ஞாயிறு, 15 நவம்பர், 2015

பதிவர்களின் ஆயுள்.

                                    Image result for பிளாக்கர்
புதியன புகுதலும் பழையன கழிதலும்
வழுவல கால வகையினானே.  நன்னூல் சூத்திரம்.

இந்த சட்டம் யாருக்குப் பொருந்துமோ பொருந்தாதோ, பதிவரக்ளுக்கு மிகவும் பொருந்தும். நான் ஏறக்குறைய ஆறு வருடங்களாகப் பதிவுலகில் வலம் வருகிறேன். பல பிரபல பதிவர்களைப் பார்த்து விட்டேன்.

எல்லோருக்கும் பொதுவான விதி என்னவென்றால் பதிவர்களுக்குண்டான ஆயுள் முடிந்தவுடன் அவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள். நான்காயிரம் பதிவுகளுக்கு மேல் பதிவிட்ட பிரபல பதிவர் சி.பி.செந்தில்குமார். அவர் பதிவுலகில் எழுதுவதை ஏறக்குறைய நிறுத்தி விட்டார்.

தினம் தவறினாலும் தவறும், ஆனால் இவர் பதிவு தினத்திற்கு ஒன்று வந்தே தீரும் என்று பெயர் வாங்கின பதிவர் திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்கள். அவர்கள் பதிவுகள் இப்போது ஆடிக்கு ஒன்று, அமாவாசைக்கு ஒன்று என்று வருகிறது.

துளசி தளம் டீச்சர் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறார். ஆனால் இந்த மாதிரி தொடர்ந்து எழுதுபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கிறார்கள்.

பொதுவாக நான் பார்த்த வரையில் பதிவர்களின் ஆயுட்காலம் ஐந்து வருடங்கள் அல்லது 1000 பதிவுகள். இவைகளைத் தாண்டி பதிவு தொடர்ந்து எழுதிபவர்கள் பதிவுலகில் மிகச்சொற்பமே.

நான் ஏறக்குறைய 900 பதிவுகள் போட்டு விட்டேன். இதை வைத்து என் பதிவுலக ஆயுள் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே தோராயமாகக் கணக்குப் பண்ணிக்கொள்ளலாம். இந்தக் கணக்கு எனக்கு மட்டும் இல்லை. அநேகமாக எல்லாப் பதிவர்களுக்குமே பொருந்தும்.