வியாழன், 17 டிசம்பர், 2009

பதிவுலக நுணுக்கங்கள்நான் ஒரு 38 வருடங்கள், ஒரு ஆராய்ச்சியாளனும் ஆசிரியனுமாக இருந்து ஓய்வு பெற்றவன். இவ்வளவு நீண்ட காலம் பணி புரிவது அரசுத்துறையில் மட்டுமே சாத்தியம் என்பது அரசுப்பணியில் இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றாகத்தெரியும். ஓய்வு பெற்ற பின்பும் பழகின ஆராய்ச்சி மனப்பான்மை இருந்து கொண்டே இருக்கிறது. அதனால்தான் இந்த பதிவுலகத்தின் பக்கம் வந்தேன்.
யாருக்குமே தெருச்சண்டையை ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். அப்படி ஒரு சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு உண்மை புலப்பட்டது. சில பதிவுகள் மட்டும் எப்படி பிரபலமாகின்றன என்றால் அவைகளில் மக்கள் இடும் பின்னூட்டங்கள்தான் காரணம் என்ற அரிய உண்மையை கண்டுபிடித்தேன். அதிலும் பதிவைப்பற்றிய வெறும் பின்னூட்டங்கள் போதாது. பதிவின் கருத்தை விட்டு விட வேண்டும். பதிவூட்டங்களில் வரும் கருத்துக்களை எடுத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் ஏசிக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆரிய-திராவிட வகுப்பு வாதம்தான் சீக்கிரம் சூடு பிடிக்க நல்ல விஷயம்.
ஒரு பள்ளிக்கூட கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். வாத்தியார் ஒரு மரத்தைப்பற்றி கட்டுரை எழுதச்சொன்னார். பையன் பால்காரரின் பையன். அவனுக்கு மாட்டைப்பற்றிதான் தெரியும். என்ன செய்தானென்றால் கட்டுரையை இப்படி ஆரம்பித்தான். ஒரு காட்டில் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு மாடு கட்டியிருந்த்து என்று ஆரம்பித்து இரண்டு பக்கம் மாட்டைப்பற்றியே எழுதி கட்டுரையை முடித்து விட்டான்.
இப்படி பதிவில் எழுதப்பட்டிருக்கும் விஷயமே வேறாக இருக்கும். ஆனாலும் எப்படியாவது நமது சமாசாரத்திற்கு (மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு) விவாதத்தை இழுத்து நம் கும்மியை போட்டுவிட வேண்டும். இப்படி ஒரு பதிவில், பதிவு 4 பக்கம், கும்மிகள் 80 பக்கம். இப்படி போடச்சொல்லி அந்த பதிவரே சொன்னாலும் சொல்லியிருக்கலாம். இப்படித்தான் பதிவுகளைப்பிரபலப்படுத்த வேண்டும்.
தொடரும்.....