செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

பேங்க் கணக்குகள் - பாகம் 2


ஆகக்கூடி பேங்க்கில் கணக்கு ஆரம்பித்து விட்டீர்கள். ஆகவே நீங்கள் அந்த பேங்க்கின் மிகுந்த மரியாதைக்குரிய கஸ்டமர். நீங்கள் போகும்போதெல்லாம் அந்த பேங்க்கின் மேனேஜர் எழுந்து வந்து உங்களை வரவேற்பார் என்ற கற்பனையெல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள. "கஸ்டமர் டே" என்று ஒரு நாள் இருக்கிறது. அன்று மட்டும் உங்களுக்கு மிட்டாய் கொடுத்து வரவேற்பார்கள். மற்ற நாட்களில் நீங்களே ராஜா, நீங்களே சேவகன்.

பேங்கில் முதல் முதலாக நுழையும்போது கொஞ்சம் பிரமிப்பாக இருக்கும். எதற்கு எங்கே போகவேண்டும் என்ற விவரம் புரியாது. கொஞ்ச நாளில் சரியாகிவிடும்.

முதல் வேலையான உங்கள் கணக்கில் பணம் கட்டுதல் எப்படி என்று பார்ப்போம்:. பணம் கட்டினால்தான் பின்னால் தேவைப்படும்போது எடுக்க முடியும். பணம் கட்டாமலேயேயும் பணம் எடுக்கலாம். அது ஒரு தனிக்கலை. அதை பின்னால் சொல்கிறேன்.

உங்கள் கணக்கில் பணம் கட்ட ஒரு "பணம் செலுத்துப் படிவம்" (செலான் = chalan) உபயோகப்படுத்த வேண்டும். இதை சரியாக பூர்த்தி செய்வதே ஒரு கலை. இந்தப் படிவம் ஏறக்குறைய எல்லா பேங்குகளிலும் கொசகொசவென்றே இருக்கும். வேண்டுமென்றே இப்படி வைத்திருக்கிறார்களோ என்று எனக்கு அடிக்கடி தோன்றுவதுண்டு.

எழுத்துக்கள் மங்கலாகவும் மிகச்சிறியதாகவும் இருக்கும். இந்த மாதிரி அச்சடிப்பதற்கென்றே தனி அச்சகங்கள் இருக்கும் என்பது என் சந்தேகம். ஓரிரு முறை உபயோகப் படுத்தின பிறகு தெளிவு பிறக்கும். கணக்கு ஆரம்பிக்கும்போதே சில படிவங்களை வாங்கிக்கொண்டு போய் வீட்டில் நேரம் இருக்கும்போது பயிற்சி எடுத்துக்கொண்டீர்களானால் சுலபமாக இருக்கும்.

இதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒரு பகுதி பெரிதாகவும் இன்னொரு பகுதி சிறியதாகவும் இருக்கும். சிறிய பகுதி உங்களுக்குக் கொடுப்பதற்காக. இதை கவுன்டர்பாயில் - counterfoil  என்பார்கள்.

இந்தப் படிவங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும். சில சமயம் நமது தேசீய மொழியான இந்தியிலும் இருக்கும். எங்க ஊர் மாதிரி கேரளாவிற்குப் பக்கத்தில் உள்ள ஊரானால் மலையாளத்திலும் இருக்கும். கேரளப் பெண்கள் அழகானவர்கள் என்று பாரதியார் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். எனக்கு நேரடி அனுபவம் இல்லை. ஆனால் மலையாள எழுத்துக்கள் ஜிலேபி மாதிரி இருக்கும்.

ஆனால் நான் ஒரு போதும் தமிழில் அச்சடிக்கப்பட்ட படிவங்களைப் பார்த்த தில்லை. ஆனால் நாம் இதில் தமிழிலும் எழுதலாம். ஒப்புக்கொள்வார்கள். இந்தப் படிவத்தை வீட்டிலேயே பூர்த்தி செய்து எடுத்து வருவது நல்லது. இதில் எழுத வேண்டிய முக்கியமான விவரங்கள்.

1. தேதி

2.உங்கள் கணக்கின் எண் - இது மிகவும் முக்கியம். தவறாக எழுதிவிட்டால் உங்கள் பணம் கோவிந்தாதான்.

3. உங்கள் பெயர் - இதில் தவறு நேரும் வாய்ப்பு குறைவு.

