கோயமுத்தூரில் 1960 களில் இரண்டு மூன்று பெரிய ஓட்டல்கள்தான் இருந்தன. பெரிய கடைவீதியில் இரண்டு - "ரஞ்சித விலாஸ்" மற்றும் "பாம்பே ஆனந்தபவன்". ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ஒன்று - "ராயல் இந்து ரெஸ்டாரென்ட்" சுருக்கமாக ஆர் எச் ஆர் என்று அழைக்கப்பட்டது. அது தவிர "வுட்லேண்ட்ஸ்" என்று ஒரு ஓட்டல் கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ் எதிரில் இருந்தது. அது பணக்காரர்களுக்கானது. ஏனெனில் அது ஒதுக்குப் புறமான இடத்தில் இருந்ததால் சாதாரண ஜனங்கள் அங்கு போகமாட்டார்கள். இது தவிர ஆங்காங்கே பல பெயர் தெரியாத சிறு ஓட்டல்களும் டீக் கடைகளும் இருந்தன.
இந்த மூன்றில் "பாம்பே ஆனந்த பவன்" தான் அதிகப் பிரசித்தம். கடைவீதிக்கு வரும் ஜனங்கள் எல்லோரும் இதற்குத்தான் படையெடுப்பார்கள். எப்போதும் ஜே ஜே என்று இருக்கும். எல்லா உணவுப் பண்டங்களும் தரமாகவும் ருசியாகவும் இருக்கும். குறிப்பாக இட்லி சாம்பார் மிகவும் நன்றாக இருக்கும். காப்பியும் சூப்பராக இருக்கும்.
மாலை வேளைகளில் அவ்வளவாகக் கூட்டம் இருக்காது. அந்தக் காலத்தில் சாப்பிடுவதற்காக மட்டும் என்று ஓட்டலுக்கு போகிறவர்கள் கம்மி. கடைவீதிக்கு ஏதாவது வாங்கப்போனால் பர்சேஸ் முடித்து விட்டு இங்கு சென்று டிபன் சாப்பிட்டு விட்டு வருவார்களே தவிர, டிபன் சாப்பிடுவதற்கென்று ஓட்டலுக்குப் போகிறவர்கள் குறைவு.
நாங்கள் ஆறு பேர் அசிஸ்டென்ட் புரொபசர்கள் இருந்தோம் என்று முன்பே சொல்லியிருந்தேனல்லவா? நாங்கள் இந்த ஓட்டலின் இட்லி சாம்பாரில் மயங்கிப் போனோம். ஆகவே ஏதாவது ஒரு சாக்கை வைத்துக்கொண்டு இங்கு செல்ல ஆரம்பித்தோம். பேச்சு வாக்கில் யாராவது ஏதாவது சொல்லி மாட்டிக்கொண்டால் அன்று ஆனந்தபவன் இட்லி சாம்பார் செலவு அவர் தலையில். வாரத்தில் இரண்டு நாளாவது இப்படிப் போவோம்.
எங்களுக்கென்று முதல் மாடியில் ரோட்டைப் பார்த்தவாறு ஒரு ஸ்பெஷல் உண்டு. அந்த டேபிளில்தான் உட்காருவோம். அடிக்கடி போய்க் கொண்டிருந்தபடியால் அங்குள்ள சர்வர்கள் நன்கு பழக்கமாகி விட்டார்கள். நாங்கள் இட்லி சாம்பார் சாப்பிடும் முறையே அலாதியானது. வழக்கமாக மொத்தம் நான்கு இட்லி சாப்பிடுவோம். ஆனால் அதை ஒன்றாக வாங்க மாட்டோம். இரண்டு இட்லி சாம்பார் என்று முதலில் ஆர்டர் கொடுப்போம். ஒரு தட்டில் இரண்டு இட்லியும் இட்லி தெரியாத அளவு சாம்பாரும் ஊற்றி ஒரு ஸ்பூனுடன் சர்வர் கொண்டு வந்து வைப்பார். உடனே இட்லியைச் சாப்பிடமாட்டோம். சாம்பாரை மட்டும் ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டு விட்டு சர்வர் அந்தப் பக்கம் மறுபடி வரும்போது திரும்பவும் சாம்பார் கேட்போம். அவர் மறுபடியும் தட்டு நிறைய சாம்பார் ஊற்றுவார்.
