செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பாகம் 5



விவசாய ஆராய்ச்சி நிலையங்களில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி மகசூல் குறையாமல் விவசாயம் செய்யும் முறைகளைப்பற்றி பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் இந்தப் பிரச்சினையை நன்கு உணர்ந்திருக்கிறது. அவ்வப்போது விஞ்ஞான நிபுணர்கள் கூடி விவாதிக்கிறார்கள். பிரச்சினை என்னவென்று எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். தீர்வுகளைப்பற்றியும், அவைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் என்பதைப்பற்றி இன்னும் தெளிவான கருத்துகள் உருவாகவில்லை.
நிலத்தடி நீர் குறைவதினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள்.
1.   விவசாயம் நலிவுறும். கிணற்றுப் பாசனத்தையே நம்பியுள்ள விவசாயம் குறைந்துபோகும். விவசாயம் நலிவுற்றால் என்ன நடக்கும் என்று எல்லொரும் அறிவார்கள். சாப்பாட்டுக்கு லாட்டரி அடிக்கவேண்டிய நிலை உருவாகும். இப்போது இருக்கும் போக்குவரத்து வசதிகளினால் உணவுப் பொருட்களை இன்னோரிடத்திலிருந்து கொண்டு வர முடிந்தாலும் மொத்த உற்பத்தி குறைவதினால் நாட்டுக்கு இழப்புதான்.

2.   நீர்த்தேவை அதிகமாக உள்ள தொழில்கள் நசியும். திருப்பூர் போன்ற நகரங்கள் நிலத்தடி நீரை வெகுவாக நம்பியிருக்கின்றன. பின்னலாடைத்தொழில் மூலம் பல்லாயிரக்கானவர்கள் வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். கோடிக்கணக்கான ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று நாட்டுக்கு அந்நியச்செலாவணியை ஈட்டித்தரும் தொழில் இது. இம்மாதிரி பல தொழில்கள் நிலத்தடி நீரைச் சார்ந்து இருக்கின்றன. அவை எல்லாம் நிலத்தடி நீர் இல்லாவிட்டால் நசித்துவிடும்.

3.   கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் குடியிருக்கும் மக்கள் தங்கள் குடிநீர்த் தேவைக்கு நிலத்தடி நீரையே நம்பியிருக்கிறார்கள். குடிநீர் என்றால் குடிப்பதற்கு மட்டும் என்று அர்த்தம் இல்லை. வீட்டிற்கு வேண்டிய அனைத்து உபயோகங்களுக்கிமான நீர் என்றுதான் அர்த்தம். நிலத்தடி நீர் அருகும் பட்சத்தில் குடியிருப்புக்ளையே காலி செய்யவேண்டிய நிலை உருவாகக்கூடும்.

4.   இதைத்தொடர்ந்து அந்தப்பகுதியில் இருக்கும் மற்ற சிறுசிறு தொழில்களும் நசித்துப்போகும். இச்சிறு தொழில்கள் மற்ற பெரும் தொழில்களையும் மக்கள் குடியிருப்புகளையும் சார்ந்திருப்பவையாக இருக்கும்.

5.   சுற்றுச்சூழல் மாசடையும். சரியான விவசாயமும், தொழிலும், மக்கள் நடவடிக்கைகளும் இருந்தால்தான் ஒரு பகுதி சுத்தமாக இருக்கும். இல்லாவிடில் அந்தப் பகுதி தரிசாகப்போய் பாழடைந்து சுற்றுச் சூழல் மாசுபட ஏதுவாகும்.