புதன், 4 டிசம்பர், 2013

குளிரிலிருந்து தப்பித்தேன்.


நேரம் ஆக, ஆக, என் கவலை அதிகரித்தது என்று சொன்னேனல்லவா? அப்போது கடவுள் என் முன்னால் பிரசன்னமானார். பசித்தவனுக்கு கடவுள் ரொட்டி ரூபமாகக் காட்சியளிப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? அது மாதிரி எனக்கு கடவுள் ஒரு ஆப்பிரிக்க இளைஞன் ரூபத்தில் காட்சியளித்தார்.

அந்த இளைஞன் அங்கு காப்பி சாப்பிட்டுவிட்டு தான் வந்திருந்த காரில் புறப்பட ஆயத்தமானார். நான் வெட்கம், மானம் எல்லாவற்றையும் விட்டு விட்டு (கடவுளிடம் வெட்கம், மானம் என்ன வேண்டியிருக்கிறது) அவரிடம் போய் பக்கத்து ஊர் பெயரைச்சொல்லி, "அந்த வழியாகப் போவீர்களா?" என்று கேட்டேன். அவர் "ஆமாம்" என்றார். நான் "எனக்கு அந்த ஊர் வரை லிப்ட் கொடுக்க முடியுமா" என்று கேட்டேன். அவர் "தாராளமாக" என்று சொல்லி என்னை அவர் காரில் ஏற்றிக்கொண்டார்.

அந்த ஊர் வந்ததும் என்னை இறக்கி விட்டார். அவருக்கு மிகவும் நன்றி சொல்லிவிட்டு, இறங்கினேன். அப்படியே நான் வணங்கும் முருகனுக்கும் ஒரு நன்றி சொல்லிவிட்டு அங்குள்ள பஸ் நிலையத்திற்கு சென்றேன். அங்கிருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு நிறைய பஸ்கள் இருந்தன.

கொஞ்சம் நேரம் இருந்ததாலும், தங்கும் ஓட்டலுக்குப் போக நிச்சயமான வழி பிறந்து விட்டதாலும், பக்கத்திலுள்ள ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குப் போனேன். காரணம் போகப்போகத் தெரியவரும். அங்கு சுற்றிப்பார்க்கும்போது தின்பண்டங்கள் விற்கும் பகுதியில் நம்ம ஊர் வேர்க்கடலை பொட்டு நீக்கி, வெள்ளை வெளேர் என்று பாக்கட் பண்ணி வைத்திருந்தார்கள். அரை கிலோ பாக்கட் இரண்டு வாங்கிக்கொண்டேன். ஆப்பிள் ஜூஸ் "டேட்ராபேக்" என்று சொல்லப்படும் பாக்கெட்டில் இருந்தது. அதில் இரண்டு ஒரு லிட்டர் பேக்கட் வாங்கிக்கொண்டேன்.

இந்த இரண்டும் எதற்காக என்றால்............... உண்மையைச் சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. இருந்தாலும் இத்தனை வயசுக்கப்புறம் கூச்சத்தை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். ஆகவே உண்மையைச் சொல்லுகிறேன்.

வெளி நாடுகளில் எல்லா ஓட்டல்களிலும் "பெட் & பிரேக்பாஸ்ட்" என்ற முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. நம் நாட்டிலும் இப்போது தெரிய ஓட்டல்களில் இந்த முறை வந்து விட்டது. ஆகவே காலை உணவு என்னைப் போன்றவர்களுக்கு இலவசமாக கிடைத்து விடுகிறது.  அங்கு ஓட்டல்களில் சாப்பிடும் பொருள்கள் என்ன விலைக்கு விற்கிறார்கள் என்று வெளிநாடு போய் வந்தவர்களுக்குத் தெரியும். எல்லாம் யானை விலை குதிரை விலைதான்.

ஆகவே மதியமும் இரவும் ஓட்டல்களில் சாப்பிடுவதென்றால் ஏகப்பட்ட செலவு செய்யவேண்டி வரும். தவிர ஓட்டலில் மெனு கார்டைப் பார்த்து ஆர்டர் செய்தால் என்ன கொண்டு வருவார்களென்று தெரியாது. புது ஊரில் தனியாகப் போய் ஓட்டலில் சாப்பிடவும் பயம். அது போக ஒரு சாப்பாட்டிற்கு 500 ரூபாய் (1990 ல்)  செலவு செய்ய யாருக்கு மனசு வரும்? யாருக்கு வருமோ வராதோ, எனக்கு மனசு வரவில்லை. ஆகவே நான் என்ன செய்வேன் என்றால் காலை ஓட்டலில் கொடுக்கும் இலவச பிரேக்பாஸ்ட்டை ஒரு பிடி பிடித்துவிடுவேன். இது மாலை வரை தாங்கும்.  மதியம் நடுவில் ஏதாவது ஒரு ஜூஸ் வாங்கி சாப்பிட்டால் போதும்.

இரவு உணவுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். அதற்குத்தான் நிலக்கடலையும் ஆப்பிள் ஜூஸும். இவை எல்லாம் விலை சலீசாக ஸ்டோரில் கிடைக்கின்றன. இரண்டு கை கடலையைச் சாப்பிட்டு விட்டு ஒரு டம்ளர் ஜூஸ் குடித்து விட்டால் அன்றைய இரவிற்குப் போதும். இப்படியாகத்தான் என் வயிற்றுப் பாட்டை வெளி நாடுகளில் சமாளித்தேன்.

இப்படியாக எனது நெதர்லாந்து டூரை முடித்து அடுத்து இஸ்ரேலுக்குச் சென்று விட்டு இந்தியா திரும்பினேன். தொடரை அவசரமாக முடித்துவிட்டேன் என்று வருந்தவேண்டாம். எதுவும் அளவோடு இருந்தால்தான் சுவைக்கும்.