வெள்ளி, 13 நவம்பர், 2015

இந்து மத சம்பிரதாயங்களும் சங்கடங்களும்.

                                            Image result for திதி கொடுத்தல்

இந்து மதத்தின் பல முகங்கள் வெளியில் தெரிவதில்லை அல்லது அதைப் பற்றி அதிகமாக யாரும் பேசுவதில்லை என்று வைத்துக்கொள்ளலாம். இந்த மாதிரி பல பழக்கவழக்கங்களைப் பற்றி ஏதாவது இந்து மதப் புத்தகங்கள் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. எல்லாம் செவி வழி வந்த சம்பிரதாயங்கள்தான்.

அதில் ஒன்று இறப்பு பற்றியது. மனிதனாகப் பிறந்தவன் இறப்பது திண்ணம். ஆனால் அப்படி இறந்த பிறகு அவனுடைய உறவினர்களுக்கு ஏகப்பட்ட நியதிகள் வந்து விடுகின்றன. குறிப்பாக இறப்புத் தீட்டு என்பது ஒன்று. இறந்த வீட்டிற்குப் போய் வந்தால் தலை முழுகவேண்டும். இறந்த வீட்டுக்காரர்கள் யார் வீட்டிற்கும் போகக்கூடாது. இப்படி பல நடைமுறைக் கட்டுப்பாடுகள் வந்து விடுகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்தக் கட்டுப்பாடுகள் இறந்தவரின் பங்காளிகளுக்கும் வந்து விடுகின்றன. அவர்களும் பதினாறு நாட்கள் தீட்டுக் காக்க வேண்டும் அவர்களும் யார் வீட்டிற்கும் போக க்கூடாது. நல்ல, கெட்ட விசேஷங்களுக்குப் போகக்கூடாது. கோயிலுக்குப் போகக்கூடாது. வீட்டில் உள்ள சாமியையும் கும்பிடக்கூடாது. இப்படியெல்லாம் நடைமுறைச் சட்டங்கள் இருக்கின்றன. இவைகளை யார் இயற்றினார்கள், எந்தப் புத்தகங்களில் இவை தொகுக்கப்பட்டிருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் அவைகளை நாம் கடைப் பிடிக்கிறோம்.

என்ன திடீரென்று இந்த ஆராய்ச்சி என்று யோசிப்பவர்களுக்கு; என் பங்காளியின் மனைவி முந்தாநாள் ஹார்ட் அட்டாக்கில் காலமாகி விட்டார்கள். பங்காளி வீட்டில் எது நடந்தாலும் அனைத்து பங்காளிகளும் கலந்து கொண்டுதான் ஆகவேண்டும். நானும் போய்வந்தேன். அனைத்துப் பங்காளிகளும் நடைமுறைப்பிரகாரம் 16 நாள் தீட்டு அனுசரிக்கவேண்டும்.

இதற்கு நடுவில் என் சதாபிஷேகம் இன்னும் நான்கு நாளில் கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தேன். ஆனால் இந்த சம்பவம் நடந்த பிறகு தீட்டு வந்துவிட்டதே. என்ன செய்யலாம் என்று காலகாலேஸ்வரர் கோவில் ஐயரைப் போய் விசாரித்தேன். (அங்குதான் என் சதாபிஷேகத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தேன்). கோயிலுக்குள் நான் போகக் கூடாதல்லவா?அதனால் என் மச்சினன் ஒருவனைக் கூடக் கூட்டிக்கொண்டுபோயிருந்தேன்.

அந்த ஐயர் திட்டவட்டமாக 16ம் நாள் காரியம் முடியாமல் எந்தக் காரியமும் செய்யக் கூடாது என்று சொல்லி விட்டார். பிறகு என்ன செய்ய முடியும்? அடுத்த மாதம் என் ஜன்ம நட்சத்திரம் வரும் வரையில் காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஒருவனின் வாழ்வில் விதி எப்படி விளையாடுகிறது பாருங்கள்.