சனி, 7 மே, 2016

காதல் கல்யாணங்கள்

ஒரு ஊழியனின் குரல் 

என்கிற தளத்தில் வெளி வந்த
இப்பெண்ணின் கேள்விக்கு பதிலென்ன?

என்ற பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம்.


நான் இந்த கலப்புத் திருமணங்களைப் பற்றி சில சொந்தக் கருத்துகள் வைத்திருக்கிறேன். அவை என்னைப் பிற்போக்குவாதியாகவும் சாதி வெறியனாகவும் இன்னும் பல அடைமொழிகளுக்கு உரியவனாகவும் காட்டலாம். அவைகளைப் பற்றி கவலைப்படாமல்தான் இந்த பின்னூட்டம் போடுகிறேன். இந்தப் பின்னூட்டம் மேலும் பல மாற்றுக்கருத்துகளுக்கு வழி வகுத்தால் நன்மை உண்டாகும்.

காதல் என்பது ஒரு பருவக்கவர்ச்சியே என்பதில் யாருக்கும் வேறுபாடு இருக்க சாத்தியமில்லை. இதை சரியான கோணத்தில் கையாள்வதற்கு நம் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்.நாம் வாழும் காலம் என்ன, நம் வாழ்க்கையை வாழ என்னென்ன தேவைகள் உண்டு, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற நாம் என்ன தகுதி பெற்றிருக்கவேண்டும் என்ற சிந்தனைகள் ஒவ்வொரு பொறுப்புள்ள இளைஞன் மற்றும் இளைஞிக்கு வேண்டும்.

18 வயது பெண்ணும் 21 வயது பையனும் கல்லூரியில் பழகும்போது காதலில் ஈடுபட்டு கல்யாணம் செய்து கொண்டால் அவர்களுக்கு வாழ்க்கை நடத்த என்ன பொருளாதார வசதி இருக்கும்? என்ன உலக அனுபவம் இருக்கும்? இந்த நடைமுறை உண்மையைப் புரிந்து கொள்ளாமல் காதல் என்ற போர்வையைப் போர்த்துக்கொண்டு கல்யாணம் செய்பவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் தோற்று விடுகிறது.

இந்த மாதிரி கல்யாணங்களில் சாதி வேறுபாடும் கலந்து விட்டால் அந்தக் காதலர்களின் வாழ்க்கை இன்னும் பிரச்சினைக் குரியதாகிறது. இந்தப் பிரச்சினையை ஒரு சமுதாயப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு அதற்கு மாற்று வழிகளாக ஏதாவது கருத்துகள்  மற்றும் விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் இந்தப்பிரச்சினைக்கு முடிவு ஏற்படும். இந்த நிகழ்வுகளுக்கு வெறும் சாதிச் சாயம் மட்டுமே பூசி சாதி வெறியை அதிகரிப்பதினால் யாருக்கு என்ன பயன்?

கல்யாணம் செய்து கொள்ளும் ஆணும் பெண்ணும் சமநிலையில் இருக்கவேண்டும். அதாவது அவர்கள் குடும்பம், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள் இத்தியாதி. இவை சமநிலையில் இருந்தால்தான் அவர்களின் திருமணம் வெற்றிகரமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். கலப்புத் திருமணங்களில் இந்த சம நிலை இருக்க வாய்ப்பில்லை. அதனாலேயே அவைகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை.

ஜாதி வெறி என்று சொல்வதினால் அது உடனே மறைந்து போகப் போவதில்லை. இதை அரசியலாக்குவதால் சம்பந்தப்பட்ட தனி நபர்களுக்கு எந்த விடிவும் ஏற்படப்போவதில்லை. இந்த நிலை மாறுவதற்கு தமிழ் நாட்டில் இன்னும் பல காலங்கள் ஆகும். அதற்குள் கீழ் நிலையிலிருப்பவர்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். இதற்கு அவர்களுக்கு வழிகாட்டத் தகுந்த தலைவர்கள் வேண்டும். இதற்கெல்லாம் காலம் பிடிக்கும். அதற்குள் அவசரப்பட்டு கலப்புத் திருமணங்கள் செய்யும் ஜோடிகள் பல இன்னல்களுக்கு ஆளாகத்தான் வேண்டும்.

நம் சமுதாயம் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடையுமா, அடையாதா, அடையும் என்றால் எத்தனை காலம் பிடிக்கும் என்பதே ஒரு பெரிய கேள்விக் குறிதான்.

இந்தப் பிரச்சினை மிகவும் சிக்கலானது. சம்பந்தப்பட்டவர்களின் உணர்ச்சியைத் தூண்ட வல்லது. ஆகவே இதைப்பற்றி எழுதும்போது மிகவும் கவனமாகத்தான் எழுதுகிறேன். நான் இந்தப் பதிவு எழுதுவதின் நோக்கமே ஒரு சமுதாய மாற்றத்திற்கான சிந்தனைகள் வளர வேண்டும் என்பதற்காகவே. அப்படியும் சிலர் என் மீது தனிப்பட்ட முறையில் கோபப்படலாம். அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பிரச்சினையை விட்டு விட்டு தனி நபர் மீது கோபம் கொள்வது எந்த வகையிலும் அந்தப் பிரச்சினை தீர்வதற்கு உதவாது என்பதை உணர வேண்டும்.