அதையும் முன்பு போலவே ஸ்பூனால் குடித்துவிட்டு மறுபடியும் சாம்பார் கேட்போம். சர்வரை நன்றாக கவனித்துக்கொள்வதால் அவர் சாம்பார் ஊற்ற சளைக்கமாட்டார். ஓட்டல் முதலாளி கீழே கல்லாவில் மும்முரமாக இருப்பார். அவர் இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார். மூன்றாவது தடவை சாம்பார் வாங்கும்போது இட்லி நன்றாக ஊறி இருக்கும். அந்த கட்டத்தில் சாம்பாருடன் இட்லியையும் சேர்த்து சாப்பிடுவோம்.
பிறகு இன்னும் இரண்டு இட்லிக்கு ஆர்டர் செய்வோம். இட்லி வந்தவுடன் முன்பு செய்த மாதிரியே இரண்டு தடவை சாம்பாரை மட்டும் சாப்பிட்டு விட்டு மூன்றாவது தடவை இட்லியையும் சேர்த்து சாப்பிடுவோம். எப்படியோ நாங்கள் ஆறு பேரும் ஆளுக்கு நாலு நாலு இட்லி சாப்பிடுவதற்குள் ஒரு பக்கெட் சாம்பாரைத் தீர்த்திருப்போம்.
கொஞ்ச நாள் நாங்கள் இப்படி சாம்பாரை மட்டும் குடிப்பதைப் பார்த்த சர்வர்கள் நாங்கள் போய் உட்கார்ந்ததும் முதல் டோஸ் இட்லி கொண்டு வரும்போதே ஒரு பக்கெட் சாம்பாரையும் கொண்டு வந்து எங்கள் டேபிளில் வைத்து விட்டுப் போய்விடுவார். அந்த பக்கெட்டைக் காலி செய்து விட்டுத்தான் நாங்கள்
புறப்படுவோம்.
அப்போதெல்லாம் பருப்பு விலை, காய்கறி விலை எல்லாம் சலீசாக இருந்ததால் நாங்கள் இப்படி சாம்பாரைக் குடித்தும் ஓட்டல் நன்றாக லாபகரமாகவே ஓடிக்கொண்டு இருந்தது. நங்களும் கொஞ்ச வருடங்கள் இப்படிச் சாம்பாரைக் குடித்து வளர்ந்தோம். பின்பு ஒவ்வொருவரும் பல காரணங்களால் பிரிந்து போக, இந்த லீலையைத் தொடர முடியாமல் போனது.
பிறகு அன்னபூர்ணா ஓட்டல் வந்தது. அதன் தாக்கத்திற்கு முன் மற்ற ஓட்டல்கள் சோபிக்க முடியவில்லை. எல்லா ஓட்டல்களும் மங்கிப்போயின. இன்று அந்த பாம்பே ஆனந்தபவன் இருந்த கட்டிடத்தை இடித்து விட்டு ஏதோ காம்ப்ளக்ஸ் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
தஞ்சாவூர் ரயிலடிக்கு அருகிலும் ஒரு ஆனந்த் பவன் இருந்தது! சாம்பாரின் ருசி இப்படி அமைவது அபூர்வம்.
பதிலளிநீக்குஅந்த சர்வர் தான் அன்னபூர்ணா ஓனரா...? ஹா... ஹா...
பதிலளிநீக்குஆகா
பதிலளிநீக்குசாம்பாரை வெகுவாக ரசித்துக் குடித்திருக்கிறீர்கள்
தம +1
அருமை சார்.
பதிலளிநீக்குநன்றி.
ரசித்து சப்பிட்டிருக்கிறீர்கள்.பதிவிலேயே சாமாரின் சுவையை உணரமுடிகிறது
பதிலளிநீக்குதில்லியில் இருந்தபோது எனது வடக்கக்திய நண்பர்களோடு ‘கரோல் பாக்’ கிலுள்ள ராமானுஜம் மெஸ் செல்லும்போது, தோசையுடன் வரும் சாம்பாரில், தோசை சாப்பிடுவதை விட்டுவிட்டு சாம்பாரை ஸ்பூனால் எடுத்து குடித்துக்கொண்டே அவர்கள் இருந்ததை பார்த்து ‘என்ன உங்களுக்கு மட்டும் சாம்பாருக்கு தோசையா? என கிண்டல் செய்திருக்கிறேன். நீங்களும் அதுபோல் செய்திருக்கிறீர்களே! ஆனால் இப்போது அப்படி சாப்பிட்டால் அஜீர்ண கோளாறு தான் வரும். ஏனெனில் இப்போது தயாராகும் சாம்பாரின் இலட்சணம் அப்படி.
