திங்கள், 7 ஜூலை, 2014

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன்டர்நெட்டும் நானும்


நான் ஐந்து வருடங்களாக பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன்டர்நெட் உபயோகித்து வருகிறேன். பிளான் பெயர்   BSNL FN COMBO 500.
இந்த பிளான் எனக்கு மிகவும் சௌகரியமாக இருந்தது. எப்படியென்றால் இந்த பிளானில் காலை 2 மணி முதல் 8 மணி வரை இன்டர்நெட் உபயோகத்திற்கு கட்டணம் இல்லை. காலை 8 மணி முதல் மறுநாள் காலை 2 மணி வரையிலான உபயோகத்திற்கு 1.5 GB இலவசமும் அதற்கு மேல் உபயோகித்தால் ஒரு MB க்கு 20 பைசா என்றும் கட்டணம் நிர்ணயித்திருந்தார்கள். இன்டர்நெட் நல்ல வேகமும் கூட ( 2 MBPS).

என்னைப்போல் ஜாமக்கோடங்கிகளுக்கு இது மிகவும் உபயோகமாக இருந்தது. காலை 3 மணிக்கு எழுந்திருந்து 8 மணிக்குள் இன்டர்நெட் வேலைகளையெல்லாம் முடித்து விடுவேன். பகல் நேரத்தில் இன்டர்நெட் மிகவும் அத்தியாவசியமாக இருந்தால் ஒழிய உபயோகிப்பதில்லை. பகல் நேர உபயோகத்தை இலவச லிமிட்டை தாண்டாமல் உபயோகித்து வந்தேன்.

இரவு நேர இலவச உபயோகத்தில் மாதத்திற்கு ஏறக்குறைய 50-60 GB உபயோகித்து விடுவேன். இது மிகவும் சலீசான பிளானாக இருந்தது. இதைப் பொறுக்காத யாரோ ஒரு பிஎஸ்என்எல் ல் வேலை பார்க்கும் பொறாமைப் பிண்டம், மேலிடத்திற்குப் போட்டுக்கொடுத்து விட்டார்கள் போல இருக்கிறது. பிஎஸ்என்எல் ஏற்கனவே எதிலெல்லாம் ரேட்டை உயர்த்தலாம் என்று கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு காத்திருந்தார்கள். காரணம் பிஎஸ்என்எல் நஷ்டத்தில் ஓடுகிறதாம். மந்திரிகள் போன் பில்லை வசூல் செய்வதே இல்லை. அப்புறம் என்ன லாபம் வரும்?


வெறும் வாயை மெல்லுபவனுக்கு அவல் கிடைத்து விட்டது. சும்மா இருப்பார்களா? இரவு இலவசத்திற்கு வேட்டு வைத்து விட்டார்கள். அதற்குப் பதிலாக சலுகை கட்டணம் வழங்கப் போகிறார்களாம். எவ்வளவு தெரியுமா?
ஒரு  MB க்கு வெறும் 15 பைசாதானாம். அப்போ ஒரு  GB க்கு எவ்வளவு ஆகிறது என்று பார்த்தால் வெறும் 150 ரூபாய்தான். என்னுடைய மாத உபயோகமான 50  GB க்கு சும்மா 7500 ரூபாய் கொடுத்தால் போதும்.

ஒரு பிளாக்கருக்கு வந்த சோதனையைப் பாருங்கள். இந்த ரேட்டில் நான் என் தலையை அடகு வைத்தால் கூட டெலிபோன் பில் கட்டமுடியாது. என் தலையை எவன் அடகு வாங்குவான் என்பது வேறு விஷயம்.

உடனே வேறு மாற்று ஏற்பாடு செய்தாகவேண்டுமே. பிஎஸ்என்எல் ஆபீசுக்கு ஓடினேன். இந்த மாதிரி கஸ்டமருக்கு சொல்லாமல் பிளானை மாற்றுவது நியாயமா என்று கேட்டேன். அங்கிருந்தவர்கள் அப்படியா, ஏதோ நைட் பிளானை மாற்றுவதாக ஒரு பேச்சு அடிபட்டது, மாற்றி விட்டார்களா என்று என்னையே திருப்பிக் கேட்டார்கள். இது எப்படி இருக்கு பாருங்க.

உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று அடுத்த கேள்வி. நான் தினமும் காலையில் கம்ப்யூட்டரை ஆன் பண்ணினதும் இன்டர்நெட் உபயோகக் கணக்கை பார்த்து விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பேன். இதனால் கணக்கில் ஏதோ தவறு மாதிரி தெரிந்ததும் உஷாராகி விட்டேன். இப்போது இந்தப் பிரச்சினைக்கு என்ன பண்ணலாம் என்று கேட்டேன்.

நீங்கள் இன்டர்நெட் பிளானை மாற்றி விடுங்கள், அது ஒன்றுதான் வழி என்றார்கள். பேய்க்கு வாழ்க்கைப் பட்டு விட்டு புளியமரம் ஏறமாட்டேன் என்றால் எப்படி? இருக்கிற பிளானில் என் பர்சுக்கு ஏற்றமாதிரி எனக்கு கண்ணில் பட்ட ஒரு பிளானுக்கு மாற்றித் தரும்படி கேட்டேன். ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடுத்து விட்டுப் போங்கள். நாளைக்கு மாற்றி விடுகிறோம் என்றார்கள். அப்படியே எழுதிக்கொடுத்து விட்டு வந்தேன்.

சொன்னபடி அடுத்த நாள் மாற்றி விட்டார்கள். எஸ்எம்எஸ் என் செல் போனுக்கு வந்தது. நான் மிக உற்சாகமாகி கம்ப்யூட்டரை ஆன் பண்ணி இனடர்நெட்டை ஓபன் செய்தேன். தலையில் கல் விழுந்தது போல் உணர்ந்தேன். காரணம் இன்டர்நெட் ஆமை வேகத்தில் நகர்கிறது. போன் பண்ணிக் கேட்டால், நாங்கள்தான் அப்போதே சொன்னோமே, வேகம் குறைவாக இருக்கும் என்று, நீங்கள் சரியென்று மண்டையை ஆட்டினீர்களே என்று என் தலை மீது இன்னொரு கல்லைப் போட்டார்கள்.

அவர்கள் கொடுத்திருந்த லிஸ்ட்டில் பார்த்தால் வேகம் அதிகமுள்ள பிளான்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் விலை போட்டிருக்கிறது. என்ன ஒரே ஆறுதல் என்றால் நான் வாங்கிய பிளான் அன்லிமிடெட் டவுன்லோடு உள்ள பிளான். நேற்று ஒரு டவுன்லோடை டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். முன்பு ஒரு மணி நேரத்தில் முடிந்த டவுன்லோடு இப்போது ஒரு இரவில் முடிந்து விட்டது.

நான் வாங்கிய பிளான். 650 C Home ULD. மாதம் 650 ரூபாய். வரிகள் தனி.

கழுதைக்கு தாலி கட்டி கூட்டிக்கொண்டு வந்தாயிற்று. எப்படியாவது குடித்தனம் பண்ணித்தான் ஆகவேண்டும். விதி வலியது என்று சும்மாவா சொன்னார்கள் !