ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

தொலைக்காட்சி தொடர்களும் தமிழ்க் குடும்பங்களும்.

மகாத்மா காந்தி மூன்று குரங்குகளின் சிலைகளை வைத்திருந்ததாகச் சொல்லுவார்கள்.
                                Image result for மூன்று குரங்குகள்
அவை குறிப்பிடுபவை என்னவென்றால், தீயதைக் கேட்காதே, தீயதைப் பார்க்காதே, தீயதைப் பேசாதே என்பதிகும் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

மனதனாகப்பட்டவன் நல்லவனாக வாழ இந்தப் பழக்கங்கள் வேண்டும் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள்.

ஆனால் இன்று தமிழ்நாட்டில் நடப்பது என்ன? (மற்ற மாநிலங்களைப் பற்றி எனக்கு நேரடி அனுபவம் இல்லையாதலால் அதைப்பற்றி சொல்ல விரும்பவில்லை)

தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான நடுத்தர வர்க்கப் பெண்கள் குடும்பத்தலைவிகளே. அதாவது வீட்டை மட்டும் கவனித்துக்கொள்பவர்களே. இவர்களுக்கு காலைச் சிற்றுண்டி முடித்து விட்டு மதியச் சாப்பாட்டையும் செய்து விட்டால் பகல் 11 மணியிலிருந்து மாலை 8 மணி வரை வேறு வேலை இல்லை. தொலைக்காட்சிப் பெட்டிகள் வராத காலத்தில் அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களுடன் ஏதோ பேசுவார்கள் அல்லது வீட்டில் இருக்கும் ஏதோ வேலைகளைச் செய்வார்கள்.

இப்போது வீட்டு வேலைகளைச் சுலபமாக்க பலவித உபகரணங்கள் வந்து விட்டன. குடும்பத் தலைவிகளின் வேலைகள் வெகுவாகக் குறைந்து விட்டன. தவிர தொலைக்காட்சிப்பெட்டியும் எல்லோர் வீட்டிலும் வந்து விட்டது. அப்படியும் சிலருக்கு இந்தப் பெட்டியை வாங்க வசதியில்லாக் காரணத்தினால் அரசே இலவசமாகத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொடுத்து அதற்கு வேண்டிய மின்சாரத்தையும் இலவசமாகவே கொடுக்கிறது.

தொலைக்காட்சிப் பெட்டி வந்த காலத்தில் அதில் இவ்வளவு நிகழ்ச்சிகள் ஒளி பரப்பாகவில்லை. இவ்வளவு தொலைக்காட்சி நிறுவனங்களும் இல்லை. அப்பொழுது மக்கள் மிகவும் விரும்பிப் பார்த்த நிகழ்ச்சி ஒலியும் ஒளியும் என்ற நிகழ்ச்சிதான். சினிமாவில் வந்த பாட்டுகளை ஒளிபரப்புவார்கள். பிறகு தொடர் நாடகங்கள் வந்தன. அவைகள் 13 வாரம், வாரத்திற்கு ஒரு நாள் வீதம் ஒளிபரப்பாகும்.

அந்த தொடர் நாடகங்களில் ஒரு கதையும்  வாழ்க்கைக்கான ஒரு நீதியும் இருக்கும். ஒரு சமயத்தில் ஒரு தொடர் நாடகம் மட்டும்தான் ஒளிபரப்பாகும். அப்போது இருந்தது அரசு தொலைக்காட்சி நிறுவனமான "தூர்தர்ஷன்" மட்டுமே. இதனால் மக்ளுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படவில்லை.

பிறகு அதில் மகாபாரதம் ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். இதுதான் முதன் முதலாக ஒளிபரப்பப்பட்ட இன்றைய மெகா சீரியல்களின் முன்னோடி. இதற்கு அனைத்து தரப்பு மக்களிடமும் இருந்து ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

அப்போதுதான் விளம்பரங்களில் நன்றாகக் காசு பார்க்கலாம் என்ற உண்மை தெரிந்தது. அரசு பணம் வாங்கிக்கொண்டு பலருக்கு தொலைக்காட்சி நடத்த உரிமை வழங்கினார்கள். தொலைக்காட்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் பெருகின. விளம்பரங்கள் பெருகின. காசு சேர்ந்தது.  ஆனால் மக்களை இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வைப்பது எப்படி? இந்தப் பிரச்சினைக்கு யாரோ ஒரு மகானுபாவன் கண்டு பிடித்த தீர்வுதான் இன்று அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பிக்கொண்டு இருக்கும் மெகா சீரியல்கள்.

