ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

ஜாடை போடுவது

                                        Image result for gossip

கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இந்த ஜாடை பேசுவது பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். குறிப்பாக பெண்கள் இதில் வல்லவர்கள். யாரையாவது எதற்காவது  குத்திக்காட்ட வேண்டுமென்றால் நேரடியாகச் சொல்லமாட்டார்கள். ஜாடை போடுவார்கள்.

உதாரணத்திற்கு யாராவது கொஞ்சம் மற்றவர்களை விட தாராளமாக நடந்து கொண்டால், " மயிருள்ள சீமாட்டி, எப்படி வேண்டுமானாலும் கொண்டை முடிப்பாள்" என்பார்கள். அவள் தாராளத்தை நல்ல மனதுடன் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இப்படி ஜாடை பேசுவதில் உள்ள சௌகரியம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட நபர் இப்படிப் பேசினவர்களை நேருக்கு நேராகப் பார்த்து "என்னை ஏன் இப்படிப் பேசினீர்கள்" என்று கேட்டால், உடனே அவர்கள் தங்கள் பேச்சை அப்படியே பொரட்டி விடுவார்கள்.

"நான் உன்னையா அப்படிப் பேசினேன்? எங்க ஊர்ல ஒருத்தியைப் பற்றியல்லவா பேசினேன்" என்று தடாலடியாக தங்கள் பேச்சை அப்படியே மாற்றி விடுவார்கள். நான் டவுனில் பிறந்து வளர்ந்தவனாதலால் எனக்கு இந்த ஜாடைப் பேச்சுக்கள் அவ்வளவாக பரிச்சயம் இல்லை. இருந்தாலும் யாராவது ஜாடை பேசினால் புரிந்து கொள்வேன்.

இப்படித்தான் அன்று என் நண்பன் ஒருவன் "வெயில் காலம் வந்தால் சிலருக்கு ஸ்க்ரூ லூசாகி விடுகிறது" என்றான். நாங்கள் இரண்டு பேர் மட்டும்தான் இருக்கிறோம். என்னைத்தான் குறிப்பிடுகிறான் என்று புரிகிறது. ஆனால் உடனடியாக அதற்கேற்ற பதில் என்னால் சொல்ல முடியவில்லை. அதனால் பேசாமல் இருந்து விட்டேன்.

இது மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. இதை எப்படி பழி தீர்ப்பது என்று யோசித்ததில் ஒரு வழி புலனாகியது. அடுத்த தடவை அவனைச் சந்தித்தபோது ஒரு கதை விட்டேன்.

நான் சொன்ன கதையாவது.

எங்க வீட்டிற்கு ஒரு வயதான சாமியார் வந்திருந்தார். அவர் என்னைப் பார்த்துவிட்டு அருகில் அமரச்சொன்னார். என் நெற்றியில் கை வைத்துப் பார்த்து விட்டு, உங்களுக்கு ஒரு ஸ்க்ரூ லூசாக இருக்கிறதே என்று சொன்னார். நான் கொஞ்ச நாளைக்கு முன்பு என் நண்பன் ஒருவனும் இதே மாதிரித்தான் சொன்னான் என்றேன். அவர் அந்த நண்பன் யார் என்று விபரங்கள் கேட்டு விட்டு இனிமேல் அந்த நண்பனைப் பார்க்காதீர்கள், பேசாதீர்கள் என்று சொன்னார்.

இந்தக் கதையைக் கேட்டவுடன் அந்த நண்பனுக்கு முகம் வெளுத்து விட்டது. என்னைப் பார்த்து அந்த சாமியார் சொன்னபடியே செய்யுங்கள் என்று சொல்லி விட்டுப் போய் விட்டான். அவனுடைய நட்பு முறிந்து விட்டது என்றுதான் கொள்ளவேண்டும்.

உலகில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

21 கருத்துகள்:

  1. தங்களின் நண்பருக்கு நல்ல பதிலடி கொடுத்தீர்கள். எங்கள் பகுதிகளில் இதை ஜாடை பேசுவது என்பார்கள்.
    த ம 3

    பதிலளிநீக்கு
  2. ஜாடை போடுவதா அல்லது பேசுவதா? நீங்கள் இரண்டையும் உபயோகித்திருப்பதால் இந்த ஐயம். நேரில் சொல்ல தைரியம் இல்லாதவர்கள் தான் இந்த மாதிரி பேசுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டும் ஒன்றுதான் என்று நினைக்கிறேன். வழக்கில் இந்த இரண்டையும் உபயோகிக்கிறார்கள்.

