திங்கள், 20 ஜனவரி, 2014

குற்றங்களும் அவை பதிவாகும் அளவுகளும்.

சுப்ரீம் கோர்ட்

பெயரில்லாஞாயிறு, 20 அக்டோபர், 2013 4:14:00 PM IST
உங்கள் அடுத்த பதிவுக்கு ஒரு தகவல்.
ஒரு வலைபதிவில் படித்தேன்
இது ஏன் என்று எழுதுங்களேன்


2012 இந்தியாவின் குற்ற வீதப் பட்டியல் படி, கேரள மாநிலத்திலேயே அதிக குற்றங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரு லட்சம் பேருக்கு சுமார் 455.8 சம்பவங்கள் படி இங்கு குற்றங்கள் பதியப்பட்டுள்ளன.

நாகலாந்து மிகக்குறைவான குற்றச்சாட்டுக்கள் பதிவான மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரள தலைநகர் கொச்சியில் ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் சுமார் 879.9 குற்றச்சம்பவங்கள் படி பதியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஒரு இலட்சம் பேருக்கும் 294.8 குற்றங்கள் படி பதியப்பட்டுள்ளன. இந்தியாவில் கல்வியறிவைப் பொருத்தவரை எப்போதும் முதல் நிலையில் இருக்கும் கேரளா அதிக குற்றங்கள் பதியப்பட்ட மாநிலமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் குரு

இது ஒரு முக்கியமான செய்திதான். கேரளாக்காரர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு இந்த மனப்பான்மை புரியாது. நான் கேரளாவிற்கு வெகு சமீபத்தில் இருப்பதால் நான் ஓரளவு இவர்களின் சுபாவத்தை அறிந்திருக்கிறேன்.

பெரும்பாலும் அங்குள்ள மக்கள் வேலை வெட்டி ஒன்றுக்கும் போகாமல் திண்ணைகளில் உட்கார்ந்து வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். சரியான சண்டைக்கோழிகள். எவனாவது ஒருவன் அடுத்தவனைப் பற்றி ஏதாவது சொல்லி விட்டால் போதும். உடனே இவன் " அதெங்ஙன அவன் இங்ஙன பறைஞ்ஞது. ஞான் சுப்ரீம் கோர்ட்டு வரை போயி அவனை ரெண்டில ஒண்ணு ஆக்கும்' அப்படீன்னு சொல்லிட்டு நேரா வக்கீல் வீட்டுக்குப் போய் விடுவான்.

நான் கோவை விவசாயப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன் என்பது உங்களில் அநேகருக்குத் தெரிந்திருக்கும். நான் வேலை பார்த்த காலத்தில் எங்களுக்கு உத்தியோக உயர்வு கொடுக்க சில நடைமுறைகள் உண்டு. உத்தியோகத்தின் தரத்தைப் பொறுத்து ஒரு செலக்ஷன் கமிட்டி போடுவார்கள். அந்தக் கமிட்டி அந்த பதவிக்கு விண்ணப்பித்தவர்களை எல்லாம் நேர்முகத் தேர்விற்கு அழைத்து பேட்டி காண்பார்கள். அதன் முடிவில் ஒரு தரப் பட்டியல் தயாரித்து அதை துணை வேந்தரிடம் கொடுப்பார்கள். அவர் அதில் உள்ளவர்களுக்கு வரிசைப் பிரகாரம் பதவி உயர்வு உத்திரவு போடுவார்.

இதுதான் நடைமுறை. இதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். எனக்குத் தெரிந்து ஒரே ஒரு முறைதான் இருவர் இந்த தேர்வை எதிர்த்து கோர்ட்டுக்குப் போனார்கள். தோற்றுப் போனார்கள். கேரளாவிலும் இதே போல் ஒரு விவசாயப் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு எனக்குத் தெரிந்த பலர் பணி புரிந்தார்கள்.

அங்கும் பதவி உயர்விற்கு இதே நடைமுறைதான். ஆனால் ஒரு வித்தியாசம். தேர்வுக் கமிட்டியின் முடிவை சம்பந்தப்பட்டவர்கள் லேசில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தேர்வுக் கமிட்டியின் முடிவுகள் ரகசியமாக இருக்கவேண்டியவை. ஆனாலும் சம்பந்தப்பட்டவர்கள் இந்த கமிட்டியின் முடிவை எப்படியோ மோப்பம் பிடித்து விடுவார்கள். அதில் எப்படியும் ஓரிருவர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.

அவர்கள் அடுத்த நாள் காலையில் முதல் வேலையாக உயர் நீதி மன்றத்திற்குப் போய் இந்த தேர்விற்கு இடைக்காலத் தடை வாங்கி விடுவார்கள். அவ்வளவுதான். இந்த தடையை நீக்க ஆறுமாதம் ஒரு வருடம் போல் ஆகிவிடும். தடையை நாளைக்கு நீக்கப்போகிறார்கள் என்ற செய்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படியோ கசிந்து விடும். அவர்கள் முன்னேற்பாடாக டில்லியில் ஒரு வக்கீலை ஏற்பாடு செய்து வைத்திருப்பார்கள்.

இங்கு உயர்நீதி மன்றத்தில் இடைக்காலத்தடை நீக்கப்பட்டது என்று நீதிபதி ஆர்டர் போட்டவுடன் டில்லிக்குத் தந்தி கோடுத்து விடுவார்கள். அங்குள்ள வக்கில் உச்ச நீதி மன்றத்தில் இந்த உத்திரவிற்கு இடைக்காலத் தடை வாங்கி விடுவார். அப்புறம் இன்னும் ஒரு ஆறு மாதமோ ஒரு வருடமோ ஓடிவிடும். இப்டியாக அந்தப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு உத்தியாக உயர்வும் உச்ச நீதி மன்றம் போய்த்தான் முடிவு ஆகும்.

பொது வாழ்க்கையிலும் இப்படித்தான். எந்தவொரு சமாச்சாரமானாலும் கோர்ட்டிற்குப் போய்விடுவார்கள். இது கேரள மண்ணின் கலாசாரம். அதனால்தான் அங்கு அதிகமான வழக்குகள் பதிவாகின்றன.