பெண்கள், குறிப்பாக தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கப் பெண்கள் இவைகளுக்கு அடிமையாகிப் போனார்கள்.  இதனால் விளைந்த விளைவு என்னவென்றால் பல குடும்பங்களில் அமைதி குலைந்து போனது.

நான் இந்த சீரியல்களைப் பார்ப்பதில்லை. இருந்தாலும் வீட்டில் மற்றவர்கள் பார்க்கும்போது நிகழ்ச்சிகள் அவ்வப்போது காதில் விழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. சன் தொலைக்காட்சியில் மாலை 7.30 மணியிலிருந்து 9 மணி வரை மூன்று மெகாத்தொடர்கள் ஒளி பரப்பாகின்றன. இவைகளைத்தான் என் வீட்டில் பார்க்கிறார்கள்.

 இந்தத் தொடர்களில் நான் கவனித்தவை. ஏறக்குறைய எல்லாத் தொடர்களின் கதையும் ஒரே மாதிரித்தான் இருக்கின்றன. கதாநாயகன், நாயகி, அவர்களைச்சுற்றி வழக்கமாக வரும் உப-பாத்திரங்கள் போக, ஒரு வில்லனோ அல்லது வில்லியோ அல்லது இருவருமோ கட்டாயமாக இருக்கிறார்கள்.

இந்த வில்லன் அல்லது வில்லி கூட்டம் இருக்கிறதே, அவர்கள் பண்ணும் அக்கிரமங்கள் சொல்லில் அடங்கா. ஆனாலும் இந்தத் தொடர்களின் டைரக்டர்கள் திறமைசாலிகள்தான். இந்த வில்லன் வில்லி பாத்திரங்களை அவ்வளவு மோசமாக சித்தரிக்க அவர்களால்தான் முடியும். இதைப் பார்க்கும் நம் குல விளக்குகள் அப்படியே உணர்ச்சி வசப்பட்டு கதாநாயகியின் பேரில் அனுதாபம் பொங்கி வழியும். கண்ணீர்க் கடலில் மூழ்கி விடுவார்கள்.

இந்த தொடர்களின் வில்லிகள் எங்காவது நாலு பெண்கள் இருக்குமிடத்திற்கு
நேரில் வந்தால் அவர்களை இந்தப் பெண்கள் கடித்துக் குதறிக் கொன்றே விடுவார்கள். அவ்வளவு ஆத்திரம் அந்தப் பெண்களின் பேரில் இருக்கிறது. இந்த வில்லி வேடத்தில் நடிக்கும் நடிகைகள் தனியாக வெளியில் நடமாட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

விஷயம் இத்தோடு முடிந்து விட்டால் வேறு பிரச்சினை இல்லையே? ஆனால் நான் சொல்ல வந்த விஷயமே வேறு. இந்த குடும்பத்தலைவிகள் இந்த தொடர்களைப் பார்த்து அவைகளின் வசனங்களை நன்கு மனதில் பதிய வைத்துக் கொள்கிறார்களா? வீட்டில் நம்முடன் பேசும்போதும் இந்த வசனங்களின் பாதிப்பு வெளி வருகிறது. முன்பெல்லாம் நம் கேள்விகளுக்கு சாதாரணமாகப் பதில் சொல்லும் தாய்க்குலம் இப்போது நம் கேள்விகளுக்கு தொடர்களில் வரும் வில்லிகள் பேசும் பாணியில் பதில் பேசுகிறார்கள். அந்தப் பதில்கள் வெகு சூடாக இருக்கின்றன. சமயத்தில் தேள் கொட்டுவது போலும் இருக்கிறது.

