வெள்ளி, 3 டிசம்பர், 2010

இந்திய உணவுப்பஞ்சம் 1943-50


மீள்பதிவு:

இந்திய உணவுப்பஞ்சம் 1943-50

1943 ல் இந்திய நாட்டின் ஜனத்தொகை ஏறக்குறைய முப்பது கோடி மட்டுமே. நாட்டை வெள்ளைக்காரர்கள் ஆண்டுகொண்டு இருந்தார்கள். இரண்டாம் உலக யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டிஷ் பிரதமர். உலக யுத்தத்தை சமாளிப்பதற்காகவே அவரை பிரிட்டிஷ் பார்லிமென்ட் ஸ்பெஷலாக பிரதமராக அமர்த்தியிருந்தது. அவர்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக ஆட்சி புரிந்தார். இரும்பு இதயம் படைத்தவர். இந்திய மக்கள் உணவுப் பஞ்சத்தினால் இறந்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னபோது “let them die. They will breed like rats” சொன்னவர்.


நமது நாட்டிலுள்ள அனைத்து செல்வங்களும் யுத்தத்திற்காக கட்டாயக் கொள்முதல் செய்யப்பட்டு யுத்த முனைக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. மனிதர்கள், உணவு தானியங்கள், துணிகள், மற்றும் எல்லாப் பொருட்களும் யுத்தத் தேவைக்காக கொள்முதல் செய்யப்பட்டு சென்று கொண்டிருந்தன. தொழிற்சாலைகள் அனைத்தும் யுத்தத்திற்கு வேண்டிய பொருட்களைத்தான் தயார் செய்து அனுப்பிக்கொண்டிருந்தன. உள்நாட்டு உபயோகத்துக்காக மிகக்குறைந்த அளவு பொருட்களே விநியோகிக்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் பற்றாக்குறை.
ரோடுகளில் கிடக்கும் ஆணிகள், லாடங்களுக்கு கூட கிராக்கி. அவைகளைச் சேகரிக்க அந்தக்காலத்து TVS பஸ்களின் பின்புறத்தில் ஸ்பெஷல் காந்தங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அரிசிக்கு ரேஷன் முறை கொண்டு வரப்பட்டது. வாரத்துக்கு ஒரு முறை அரிசி போடப்படும். முதலில் 16 அவுன்ஸ் (அதாவது ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஏறக்குறைய 400 கிராம் அரிசி, மூன்று வேளைக்கும் சேர்த்து) ரேஷன் கொடுத்தார்கள். பிறகு 12, 10, 8 என்று படிப்படியாகக் குறைத்து ஒரு சமயத்தில் 6 அவுன்ஸ் ரேஷன் மட்டுமே போடப்பட்டது. இந்த சமயத்தில் ரொட்டி வாங்க டோக்கன் கொடுத்தார்கள். அதை பேக்கரியில் கொடுத்தால் ரொட்டி கொடுப்பார்கள்.

இந்த சமயத்தில்தான் தமிழ்நாட்டுக்கு பஞ்சாப் கோதுமை அறிமுகப் படுத்தப்பட்டது. ரேஷன் கடைகளில் இது விற்கப்பட்டது. உள்ளூரில் விளையும் நாட்டுக்கோதுமையை விவசாயிகள் தங்கள் தேவைக்குப் பயிரிட்டு வந்தார்கள். அதை ரவை பண்ணி உப்புமா செய்து சாப்பிடுவார்கள். இந்த பஞ்சாப் கோதுமையைமொட்டைக் கோதுமைஎன்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஏனெனில் உள்ளூர் கோதுமை நீளமாக இருக்கும். வடநாட்டுக்கோதுமை குட்டையாக, குண்டாக இருக்கும். வட இந்திய சப்பாத்தி, தமிழர்களுக்கு அப்போது பரிச்சயம் இல்லை. அந்தக் கோதுமை சப்பாத்திக்குத்தான் நன்றாக இருக்கும். அதனால் சப்பாத்தி செய்வது எப்படி என்று பெரிய பிரச்சாரமே நடந்தது. ஹோட்டல்களில் இட்டிலி, தோசைக்குப் பதிலாக சப்பாத்தி போடும்படி அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்தினார்கள்.
கல்யாண விருந்துகளில் 25 பேருக்கு மேல் சாப்பாடு போடக்கூடாது என்று கவர்மென்ட் உத்திரவு போடப்பட்டது. எல்லா உணவுப்பொருட்களும் அரசு கட்டுப்பாட்டில் இருந்தது. தானியங்களை தனிப்பட்டவர்கள் இடம் விட்டு இடம் கொண்டு போகக்கூடாது. இப்படியெல்லாம் இருந்து, ஒரு வழியாக யுத்தம் முடிவுக்கு வந்தது. யுத்தம் முடிந்தவுடன் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் காந்திக்கு வாக்குக் கொடுத்ததினால்தான், காந்தி இந்தியர்களை யுத்தத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆகவே யுத்தம் முடிந்தவுடன் இந்திய அரசியல்வாதிகள் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வற்புறுத்த ஆரம்பித்தனர். பிரிட்டிஷ்காரனுக்கும்உடும்பு வேண்டாம், கை தப்பித்தால் போதும்என்கிற எண்ணம் வந்துவிட்டது.
ஏனென்றால் …..
1. இந்தியாவில் இருந்து கொண்டு போவதற்கு மிச்சம் மீதி ஒன்றுமில்லை.
2. இங்குள்ள மக்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டதால் இந்தியாவை இனிமேலும் அடிமை நாடாக வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை.
3. உலக நாடுகளின் கொள்கை மாற்றம்
4. தவிர இங்கிலாந்து நாட்டையே யுத்த சீரழிவுகளிலிருந்து மீட்கவேண்டிய வேலை தலைக்கு மேல் இருந்தது.
5. இந்தியாவை வறுமையின் பிடியிலிருந்து மீட்க ஏகப்பட்ட செலவாகும்.
இக்காரணங்களினால் இந்தியாவுக்கு 1947 ல் வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்தான்.
இந்த 1943-47 காலகட்டத்தில் இந்தியாவில் ஏகப்பட்ட பட்டினிச்சாவுகள் ஏற்பட்டன. வங்காளத்தில்தான் மிக அதிகம். தமிழ்நாட்டிலும் கூட வயிறு நிறைய சாப்பிட்டவர்கள் பாதிப்பேர்தான். ராமநாதபுரத்தில் புளியங்கொட்டையைக்கூட வறுத்து தின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டு ஏழைகளுக்கு கஞ்சி வார்க்கப்பட்டது. இதில் நான் கூற வருவது என்னவென்றால் அன்றைக்கு இருந்த முப்பது கோடி ஜனங்களுக்கே உணவு உற்பத்தி போதவில்லை என்பதுதான். அன்றைக்கு விவசாயம் நான் போன பதிவில் சொல்லியிருந்தபடி இயற்கை முறையில்தான் நடந்துகொண்டிருந்தது.
இன்றைக்கு 120 கோடி மக்களுக்கும் நமது விவசாயம் உணவு கொடுக்கிறது என்றால் அது எப்படி சாத்தியமாயிற்று

பின் குறிப்பு : என்னுடைய சென்ற பதிவின் காரணத்தை இங்கு சென்று பார்க்கவும்.