சனி, 11 ஏப்ரல், 2015

என் வண்டவாளம் என்னும் தண்டவாளம்



"அப்பப்பா என்ன வெய்யில்" என்கிற போன பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம். என்னுடைய SSLC சர்டிபிகேட்டைப் பார்க்க எத்தனை மக்களுக்கு எத்தனை ஆர்வம். அதைத் தீர்க்கவில்லை என்றால் நான் பதிவராக இருப்பதில் அர்த்தமே இல்லை.





  • // உங்களுடைய தண்டவாளம் சே வண்டவாளம் எங்களுக்கும் தெரிய வந்திருக்கும் அல்லவா?//

    இவ்வளவு அழகாக பதிவுகள் போடுபவர், வேளாண் கல்லூரியில் உதவி பேராசிரியராக குப்பை கொட்டினவர், தனது அறையை இவ்வளவு அழகாக (மனைவியின் தொந்திரவு தாங்காமல்தான் என்றாலும் கூட) வைத்திருப்பவர், என்பதை நெருங்கும் வயதிலும் தனது அந்தப்புரத்துக்கு புதுப்புது ராணிகளை சேர்த்துக்கொண்டிருப்பவர், தன்னை யாராவது சீண்டினால் ஆக்ரோஷமாக பதிலளிப்பவர், எல்லாவற்றுக்கும் மேலாக "வண்டவாளம்" என்று கிண்டல் செய்யும் பின்னூட்டங்களையும் போடுபவர் - இவ்வளவும் செய்பவர் கண்டிப்பாக SSLC இல் நல்ல மதிப்பெண்தான் பெற்றிருப்பார் என்பது எனது யூகம்.

    சேலம் குரு
    நீக்கு
  • இந்தப் பின்னூட்டங்களைப் படிக்கும்போது எனக்கே, நான் SSLC படித்தேனா என்ற சந்தேகம் வந்து விட்டது. ஒரு நாள் டைம் கொடுங்க, வீட்டையே பொரட்டி அந்த SSLC பொஸ்தகத்தைக் கண்டுபிடிச்சு போட்டோ எடுத்து ஒரு பதிவு போடாட்டி என் பேரை மாத்தி வச்சுக்கறேன்.

  • நான் SSLC படித்த வருடம் 1950-51. படித்த பள்ளி - கோயமுத்தூர் ஆர். எஸ். புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி. அப்பொழுது SSLC படிப்பு மொத்தம் 11 வருடம். SSLC பரீட்சையில் மொத்தம் 5 பாடங்கள். பாடத்திற்கு 100 மார்க்குகள் வீதம் மொத்தம் 500 மார்க்குகள். அந்தக் காலத்தில் பொதுவாக 40 லிருந்து 60 மார்க் வரைதான் போடுவார்கள். சென்டம் என்பதெல்லாம் அந்தக்காலத்தில் கேள்விப்பட்டதே இல்லை. கணக்குப் பாடத்தில் மட்டும் கொஞ்சம் அதிகம் மார்க் போடுவார்கள்.

    என் மார்க்குகளை கவனித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

    இந்தப் படங்களைப் பாருங்க

    1. SSLC புஸ்தகத்தின் அட்டை.


    2. SSLC புஸ்தகத்தில் அந்தக்காலத்தில் தகப்பனார் கையெழுத்துடன் ஒட்டப்படும் பிறந்த தேதிக்கான சர்ட்டிபிகேட். உங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் அந்தக்காலத்தில் அத்தாட்சி.


    இதில் உள்ள என் தகப்பனாரின் கையெழுத்தைப் பாருங்கள். இந்தக் கையெழுத்தை அந்தக் காலத்தில் நான் சர்வ சாதாரணமாகப் போடுவேன். பின்னே ஸ்கூல் புராக்ரஸ் ரிப்போர்ட்டில் அப்பாவிடமா கையெழுத்து  வாங்க முடியும்? அப்பாவிடம் நேரில் நின்று பேசினதே இல்லை. அப்புறம் எங்க கையெழுத்து வாங்கறது?

