வியாழன், 15 டிசம்பர், 2011

பெயர் மாற்றம்

சின்ன வயசுல என்னை எல்லோரும் "கந்தா, காரவடை" என்று கூப்பிட்டபோது ஏன் என் பெற்றோர் எனக்கு இந்தப் பெயரை வைத்தார்கள் என்று நொந்துகொண்டதுண்டு. பிறகு வயதான பிறகு இது கடவுள் பெயரல்லவா, இந்தப் பெயர் நமக்குக் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சமாதானமாகி விட்டேன்.

பதிவு எழுத வந்த சமயத்தில் நினைவுக்கு வந்த பெயர் அலுவலகத்தில் உபயோகப் படுத்திய பெயரான Dr.P.Kandaswamy,Ph.D. என்பதுதான். ஏனென்றால் என் அலுவலகத்திலிருந்து போகும் எல்லாக் கடிதங்களிலும் இந்தப் பெயர்தான் கடிதத்தின் மேல் பகுதியில் இருக்கும். அதன் கீழ் என்னுடைய அலுவலகப் பதவியின் பெயர், விலாசம் எல்லாம் இருக்கும். அந்த அலுவலக ஆபீசர் தோரணை முற்றிலும் விலகாத காரணத்தினால் அந்தப் பெயரை வைத்து பிளாக்கை ஆரம்பித்து விட்டேன்.

அதன் பிறகு இந்தப் பெயரைப் பற்றி எதுவும் சிந்திக்கவில்லை. சமீபத்தில் கூகூளார் இந்த வலைப்பதிவில் கொண்டுவந்த மாற்றங்களில் பயோ டேட்டாவை புதிப்பிப்பதும் ஒன்று. எப்படியோ அதில் நான் பார்த்த வேலைகளைப் பற்றிய குறிப்பு போடும்போது புரொபசர் என்று குறிப்பிட்டு விட்டேன். கூகுளார் அப்புறம் என் பெயரை Prof. Dr.P.Kandaswamy,Ph.D என்று போட ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பெயர் கண்றாவியாய் இருந்தாலும் நான் அதைப்பற்றி தீவிரமாக சிந்திக்கவில்லை.

என் பதிவைப் படித்த ஒரு அமெரிக்காவில் வசிக்கும் அன்பர், என்னங்க அப்போ நீங்க SSLC, Plus 2, இளம்கலை, முதுகலைப் படிப்பு எல்லாம் படிக்கலியா, ஏன் அதையெல்லாம் பேரோட போடாம உட்டுட்டீங்கன்னு கேட்டுட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கூகுளாண்டவரே சரணம் என்று சரண்டைந்ததில் அவர் சொன்னார், மகனே, இந்த வம்பே வேண்டாம், சர்வதேச ஸ்டைலில் ஒரு பெயர் கொடுக்கிறேன், அதை வைத்துக்கொள் என்றார்.

அந்தப் பெயர்தான் Palaniappan Kandaswamy. Palaniappan  என்னுடைய அப்பா பெயர்.  Kandaswamy  என்பது என்னுடைய பெயர் என்று நான் கூறவேண்டியதில்லை. இப்படியாக என்னுடைய இரண்டாவது நாமகரண விழா நடந்தேறியது. அனைவரும் வாழ்த்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.