      நீக்கு
  3. ஸ்குரூ லூஸ் நல்ல பாடம் தந்தது. கடைபிடித்த உத்தி அருமை.

    பதிலளிநீக்கு
  4. ஜாடை போடுதல் = ’ஜாடை மாடையாகப் பேசுதல்’ என்று நாங்கள் சொல்வோம்.

    நல்லா இருக்கு. ஒருசில எழுத்துப்பிழைகள் மட்டும் உள்ளன. அவற்றைத் தனியே மெயில் அனுப்பி வைக்கிறேன். திருத்தி விடுங்கோ.

    பதிலளிநீக்கு
  5. என்னாங்க சார்! சப் என்று முடித்து விட்டீர்கள். படிக்கத் தொடங்கியவுடன் ரொம்பவும் ஆர்வமாக இருந்தேன். இந்த ஜாடை பேசுதலில் உன்னிப்பாக கவனித்தால் எவ்வளவோ வகைகள் இருக்கின்றன. நகர்ப்புற குழாயடி சண்டையில் ஜாடை பேசுதல் கடைசியில் மயிர்பிடி சண்டையில் முடியும். சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னோடி.
    த.ம.5

    பதிலளிநீக்கு
  6. வயதுக்குக்கூட ஓர் மரியாதை கொடுக்காமல், சிலர் இப்படித்தான் ஜாடை மாடையாகப்பேசி, பிறர் மனம் நோகும்படியாக நடந்துகொள்கிறார்கள்.

    கசப்பானதொரு அனுபவத்தை மிக அழகாகக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. உலகில் இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  8. // நான் டவினில், சலருக்கு ஸ்க்ரூ, நண்பன் நார் என்று, நண்பனைப் பார்க்காதீர்க்ள, //

    என்னங்கைய்யா ஆச்சி...?

    பதிலளிநீக்கு
  9. இந்த பதிவு உங்களது நண்பருக்கா அல்லது ...ஒரு அமெரிக்க சீமாட்டிக்கா என்று குழப்பமாக இருக்கிறது ...

    பதிலளிநீக்கு
  10. நமக்கு இந்தக் கலை தெரியாதுங்கோ.....

    பதிலளிநீக்கு
  11. ம்ம்ம்... அனுபவம்தான். தஞ்சாவூர் பக்கங்களில் பட்டுக்கோட்டை பாணி என்று ஒன்று சொல்வார்கள். அது ஜாடை பேசுவது இல்லை. தெருவில் போகும் மூன்றாவது நபரை மத்தியஸ்தத்துக்கு அழைத்துக் கலாய்த்தல்!

    பதிலளிநீக்கு
  12. அனுபவ உண்மைதான் அய்யா... என் தெருவில் என்னை ஜாடை பேசுவதை தினமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். த.ம.9

    பதிலளிநீக்கு
  13. இன்னா செய்தார்க்கும், இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு!

    தாங்கள் செய்தது நியாயமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒத்துக்கொள்கிறேன், நண்பரே. நான் நான் செய்தது நியாயமில்லைதான்.

      ஆனால் ஏன் அப்படி செய்தேன் என்றால் பல காலமாகவே அவருக்கும் எனக்கும் மன ரீதியாக ஒத்துப் போவதில்லை. அடிக்கடி இம்மாதிரி வேற்றுமைகள் தோன்ற ஆரம்பித்தன. அதனால் விலகி இருப்பதே இருவருக்கும் நன்மை என்ற முடிவிற்கு வந்தேன்.

      நீக்கு
  14. ஜாடை போடுவது! பலர் இதில் வித்தகர்கள்! :)))

    பிடிக்காதபோது விலகி விடுவது நல்லது தான்!

    பதிலளிநீக்கு
  15. ஜாடை மாடையாகப் பேசுதல் என்றும் சொல்லுவதுண்டு...பழக்கமில்லாததால் மிகவும் கஷ்டப்பட்டதுண்டு. எதிரிலேயே பேசினாலும் தெரியாமல் இருந்த காலம் உண்டு. இப்பொதுதான் கொஞ்சம் புரிகின்றது....

    பதிலளிநீக்கு