ஞாயிறு, 27 ஜனவரி, 2013

டாலர் நகரம் - புத்தக வெளியீட்டுவிழா

புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு நான் எடுத்த சில புகைப்படங்கள்.










வெள்ளி, 25 ஜனவரி, 2013

புரதத்தை ஏன் கொள்ளை விலைக்கு விற்கிறார்கள்?

சரவணன்
ஒரு சந்தேகம்- புரோட்டீன் உணவுகள் (பருப்பு, கறி, புரோடீன் பானங்கள் உட்பட) விலை அதிகமாக இருப்பது ஏன்? கார்போஹைட்ரேடை விட புரோடீனை விளைவிப்பது செலவு அதிகமாக இருப்பது ஏன்? ஆம்வே நியூட்ரிலைட் பானம் 1 கிலோ ஆயிரம் ரூபாய்க்குமேல். அதில் பலன் உண்டா?

கொள்ளைக்காரனைப் பார்த்து "ஐயோ, கொள்ளையடிக்கிறானே" என்று புலம்புவதில் பயனில்லை.

துவரைக் காய்கள்

புரதச்சத்து மனித உடலுக்கு எவ்வளவு அவசியம் என்று முன்பொரு பதிவில் பார்த்தோம். மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு புரதம் மிகமிக அவசியம்.
வளரும் குழந்தைகளுக்கு போதுமான புரதச்சத்து இல்லாவிட்டால் அவர்களுக்கு பல குறைபாடுகள் உண்டாகும்.

இன்றைய வளர்ந்த சமுதாயத்தில், குறிப்பாக நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்று வளர்க்கிறார்கள். அவர்களைக் குறி வைத்துத்தான் விளம்பரங்கள் அனைத்தும் வெளிவருகின்றன.

புரதச்சத்து இல்லாவிட்டால் உங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள் என்று சொல்லிவிட்டால் போதும், இந்தப் பெற்றோர்கள் படும் பாடு இருக்கிறதே, அதை எழுத்தில் விளக்கவே முடியாது. மக்களின் இந்த குணத்தைப் பயன்படுத்தி பெரிய கம்பெனிகள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களின் மனதை மூளைச்சலவை செய்து தங்கள் பொருட்களை வியாபாரம் செய்து விடுகிறார்கள். 

பத்து ரூபாய் பெறும் ஒரு சத்தை இவர்கள் விளம்பரத்தின் மூலம் ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள். "ஆம்வே" கம்பெனி இந்தக் கொள்ளையில் முதலிடம் வகிக்கிறது.

மனிதன் ஒழுங்கான உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தால் அவன் ஆரோக்கியமாக வாழ்வதற்குப் போதும். அரிசி, கோதுமை, துவரம்பருப்பு, அவரைப் பருப்பு, கொள்ளு, நல்லெண்ணை, கடலை எண்ணை, காய்கறிகள், பால் இந்த உணவுகளை முறையாக சாப்பிட்டு வந்தால் போதும். எந்தக் குறைபாடும் வராது.

வளரும் குழந்தைகளுக்கு வேர்க்கடலை அல்லது பொட்டுக்கடலை, வெல்லம், பால் இவை மூன்றுமே அவர்களுடைய புரதத் தேவையை பூர்த்தி செய்து, அவர்கள் நன்கு வளரப் போதுமானவை. கடைகளில் விற்கும் கண்ட கண்ட பானங்களையோ, பொருட்களையோ வாங்கிக் கொடுப்பதினால் ஒன்றும் பலனில்லை. ஆரோக்கியமான உணவுகளைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாததினால்தான் இவ்வாறு மக்கள் ஏமாந்து விடுகிறார்கள்.

புரதச்சத்து தானியங்கள் விலை அதிகமாக இருப்பதற்குக் காரணம் அவைகளின் விளைச்சல், மாவுச்சத்து தானியங்களை விடக் குறைவு. அதனால் அவைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. ஒரு ஏக்கரில் நெல் 2 டன் விளையும். ஆனால் துவரம்பருப்பு 400-500 கிலோ மட்டுமே விளையும். தவிர நெல் 4 மாதத்தில் விளைந்துவிடும். துவரம்பருப்பு விளைய 8 மாதங்கள் ஆகும்.

இன்றைய பொருளாதார நிலையில் மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். தேவையில்லாமல் விளம்பரங்களைப் பார்த்து மயங்கி பணத்தை வீணாக்க வேண்டாம்.

