வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

சொந்த வீடு வைத்திருப்பதின் கஷ்டங்கள்.

                               
"கட்டினவனுக்கு ஒரு வீடு, கட்டாதவனுக்கு ஊரெல்லாம் வீடு"



இந்தப் பழமொழியைக் கேட்டிராதவர்கள் அபூர்வம். எப்பவோ வாங்கின சைட்டில் வீடுகட்ட கடன் வாங்கி, ஊரெல்லாம் அலைந்து ஒரு கொத்தனாரைப் பிடித்து, அவருக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் வாங்கிக் கொடுத்து, அவர் வேலை செய்யும்போதெல்லாம் பக்கத்தில் நின்று ஒரு வீடு கட்டினவனுக்குத்தான் அதிலுள்ள சிரமங்கள் தெரியும். 

வீடு கட்டி முடித்து அந்த வீட்டிற்கு "புது மனைபுகு விழா" நடத்தி குடி வந்த பிறகுதான் ஒருவனுக்கு சோதனைகள் ஆரம்பமாகின்றன. 

வீட்டை முழுவதும் முடித்தபின் "புது மனைபுகு விழா" நடத்துவது சம்பிரதாயமில்லை. ஆகவே "புது மனைபுகு விழா" முடிந்த பின் வீட்டு வேலைகள் பல பாக்கி இருக்கும். வீட்டை இது நாள்வரை கட்டின கட்டிட கான்ட்ராக்டர் "புது மனைபுகு விழா" விற்கு வந்து அவருக்குண்டான வெகுமதிகளை வாங்கிப்போன பின் கண்ணிலேயே தென்படமாட்டார். பேசின தொகைக்கு மேல் 
அவர்  வாங்கியிருப்பார். அதனால் இனி இந்த வீட்டுக்கு வேலை செய்தால் காசு வராது என்று அவருக்குத் தெரியும்.  

இந்த நுணுக்கம் வீடு கட்டுகிறவனுக்கு எப்போதும் புரிவதில்லை. பட்டுக் கெட்டபின்தான் ஞானம் வரும்.  அந்த கான்ட்டிராக்டரை இனி எப்போதும் பிடிக்க முடியாது என்பதுவும் அப்போதுதான் புரியும். அவருடைய செல்போனும் எப்போதும் அணைக்கப்பட்டிருக்கும். 

அந்த வேலைகளை முடிக்காமல் குடி போவதும் சாத்தியமில்லை. இந்த வீட்டுக் கான்ட்டிராக்டர்கள் ஒரு எழுதாத சட்டம் வைத்திருக்கிறார்கள். அதாவது ஒரு கான்ட்ராக்டர் கட்டின கட்டிடத்திற்கு வேறு எந்தக் கான்ட்ராக்டரும் வரமாட்டான். வீட்டுக்காரன் நிலை திரிசங்கு சொர்க்கம்தான்.

எப்படியோ தெரிந்தவர்களைப் பிடித்து ஒரு கொத்தனார் ஏற்பாடு பண்ணி பாக்கி வேலைகளை முடிப்பதற்குள் ஏகப்பட்ட அலைச்சலும் பணமும் செலவாகி இருக்கும். எப்படியோ வீட்டு வேலைகளை முடித்து வீட்டிற்கு குடி வந்தாயிற்று. இனிமேல்தான் சோதனைகள் அடுக்கடுக்காக காத்திருக்கின்றன என்கிற விபரம் ஒவ்வொன்றாகப் புரியும்.

குழந்தைகளைப்  பக்கத்தில் இருக்கும் நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும். இதற்கு அந்த பள்ளிக்கூட நிர்வாகிகள் கேட்கும் நன்கொடைக்கு இன்னும் ஒரு வீடே கட்டி விடலாம். எப்படியோ, யார் யார் காலிலோ விழுந்து கொஞ்சம் சலீசான நன்கொடையில் இடம் வாங்கியாயிற்று. அவர்களைப் பள்ளிக்கூடத்திற்கு கூட்டிக்கொண்டுபோய் திரும்பக்கூட்டிவர ஆட்டோ அல்லது வேன் ஏற்பாடு பண்ணவேண்டும். புது காலனி ஆகையால் அவன் ரொம்பவுமே பிகு பண்ணுவான். சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். 

