வியாழன், 29 ஜூன், 2017

14. பஸ்களும் விபத்துக்களும்

                                           Image result for பஸ் விபத்து

மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் போக்கு வரத்து தேவைகளும் அதிகரித்து விட்டன. பஸ்கள், லாரிகள், மினிபஸ்கள், வேன்கள், கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், ஸகூட்டர்கள் என்று பல விதமான வாகனங்கள் பல மடங்கு அதிகமாகி விட்டன. இந்த வாகனங்கள் அதிகரிப்புக்கு ஈடாக ரோடுகள் அதிகரிக்கவில்லை. அதனால் அடிக்கடி ரோடுகளில் விதவிதமான விபத்துக்கள் நடக்கின்றன.

வாகனங்கள் ஓட்டுவதற்கு லைசன்ஸ் வேண்டும். கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு தனியாக ஸ்பெஷல் லைசன்ஸ் வேண்டும். இப்படியெல்லாம் சட்ட புத்தகத்தில் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இவை எந்த அளவுக்கு கடைப்பிடிக்கப்படுகின்றன என்று யாரும் பார்க்கிறார்களா என்பது ஒரு கேள்விக்குறியே?

குறிப்பாக அரசு நடத்தும் பஸ் நிறுவனங்களில் இருக்கும் பஸ் டிரைவர்கள் பெரும்பாலும் அனுபவம் குறைந்தவர்கள். அவர்களிடம் ஒரு பெரிய பஸ்ஸைக்கொடுத்து ஓட்டச்சொன்னால் அவர்கள் அவர்களுடைய திறனுக்குத் தக்கவாறுதான் ஓட்டுவார்கள். சிக்கலான சூழ்நிலையில் அவர்கள் செய்யும் தவறுகளினால்தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களோ ரோடு முழுவதும் அவர்களுக்காகவே இருக்கிறது என்ற எண்ணம். பின்னால் வரும் கனரக வாகனங்களை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. மேலும் இந்த வாகனங்களில் எவ்வளவு பேர் போகமுடியும் என்ற உணர்வும் கிடையாது. ஒரு TVS 50 மொபட் வண்டியில் தன் குடும்பம் முழுவதையும் (5 பேர்) ஏற்றிக்கொண்டு போகிறார்கள். வண்டி இழுக்கமாட்டேன் என்கிறது. முக்கி முனகிக்கொண்டு மேட்டில் ஏறும்போது பின்னால் வேகமாக வரும் பஸ் அல்லது லாரி இந்த மொபட்டின் மேல் லேசாகப்பட்டால் போதும். மொபட்டில் போகிறவர்கள் அந்த லாரியின் முன்னால் விழுந்து.... பிறகு என்ன நடந்தது என்பதைத்தான் தினமும் பேப்பரில் பார்க்கிறோம்.

ஆக மொத்தத்தில் இரண்டு பக்கத்திலும் தவறு இருக்கிறது. ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

கோவையில் மட்டும் கடந்த மாதம் தெரு விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 என்று செய்தித்தாள்களில் பிரசுரமாகியிருந்தது. இது தமிழ்நாட்டிலேயே அதிக பட்ச இறப்பு என்றும் கூறப்பட்டிருந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த விபத்துக்களுக்கு காரணம் அரசு போக்குவரத்து வாகனங்கள்தான். நல்ல சேவை.

இந்த விபத்துக்களை செய்தித்தாள்களில் காலையில் படித்து மாலையில் மறந்து போகிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இந்த விபத்து ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பைப் பற்றி நம்மில் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனாலும் இத்தகைய விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றன என்று ரோடில் செல்லும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். நாமும் ஒரு நாள் இந்த மாதிரி செய்தியாகலாம்.

வேகம், வேகம், வேகம். இதுவே நம் ஒவ்வொருவரின் தாரக மந்திரம். எதிலும் வேகம். எல்லாவற்றிலும் வேகம். யமலோகத்திற்கு போவதற்கும் வேகம். என்ன செய்ய முடியும்? மக்கள் சிந்திக்க வேண்டும்.