திங்கள், 27 நவம்பர், 2017
27 - தற்கொலை செய்வது எப்படி?
தற்சமயம் செய்தித் தாள்களில் தற்கொலைச் செய்திகள் அதிகமாக வருகின்றன. சாதாரண, அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
ஒரு ஆசிரியை மாணவிகளைத் திட்டினார் என்பதற்காக நான்கு மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்கிறார்கள். புருஷனுடன் சண்டை போட்டு விட்டு குழந்தைகளுடன் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
பெற்றோர் செலவிற்கு காசு கொடுக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்பவர்கள் ஏராளம். தான் விரும்பிய படிப்பில் சேர்க்கவில்லை என்பதற்காக என் உறவினர் பையன் உயிரை மாய்த்துக்கொண்டான்.
ஏன் இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரணப் பிரச்சினைகளுக்கு மனமொடிந்து போகிறார்கள் என்று புரியவில்லை. இவர்களின் வளர்ப்பு முறையில் ஏதாவது கோளாறு இருக்கிறதா? அல்லது இவர்கள் வாழும் சமுதாய சூழ்நிலை இவர்களைப் புறக்கணிக்கிறதா?
எனக்கு ஒன்று புலனாகிறது. அதாவது இன்றைய சூழ்நிலையில் இளைஞர்களுக்கும் வளர்ந்தவர்களுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி உண்டாகியிருக்கிறது. இன்றைய குடும்பம் ஒரு தாய் தகப்பன் ஒரு பிள்ளை என்பதாக இருக்கிறது. வளரும் பிள்ளைகளுக்கு வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவ பெற்றோர்களுக்கு நேரமில்லை.
எந்நேரமும் டிவி, சினிமாக்களைப் பார்த்துக்கொண்டு குழந்தைகளின் வளர்ப்பில் அக்கறை காட்டுவதில்லை. பணக்காரர்களின் வீட்டில் மட்டுமல்ல, நடுத்தர மக்களின் வீட்டிலும் இப்படித்தான் நடக்கிறது. வாழ்க்கையைச் சந்திக்க வேண்டிய மன தைரியத்தை பிள்ளைகளிடம் ஏற்படுத்த வேண்டிய கடமையிலிருந்து பெற்றோர்கள் தவறி விடுகிறார்கள் என்று படுகிறது.
படிப்பு என்பது வாழ்க்கையைப் புரிந்து கொள்வது என்பது போய் மார்க் வாங்குவதற்கு மட்டும் என்று ஆகிவிட்ட பிறகு பிள்ளைகளுக்கு நல்ல மார்க் வாங்குவதுதான் வாழ்க்கை என்று ஆகி விட்டது. அக்கம் பக்கத்தில் இருக்கும் மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவதோ பழகுவதோ அரிதாகி விட்டது. உலகம் என்றால் படிப்பும் மார்க்கும் என்று ஆகிவிட்ட நிலையில் அவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிய மனத்துணிவு இல்லை.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்தப் பிரச்சினையை ஆழ்ந்து சிந்தித்து தீர்வு காணாவிட்டால் எதிர்கால சமுதாயம் மனத்துணிவற்ற ஒரு சமுதாயமாக மாறிவிடும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)