புதன், 23 ஜனவரி, 2013

மனிதனுக்குள் ஒரு மிருகம்

மனிதன் ஆதி காலத்தில் மிருகமாக இருந்து, பின்பு மனிதனாக மாறினான் என்று உயிரியல் தத்துவங்கள் கூறுகின்றன. மிருகங்களுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு என்னவென்றால், மனிதனுக்கு பகுத்தறிவு இருக்கிறதென்று சொல்கிறார்கள். பலருக்கு இல்லை என்பது வேறு விஷயம்.

மனிதன் மிருகமாக செயல்பட்டதை சமீபத்தில் பார்த்தோம். ஆகவே மனிதனுக்குள் ஒரு மிருகம் ஒளிந்து கொண்டு இருக்கிறது. அது அவ்வப்போது எட்டிப் பார்க்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதனால்தான் மனிதன் அனுபவிக்கும் பல இன்பங்களை மிருக-இன்பம் (Animal Pleasure) என்று சொல்கிறோம்.

உதாரணத்திற்கு, பசிக்காக உணவு உண்கிறோம். தாகத்திற்காக தண்ணீர் குடிக்கிறோம். வேறு காரணங்களுக்காக என்னென்னமோ செய்கிறோம். இதையெல்லாம் மிருக-இச்சை என்று சொல்கிறோம் அல்லவா? ஒருவன் நாகரிகமில்லாமல் சாப்பிட்டால் என்ன சொல்கிறோம், “பன்னி மாதிரி தின்கிறான் பார்” என்று சொல்கிறோம். ஒருவன் நன்றாகச் சாப்பிட்டு விட்டு, படுக்கையில் படுத்து புரண்டால் “மலைப் பாம்பு தின்னுப்புட்டு நெளியற மாதிரி நெளியறான் பாரு” என்று சொல்கிறோம். ஏனென்றால் இவையெல்லாம் மிருக இச்சைகள்.

குளிப்பது மனிதனின் தேவை. மற்ற மிருகங்களும் குளிக்கின்றன. சீக்கிரம் குளிப்பவனை காக்காக் குளியல் போடுகிறவன் என்று சொல்கிறோம். சொரணை கம்மியாக இருப்பவனைப் பார்த்து “எருமை” என்று சொல்கிறோம். இதையெல்லாம் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நாம், பாத் டப்பில் குளிப்பவனை, (பாத் டப்பில் என்ன குளியல், தண்ணீரில் ஊறிக் கிடப்பதுதானே) குட்டையில் ஊறிக்கிடக்கும் எருமையுடன் ஒப்பிடுவதில் ஏதாவது தப்பு இருக்கிறதா? நியாயமாக எருமைகள்தான் தங்களை மனிதனுடன் ஒப்பிட்டதில் வருத்தப் படவேண்டும்.

கடைசி செய்தி: எருமைகள் சங்க வக்கீல் என் மீது கேஸ் போட ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாகக் கேள்வி.

திங்கள், 21 ஜனவரி, 2013

நவீன குளியல் அறையில் குளிப்பது எப்படி?


தங்கள் சொந்த வீட்டில் குளிப்பதானாலும் சரி, விருந்தாளியாகப் போய் மற்றவர்கள் வீட்டில் குளிப்பதானாலும் சரி, சில அடிப்படை நாகரிகங்களைக் கடைப்பிடிக்கவேண்டும்.

நான் ஒரு ஆண். அதனால் ஆண்கள் குளிப்பதைப் பற்றித்தான் என்னால் சொல்ல முடியும்.

குளிப்பது என்பது நான்கு நிலையில் நடக்கும் ஒரு வேலை.

1. பல் விளக்குவது

2. ஷேவிங்க் செய்வது

3. குளித்தல்

4. ஆடை அணிதல்

(இந்த வேலைகளில் 1 மற்றும் 2 இவைகளை தனியாக பாத்ரூமுக்கு வெளியில் செய்ய வேண்டி வரலாம். அதை இப்போதைக்கு விட்டு விடுவோம்)

பல் விளக்குவதுவும் ஷேவிங்க் செய்வதும் வாஷ் பேசினுக்கு முன் செய்ய வேண்டிய வேலைகள்.