    3. SSLC முதல் பக்கம்


    எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர் இ.வி. சிங்காரவேலு அவர்களின் கையெழுத்தைப் பாருங்கள். கட்டைப் பேனாவினால் போட்டது.

    4. ஸ்கூல் பரீட்சைகளில் என் மார்க்குகள்.


    எல்லா மார்க்குகளும் 40 முதல் 50 க்குள்தான்.

    5. ஹைஸ்கூல் வருடங்களில் என்னுடைய உயரம் மற்றும் எடை. சரியாக கண்டு பிடிப்பவர்களின் கண் கூர்மையாக இருக்கிறதென்று சர்டிபிகேட் கொடுக்கிறேன்.




    6. ஆஹா, என்னுடைய தண்டவாளம் (வண்டவாளம்)




                            1. தமிழ்
                            2. ஆங்கிலம்
                            3.  கணக்கு
                            4.  பொது விஞ்ஞானம்
                            5.  சமூகப் பாடங்கள்

    மொத்த மார்க்குகள்  324/500. =  65 %

    கடைசியில் இருப்பது பிரசிடென்சி ஏவரேஜ். என் மார்க்குகள் அனைத்தும் இதைவிட அதிகமாக இருப்பதைக் கவனிக்கவும்.

    நான் SSLC என்பதை இப்பொழுதாவது நம்புகிறீர்களா? இல்லை என் ஹெட்மாஸ்டர் காலம் சென்ற திரு. சிங்காரவேலு முதலியாரை எழுப்பிக் கூட்டிக்கொண்டு வரவா?

                                                  Image result for RS Puram Municipal High School

    இல்லை, என் வகுப்புத் தோழர் காலம் சென்ற திரு. C.T. தண்டபாணி M.P. அவர்களைக் கூட்டிக்கொண்டு வரவா?

    50 கருத்துகள்:

    1. இது போன்ற உங்கள் பிறந்த தேதி அல்லது தனி நபர் அடையலாம் சார்ந்த விவரங்களை அல்லது ஆவணங்களை போது வெளியில் பகிர்ந்து கொள்வது ஆபத்தானது. - கிரிஷ்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. தவறுதான். ஆனாலும் என்னைப் போன்ற கிழடுகளின் டேட்டாவை வைத்துக்கொண்டு என்ன பண்ண முடியும் என்று தெரியவில்லை. நண்பர் திரு நடனசபாபதிதான் ஏதாவது கூறவேண்டும்.

        நீக்கு
      2. //ஆனாலும் என்னைப் போன்ற கிழடுகளின் //

        அய்யா எங்களை பொருத்தவரை நீங்கள் கிழடு இல்லை.
        80 வயதாகப்போகும் ஒரு இளைஞன். இவ்வளவு அழகாக நகைச்சுவையாக பதிவிடும் நவ நாகரீக இளைஞன். அதனால் ஜாக்கிரதையாகவே இருங்கள்

        காயத்ரி மணாளன்

        நீக்கு
      3. திரு வை.கோ அவர்கள் சொல்வதுபோல் S.S.L.C. தேர்வில் 600 மதிப்பெண்களுக்குத்தான் தேர்வு உண்டு எனக்கு 600க்கு 386 மதிப்பெண்கள் கிடைத்தன. அப்போது மாநில சராசரி மதிப்பெண்கள் 265. அப்போது யாரும் கணிதத்தைத் தவிர ஏனைய பாடங்களில் 70க்குமேல் தரமாட்டார்கள். இப்போதுபோல் எல்லா பாடங்களிலும் 100க்கு 100 வாங்குவது நினைத்துப் பார்க்கமுடியாதது.
        திரு கிரிஷ் அவர்கள் சொன்னதிற்காக கவலை வேண்டாம். இந்த விவரங்களை வைத்துக்கொண்டு யாரும் எதுவும் செய்யமுடியாது.

