திங்கள், 9 ஜனவரி, 2012

நிறைவேற முடியாத இரண்டு கனவுகள்.



சிறு வயதிலிருந்தே புது இடங்களுக்கு டூர் போக எனக்கு மிகுந்த ஆசை இருந்து வந்திருக்கிறது. அப்போது வசதி இல்லை. பின்பு படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த பின், பல இடங்களைப் பார்த்தும் ஆகிவிட்டது. இருந்தாலும் ஊர் சுற்றும் ஆசை இன்னும் இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன் மனைவியுடன் மலேசியா, சிங்கப்பூர் போய் வந்து ஒரு நாலைந்து பதிவுகள் தேத்தினேன்.

அப்போது சில சங்கடங்களை அனுபவித்தேன். அந்த அனுபவத்தினால்தான் இந்த இரண்டு கனவுகளும் (நிறைவேற வாய்ப்பு 100 % இல்லாத, இரண்டு ஆசைகள்) தோன்றின.

ஆசை ஒன்று
இரண்டு செட் காவி டிரெஸ். ஒன்று போட்டுக்கொள்ள. இரண்டாவது மாற்றிக்கொள்ள. தலையை மொட்டை அடித்து, அதற்கு ஒரு காவித்துணியை பித்துக்குளி முருகதாஸ் ஸ்டைலில் கட்டிக் கொள்ளவேண்டியது. தோளில் ஒரு ஜோல்னாப்பை. அதற்குள் மாற்று டிரெஸ். ஒரு போர்வை. வேறு பணம் காசு, ஒன்றும் எடுத்துக்கொள்ளக் கூடாது. பயணங்கள் முழுவதும் ஓசி. சாப்பாடும் ஓசி. திண்ணை கண்ட இடத்தில் தூக்கம். தண்ணி கண்ட இடத்தில் நித்திய கடமைகள்.
இப்படி ஒரு ஆறு மாதம் இந்தியா முழுவதும் சுற்றி வரவேண்டியது. இந்த ஆசை எந்த ஜன்மத்திலாவது நிறைவேறும் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன்.

இரண்டாவது ஆசை
இதிலும் முதல் ஆசை போலவே கையில் காசு, பணம் ஒன்றும் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு வித்தியாசம். ஒரு உதவியாளர் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்ளுவார். டூர் ஏற்பாடுகள் அனைத்தும் பக்காவாக முதலிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். வீட்டு வாசலில் டாக்சி வந்து நின்றவுடன் ஐயா ஏறிக்கொள்வார். ஐயா ஒரு சாமானையும் கையில் தொடமாட்டார். எல்லாம் உதவியாளர் பார்த்துக்கொள்வார். ரயிலோ, பிளேனோ, உதவியாளர் பின்தொடர பயணம் நடக்கும்.

சேரவேண்டிய இடத்தில் வாகனவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஓட்டலுக்குப் போய் தினசரி கடமைகளை முடித்துவிட்டு, அன்று போடவேண்டிய டிரஸ்களை உதவியாளர் எடுத்துக் கொடுக்க, வெளிவேலைகள் தொடங்கும். இப்படியாக பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து முடித்து விட்டு, அடுத்த ஊர் போகவேண்டியது.
இந்த மாதிரி டூர் போக அம்பானி அளவு சொத்து இருந்தால் போதும் என்று கருதுகிறேன். அடுத்த ஜன்மத்திலாவது அந்த பாக்கியத்தை அருளுமாறு பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்