4. எவ்வளவு பணம் கட்டப்போகிறீர்கள் என்ற விவரம். எண்ணிலும் எழுத்தாலும்.

5. நீங்கள் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் (அது எப்படியிருக்கும்?) கட்டினால் உங்கள் பேன் கார்டு (தலையிலிருக்கும் பேன் அல்ல - PAN கார்டு) எண்ணைக் குறிப்பிடவேண்டும்.

6. நீங்கள் கட்டும் பணத்தின் விவரங்கள். அதாவது பத்து ரூபாயில் எவ்வளவு, நூறு ரூபாயில் எவ்வளவு, ஐந்நூறில் எவ்வளவு, இப்படியான விவரங்கள். ஒவ்வொன்றிலும் எவ்வளவு எண்ணிக்கை, அதன் மொத்த மதிப்பு எவ்வளவு என்பதை எல்லாம் விலாவாரியாக குறிக்கவேண்டும். அதற்கென்றே ஒரு தனி இடம் கட்டம் போட்டு அச்சடித்திருப்பார்கள். கடைசியில் மொத்த தொகை எவ்வளவு என்று குறிப்பிடவேண்டும்.

8. பேங்கிற்கு பணம் கட்டப் போகும்போது ரூபாய் நோட்டுகளை ஒழுங்காக அடுக்கிக் கொண்டு போகவேண்டும். ஒவ்வொரு வகைக்கும் தனித்தனியாக ரப்பர் பேண்ட் போட்டு ஒரு ஒழுங்கில் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கணக்கர் உங்களைத் திட்டுவார். இந்த திட்டு ஒவ்வொரு ஊருக்கும் வேறுபடும். "சாவு கிராக்கி" என்பது எல்லா ஊருக்கும் பொது.

7. உங்கள் கையெழுத்து.

8. உங்கள் போன் நெம்பர்.

9. சில படிவங்களில் பேங்க் கிளையின் பெயரை காலியாக விட்டிருப்பார்கள். அதில் அந்தக்கிளையின் பெயரை எழுதுவது உத்தமம்.

இதையெல்லாம் பால் பாயின்ட் பேனாவாலோ அல்லது இங்க் பேனாவினாலோ எழுத வேண்டும். பென்சிலால் எழுதக்கூடாது. கருப்பு அல்லது நீலக் கலர் பேனாதான் உபயோகப் படுத்தவேண்டும்.  சிகப்புதான் எனக்குப் பிடித்த கலர் என்று அதிலெல்லாம் எழுதக்கூடாது. அந்த மாதிரி கலர்களில் எழுதுவதற்கு பேங்க் அதிகாரிகள் மட்டுமே காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்.

இதையெல்லாம் சரியாக செய்து பேங்கிற்குப் போனால் அங்கு கூட்டம் அலைமோதும். அதைக் கட்டுப்படுத்த இப்போது டோகன் சிஸ்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த டோகனை எடுத்துக்கொண்டு காத்திருக்கவேண்டும். இந்த டோகனைக் கொடுப்பதற்கென்றே ஒரு மிஷின் இருக்கிறது. அதை வழக்கமாக யாருக்கும் சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் வைத்திருப்பார்கள். இதை நீங்கள் விசாரித்து அறிந்து கொள்ளவேண்டும்.

டோகன் எடுத்துக்கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்து ஒரு குட்டித்தூக்கம் போட்டீர்களானால் உங்கள் முறை வந்துவிடும். உங்கள் முறை வந்து விட்டதா என்று காண்பிப்பதற்கு ஒரு எலெக்ட்ரானிக் அறிவிப்புப் பலகை இருக்கும். அதில் டோகன் நெம்பர், கவுன்டர் நெம்பர் காண்பிக்கும். அந்தக் கவுன்டருக்குப் போய் உங்கள் டோகன், செலுத்துப் படிவம், பணம் எல்லாவற்றையும் கொடுத்தீர்களானால் அவைகளை வாங்கி சரி பார்த்து செலானில் சீல் குத்தி ஒரு கிறுக்கல் கையெழுத்துப் போட்டு கவுன்டர்ஃபாயிலை உங்களுக்கு கொடுப்பார்கள்.

அவ்வளவுதான். ஆஹா, நீங்கள் ஒரு வெற்றி வீரர்!

மற்ற வேலைகளை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.