திங்கள், 18 ஜூலை, 2016

கல்யாணம் செய்து கொள்வது அவசியமா?


                               Image result for south indian marriage photography

ஒரு மனிதன் எதற்காக கல்யாணம் செய்து கொள்ளவேண்டும்? பழங்காலத்தில் மனுதர்மத்தில் சொன்ன கிரகஸ்தாசிரமத்தைப் பேணவா? கிரகஸ்தன் என்பவன் சந்நியாசிகளுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டியது தர்மம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

இன்றுள்ள சந்நியாசிகள் ஆயிரக்கணக்கான கிரகஸ்தர்களுக்கு அன்றாடம்  அன்னதானம் செய்யுமளவிற்கு வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே இதற்காக கிரகாஸ்திரமம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் இல்லை.

அடுத்ததாக சந்தான விருத்திக்காக கிரகாஸ்திரமம் தேவை என்று சொல்லப்படுகிறது. சந்தானம் எதற்கு. ஏதோ கடைசி காலத்தில் பெற்றோர்களைக் காப்பாற்றுவார்கள் என்பதற்காக சொல்லப்பட்டது. இன்றுள்ள சந்தானங்கள் முக்கால்வாசிப்பேர் அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா என்று தங்கள் பிழைப்பைப் பார்க்கப் போய்விடுகிறார்கள். அவர்கள் எங்கே வயதான காலத்தில் பெற்றோர்களைப் பராமரிக்கப் போகிறார்கள்? இதுவும் ஒரு காரணமில்லை.

வாழ்கிற காலத்தில் ஒரு துணை வேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள். அது ஒரு அவசியம்தான். ஆனால் அதற்காக கல்யாணம் என்ற கால் விலங்கு அவசியம்தானா? காலம் மாறிக்கொண்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று வளர்ந்து வரும் கலாச்சாரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணமில்லாமலேயே ஒன்றாக வாழலாம் என்ற கலாச்சாரம் வளர்ந்து வருகின்றது.

இந்தக் கலாச்சாரம்தான் சிறந்தது. மனதிற்குப் பிடித்தால் சேர்ந்து வாழலாம். பிடிக்கவில்லையா, எந்தச் சிக்கலும் இல்லாமல் பிரிந்து விடலாம். ஆகவே இனி வரும்காலத்தில் கல்யாணம் என்பது ஒரு அவசியமில்லாத சடங்காக மாறப்போகிறது. இந்த மாற்றத்திற்கு அனைவரும் தயாராகிக்கொள்ளுங்கள்.