இதுதான் வாஷ் பேசின்


முதலில் பல் விளக்குவதைப் பார்ப்போம். பிரஷ், பேஸ்ட் உபயோகப்படுத்தினாலும் சரி, பல் பொடி உபயோகித்தாலும் சரி, உங்கள் வாயிலிருந்து வருபவை அனைத்தும் பேசினுக்குள்தான் விழ வேண்டும். பல் தேய்த்து முடித்த பின் வாய் கொப்பளித்து உமிழும் திரவங்கள் அனைத்தும் பேசினுக்குள் விழவேண்டும். இதுதான் முறை. இது முடியாதவர்கள் ஆற்றங்கரைக்குப் போய்விடுவது உத்தமம்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். வாயை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று, கையை வாய்க்குள் விட்டு ஊர் முழுவதும் சத்தம் கேட்கிற மாதிரி வாந்தி பண்ணக்கூடாது. நீங்கள் பாத்ரூமுக்குள் இருக்கும்போது, தண்ணீர் விழும் சத்தத்தைத் தவிர வேறு எந்த சத்தமும் வெளியில் கேட்கக்கூடாது.

இப்போது வாஷ் பேசினை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து விட வேண்டும். நீங்கள் வரும்போது எவ்வளவு சுத்தமாக இருந்ததோ அதே சுத்தம் நீங்கள் வாஷ் பேசினை விட்டுப் போகும்போதும் இருக்கவேண்டும்.

பிறகு ஷேவிங்க் செய்த பிறகும் வாஷ்பேசினை நன்றாக சுத்தம் செய்துவிடவேண்டும். முடிகளை பேசினில் எக்காரணத்தைக் கொண்டும்  விட்டுவிடக்கூடாது. (ஷேவிங்க் செய்வது எப்படி என்று ஒரு தனி பதிவு தயாராகிக்கொண்டு இருக்கிறது)

பின்பு குளித்தல் எப்படி என்று பார்ப்போம். குளிப்பதை பல நிலைகளில் செய்யலாம். நின்றுகொண்டு, உட்கார்ந்து கொண்டு, பக்கெட்டிலிருந்து மக்கில் மோண்டு ஊற்றி, ஷவரின் அடியில் நின்று கொண்டு, ஹேண்ட் ஷவரை உபயோகித்து, இப்படி எப்படி வேண்டுமானாலும் குளிக்கலாம். உடம்பில் ஒட்டியிருக்கும் வியர்வை மற்ற அழுக்குகள் நீங்க வேண்டும், அவ்வளவுதான். சோப்பு அல்லது பயத்தம் மாவை உடலின் மேல் பூசிக் குளிக்கலாம்.

முக்கியமாகக் கவனிக்கவேண்டியது, தண்ணீரை அதிகம் உபயோகிக்காமல் அளவுடன் உபயோகிக்கவேண்டும். இன்று தண்ணீர் அரிதாகிக்கொண்டு வருகிறது. அதுவும் நகரங்களில் மிகவும் கஷ்டம். 

குளித்து முடித்தவுடன் புது உள்ளாடைகளையும் மேல் ஆடைகளையும் உடுத்திக்கொண்டு, பழைய ஆடைகளை அதற்குண்டான பக்கெட்டிலோ, குண்டானிலோ போட்டுவிடவேண்டும். பாத்ரூம் தரையில் எந்தவிதமான அழுக்குகளும் இல்லாமல் கழுவி விட்டு வெளியில் போட்டிருக்கும் கால்மிதியில் கால்களை ஈரம் போகத்துடைத்துவிட்டு வரவேண்டும்.

அநேகமாக இப்போது எல்லோர் வீட்டிலும் பாத்ரூமில் எக்ஸ்சாஸ்ட் பேன் வைத்திருப்பார்கள். பாத்ரூமை விட்டு வெளியில் வந்தவுடன், கதவை மூடிவிட்டு, இந்த பேனைப் போட்டுவிட்டால் பாத்ரூம் தரை சீக்கிரம் உலர்ந்துவிடும். இதற்கு பாத்ரூம் எலெக்ட்ரிக் ஸ்விட்ச்சுகள் அனைத்தும் வெளியில் இருக்கவேண்டும். பாத்ரூம் தரை உலர்ந்து இருப்பது அவசியம். ஏனென்றால் ஈரத்தரையில் நோய்க்கிருமிகள் வளர்வது மிக அதிகம்.

உங்கள் சொந்த வீடானாலும் உறவு முறைக்குப் போய்த் தங்கின வீடாக இருந்தாலும் இந்த முறையில் பாத்ரூமை உபயோகப்படுத்தினால் அனவருக்கும் சந்தோஷமாக இருக்கும். யாரும் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள். குறிப்பாக கிராமத்தில் இருந்து வரும் விருந்தினர்கள் கவனமாக இருப்பது அவசியம்


                                    .