இப்போதெல்லாம் வீட்டில் ஏதாவது பேசுவதென்றால் பயமாக இருக்கிறது. எப்படிப் பேசினாலும் அதற்குப் பதில் சூடாகவே வருகிறது. இதனால் நான் இப்போது என் பேச்சை வெகுவாகக் குறைத்து விட்டேன். இந்தப் போக்கு இப்படியே போனால் நாம் எல்லோரும் ஏதாவதொரு சங்கம் ஆரம்பித்து நம் பேச்சுரிமைக்காகப் போராட வேண்டி வரும் என்று நினைக்கிறேன்.
                               Image result for பெண்கள் அரட்டை

25 கருத்துகள்:

  1. Ramayanam is the first long serial, not Mahabhratham. Otherwise i agree with your write up.

    பதிலளிநீக்கு
  2. பலருடைய மனதில் இருப்பதை அப்படியே சொல்லி விட்டீர்கள்.
    அதிலும் நடிகை ராதிகா நடிக்கும் தொடர் என்றால், யாரேனும் ஒரு ஆண்மகன் அவரிடம் கன்னத்தில் ‘பளார்’ என்று அறை வாங்கும் காட்சி கட்டாயம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. "தொடரும்" போடும் இடம் தான் அவர்களின் திறமையே...

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் ஐயா
    தொலைக் காட்சி வீட்டில் புகுந்த பிறகு
    வீட்டில் இருப்பவர்கள் எல்லாம்
    தனித் தனித் தீவுகளாக மாறிவிட்டனர்
    தம +1

    பதிலளிநீக்கு
  5. வடையை மட்டுமே சூடாக எதிர்பார்த்தால் எப்படி? பதில்களும் அப்படியே வருகின்றன!

    :)))))

    பதிலளிநீக்கு
  6. இன்றைய தொலைக்காட்சி தொடர்களுக்கு முன்னோடி ‘தூர்தர்ஷனில்’ வந்த ‘விழுதுகள்’ என்ற தொடர் தான் என நினைக்கிறேன். திரைப்படத்தில் மொத்தமே 9 கதைகள் தான் உள்ளன என்றும் அதையே மாற்றி மாற்றி எழுதி திரைப்படமாக எடுக்கிறார்கள் என சொல்வார்கள்.
    ஆனால் சின்னத் திரையில் ஒரே கதை தான். ஒரு வீட்டில் அண்ணனோ தம்பியோ மாமியாரோ அல்லது மருமகளோ வில்லத்தனம் செய்வார்கள். யாராவது ஒருவர் தியாகம் செய்வார். கடைசியில் தவறு செய்தவர்கள் திருந்தி குடும்பம் ஒன்றாகும். ஆனால் இதற்குள் எப்படி புதிய முறையில் பழிவாங்குவது, கொலை செய்வது என்பது போன்ற மக்களுக்குத் தெரியாத விஷயங்களை காண்பித்துவிடுவார்கள். திரைப்படத்திற்கு இருப்பதுபோல் சின்னத்திரைக்கும் தணிக்கைக் குழுமம் இருப்பது நல்லது.

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு.

    யாருக்கும் மரியாதை கொடுக்காமல் பேசும் குழந்தைகள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்காத இளம் பெண்கள் என்று தலைமுறைகள் மாறியதற்கு சீரியல்களும் ஒரு காரணம்.

    ஆனாலும் சீரியல்களில் நாம் பெரிய ஆட்கள் இல்லை. அதிலும் கில்லாடிகள் அமெரிக்கர்கள்தான். 1952-ல் தொடங்கிய 'கைடிங் லைட்' சீரியலை போனால் போகிறது என்று 2009-ல் முடித்தார்கள். 58 வருடங்களாக 15,000 எபிசோடுகளை எடுத்து ஒளிபரப்பினார்கள். இதுதான் உலகில் வெகு நாட்களாக ஓடிய சீரியல். நாமெல்லாம் நெருங்கவே முடியாது.

