ஞாயிறு, 2 ஜூன், 2019

இந்தி எதிர்ப்பும் திராவிடக் கட்சிகளும்.

1950 களில் திராவிடக் கழகம் பெரியார் தலைமையில் இயங்கியபோது நாத்திகமும் பிராமணத் துவேஷமும்தான் அந்தக் கட்சிக் கொள்கையாயிருந்தது. பின்பு பெரியார் மணியம்மையைக் கல்யாணம் செய்து கொண்ட பிறகு தி.மு.க. தோன்றியது.

அவர்கள் பெரியாரின் கொள்கைகளை மட்டும் நம்பியிராமல் மாணவர்களைக் கவரும் பொருட்டு இந்தி எதிர்ப்பைத் தங்கள் முக்கிய கொள்கையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இதற்கு எந்த அரசியல் காரணமும் இல்லை. போராடுவதற்கு ஏதாவது சாக்கு வேண்டும், அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கைதான் இது.

இந்தப் போராட்டம் பல்வேறு கட்டங்களில் பலவிதமாக நடத்தப்பட்டு கடைசியில் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் இந்தி சொல்லிக்கொடுப்பது நின்று போயிற்று. இந்த நிலையினால் தமிழ் இளைஞர்கள் இந்தி படிக்காமல் மத்திய அரசு வேலைகளைக் கோட்டை விட்டார்கள். ஆனால் பிராமணர்கள் தனிப்பட்ட முறையில் இந்தி கற்றுக்கொண்டு டில்லிக்கோட்டையில் பல முக்கிய பதவிகளில் கோலோச்சினார்கள், கோலோச்சுகிறார்கள்.

இப்போது மத்திய அரசு இந்தியை பாடத்திட்டத்தில் சேர்த்தால் நல்லதாகப்போச்சு என்று இருக்காமல் அதை எதிர்த்து உயிர் தியாகம் செய்ய இந்த திராவிடக்கட்சிகள் கூவுகின்றன. இந்தத் திராவிடக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம் தங்கள் வாரிசுகளுக்கு இந்தி படிப்பிக்கிறார்கள். இந்த அடிமட்ட மக்கள்தான் அறிவு கெட்டுப்போய் இந்தி எதிர்ப்புக் கோஷம் போட்டுக்கொண்டு அழிந்து போகிறார்கள்.

தமிழன்தான் தமிழனுக்கு எதிரி.