பதிலளிநீக்குWhen I was growing up, Annapoorna was the hotel to go to. Whenever we visited Coimbatore, we had a meal there.
பதிலளிநீக்குNowadays, its quality and quantity have gone down too.
தில்லி மக்கள் இரண்டு இட்லிக்கு ஒரு பக்கெட் சாம்பார் சாப்பிடுவது பார்த்திருக்கிறேன்.... இப்போதெல்லாம் கூடுதல் சாம்பாருக்கு காசு வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.... :)
பதிலளிநீக்குபழனி. கந்தசாமி ஐயா ..
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிடும் பாம்பே ஆனந்த பவன் (1970-80 களில்) பிரபலமான "ஷோபா" கார்னர் தாண்டி பெரிய கடை வீதியில் இடது பக்கம் இருந்த உணவகம் தானே? 1970களின் கடைசியில் பழைய உணவகமாக பார்த்த நினைவு. ராயல் இந்து உணவகம் ரயில் நிலையத்தின் எதிர்ப்புறம் இன்றும் செயல் பட்டுக்கொண்டிருப்பது சிறப்பு. RHR எனப்படும் அந்த உணவகம் என் தந்தை கல்லூரி காலங்களில் மிகப் பிரசித்தம் எனக்கூற கேட்டதுண்டு. அங்கே சாப்பிட்டுவிட்டு மாலையில் கோவை ரயில் நிலையத்தில் அவர்கள் நண்பர்களுடன் "ஜமா" கூடுவதாக கூறுவார். 1970-80 களில் ஒப்பனக்கார வீதியில் அருள் ஜோதி என்ற உணவகமும் சிறந்து செயல் பட்டது.
அன்புடன்,
சங்கர நாராயணன் தி.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
நீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஐயையோ, என் பதிவில் என்னமோ ஆகிவிட்டது. நான் ஸ்கேம் என்று எங்கேயோ போட்டிருந்தவைகளை டெலீட் செய்தேன். இங்குள்ள பின்னூட்டங்களை எல்லாம் நான் டெலீட் செய்தது போல் காண்பிக்கிறதே? ஆண்டவா, நான் இந்தப் பாவத்தை எப்படிக் கழுவுவேன்? அன்பர்கள் என்னை தயை கூர்ந்து மன்னிக்கவேண்டுகிறேன். திண்டுக்கல் தனபாலன்தான் கை கொடுக்கவேண்டும். இந்தப் பின்னூட்டங்களை மீட்க ஏதாவது வழி உண்டா? தநை செய்து கண்டு பிடித்துச் சொல்லுங்கள்.
பதிலளிநீக்குஅது ஒன்றுமில்லை நைனா.
நீக்குஇன்று சந்திர கிரகணம் அல்லவா
அதன் பாதிப்பாகத்தான் இருக்கும்
உடனடியாக தங்களின் CPU வை தலைக்கு குளிக்க செய்யுங்கள் (முடிந்தால் எண்ணை வைத்து)
நல்ல பலன் கிடைக்கும்.
//அந்தக் காலத்தில் சாப்பிடுவதற்காக மட்டும் என்று ஓட்டலுக்கு போகிறவர்கள் கம்மி. கடைவீதிக்கு ஏதாவது வாங்கப்போனால் பர்சேஸ் முடித்து விட்டு இங்கு சென்று டிபன் சாப்பிட்டு விட்டு வருவார்களே தவிர, டிபன் சாப்பிடுவதற்கென்று ஓட்டலுக்குப் போகிறவர்கள் குறைவு.//
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரிதான்.
அந்த காலத்தில் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வருகிறோம் என்றால் "பாவம்பா அவர். வீட்டுக்காரம்மா சரியில்லை போலிருக்கிறது. அடிக்கடி ஹோட்டலுக்கு வந்து விடுகிறார்" என்பார்கள்.