இது பாத்டப் எனப்படுவது. நம் கிராமத்து குட்டைகளில் எருமை மாடுகள் முங்கிக் கிடப்பதைப் பார்த்திருப்பீர்கள். இது அதுவேதான். என்ன வித்தியாசம் என்றால் இதில் வெந்நீரும் வரும். டப்பை நிரப்பிவிட்டு அதில் மணிக்கணக்காக ஊறிக்கொண்டு இருப்பது ஒரு தனி சுகம் என்கிறார்கள். நான் அனுபவித்ததில்லை.


இது கேபின் என்று சொல்லப்படும் குளியல் அறை. இதில் தண்ணீர், வெந்நீர் இரண்டும் உங்களுக்கு வேண்டிய சூட்டில் இதமாக உங்கள் மீது பீய்ச்சி அடிக்கும். ஏறக்குறைய அருவியில் குளிக்கும் அனுபவம் கிடைக்கும். இந்த இரண்டு முறைகளும் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் வருந்தும் ஏழைகளுக்கானது. நமக்கு அந்த வருத்தம் இல்லாததால் இவைகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

கிணற்றடியில், பம்பு செட்டிற்கு கீழ் குளித்தவர்களுக்கு இந்த மாதிரி பாத்ரூமில் குளிப்பது காக்கைக் குளியலுக்கு சமம்தான். என்ன செய்யமுடியும்? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.


சனி, 19 ஜனவரி, 2013

காது குடைதல் எப்படி?


ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி இப்படிக் கேட்டு விட்டார்.

"காது குடைவது எப்படி?" என்பது உங்கள் அடுத்த பதிவு என்பதை

எதிர்பார்க்கலாமா சார்?

அவருடைய ஆசையை நிறைவேற்றுவதை விட வேறென்ன வெட்டி முறிக்கப் போகிறேன். ஆதலினால் இந்தப் பதிவு.

காது குடைதலினால் வரும் இன்பம் தெனாலிராமன் சொல்லிய சுகத்திற்கு சிறிதும் குறைந்ததல்ல. அனுபவித்தவர்களுக்குத்தான் இது தெரியும்.

திரு.சக்திவேல் சொல்லுகிறார்:

எஸ் சக்திவேல் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுத்துச் சென்றுள்ளார்"கால் கழுவுவது எப்படி?": 
காது குடைவது ரொம்ப ஆபத்தானது என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள். 

இது எல்லாம் நிலாவில பாட்டி வடை சுடுகிற கதை. "ஈஎன்டி" வைத்தியர்கள் தங்களுக்கு வரும்படி போய்விடுமே என்பதற்காக கட்டிவிட்ட கதை. எங்கே, காது குடைந்ததால் காது செவிடாய்விட்டது என்பதற்கு ஒரு உதாரணம் காட்ட முடியுமா? முடியாது. ஏனென்றால் இறைவன் காதைப் படைத்ததே, காது குடைவதற்காகத்தான்.

இந்த டாக்டர்கள் இந்தக் காது குடைதலில் உள்ள சூட்சுமம் புரியாமல் பேசுகிறார்கள். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போல இருக்கிறது இவர்களின் பேச்சு. அது எப்படி என்று கடைசியில் விளக்குகிறேன்.

தேவலோகத்தில் கூட இந்த சுகம் இல்லையென்று நினைக்கிறேன். ஏனென்றால் எந்தப் புராணத்திலும், எந்தக் கடவுளோ அல்லது தேவர்களோ, காது குடைந்ததாக எழுதப் படவில்லை. அது போலவே, தெனாலிராமன் கூறிய சுகமும் அங்கு இல்லையென்று தெரிகிறது. அப்புறம் எதற்காக மக்கள் தேவலோகத்திற்கு (சொர்க்கத்திற்கு) போக ஆசைப் படுகிறார்கள் என்று புரியவில்லை.

இது நிற்க, சப்ஜெக்ட்டுக்கு வருவோம். காது குடைதல் என்றால் என்ன? அவ்வப்போது காதிலே நமைச்சல் உண்டாகும். இது இறைவன் கொடுக்கும் வரம். அப்போது காதுக்குள் எதையாவது விட்டுக் குடைந்தால் மிகவும் சுகமாக இருக்கும். இந்த சுகத்திற்கு ஈடு இணை கிடையாது. அப்படியே மெய்மறந்து போகும்.

இதை சைன்டிபிக்காக எப்படி குடைவது என்று விளக்குவதே இந்தப் பதிவின் நோக்கம்.