        நீக்கு
    2. ஆஹா ! சுமார் 65 வயதான ஆவணத்தை இன்றும் பத்திரமாக வைத்திருந்து ஒருவித ரோஷத்துடன் பதிவிட்டுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள்.

      என்னிடமும் இவைகள் இன்றும் பத்திரமாக உள்ளன. நான் படித்த 1965-66 இல்கூட SSLC என்றால் 11ம் வகுப்புதான் [11th Std.]

      தாங்கள் சொல்லியுள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், சமூகம் தவிர ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் இரண்டாம் தாள் என இரண்டு உண்டு. ஆக மொத்த மதிப்பெண்கள்: 500 அல்ல 600 ஆகும்.

      இது தவிர ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் என்ற ஓர் விருப்ப மொழிப்பாடமும் உண்டு. ஆனால் அது இந்தக்கூட்டுத்தொகை 600 இல் சேரவே சேராது.

      அந்தப்பாடத்தில் 0 மதிப்பெண் பெற்றாலும் 100 மதிப்பெண்கள் பெற்றாலும் அது எந்தக்கணக்கிலுமே எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அதில் நாம் வாங்கும் மதிப்பெண்களால் பாஸோ அல்லது ஃபெயிலோ நிர்ணயிக்கப்படமாட்டாது. அது ஓர் உப்புக்குச் சப்பாணியாக தனியாக மதிப்பெண் பட்டியல்களில் காட்டப்பட்டு வரும். அத்தோடு சரி.


      >>>>>

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. அன்று ELECTIVE பாடம் என்று ஒன்று இருந்ததே. நான் படிக்கும் போது கணிதத்தை எடித்து படித்தேன். அப்போது 600 மார்க்குகள்.
        நான் படிப்பதற்கு ஒரு மூன்று வருடங்கள் முன்புதான் இந்த மாதிரி சேர்த்தார்கள். பிறகு சில வருடங்களில் +2 வந்த பிறகு எடுத்து விட்டார்கள்.

        சேலம் குரு

        நீக்கு
      2. 1950 வரை அப்படி எலெக்டிவ் பாடம் இருந்தது. எங்களுக்கு புது சிலபஸ் என்று சொல்லி எலெக்டிவ் பாடங்களை எடுத்து விட்டு சரித்திரம் பூகோளம் இரண்டையும் ஒட்டு சேர்த்து சோஷியல் ஸ்டடீஸ் என்று பண்ணி, ஐந்து பாடங்களாக்கு ஐந்நூறு மார்க் ஆக்கினார்கள். அதற்கப்புறம் பிபிசி வரும் வரையில் எலெக்டிவ் பாடங்கள் வரவே இல்லை.

        நீக்கு
    3. //இதில் உள்ள என் தகப்பனாரின் கையெழுத்தைப் பாருங்கள். இந்தக் கையெழுத்தை அந்தக் காலத்தில் நான் சர்வ சாதாரணமாகப் போடுவேன். பின்னே ஸ்கூல் புராக்ரஸ் ரிப்போர்ட்டில் அப்பாவிடமா கையெழுத்து வாங்க முடியும்? அப்பாவிடம் நேரில் நின்று பேசினதே இல்லை. அப்புறம் எங்க கையெழுத்து வாங்கறது?//

      என்ன ஒரு துணிச்சல் உங்களுக்கு ......
      அதுவும் அன்றே ...... பொடிப்பயலாக இருந்துள்ள போதே ! :)

      >>>>>

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. அன்று அப்படி.
        இன்று அப்பாவின் எதிரில் சேர் போட்டு அமர்ந்து கொண்டு எந்த விஷயத்தை பற்றியும் விவாதிக்கும் அளவு இன்றைய குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறோம். நம் பாடுதான் திண்டாட்டம். அன்று அப்பா அம்மாவுக்கு பயந்தோம். இன்று குழந்தைகளிடம் பயப்படுகிறோம். நம்மை பார்த்து பயப்படுகிறவர்கள்தான் யாருமில்லை.

