சனி, 20 பிப்ரவரி, 2016

நான் எடுத்த உறுதி மொழிகள்


                                 

நான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர். எங்கள் சங்கத்தின் சார்பாக ஒரு மாதாந்திர செய்தி மடல் வெளியிடப்படுகிறது. இந்த மாத செய்தி மடலில் பிரசுரமான ஒரு கேள்வி-பதில் பகுதி பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பி இங்கே பதிகிறேன்.

கேள்வி: முதியோர் வைத்திய நிபுணரிடம் கேட்கப்பட்ட கேள்வி.

எனக்கு வயது 75. கூட்டுக்குடும்பத்தில் நன்றாகவே இருக்கிறேன். பொதுவாக இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு இளைஞர்கள்தான் காரணம் என்று சொல்வதை விட, முதியவர்களாகிய நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? உங்களின் நீண்டகால அனுபவம் என்னைப்போன்ற பல முதியவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று இக்கடித த்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

பதில்:

இதுவரை யாரும் கேட்காத ஒரு பயனுள்ள கேள்வியைக் கேட்பது உங்கள் பரந்த உள்ளத்தைக் காட்டுகிறது. இதோ, முதியவர்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி மொழியைக் கொடுத்துள்ளேன்.

உறுதி மொழி 


  • எனக்கு வயதாகிக்கொண்டு வருவதை உணர்கிறேன். சீக்கிரமே நான் முதுமையை எட்டி விடுவேன். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் குணம் எனக்கு வந்து விடக்கூடாது. குறிப்பாக எல்லா விஷயங்களைப் பற்றியும், எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏதாவது கருத்துச் சொல்லியே ஆகவேண்டும் என்ற உணர்வு எனக்கு எழக்கூடாது.
  • எல்லோரது தவறுகளையும் திருத்துவதுதான் என் வேலை என்ற நினைப்பு எனக்கு வரக்கூடாது.எனது அனுபவமும் அறிவும் எனது பொக்கிஷம். அறிவுரை என்ற பெயரில் எல்லோரிடமும் அதை இறைத்து விடமாட்டேன்.
  • நீள நீளமான வாக்கியங்களைத் தவிர்த்து, ஒற்றை வார்த்தையில் எதையும் சொல்லும் பக்குவம் வரவேண்டும்.
  • என் கஷ்டங்களையும் வலிகளையும் பற்றி எல்லோரிடமும் பலம்பாமல், அடுத்தவர் கஷ்டங்களையும் காது கொடுத்து கேட்கும் பொறுமை பெற வேண்டும்.
  • எல்லாமே ஞாபகத்தில் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. மகிழ்ச்சியான நினைவுகள் மட்டும் ஞாபகத்தில் இருந்தால் போதும். துயரமான தருணங்களை என் ஞாபக மறதி நோய் எடுத்துக்கொள்ளட்டும்.
  • நானும் தவறுகள் செய்யக்கூடிய சாதாரண மனிதப்பிறவிதான் என்ற நினைப்பு எனக்கு எப்போதும் இருக்கட்டும். குடும்பத்தில் வாக்கு வாதங்களை அது தவிர்த்து விடும்.
  • எல்லோருக்கும் கருணை காட்டும் மனம் வேண்டும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் எண்ணம் வேண்டும். அடுத்தவர்களின் சிறந்த குணங்களைக் கண்டறிந்து பாராட்டும் தாராள உள்ளம் வேண்டும். யாரையும் அதிகாரம் செய்யும் முரட்டு குணம் மட்டும் வேண்டாம்.

                                                  Image result for flower