கோயம்புத்தூர் எனபது 20 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் ஒரு சிறிய ஊராகத்தான் இருந்திருக்க வேண்டும். எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலேயே அது ஒரு சிறிய ஊராகத்தான் இருந்தது.
இதுதான் பழைய கோயமுத்தூரின் படம்..
பழைய கோயமுத்தூர் என்பது கிழக்கு மேற்காக இரண்டு மைல், தெற்கு வடக்காக ஒரு மைல் என்ற அளவில்தான் இருந்தது. மேற்கே சலிவன் வீதி, வடக்கே சுக்கிரவாரப்பேட்டை வீதி, கிழக்கே ரயில்வே ஸ்டேஷன், தெற்கே செட்டி வீதி எனப்படும் வைசியாள் வீதி. இவ்வளவுதான் கோயமுத்தூர்.
இதைச் சுற்றிப் பக்கத்திலேயே சிறு சிறு கிராமங்கள் இருந்தன. இந்தக் கிராமங்கள் அனைத்தும் தற்போது கோயமுத்தூர் மாநகராட்சி எல்லைக்குள் வந்து விட்டன.
பள்ளபாளையம் என்ற செல்வபுரம், பேரூர், தெலுங்குபாளையம், சொக்கம்புதூர், பூசாரிபாளையம், வீரகேரளம், பாப்பநாயக்கன்புதூர், அம்புலிபுதூர் எனப்படும் வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம், குப்பகோனான்புதூர், கவுண்டம்பாளையம், நல்லாம்பாளையம், சங்கனூர், மணியகாரன்பாளையம், உடையாம்பாளையம், கணபதி, அனுப்பர்பாளையம், ஆவாரம்பாளையம், விளாங்குரிச்சி, பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு, சௌரிபாளையம், புலியகுளம், உப்பிலிபாளையம், மசக்காளிபாளையம், ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம், போத்தனூர், குறிச்சி, குனியமுத்தூர், மதுக்கரை, குளத்துப்பாளையம், சுண்டக்காமுத்தூர், கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம், இப்படி பல கிராமங்கள்.
அனைத்தும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமங்கள்.
அந்தக் காலத்தில் அதாவது 150 வருடங்களுக்கு முன்பு இருந்த ஆங்கிலேய அரசாங்க அதிகாரிகள் பல முன்னேற்றங்களை இந்த நகரத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். நகர மையத்தைச் சுற்றிலும் நிறைய வெற்றிடங்கள் அல்லது விவசாய நிலங்கள் இருந்திருக்கின்றன. அவைகளை மொத்தமாக வாங்கி பொதுக் காரியங்களுக்காக ஒதுக்கியிருக்கிறார்கள்.
அவைகளில் குறிப்பிடத்தக்கவைகளை ஒவ்வொன்றாகக் கூறுகிறேன்.
1. விவசாயக் கல்லூரி.
இது மருதமலை போகும் வழியில் உள்ளது. இதற்கு ஏறக்குறைய 250 ஏக்கர் வாங்கி இந்தக் கல்லூரியை நிறுவியிருக்கிறார்கள். முக்கிய கட்டிடம் 1906 ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு வயல் பூமிகள் வேண்டுமென்று தொண்டாமுத்தூர் ரோடில் 60 ஏக்கரும் அதற்கு அப்பால் தெலுங்குபாளையம் கிராமத்தில் 30 ஏக்கரும் வாங்கியிருக்கிறார்கள். இந்தக் கல்லூரியில் படித்துத்தான் நான் B.Sc.(Ag.), M.Sc.(Ag.), Ph.D. ஆகிய பட்டங்களை வாங்கினேன்.
2. வனக் கல்லூரி.
விவசாயக் கல்லூரியும் வனக்கல்லூரியிம் ஏறக்குறைய சம காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதால் இரண்டு கல்லூரிகளின் கட்டிடங்களும் ஒரே பாணியில் கட்டப்பட்டுள்ளன.
இதுவும் ஏறக்குறைய சம காலத்திலேயே நிலம் வாங்கி ஆரம்பிக்கப்பட்டதாகும். சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். கிழக்கே மேட்டுப்பாளையம் ரோடு, மேற்கே தடாகம் ரோடு, வடக்கே பாரதி பார்க் ரோடு, தெற்கே கவுளிபிரவுன் ரோடு ஆகிய நான்கு ரோடுகளுக்கு மத்தியில் இந்தக் கல்லூரி இருக்கிறது. இதில்தான் திரு அவினாசிலிங்கம் செட்டியார் மத்திய கல்வி அமைச்சராக இருந்த போது வடகிழக்கு மூலையில் ஒரு 30 ஏக்கரைத் தன்னுடைய அதிகாரத்தை உபயோகித்து ஒரு தனியார் கல்லூரி ஆரம்பிப்பதற்காக வாங்கினார். அதில் தன் பெயரில் ஒரு மகளிர் கல்லூரி ஆரம்பித்து அது இன்று ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே அரசு நிலங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதென்பது தொன்று தொட்டு வரும் இந்தியக் கலாச்சாரமாகும்.
3. மத்திய சிறைச்சாலை.
கோயமுத்தூருக்குக் கிழக்கே பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் அனுப்பர்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, மத்திய சிறை, ஒரு பெரிய பாரக் மற்றும் மைதானம் (கார்ப்பரேஷன் பார்க் என்று அதற்கு அந்தக்காலத்தில் பெயர். இன்று வ.உ.சி. பார்க் என்று அழைக்கப்படுகிறது) ஆகியவைகளை நிறுவினார்கள். இந்த இடத்தில்தான் இன்று ஒரு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பல அரசாங்க அலுவலகங்கள், டவுன் பஸ் நிலையம் ஆகியவை இருக்கின்றன.
4. ரேஸ் கோர்ஸ்.
ஆங்கிலேயர்கள் குதிரைப் பந்தயங்கள் நடத்துவதற்காக வட்டவடிவத்தில் ஒரு பெரிய சாலை அமைத்து அதற்குள் இருக்கும் சுமார் 300 ஏக்கர் நிலத்தை அரசுடமையாக்கினார்கள். இதில்தான் இப்போது பல அரசங்க அலுவலகங்கள், கலெக்டர் பங்களா, ஆகியவை இருக்கின்றன. இந்த இடத்திலும் சிறுசிறு இடங்கள் தனியாருக்கு பல காரணங்களைக் காட்டி தாரை வார்க்கப்பட்டிருக்கின்றன.
5. ஸ்டேன்ஸ் மோட்டார்ஸ் வளாகம்.
ரேஸ் கோர்சை ஒட்டி அதற்கு தென்புறம் ஒரு 150 ஏக்கர் நிலத்தை ஸ்டேன்ஸ் துரை என்பவருக்கு வாங்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் இன்று பல தனியார் நிறுவனங்களும் ஒரிஜினல் கம்பெனியும் இருக்கிறது. ஸ்டேன்ஸ் கம்பெனி நிறைய காப்பி எஸ்டேட்டுகள் வைத்திருந்தார்கள். ஸ்டேன்ஸ் காப்பி என்பது அந்தக்காலத்தில் பிரபலமான ஒரு பிராண்ட். இந்த எஸ்டேட்டுகளின் உரத்தேவைக்காக ஒரு எலும்பு உரத்தொழிற்சாலையும் துடியலூர்ப் பக்கம் ஆரம்பித்து வெகு நாள் நடந்து கொண்டிருந்தது. நான் விவசாயக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாளில் எங்களைக் கூட்டிக்கொண்டு போய் இந்த தொழிற்சாலையைக் காண்பித்திருக்கிறார்கள்.
6. கிறிஸ்தவப் பள்ளிகள் இரண்டு இடங்களில் இருக்கின்றன. அதற்காக அதிக பரப்புள்ள இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மைக்கேல் ஹைஸ்ஸ்கூல் மற்றும் யூனியன் ஹைஸ்கூல் வளாகங்கள். இது ரயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கே மணிக்கூண்டு வரை வியாபித்திருக்கிறது. இந்த இடத்தில் பள்ளிகளைத் தவிர பல கிறிஸ்தவ நிறுவனங்களும் உள்ளன.
7. மத்திய மருத்துவ மனை.
ரயில்வே ஸ்டேஷனுக்கு கிழக்கே அரசு மத்திய மருத்துவ மனை இருக்கிறது. இப்படிச் சொன்னால் ஒருவருக்கும் தெரியாது. பெரியாஸ்பத்திரி என்று சொன்னால்தான் புரியும். இதற்கு கிழக்கே மகளிருக்கான மூன்று பெரிய கிறிஸ்தவப்பள்ளிகள் இருக்கின்றன.
இந்த இரண்டு பள்ளி வளாகங்களுக்கும் அன்றைய அரசு நிலங்களைக் கொடுத்திருக்கிறது.
இது தவிர ஆங்காங்கே பல சிறிய பெரிய இடங்களை அரசு கையகப்படுத்தி வைத்திருந்திருக்கிறது. அந்த இடங்களில் இப்போது பல அரசு அலுலகங்கள் கட்டப்பட்டு செயல்படுகின்றன. அதில் குறிப்பிடத்தகுந்தது அவினாசிலிங்கம் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் பாரதி பார்க் வளாகம். இங்குதான் கோவைக்கு குடிநீர் வழங்க கட்டப்பட்ட முதல் தண்ணீர்த் தொட்டி இருக்கிறது. இதைச்சுற்றி ஒரு சிறிய பார்க் அமைத்து அதற்கு கோஷன் பார்க் என்று பெயர் வைத்திருந்தார்கள். பின்னாளில் அது பாரதி பார்க் என்று மறு பெயர் சூட்டப்பட்டது.