        காயத்ரி மணாளன்

        நீக்கு
      2. நம்மைப் பார்த்து தெரு நாய் கூடப் பயப்படுவதில்லை. அதற்குப் பயந்து நாம்தான் தள்ளிப் போக வேண்டியுள்ளது.

        நீக்கு
    4. மொத்த மார்க்குகள் 324/500. = 65 %

      அந்தக்காலக்கட்டத்தில் இது அருமையான மார்க் தான்.

      பாராட்டுகள். வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு
    5. ஐயா

      சும்மா வீம்புக்கு (விளையாட்டு வம்பு = வீம்பு) சொன்னால் உடனே தேடிப்பிடித்து இட்டு விட்டீர்கள். இவ்வளவு மதிப்பெண்கள் அதுவும் நகராட்சி பள்ளியில் எடுத்ததால் தான் Phd வரை போக முடிந்தது.

      பள்ளிக்காலத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருந்திருக்கிறீர்கள்.
      -- XI படிக்கும்போது 5'4" உயரமும் 94 lb எடையும் இருந்திருகிறீர்கள்.

      மேலும் ஒரு சின்ன சந்தேகம்.ஒரே இனிசியலில் இரண்டு கந்தசாமி இருந்தீர்களோ. செர்டிபிகேடில் கொஞ்சம் confuse பண்ணியிருக்கார்கள்.
      Jayakumar

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. பாய்ன்ட்ட கரெக்டாப் புடிச்சிட்டீங்க. ரெண்டு பேர் ஒரே பெயரில் இருந்ததால் பிறந்த தேதியில் குழப்ப்ம ஏற்பட்டு விட்டது.

        நீக்கு
    6. உங்களிடம் யாரேனும் சவால் விட முடியுமா...?

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. சவால் விட்டு ஜெயிக்கக்கூடிய ஒரே ஆள் ஐயாவுடைய பார்யாளாகத்தான் இருக்க முடியும். என்னங்க கவுண்டரே நான் சொல்வது சரிதானே?

        சேலம் குரு

        நீக்கு
      2. எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் நீங்கள்? பார்யாள் எல்லாம் சவால் விட்டுத்தான் ஜெயிக்க வேண்டுமா என்ன? ஒரு பார்வை பார்த்தாலே போதாதா? ஆனாலும் என் வீட்டில் அப்படியெல்லாம் இல்லை. ஒரு தடவை நான் என் மனைவியை ஜெயிக்க விட்டு விடுவேன். இன்னொரு தடவை என் மனைவி என்னை தோற்கடித்து விடுவாள்.
        இப்படி மாறி மாறி ஜெயித்து தோற்று வாழ்க்கையை சந்தோஷமாக நடத்துகிறோம்.

        துளசி மைந்தன்

        நீக்கு
    7. --// நான் SSLC என்பதை இப்பொழுதாவது நம்புகிறீர்களா? இல்லை என் ஹெட்மாஸ்டர் காலம் சென்ற திரு. சிங்காரவேலு முதலியாரை எழுப்பிக் கூட்டிக்கொண்டு வரவா?

      இல்லை, என் வகுப்புத் தோழர் காலம் சென்ற திரு. C.T. தண்டபாணி M.P. அவர்களைக் கூட்டிக்கொண்டு வரவா?//

      ஆமா மேலே போனவர்கள் எல்லாம் வோட்டு போட வரும்போது சாட்சி சொல்லவா வர முடியாது.
      Jayakumar

      பதிலளிநீக்கு
    8. மதிப்பெண்கள் ஒருபோதும் வாழவை நிர்ணயிப்பதில்லை
      கற்ற கல்வியை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றேர்ம்
      என்பதில் அல்லவா வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது
      நன்றி ஐயா
      தம +1

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நூற்றில் இல்லையில்லை ஆயிரத்தில் ஒரு வார்த்தை. பின்னே சும்மாவா சொன்னார்கள் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று.
        புத்தக படிப்பை விட அனுபவ படிப்புதான் வாழ்க்கைக்கு உதவும்.
        அன்றைய காமராஜரும் இன்றைய கலைஞரும் நல்ல எடுத்துக்காட்டுக்கள். முன்னவர் ஜானக்ளுக்கு நன்மை செய்ததில், பின்னவர் இலக்கிய துறையில்

        திருச்சி அஞ்சு

        நீக்கு
      2. நல்ல வேளை. ஒருவர் ஜனங்களுக்கு நன்மை செய்வதில் இன்னொருவர் இலக்கியத்தில் என்று சொல்லி விட்டீர்கள்.

        நீக்கு
      3. கலைஞர் இலக்கியத்தில் விற்பன்னர் என்பது இத்துக்கொள்ளவேண்டிய விசயந்தான். ஆனாலும் கலியுக கம்பன், நவீன தொல்காப்பியன், உலகத்தமிழுலக காவலன் என்றெல்லாம் buildup கொடுக்கும் போதுதான் மனது வலிக்கிறது. மஹா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழ் தாத்தா உ வே சாமிநாதம்பிள்ளை போன்றோர் செய்ததில் ஒரு 0.01% செய்து இருப்பாரா கலைஞர்.

        சேலம் குரு

        நீக்கு
    9. நன்றிகள் அய்யா. அந்த காலத்தில் 65% என்பது ரொம்பவே நல்ல மார்க். அந்த காலத்தில் ஒரு படத்தில் எம்ஜியாரோ சிவாஜியோ "அம்மா நான் பர்ஸ்ட் கிளாஸ்ல பாசாயிட்டேன்." என்று சத்தம் போட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைவார். டிஸ்டிங்ஷன் என்பதெலாம் மாநிலத்துக்கே அபூர்வமாக இருக்கும். அப்போதெல்லாம் பாரம் IV,V,VI மூன்று வருட பாடங்களும் SSLC தேர்வுக்கும் இருக்குமாமே. ஆங்கிலமும் மிக உயரிய தரத்தில் இருக்குமாமே. அப்படிப்பட்ட தேர்வில் 65% என்பது பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான்.
      ஆனால் திரு கிரிஷ் அவர்கள் சொன்ன மாதிரி இது போன்ற உங்கள் பிறந்த தேதி அல்லது தனி நபர் அடையலாம் சார்ந்த விவரங்களை அல்லது ஆவணங்களை போது வெளியில் பகிர்ந்து கொள்வது ஆபத்தானதுதான்.

      சேலம் குரு

      பதிலளிநீக்கு
    10. SSLC புக் என்பது நமது ஜாதகம் மாதிரி. அதில், அதிலும், அந்த காலத்தில் ஏன் இவ்வளவு அடித்தல் திருத்தல்கள். புரியவில்லையே. அதிலும் 2ம் பக்கத்தில் திருத்தலுக்கு பக்கத்தில் HM கையெழுத்தே காணப்படவில்லையே. ஏதோ உயர்கல்வி சேரும்போதும் வேலையில் சேரும்போதும் சந்தேகப்படவில்லை தப்பித்தீர்கள்.

      காயத்ரி மணாளன்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. மூன்றாம் பக்கத்தில் திருத்தலுக்கு HM கையெழுத்து போட்டிருக்கிறார் பாருங்கள். அதை வைத்து என்னை இவ்வளவு தூரம் வளர விட்டு விட்டார்கள். தவிர அந்தக் காலத்தில் இப்போது மாதிரி தகிடுதத்தம் கிடையாது. அதனால் தப்பித்தேன்.

        நீக்கு
      2. //இதில் உள்ள என் தகப்பனாரின் கையெழுத்தைப் பாருங்கள். இந்தக் கையெழுத்தை அந்தக் காலத்தில் நான் சர்வ சாதாரணமாகப் போடுவேன்.//
        //தவிர அந்தக் காலத்தில் இப்போது மாதிரி தகிடுதத்தம் கிடையாது. அதனால் தப்பித்தேன்.//

        இந்த இரண்டு வாக்கியங்களும் ஒத்து போகவில்லையே. ஒருவேளை ப்ரோக்ராஸ் ரிபோர்டில் கையெழுத்து போடுவது தகிடுதத்தில் சேர்த்தி இல்லையா?

        துளசி மைந்தன்

        நீக்கு
      3. நெனச்சேன். இந்த மாதிரி குதர்க்கமா யாராச்சும் கேப்பாங்கன்னு. புராக்ரஸ் ரிப்போர்ட்ல அப்பா மாதிரி கையெழுத்து போடுவது அந்தக் காலத்தில் மாமூலான வழக்கம். அது தகிடுதத்தத்தில் சேர்த்தி இல்லை. SSLC புத்தகத்தில் தேதியை மாற்றுவது, மார்க்குகளை மாற்றுவது இது மாதிரி வேலைகள்தான் தகிடுதத்தத்தில் சேரும். சந்தேகம் இருந்தால் எங்கள் HM திரு. சிங்காரவேலு முதலியாரைக் கேட்டுப் பாருங்கள்.

        நீக்கு
    11. யாரோ என்னவோ சொன்னார்கள் என்பதற்காக ரொம்பவே சிலும்பிக் கொண்டு விட்டீர்கள்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. இந்த வயதான காலத்திலயே இப்படி சிலுப்பிக்கொண்டு இருந்தால் வயது இருந்த காலத்தில் எப்படி? நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறதே. பாவம் உங்கள் மாணவர்கள். அதை விட பாவம் உங்கள் ஆம்படையாள்.

        திருச்சி தாரு

        நீக்கு
      2. ஒரு பதிவு கணக்கில் சேர்ந்தாச்சு இல்லீங்களா, அதப் பாருங்க மொதல்லே?

        நீக்கு
    12. அன்புள்ள அய்யா,

      ‘என் வண்டவாளம் என்னும் தண்டவாளம்’

      மலரும் நினைவுகளைத் தூசிதட்டிப் பார்த்தது வியக்க வைத்தது.

      நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை... இன்னும் அது தனிவதில்லை... எண்ணங்களும் மறைவதில்லை...!

      நன்றி.
      த.ம.7.

      பதிலளிநீக்கு
    13. அய்யா நானும் 1950-51ல் கோவையில் உள்ள மைகேல்ஸ் ஸ்கூலில் SSLC படித்தேன் எனது மார்க்கும் 324/500 = 65% மின் வாரியத்தில் பொறியாளராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று பழனி அருகே ஆயக்குடியில் வசித்து வருகிறேன்

      குப்பன பண்டாரம்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. ஆஹா, என்ன ஒற்றுமை. உங்களைச் சந்திக்கவேண்டுமே? சந்தர்ப்பம் அமையவேண்டும்.

        நீக்கு
    14. ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களிலெல்லாம் 60க்கு மேல்தானே வாங்கியிருக்கிறீர்கள். நீங்கள் கண்டிப்பாக அறிவாளிதான். "நீங்கள் சொல்லி என்ன பிரயோஜனம்?. என் வீட்டுக்காரி நீங்கெல்லாம் என்ன படிச்சீங்களோ? என்றுதானே சொல்கிறாள். அவள் என்றைக்கு என்னை புத்திசாலி என்று ஒத்துக்கொள்கிறாளோ அன்றுதான் எனக்கு மனசு நிம்மதியாகும்" என்று சொல்லும் உங்கள் உள்மனக்குரல் எங்களுக்கு நன்றாக கேட்கிறது.

      சேலம் குரு

      பதிலளிநீக்கு
    15. ஐயா! சவாலே சமாளி?!!!! நல்ல மதிப்பெண்கள். இதில் ஒன்றும் குறை இருப்பதாகத் தெரியவில்லையே!

      பதிலளிநீக்கு
    16. ஐயா

      R S புரம் என்பது கோவையின் முக்கிய பகுதி என்று தெரியும். ஆனால் அதன் சரித்திரம் உங்களைப்போன்ற பெரியவர்களுக்கே தெரியும். R S புரம் உருவான வரலாறு, வளர்ச்சி பற்றி ஒரு பதிவு இடுங்களேன்.
      --
      Jayakumar

      பதிலளிநீக்கு
    17. எஸ்எஸ்எல்சி பற்றிய பதிவினைக் கண்டேன். தங்களின் எழுத்துக்களை ரசிப்பவர்களில் நானும் ஒருவன். எங்களுக்கு சாட்சிகள் தேவையில்லை. தங்களின் எழுத்தே போதும்.

      பதிலளிநீக்கு
    18. சாட்சிகள் தேவையில்லை...நம்புகிறோம்!

      (எனினும் முழுதும் படித்தேன்.)

      பதிலளிநீக்கு
    19. அந்தக் காலத்து மதிப்பெண்கள் இயற்கையாக இருந்தன! SSLC புத்தகத்தைப் பிரிக்கும்போது மனதில் பள்ளிக் காலத்துக்கே சென்று விட்டீர்கள்தானே? வீட்டுக்கருகிலேயே பல்லியா? தூரத்திலா? நடந்தே சென்றிருப்பீர்கள். அந்தக் கால ஆசிரியர்களின் அர்ப்பணிப்புணர்வு நினைவுக்கு வந்திருக்கும்! அவற்றைப் பதிவாக்கலாமே..

      பதிலளிநீக்கு
    20. என்னிடம் காலஞ்சென்ற என் அப்பாவின் s.s.l.c புத்தகம் உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் பெட்டியிலிருந்து எடுத்து பார்த்து அப்பா இவ்வளவு குறைவாக மதிப்பெண் எடுத்திருக்கிறார். நம்மளை மட்டும் செண்டம் வாங்கணும் என்று மிரட்டினாரே என்று நினைத்துக் கொண்டேன். இன்றே உங்கள் பதிவை பார்த்து விளக்கம் அறிந்து கொண்டேன் ஐயா.

      தாங்கள் எஸ்.எஸ்.எல்.சி முடித்துள்ளீர்கள் என்று சத்தியமாக நம்புகிறேன்....:)

      பதிலளிநீக்கு
    21. அப்படியே, அந்தக் கிரடிட் கார்டையும் கொஞ்சம் காப்பி பண்ணி போட்டீங்கனா நல்லாயிருக்கும்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. எங்கிட்ட கிரெடிட் கார்டு இல்லியே? இப்ப என்ன பண்ணுவீங்க?

        டெபிட் கார்டு இருக்கு . கூகுள்ல இருந்து அந்த போட்டோவை எடுத்துப் போடட்டுமா?

        நீக்கு
      2. விசா டெபிட்-ஆ இருந்தா ஓகேதான்.

        நீக்கு
    22. ஐயா
      ஜூன் மாதம் 80 வயசு முடியுது அல்லவா? ஆயிரம் பிறை கண்ட சதாபிஷேகம் (எண்பதாம் கல்யாணம்) வையுங்கள். பதிவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். பின்னூட்டம் இடுபவர்களையும் மற்றும் கல்யாணத்திற்கு வந்தவர்களையும் ஆசிர்வதியுங்கள்.

      --
      Jayakumar

      பதிலளிநீக்கு
    23. iv வகுப்பு =1949-50 , உயரம் = 5' 1" ,எடை= 84lbs எப்படி 😁

      பதிலளிநீக்கு