    த ம 7

    பதிலளிநீக்கு
  8. சத்தியமா சொல்றேன் எந்த வீட்டில் தொலைக்காட்சி சேனல்களை தடை செய்கின்றார்களோ அந்த வீடு நல்லதொரு பல்கலைக்கழகமாக உருமாறும் என்பேன்.. சேனல்களைப் போல உளவியல் தாக்கம் செய்து உறவுகளையும் அறிவையும் கெடுக்கும் கொடிய மருந்து ஏதுமில்லை. நான் கடைசியாக தொலைக்காட்சி பார்த்து மூன்றாண்டுகள் ஆகின்றன. என் வீட்டில் சேனல்கள் ஏதுமில்லை. சொல்லப் போனால் டிவி பார்ப்பது கூட கிடையாது. எதாவது படங்கள் வந்தால் டிவிடி வாங்கிப் போட்டு பார்க்க மட்டுமே டிவி பயன்படுகின்றது. டிவி நிகழ்ச்சிகள் கூட யாராவது பரிந்துரைத்தால் யுடுயுப்பில் பார்ப்பேன். மற்றபடி கிடையாது. மிகவும் மனசு நொந்து போனால் யுடுயுப்பில் நாகேஷ் கவுண்டமணி செந்தில் வடிவேல் காமடி சீன்கள் பார்ப்பேன். ஐபாட்டில் பாட்டு கேட்பேன். நல்ல திரைப்படங்கள் என்றால் டிவியி வழியாகவோ யுடுப்பு வழியாகவோ பார்ப்பேன். ஆக டிவி தொடர்கள், இத்யாதி டிவி நிகழ்ச்சிகள் அது தரும் குப்பை விளம்பரங்கள் எல்லாம் பார்த்து காலம் பல ஆகிவிட்டது. டிவி தொடர்களுக்கு பதிலாக யுடுயுப்பில் நல்ல குறும்படங்கள் பல வருகின்றன அவற்றை தேர்ந்தெடுத்து பார்க்கலாம்..

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் சொல்லியுள்ளது அப்படியே நூற்றுக்கு நூறு உண்மைதான். நான் என் மனதில் நினைத்ததையெல்லாம் அப்படியே நீங்க துணிந்து எழுதிவிட்டீர்கள். தங்கள் அளவுக்கு எனக்குத் துணிச்சல் இல்லை. பேசவோ/எழுதவோ தாங்கள் சொல்வதுபோல மிகவும் பயமாகத்தான் உள்ளது.

    //நாம் எல்லோரும் ஏதாவதொரு சங்கம் ஆரம்பித்து நம் பேச்சுரிமைக்காகப் போராட வேண்டி வரும்//

    தாங்கள் இதுபோல ஒரு சங்கம் ஆரம்பித்தால் நானும் அதில் முதல் உறுப்பினராகத் தயார்தான். ஆனால் அதற்கும் என் மேலிடத்திடம் நான் அனுமதி பெற வேண்டுமே, அதை நினைத்தால்தான், என் ச ர் வா ங் க மு ம் நடுங்குகிறது, ஐயா ! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை படித்து முடித்தது அய்யா நீங்கள் சங்கம் ஆரம்பித்தால் நாந்தான் முதல் உறுப்பினர் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்து வந்தால் நம்ம வைகோ சார் என்னை முந்தி துண்டை போட்டுவிட்டார் ஹும்ம் எனக்கு இரண்டால் இடத்தையாவது கொடுத்துவிடுங்கள் அப்புறம் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் நான் இங்கு வந்து உறுப்பினராக வந்து சேர விருப்பம் தெரிவித்தை என் மனைவியின் காதிற்கு போகாமல் ரகசியமாக வைத்து கொள்ளவும்

      நீக்கு
  10. தொடர்கள்பார்த்து பார்த்து ஏறக்குறைய எல்லாருமே திரைக்கதை எழுதும் /சொல்லும் திறமை பெற்று விட்டார்கள்

    பதிலளிநீக்கு
  11. பல வீடுகளில் இன்றைக்கு நடைபெறும் தாறுமாறான உளவியல் தாக்கங்களுக்குப் பெரிதும் காரணமாக இருப்பவை இந்தத் தொலைக்காட்சித் தொடர்களே. நீங்கள் மிகச்சரியாகவே அவற்றை அடையாளப்படுத்தி இருக்கிறீர்கள். வீட்டுப் பெண்கள் வீட்டிலிருக்கும் மற்றவர்களிடம் குறிப்பாகப் பெரியவர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொள்வதற்கும், மரியாதை இல்லாமல் பேசுவதற்கும் இந்த சீரியல்கள் ஏற்படுத்தித்தரும் உளவியல் மாற்றங்கள்தாம் காரணம். சின்னப் பிள்ளைகளில் மனதிலும் அவர்கள் அறியாமலேயே இந்த நஞ்சு விதைக்கப்படுகிறது.
    தங்கள் அபிமான சீரியல்கள் ஓடும் சமயங்களில் வீட்டிற்கு யாரும் வருகை தந்துவிட்டால் அவர்களை எதிரிகளாகப் பார்க்கும் மனப்பான்மையும் இங்கே விதைக்கப்பட்டுவிடுகிறது.
    எங்கள் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே யாரும் சீரியல்கள் பார்ப்பதில்லை. இதனை ஒரு கொள்கையாகவும் பழக்கமாகவும் மாற்றிவிட்டோம். இதனால் வீட்டில் தங்க வரும் உறவினர்கள் சற்று சங்கடப்படுகிறார்கள் என்பதையும் சமாளிக்கப்பழகிவிட்டோம்.
    இத்தனைக்கும் தமிழில் சித்தி சீரியல்தான் இவற்றுக்கான 'பிரசித்தி' பெற்ற ஆரம்பம்.(அதற்கு முன்பு பல சீரியல்கள் இருந்தன என்றபோதும்) அந்த சீரியல் படப்பிடிப்பிற்குப் போவதற்கு முன்பு அதற்கான கதையை வடிவமைத்து ஏறக்குறைய நாற்பத்தியிரண்டு அத்தியாயங்கள் எழுதியவர்களில் நானும் ஒருவன். இன்னொருவர் பிலிமாலயா ஆசிரியரும் பிரபல பாடலாசிரியருமான எம்.ஜி.வல்லபன். நாங்கள் இருவரும் சேர்ந்து எழுத ஆரம்பித்த சீரியல்தான் அது. ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு தகராறு காரணமாக அதன் இயக்குநர் பாஸ்கரிடம் எழுதிவைத்திருந்த ஃபைலைத் தூக்கித்தந்து கும்பிடு போட்டுத் தொடர்பை அறுத்துக்கொண்டதால் பிற்பாடு திரு ராதா மோகனை வைத்து எழுதி அந்த சீரியல் வெளியானது.

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள அய்யா,

    தொலைக்காட்சி - தொடர் பற்றி - குடும்பத்தில் பெண்கள் அத்தொடரைப் பார்த்து எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் நீண்ட அலசல்.

    ஆரம்பத்தில் தொலைக்காட்சி பெட்டியைப் பார்ப்பதே மிகமிக அரிது. எனக்குத் தெரிய இந்திராகாந்தி அம்மையார் இறந்த பொழுது நடந்த டில்லியில் நடந்த ஊர்வலத்தை கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டியில் கரும்புள்ளிகளுக்கிடையில் கற்பனை செய்துகொண்டு பார்க்கின்ற நிலைமையில் பார்த்தேன். இன்று எவ்வளவு ஊடகம் வளர்ச்சியடைந்து விட்டதை எண்ணுகின்ற பொழுது பிரமிப்பாக இருக்கிறது.

    மாற்றம் ஒன்றே மாறாதது... காலத்திற்கு ஏற்ப நாமும் மாறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

    நன்றி.
    த.ம. 8.

    பதிலளிநீக்கு
  13. ஐயா

    //திரைப்படத்திற்கு இருப்பதுபோல் சின்னத்திரைக்கும் தணிக்கைக் குழுமம் இருப்பது நல்லது.

    -- //

    உளவுத்துறை எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்ப்பதாக அறிவு.

    உங்கள் வீட்டில் பரவா இல்லை. என்னுடைய மனைவியார் மதியம் 2 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை எல்லா சிரியல்களையும் பார்த்துவிட்டுத் தான் தூங்குவார்கள். இதில் ஒரே சமயத்தில் இரண்டு சீரியல்கள் பார்ப்பது உண்டு. ஒரு சேனலில் விளம்பர இடைவேளையில் அடுத்த சேனலுக்குத் தாவி விடுவார்கள்.

