ஆக தமிழ்பதிவர்கள் தமிழ் மணம் ஓட்டுப் பட்டையை சீர்திருத்த தயாராக உள்ளார்கள்.
அதற்கு முன் இந்த தமிழ் மணம் ஓட்டுப்பட்டையினால் என்ன பயன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் மணம் ஒரு தமிழ்ப் பதிவுகளின் முதன்மையான திரட்டி. நாம் பதிவு எழுதுவது நாலு பேர் படிக்கட்டும் என்பதற்காகத்தான். என் பதிவை யாரும் படிக்கத்தேவை இல்லை, நான் பதிவு எழுதுவது என் ஆத்ம திருப்திக்காக மட்டுமே என்று சொல்பவர்களுக்கு நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. அது அவர்கள் விருப்பம்.
தமிழ் மணம் திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைத்தால் பல பேர் உங்கள் பதிவுகளைப் படிக்க வசதியாக இருக்கும். அதற்கு இந்த ஓட்டுப் பட்டை உதவுகிறது. இந்த ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் நிறுவுவதற்கு நீங்கள் முதலில் தமி.ழ்மணத்தில் உறுப்பினராக வேண்டும். உங்கள் தளத்தை ஆரம்பித்து ஓரிரண்டு மாதங்கள் ஆன பிறகு விண்ணப்பித்தால் தமிழ்மணம் உங்களை உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளும்.
இதற்கான வழிமுறை தமிழ்மணம் திரட்டியிலேயே இருக்கிறது. நீங்கள் உறுப்பினராக ஆன பிறகு தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை உங்கள் தளத்தில் நிறுவிக்கொள்ளலாம். அதற்கான வழிமுறையும் தமிழ்மணம் திரட்டியிலேயே இருக்கிறது. மற்ற தொழில் நுட்பப் பதிவர்களும் இதற்கான வழியை விளக்கியிருக்கிறார்கள்.
தமிழ் மணத்தில் உள்ள இரண்டாவது விஷயம், தமிழ் மணம் உங்கள் தளத்தை மதிப்பீடு செய்து தர வரிசை எண் கொடுக்கிறது. திரு.பகவான்ஜி அவர்களின் ஜோக்காளி தளம் தரவரிசையில் முதலாவதாக இருக்கிறது என்றால் அவர் மிகவும் பிரபலமானவர் என்று தெரிகிறதல்லவா?
என்னைப் போன்றவர்களுக்கு இந்த தரவரிசை எண்ணைப் பற்றிய எண்ணம் விட்டுப்போய் விட்டது. ஆனால் சிலருக்கு அந்த ஆசை இருக்கலாம். தவறில்லை. யாருக்குமே புகழ்ச்சி மகிழ்ச்சியைத் தருமல்லவா.
சரி விஷயத்திற்கு வருவோம்.
தமிழ்மணம் திரட்டி ஆரம்பித்து இந்த ஓட்டுப் பட்டையைப் புகுத்தின சமயத்தில் அனைத்து பிளாக்கர்களின் "வெப் அட்ரஸ்" களும்
.com என்றுதான் முடியும். இந்தப்
பதிவைப் போய்ப் பாருங்கள். அதனுடைய வெப் அட்ரஸ்
.in என்று முடிவதைப் பார்க்கலாம். மேலும் அந்தப் பதிவில் தமிழ் மணம் ஓட்டுப் பட்டை மாறாமல் இருப்பதையும் பார்க்கலாம்.
இது ஏன் என்றால் 2013 அல்லது 2014 வாக்கில் கூகுள் பிளாக்கர்களின் வெப் அட்ராஃகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது.
.com என்று முடியும் வெப் அட்ரஸ்களை எல்லாம்
.in என்று மாற்றியது. ஏன் என்றால் பதிவுகள் சிலவற்றில் நாட்டுக்கு விரோதமான சில விஷயங்களைப் பிரசுரித்தார்கள். அப்போது அந்தந்த அரசுகள் இம்மாதிரியான பிரசுரங்களைத் தடுக்கவேண்டும் என்று கூகுளை நெருக்கியது. அவரகள் தொழில்நுட்ப ரீதியாக அப்படிப்பட்ட பிளாக்குகளைத் தடுக்கவேண்டுமென்றால் நாடு வாரியாக பிளாக்குகளைப் பிரிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அதனால்
.com என்று முடியும் வெப் அட்ரஸ்களையெல்லாம் அந்தந்த நாட்டிற்கு ஏற்ப மாற்றியது. இந்தியாவில் புழங்கும் பிளாக்குகள் எல்லாவற்றையும்
.in என்று முடியுமாறு மாற்றியது. இந்த மாற்றத்தினால் இந்தியாவில் பிரசுரமாகும் ஏதாவது பிளாக்கைத் தடை செய்யவேண்டுமானால் அதை கூகுள் தடை செய்ய முடியும். ஆனால் அதே பிளாக்கை அமெரிக்காவில் பார்க்க முடியும்.
இது புரிந்து கொள்ளக் கொஞ்சம் கடினமான தொழில் நுட்ப உத்திதான். இதனால் சாதாரண பிளாக்கர்களுக்கு அதிகம் பாதிப்பில்லை. இந்த தமிழ்மணம் ஓட்டுப்பட்டை மட்டுமே பாதிப்புக்கு உள்ளானது. தமிழ்மண ஓட்டுப்பட்டை
.com என்று முடியும் பிளாக்குகளில் மட்டுமே சரியாக வேலை செய்யுமாறு அமைக்கப்பட்டுள்ளது. கூகுள் செய்த மாற்றத்தினால் இது பாதிக்கப்பட்டது. ஆனால் தமிழ்மணம் இதை மாற்றவேண்டுமானால் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக ஓட்டுப்பட்டை தயாரிக்கவேண்டும். இது நடைமுறையில் சாத்தியமல்ல. அதனால் பிளாக்கர்கள் எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டார்கள்.
ஆனால் நம் இந்திய கம்ப்யூட்டர் நிபுணர்களின் மூளை சாதாரணமானதா, என்ன? ஆனானப்பட்ட மைக்ரோசாஃப்ட் புரொக்ராம்களையே பைரேட் செய்பவர்களுக்கு இது ஒரு ஜுஜுபி. ஆகவே இதற்கு ஒரு மாற்று வழி கண்டுபிடித்தார்கள். அதைத்தான் பெரும்பாலான தமிழ் பிக்கர்கள் உபயோகித்து வருகிறார்கள்.
அது என்ன வழி என்று அடுத்த பதிவில் சொல்லுகிறேன்.