்தினோம்" என்று.
அடுத்து உங்களுக்கு வேண்டிய பெரியவர்கள் யாராவதிடம் ஆலோசனை கேட்கலாம். இதை ஒரு தன்மானப் பிரச்சினையாகக் கருத வேண்டியதில்லை. அடுத்தவரிடம் யோசனை கேட்பதா என்று நினைக்கக் கூடாது. உடல் தலம் குன்றினால் டாக்டரிடம் போகிறோம். மனதில் கலக்கம் இருந்தால் அடுத்தவரிடம் யோசனை கேட்பதில் என்ன தவறு? அவர்கள் இந்தப் பிரச்சினையை பாரபட்சமில்லாமல் அணுகி ஒரு தீர்வு கண்டுபிடிக்கக் கூடும்.
இந்த நிலையில் ஒரு உண்மையை நீங்கள் உணர வேண்டும். இந்தப் பிரச்சினையில் உங்களால் ஏன் உடனடியாக ஒரு முடிவு எடுக்க முடியவில்லை என்றால் அந்தப் பிரச்சினை நீங்கள் சம்பந்தப்பட்டது. அதனால் நீங்கள் அதனுடன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு இணைந்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் பாரபட்சமில்லாமல் அந்தப் பிரச்சினையை அணுக முடியவில்லை.
இங்குதான் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட தாமரை இலைத் தண்ணீர் உதாரணம் பொருத்தமாக இருக்கும். அடுத்து நான் எழுதிய "தள்ளிப் போடுதல்" உத்தியும் இந்த மாதிரி பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். இரண்டு நாளைக்கு ஒன்றும் செய்யாமல் இருந்தால் மூன்றாம் நாள் உங்களுக்கே ஏதாவது ஒரு நல்ல யோசனை தோன்றும்.
ஒரு முனிவர் ஒரு ராஜாவிற்குச் சொன்ன புத்திமதியை இங்கு நினைவு கூர்கிறேன். "இதுவும் கடந்து போகும்". இதுதான் அவர் சொன்ன புத்திமதி. எந்தப் பிரச்சினை ஆனாலும் காலம் அதை மாற்றி விடும் என்பதே அதன் கருத்து.
நடைமுறைக்கு பெரிதும் உதவும் எளிமையான இன்னும் ஒரு வழியைச் சொல்கிறேன் கேளுங்கள். "சாமியின் மன அலைகள்" என்றொரு வலைத்தளம் இருக்கிறது. அதைத் தவறாமல் படித்து வந்தால் வாழ்க்கையில் எந்தச் சிக்கல் வந்தாலும் சமாளிக்க அந்த தளத்தில் வழி சொல்லப்பட்டிருக்கும்.
எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை.