திங்கள், 1 ஆகஸ்ட், 2016

செய்நன்றியை எதிர் பார்ப்பது முட்டாள்தனம்

                               Image result for திருவள்ளுவர் images

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு - குறள்.

ஒரு வேளை இந்தக் குறள் திருவள்ளுவர் காலத்திற்குப் பொருத்தமாய் இருந்திருக்கலாம். ஆனால் நிச்சயம் இந்தக்
காலத்திற்குப் பொருந்தாது. என்னடா இவன் சுத்தக் கிறுக்கனா இருக்கானே என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு வகையில் நான் கிறுக்கன்தான். பதிவுலகில் கிறுக்கிக்கொண்டு இருக்கிறேனே, அதிலிருந்தே தெரியவில்லையா, நான் முழுக்கிறுக்கன் என்று?

விஷயத்திற்கு வருவோம். நன்றி என்பது என்ன? ஒருவர் இன்னொருவருக்கு உதவி செய்தால், அந்த உதவி பெற்ற நபர், அந்த உதவியைச் செய்தவருக்கு நன்றியுடன் இருக்கவேண்டும். இது ஓரளவுக்கு நியாயமானதாய்த்தான் தெரிகிறது. ஆனால் இந்த நன்றி உணர்வை எத்தனை காலத்துக்கு வைத்திருப்பது?

உதவி பெற்றவன் தன்னுடைய ஆயுள் காலத்திற்கும் இந்த நன்றியை மறவாதிருக்கவேண்டும் என்றால் பிரச்சினை இங்குதான் உருவாகிறது. ஒருவன் தன் ஆயுள் காலத்தில் பலரிடமிருந்து பலவிதமான உதவிகளைப் பெற்றிருப்பான். அத்தனை உதவி செய்தவர்களுக்கும் இவன் நன்றி பாராட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்றால் இவன் வேறு ஒரு வேலையும் செய்ய முடியாது.
தன்னையும் தன் குடும்பத்தையும் எப்படிக் காப்பாற்றுவான்?

உதாரணத்திற்கு ஒருவனுடைய பெற்றோர்களை எடுத்துக்கொள்ளுங்கள். இவன் பிறந்ததிலிருந்து இவனை வளர்த்து ஆளாக்கி, படிப்பித்து, வேலையில் சேர்த்து, கல்யாணம் செய்து வைத்து இவனை ஒரு மனிதனாக்கியவர்கள் அவர்கள்தான். அவர்கள் செய்த சேவைக்கு ஈடு இணை உண்டோ? ஆகவே ஒவ்வொருவனும் தன்னுடைய பெற்றோர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பாராட்டிக்கொண்டு இருக்கவேண்டும். இதுதானே நியாயம்!

நியாயத்தைப் பார்த்துக்கொண்டு குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு இருந்தால் ஒருவன் முன்னேறுவது எப்போது? படிச்சமா, அமெரிக்கா போனமா, அங்கேயே செட்டில் ஆனமா, கல்யாணம் கட்டுனமா, குழந்தை, குட்டி பெத்தமா, ஒரு வீடு வாங்கினமா, நெண்டு கார் வாங்கினமா அப்படீன்னு இருந்தாத்தான் ஒருவன் முன்னேறியதற்கு அடையாளம். அதை விட்டு விட்டு இங்க உள்ளூர்ல ஒரு குமாஸ்தா உத்தியோகம் பார்த்துட்டு அப்பா அம்மாவைச் சுத்திச் சுத்தி வந்தா அது என்ன வாழ்க்கைங்க?

இதே மாதிரிதான் உதவி செஞ்ச மத்தவங்களையும் ஒரு தேங்க்ஸ் சொல்லிவிட்டு மறந்து விடவேண்டும். அப்படி மறக்காமல் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் "அன்னிக்கு நீங்க உதவி பண்ணாட்டா நான் வாழ்க்கையில முன்னேறியே இருக்க முடியாதுங்க" என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் இருக்கும் நிலையிலேயே இருக்கவேண்டியதுதான்.

மேலே போவதற்கு ஏணி அவசியம்தான். அதற்காக மேலை போனபின்பும் அந்த ஏணியையே பிடித்துக்கொண்டிருந்தால் அதற்கு மேலே போவது எப்படி? ஏறி வந்த ஏணியை உதைத்துத் தள்ளிவிட்டு அடுத்த ஏணியைப் பிடிக்க வேண்டும். அதுதான் வாழ்க்கையில் முன்னேற வழி.

இதைப் படிப்பவர்கள் அனைவரும் இந்த அறிவுரைகளை கடைப்பிடித்து வாழ்க்கையில் முன்னேறுவார்களாக!
                                     Image result for ஏணிப்படிகள்