இன்று "பாவம்பா அந்தம்மா. வீட்டுக்காரர் சரியில்லை போலிருக்கிறது. ஹோட்டலுக்கு கூட்டிக்கொண்டே போவதில்லை" என்கிறார்கள். காலம் எப்படி மாறிவிட்டது பார்த்தீர்களா?
சேலம் குரு
//அது தவிர "வுட்லேண்ட்ஸ்" என்று ஒரு ஓட்டல் கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ் எதிரில் இருந்தது. அது பணக்காரர்களுக்கானது. ஏனெனில் அது ஒதுக்குப் புறமான இடத்தில் இருந்ததால் சாதாரண ஜனங்கள் அங்கு போகமாட்டார்கள்.//
பதிலளிநீக்குசேலத்திலும் ஐந்து ரோடு பக்கத்தில் வுட்லண்ட்ஸ் என்று ஒரு ஹோட்டல் இருந்தது. சிவாஜி எம்ஜியார் என்று அந்த காலத்து பிரபல கதாநாயகர்கள் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படத்தில் நடிக்கும் பொது அங்குதான் தங்குவார்கள். நாங்கள் எல்லாம் சிறு பிள்ளைகளாக நடந்தே சென்று (சேலம் பஸ் நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு ஆறு பைசா டிக்கெட்) நடிகர்களை பார்க்க முடியுமா என்று வாசலில் தவம் கிடந்தது ஞாபகத்திற்கு வருகிறது. அப்போது அது ஊருக்கு ஒதுக்குப்புறம். இன்றோ அது மெயின் ஏரியா. இருந்தாலும் இன்றைய ஹோட்டல்களை ஒப்பிடும் போது அது சற்றே சாதாரணமான ஹோட்டல் ஆகிவிட்டது.
சேலம் குரு
//அப்போதெல்லாம் பருப்பு விலை, காய்கறி விலை எல்லாம் சலீசாக இருந்ததால் நாங்கள் இப்படி சாம்பாரைக் குடித்தும் ஓட்டல் நன்றாக லாபகரமாகவே ஓடிக்கொண்டு இருந்தது.//
பதிலளிநீக்குஅந்த நல்ல காரியத்தை பண்ணியது நீங்கள்தானா? அதனால்தான் இப்போதெல்லாம் பைனாகுலர் வைத்துத்தான் கண்டுபிடிக்க வேண்டிய அளவு கிண்ணத்தில் சாம்பாரை வைத்து விட்டு சாம்பார் இன்னொரு கிண்ணம் ஐந்து ரூபாய் என்று மெனு கார்டில் போட்டு விடுகிறான். அதை பார்க்காமல் நான் நாலு இட்லி ஆர்டர் செய்து விட்டு ஒரு ஐந்து கிண்ணம் சாம்பாரை காலி செய்து விட்டு பிள்ளை பார்த்தால் மயக்கமே வந்து விட்டது. சர்வர் மெனு கார்டை காட்டி சிரிக்கிறான். கடனே என்று அழுதுவிட்டு வந்தேன்.
காயத்ரி மணாளன்
//பிறகு அன்னபூர்ணா ஓட்டல் வந்தது. அதன் தாக்கத்திற்கு முன் மற்ற ஓட்டல்கள் சோபிக்க முடியவில்லை. எல்லா ஓட்டல்களும் மங்கிப்போயின//
பதிலளிநீக்குஅதற்கு காரணம் அன்னபூர்ணாவின் தரமும் விலையும் மட்டும் காரணமல்ல. அந்த ரெண்டு ரூபாய் நோட்டு சமாச்சாரமும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்வார்கள். எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
//சர்வரை நன்றாக கவனித்துக்கொள்வதால் அவர் சாம்பார் ஊற்ற சளைக்கமாட்டார். ஓட்டல் முதலாளி கீழே கல்லாவில் மும்முரமாக இருப்பார்.//
பதிலளிநீக்குஅங்கே முதலாளிக்கு பில். இங்கே சர்வருக்கு டிப்ஸ்.
பில்லுக்காக இலையில் விழுந்தது அதிகமா? இல்லை டிப்சுக்காக இலையில் ஊற்றப்பட்டது அதிகமா?
சேலம் குரு