இது வரை சொல்லியவைகளிலிருந்து அன்றைய அரசு கொடுங்கொல் அரசாகச் செயல்பட்டது என்ற முடிவிற்கு வரவேண்டாம். அன்று தீர்க்க தரிசனத்துடன் இந்த இடங்களைக் கையகப்படுத்தாமல் இருந்திருந்தால் இன்று கோவையில் மூச்சு விடக்கூட பொது இடம் என்று ஒன்று இருந்திருக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
1930 களில் உள்ளாட்சித் தேர்தல்களில் இந்தியர்களுக்கு அதிகப் பொறுப்பு கொடுத்தார்கள். அந்த சமயத்தில் கோயமுத்தூர் நகரசபைக்கு திவான் பகதூர் சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் என்பவர் தலைவராக இருந்தார். அவர் கோயமுத்தூரில் உள்ள பெரும் புள்ளிகளில் ஒருவர். அவர் காலத்தில்தான் ஆர் எஸ் புரம் உருவாகியது. இதன் முழுப்பெயர் திவான் பகதூர் ரத்தினசபாபதி புரம் என்பதாகும். இது காலப்போக்கில் சுருங்கி ஆர் எஸ் புரம் என்று ஆகி விட்டது.
படத்தைப் பார்க்கவும்.
வனக்கல்லூரிக்கு தென்புறம், மேட்டுப்பாளையம் சாலைக்கு மேற்குப் புறம்,
தடாகம் சாலைக்கு கிழக்குப் புறம், சக்கிரவாரப்பேட்டை சாலைக்கு வடபுறம், இந்த எல்லைக்குள் பல விவசாய பூமிகள், தரிசு நிலங்கள், சுடுகாடு ஆகியவை இருந்தன. இந்த நிலங்களை எல்லாம் ஒன்று நேர்த்து ஒரு நல்ல லேஅவுட் போட்டு ஆர் எஸ் புரத்தை உருவாக்கினார்கள்.
நடுவில் 70 அடி அகலத்தில் தெற்கு வடக்காக ஒரு பெரிய ரோடு, எல்லா இடங்களிலும் அகலமான ரோடுகள் போட்டு மனைகள் பிரித்து நகர சபையே விற்றது. மனைகள் ஒவ்வொன்றும் 20 சென்ட்டுகள். மெயின் ரோடான 70 அடி ரோட்டில் மனைகள் 30 சென்ட்டுகள். சென்ட் ஒன்றிற்கு 25 ரூபாய் விலை. இதில் ஒரு மனை எங்கள் குடும்பத்தில் வாங்கினோம். 19 சென்ட். 450 ரூபாய் விலை. கிரயப் பத்திரம் எல்லாம் கிடையாது. நகரசபையின் ஓர் ரசீது மட்டுமே.
முக்கிய சாலையான 70 அடி ரோட்டிற்கு நகர சபைத்தலைவர் பெயரையும் மற்ற ரோடுகளுக்கு அன்று இருந்த நகரசபை உறுப்பினர்களின் பெயரும் வைக்கப்பட்டன. அப்போதைய பெயரில் அந்த உறுப்பினர்களின் ஜாதிப்பெயரும் சேர்ந்திருந்தது. நாங்கள் இடம் வாங்கின ரோடின் பெயர் பொன்னுரங்கம் முதலியார் தெரு. 70 அடி ரோட்டின் பெயர் "திவான்பகதூர் இரத்தினசபாபதி முதலியார் ரோடு". எவ்வளவு நீளமான பெயர் பார்த்தீர்களா? சாதாரணமாக 70 அடி ரோடு - செவென்டி ஃபீட் ரோடு என்றும் புழக்கத்தில் அந்தக் காலத்தில் சொல்வார்கள். அந்தப் பெயர்தான் இன்று சுருங்கி D.B. Road ஆகிவிட்டது. அதாவது திவான்பகதூர் ரோடு என்பதின் ஆங்கிலச் சுருக்கம். சென்னையில் Hamilton Bridge என்பது அம்பட்டன் வாராவதி ஆன மாதிரிதான்.
சுடுகாட்டில் வீடு கட்ட யாரும் முன்வரமாட்டார்கள் என்பதால் அங்கு ஒரு நகராட்சி உயர்நிலைப் பள்ளி கட்டப்பட்டது. அதில்தான் நான் படித்தேன். சர்டிபிகேட் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதற்குச் சேர்ந்த விளையாட்டு மைதானம் வெகு காலம் "பரியல் கிரவுண்ட்" என்றே அழைக்கப்பட்டு வந்தது. இப்போது சாஸ்திரி மைதானம் என்று அழைக்கப்படுகிறது.
எங்கள் பள்ளி வளாகத்திலேயே நான் படிக்கும் காலத்தில் எலும்புகளைப் பார்த்து பயந்திருக்கிறேன்.
இந்த விவரங்களை எனக்குத் தெரிந்த வரையில் கொடுத்திருக்கிறேன். இது தவிர வேறு தகவல்கள் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.