இதற்கு அப்புறம் தான் ஆபீஸ் போய்வர ஏற்பாடு செய்யவேண்டும். இது அவர் உத்தியோகம் பார்க்கும் இடத்தைப் பொறுத்தது. பஸ் வசதி பக்கத்தில் இருந்தால் அவர் பிழைத்தார். அந்த பஸ் நிலையத்திற்கும் சைக்கிள் (சைக்கிள் யார் இப்போது வைத்திருக்கிறார்கள்?) மொபட் அல்லது  ஸ்கூட்டரில் போய் அங்குள்ள ஸ்டேண்டில் வைத்து விட்டு பஸ் பிடிக்கவேண்டும். பின்பு மாலை திரும்பி வரும்போது வீட்டிற்கு வேண்டிய காய்கறி மற்ற சாமான்களை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேரவேண்டும்.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக குடும்பத்தினர், அதாவது மனைவி மக்கள் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மற்ற பொருட்கள் போனால் திரும்ப சம்பாதித்துக் கொள்ளலாம்.

வீட்டிற்கு தண்ணீர் கனெக்ஷன் மற்றும் மின் இணைப்பு முதலிலேயே வாங்கியிருப்பீர்கள். ஆனால் அவை கட்டிடம் கட்டும்போது வாங்கினதாகையால் அவைகளின் உபயோகக் கட்டணம் வணிக ரீதியில் இருக்கும். அதை குடியிருப்பு ரீதிக்கு மாற்றவேண்டும். அதற்குண்டான ஆபீசைக் கண்டு பிடித்து, அதற்குண்டான ஆளைக் கண்டுபிடித்து, அவருக்குண்டான மாமூலைக் கொடுத்தால் காரியம் கச்சிதமாக முடியும். இல்லாவிட்டால் லோ லோவென்று நாய் படாத பாடாக அலைய விட்டு விடுவார்கள்.

அடுத்தது ரேஷன் கார்டை புது விலாசத்திற்கு மாற்றுவது. இதை நீங்களே செய்ய ஆசைப்பட்டு முயற்சித்தீர்களானால் ஆறு மாதத்திற்கு நீங்கள் ஆபீசுக்கு லீவு போட வேண்டி வரும். அதற்குண்டான சரியான ஆள் யாரென்று உங்கள் ஆபீஸ் பியூன் தெரிந்து வைத்திருப்பான். அவனிடம் விஷயத்தை ஒப்படைத்தீர்களானால் ஒரு மாதத்தில் காரியம் முடிந்து விடும். என்ன, பணம் சில ஆயிரம் செலவு ஆகும். பணம் கிடக்கிறது, விடுங்கள், இன்று போனால் நாளை வந்து விட்டுப் போகிறது. காரியம் ஆயிற்று பாருங்கள். அதுதானே நமக்கு வேண்டியது.

ஓரளவு அரசு சடங்குகளை முடித்தாயிற்று. இனி வரும் சோதனைகள்தான் முக்கியமானவை. தண்ணீர் பைப் ஆங்காங்கே லீக் ஆகும். அதற்கு பிளம்பரைக் கண்டுபிடிப்பது கடவுளைக் கண்டு பிடிப்பது போல்தான். அதே போல் எலெக்ரிசிடியும் அவ்வப்போது தொந்திரவு கொடுக்கும். இதையெல்லாமாவத் எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் இந்த மழைக் காலம் வருகிறதே அதை சமாளிக்கத்தான் பெரிய சாகசங்கள் புரிய வேண்டி இருக்கும்.

இத்துடன் போதும் என்று நினைக்கிறேன். இனி யாரும் சொந்த வீட்டிற்கு ஆசைப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.