ஞாயிறு, 2 மார்ச், 2014

பேங்க் விவகாரங்கள் - கடைசி பகுதி


ஏன் தலைப்பில் விவகாரங்கள் என்று போட்டேன் என்றால், பேங்க் கணக்குகளில் ஏதாவது குளறுபடி வந்து விட்டது என்றால் அதைத் தீர்ப்பதற்குள் உங்கள் தாவு தீர்ந்து விடும். எப்போது குளறுபடி வரும்? அது உங்கள் தலையெழுத்தைப் பொருத்தது.  ஆகவே இறைவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு கணக்கைத் தொடருங்கள்.

எனக்கு ஒரு முறை என்னுடைய பிபிஎப் கணக்கில் வட்டியைத் தவறுதலாக கணக்கிட்டு விட்டார்கள். சில ஆயிரங்கள் விட்டுப்போயின. சும்மா இருக்க முடியுமா? போய்க்கேட்டேன். எழுதிக்கொடுங்கள் என்றார்கள். எழுதிக்கொடுத்தேன். பாஸ் புக் நகல் எடுத்துக் கொடுங்கள் என்றார்கள். எடுத்துக் கொடுத்தேன். சில நாட்கள் ஆகும், பொறுத்திருங்கள் என்றார்கள்.

ஒரு மாதம் கழித்துப் போய் கேட்டேன். அப்படியா, எழுதிக்கொடுங்கள் என்றார்கள். முன்பே எழுதிக்கொடுத்தேனே என்றேன். அது அந்த மேனேஜர் மாற்றலாகிப் போய்விட்டார், அதனால் பழைய விண்ணப்பங்களும் அவருடன் போய் விட்டன. நீங்கள் ஒன்று செய்யுங்கள். இப்போது புதிதாக ஒரு விண்ணப்பம் கொடுத்து விடுங்களேன் என்றார்கள். புதிதாக ஒரு விண்ணப்பம் எழுதி பாஸ் புக் காப்பியுடன் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்றார்கள்.

இரண்டு வாரம் கழித்து போனேன். திரும்பவும் விண்ணப்பம் கொடுத்தீர்களா என்றார்கள். என்னடா இது, திரும்பவும் முதலிலிருந்தா என்று யோசித்தேன். விண்ணப்பம் எழுதி பத்து காப்பி சீராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டேன். கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு காப்பியாக கொடுத்து வந்தேன். ஏறக்குறைய ஒரு வருடம் ஆகி விட்டது. மூன்று மேனேஜர்கள் மாறி விட்டார்கள்.

புதிதாக வந்த மேனேஜருக்கு என்ன தோன்றியதோ, ஒரு நாள் இன்று மாலை 4 மணிக்கு வாருங்கள் சார் என்றார். மாலை 4 மணிக்குப் போனேன். கம்ப்யூட்டரில் என்னமோ பண்ணி பத்து நிமிடத்தில் கணக்கை நேர் செய்து விட்டார். மிகவும் நன்றி என்று சொல்லி விட்டு என் அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

இதிலிருந்து தெரிந்து கொள்ளும் நீதி என்னவென்றால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பொறுமை, விடாமுயற்சி, சாதுர்யம் என்பவை எல்லாம் தேவை என்பதே. இரண்டு பேங்கில் கணக்கு வைத்திருந்தீர்களானால் இவையெல்லாம் உங்களுக்கு கை வந்து விடும். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.