திங்கள், 20 பிப்ரவரி, 2012

ரோடு வெறி Road Rage


சாலைகளில் நடக்கும் பெரும்பான்மையான விபத்துக்கள், இந்த ரோடு வெறியினால்தான் நடக்கின்றன. நானும் ஒரு வாகனம் வைத்திருப்பதால் இந்த ரோடு வெறியை உணர்ந்திருக்கிறேன். அதைப் பற்றி நன்கு சிந்தித்து, தெளிவடைந்து இப்போது இந்த ரோடு வெறி என்னைப் பீடிக்காத மாதிரி மாற்றிக்கொண்டு விட்டேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சொல்லுக்கு இணங்க யாவரும் பயன்பெற என் கருத்துக்களை இங்கு பதிகின்றேன்.

மனிதன் ஒரு காலத்தில் மிருகமாக இருந்து காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று நாம் பார்க்கும் நிலையில் இருக்கிறான். ஆனாலும் அவ்வப்போது, அவனுடைய மரபணுக்களில் மிச்சமிருக்கும் மிருக குணங்களின் எச்சம் தலை தூக்கி விடுகிறது. அப்போது அவன் தன்னை இழந்து விடுகிறான். அந்த நிலையில் அவன் என்ன செய்வான் என்று யாராலும் கணிக்க முடிவதில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த இரு அவலங்களே இதற்கு சாட்சி
ஒன்று: சென்னையில் ஒரு மாணவன் தன் ஆசிரியையை கத்தியால் குத்தியது. அவன் அந்த ஆசிரியை இறந்து விடுவாரென்றோ அல்லது அப்படி நடந்தால் தன்னுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்பதையோ சிந்திக்கவில்லை.

இரண்டு: பஸ் டிரைவருக்கும் லாரி டிரைவருக்கும் நடந்த வாய்ச் சண்டையில் பஸ் டிரைவர்எங்கே என் மீது லாரியை ஏத்தி விடுவாயாஎன்று சவால் விட, லாரி டிரைவர் அவர் மீது லாரியை ஏத்தி விட்டான்.

சாதாரண சமயங்களில் நல்ல, சமுதாயப் பொறுப்புள்ள மனிதர்களே, தாங்கள் உணர்ச்சி வசப்படும்போது தங்களை இழந்து விடுகிறார்கள். தினந்தோறும் செய்தித் தாள்களில் வரும் கொலைச் செய்திகள் இந்த நிலையை நிரூபணம் செய்கின்றன.

நாம் இப்போது நமது தலைப்புக்கு வருவோம். ரோடு வெறி ஏன் உண்டாகிறது? சாதாரண சமயங்களிலேயே உணர்ச்சி வசப்படும் மனிதனுக்கு, தன்னிடம் அதிக பலம்/சக்தி இருக்கிறதென்று உணரும்போது இந்த மாதிரி உணர்ச்சி வசப்படும் வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. ஒவ்வொரு டிரைவரும் வாகனத்தில் ஏறி உட்கார்ந்தவுடன் அந்த வாகனத்தின் சக்தியெல்லாம் அவனுள் பாய்ந்துவிட்டதாக உணருகிறான்


அவன் வாகனத்தில் ஏறாதபோது இருக்கும் மனநிலைக்கும் வாகனத்தில் ஏறி ஸ்டீயரிங்க் வீலுக்கு முன் அமர்ந்தவுடன் இருக்கும் மனநிலைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. இந்த மாற்றம் ஏற்படாமல் மனதைக்  கட்டுப்படுத்தி வாகனம் ஓட்டும் டிரைவர்கள்தான் நல்ல டிரைவர்கள். அவர்கள்தான் ரோடுவெறியை கட்டுப்படுத்தியவர்கள்.

இந்த வெறியை கட்டுப்படுத்த முடியாதவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் பாதையில் குறுக்கிடுபவர்களை எல்லாம் எதிரிகளாகப் பார்க்கும் மனோபாவம் வந்துவிடுகிறது. தன்னுடைய வாகனத்திற்கு வழி கொடுக்காதவர்கள், தன் வாகனத்தை முந்திச் செல்ல ஹார்ன் அடிப்பவர்கள், தன் வாகனத்தை முந்திச்செல்பவர்கள், தன் வாகனத்தைக் கண்டு ஓரமாக ஒதுங்காதவர்கள் இப்படி எல்லோரையும் வெறுப்புடன் பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தண்டனை கொடுக்க விரும்புகிறார்கள்.

அவனுள் இருக்கும் அகம்பாவம் அவன் ஓட்டும் வாகனத்தின் சக்தியால் அதிகரித்து, விபத்துகளையும் கொலைகளையும் ஏற்படுத்துகிறது. இது தவிர அவன் வெகு தூரம் வாகனத்தை ஓட்டி வரும் நிலையில் ஏற்படும் உடல் சோர்வு இந்த சூழ்நிலையை இன்னும் மோசமாக்குகிறது. ஓய்வில்லாமல் உழைக்கும்போதும் இதே நிலைதான்.

சரியாக திட்டமிடல் மூலமாக இத்தகைய சூழ்நிலைகள் உருவாவதைத் தடுப்பவனே நல்ல டிரைவர். வாகனம் ஓட்டும் அனைவரும் உடல் சொர்ந்து விடும்போது ஏற்படும் மனமாற்றங்களைக் கவனித்து அவைகளைத் தவிர்க்கவேண்டும்.

வாகன ஒட்டும் லைசன்ஸ் கொடுக்கும் அதிகாரிகளும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவல் அதிகாரிகளும் இந்த மனோதத்துவத்தை நன்கு ஆராய்ந்து, இந்த ரோடு வெறியை குறைக்கும் வழிகளைக் கண்டு நடைமுறைப் படுத்தினால்தான் விபத்துகள் குறையும்.