    இவர்களுக்கு ஒரே ஒரு மாற்று பேரர்கள் தாம். பேரர்கள் வந்து விட்டால் ரிமோட் அவர்கள் கைக்கு பொய் விடும். பின்னர் சீரியல் கதை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். அதற்க்கு ஒரு தனி குழுமம் உண்டு.

    சினிமாக்காரர்களும் சீரியல்களை சபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், தியேட்டர் களுக்கு தாய்குலம் வரவு குறைத்து விட்டது என்று.


    Jayakumar

    பதிலளிநீக்கு
  14. தொலைக்காட்சி மெகா சீரியல்களில் எல்லா தொடர்களிலும் ஒரே கதை ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றது. பெண்கள் இந்த தொடரின் அடிமைகளாகி கிடப்பது இந்த டீவிக்களின் அனுகூலம் ஆகிவிட்டது!

    பதிலளிநீக்கு
  15. உண்மைதான் சிரியலால் பல குடும்பங்கள் சீரழிந்து கொண்டு இருப்பது உண்மையே...

    பதிலளிநீக்கு
  16. இப்படி பெண்கள் அதிகம் சீரியல்கள் பார்ப்பதால்தான் நம்மால் அந்த நேரங்களில் பதிவுகள் எழுத முடிகிறது என்பதை சொல்ல மறந்துட்டீங்கலே ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா எழுதுவதெல்லாம் சீரியல் இல்லாத விடிகாலைப் பொழுதில் தான்.

      --
      Jayakumar

      நீக்கு
  17. நீங்கள் சொல்வது உண்மைதான். தொடர்கள் நேரத்தை ஆக்கிரமித்ததோடு நல்ல பழக்கவழக்கங்களை சீரழித்துவிட்டன.

    பதிலளிநீக்கு
  18. ஐயா! அருமையான பதிவு! அந்தக் கொடுமையை ஏன் கேக்கறீங்க......நீங்கள் சொல்லுவது போல் இந்த வசனங்கள் நடை முறையில் மிகவும் பிரபலமாகி வருகின்றன. எதற்கெல்லாமோ சென்சார் இருக்கும் போது, குடும்பங்களைச் சீரழிக்கும் இந்து போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏன் சென்சார் இல்லை?

    எங்கள் இருவரில் ஒரு வர் பெண். என்றாலும் சீரியல் பக்கமே தலை வைத்துப் படுப்பது இல்லை. டீவி பார்க்க நேரம் என்பதே கூட இருப்பதில்லை.

    அது சரி ஐயா...தங்களுக்கு தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகள் பார்க்க முடிகின்றதா? அதற்கு டீவி ரிமோட் உங்களுக்குக் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  19. https://scontent-lhr.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10955511_1422088134775791_3576462381872703314_n.jpg?oh=2777164afed42f34a4a441b5a0073746&oe=55D8B8D5

    இந்த போட்டோ பார்த்தபோது தங்கள் முகம் எனக்கு நினைவு வந்தது ....எனவே இங்கு பதிவு செய்கிறேன் ...நீங்கள் சொல்லுவது உண்மைதான் ......நானும் இந்த தமிழ் பதிவர்களுக்கு நெடுநாளய வாசகன் ....திண்டுக்கல் தனபாலன் அறிவார்கள் .......அன்புடன் ஸ்ரீரங்கத்து சேவியர் .

    பதிலளிநீக்கு
  20. உண்மை தான். இந்த சீரியல் மோகம் பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் பிடித்து ஆட்டோ ஆட்டு என ஆட்டுகிறது - சில வீடுகளில்.

    தமிழகம் மட்டுமல்ல வடக்கிலும் இப்படி ஹிந்தி சீரியல் பார்க்கும் பெரும்பாலோர் உண்டு - பக்கத்து வீடுகளில் அலறும் ஹிந்தி சீரியல் வசனங்களுக்காகவே காதில் பஞ்சு வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  21. சீரியல் தொல்லை ஒரு கில்லர் போல!ம்ம்

    பதிலளிநீக்கு