காது குடைவதற்கான உபகரணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. அவரவர்கள் சுண்டு விரல் : இதுதான் அவசரத்திற்கு கிடைக்கக் கூடியது. சுண்டு விரலை காதுக்குள் விட்டு குடையலாம். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், காதுக்குள் அதிக தூரம் இந்த விரல் உள்ளே போகாது. அதனால் காது குடைவதின் சுகம் அரைகுறையாகத்தான் இருக்கும்.

2. அடுத்து அவசரத்திற்கு உபயோகப் படக்கூடியது, கார் அல்லது இரு சக்கர வாகனத்தின் சாவி. இது ஓரளவிற்கு காதினுள் புகும். இதனால் குடையும்போது ஓரளவிற்கு சுகமாயிருக்கும்.

3. நீங்கள் அலுவலகத்தில் இருந்தீர்களானால் உங்களுக்கு உடனடியாக கிடைக்கக் கூடியவை, பென்சில் அல்லது பால்பாய்ன்ட் பேனா. இவைகள் நல்லவையே. என்ன, பென்சிலின் கூர் உடைந்திருந்தால் நல்லது. இல்லையென்றால் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டியிருக்கும்.

4. துண்டு பேப்பர்: இது ஆபீசிலும் வீட்டிலும் தாராளமாகக் கிடைக்கும். இதை ஒரு பக்கத்தில் இருந்து சுருட்டி, கூப்பு வடிவத்திற்கு கொண்டு வந்து, கூராக இருக்கும் முனையை சிறிது மடக்கி விட்டு, உபயோகிக்கலாம். தினசரி காலண்டர் தாளைக் கிழித்தவுடன் அநேகர் செய்யும் முதல் காரியம் இதுதான். இது எந்த விதமான ஆபத்தும் இல்லாதது.

5. பறவைகளின் இறகுகள்: இவை இயற்கை நமக்குக் கொடுத்த வரம். இதனால் காதைக் குடையும்போது அப்படியே வானத்தில் சஞ்சரிப்பது போல உணர்வீர்கள்.

6. "இயர்பட்ஸ்" (earbuds): இவை ஓரளவிற்கு பாதுகாப்பானவை. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மெடிகல் ஷாப்புகளில் விற்பது. இது விலை அதிகம். அடுத்தது, வீட்டில் தயார் செய்வது (Home-made). இது ரொம்பவும் செலவில்லாதது. ஊர்க்குச்சியை எடுத்து ஒரு முனையில் கொஞ்சம் பஞ்சை வைத்து திருகினால் "இயர்பட்" தயார்.

ஆனால் ஒரு அக்கிரமம் பாருங்கள், இதையும் டாக்டர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

இப்படியெல்லாம் காது குடைந்து வரும் சுகத்திற்கு ஏதாவது விலை கொடுக்கவேண்டாமா? இப்படி குடைவதால் காது டிரம்மில் போய் குத்தி, காது செவிடாகிவிடும் என்று டாக்டர்கள் சொல்வதை நம்பாதீர்கள். காது டிரம் இறைவனால் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் வேண்டுமென்றே அதை கெடுக்கவேண்டும் என்றாலும் முடியாது.

பிறகு என்ன நடக்குமென்றால் உள்காதில் எங்காவது காயம் ஏற்படும். அது உடனே உங்களுக்குத் தெரியாது. ஒரு வாரம் பத்து நாள் கழித்து காதில் வலி ஏற்பட்டு சீழ் வடியும். மனிதனுக்கு வரும் வலியில் பல் வலிக்கு அடுத்தபடியாக கொடுமையான வலி இதுதான்.

உடனே "ஈஎன்டி'' டாக்டரிடம் போய்த்தான் ஆகவேண்டும். அவர் பேசாமல் காதைப்பார்த்து வைத்தியம் செய்யவேண்டியதுதானே? பண்ணமாட்டார். காதைப் பார்த்தவுடனே, "காதைக் குடைந்தீர்களா" என்று கேட்பார். இந்தக் கேள்விதான் உலகத்திலேயே மகாக் கொடுமையான கேள்வி. ஆம் என்றும் சொல்ல முடியாது, இல்லையென்றும் சொல்ல முடியாது. எப்படிச்சொன்னாலும் டாக்டர் அர்ச்சனையைக் கேட்டே ஆகவேண்டும்.

வேறு வழியில்லை. எப்படியோ டாக்டரைச் சமாளித்து மருந்து வாங்கிக்கொண்டு வரவேண்டும். மருந்தை நேரம் தவறாமல் காதில் விட்டு, பஞ்சால் காதை மூடிவைக்கவேண்டும். பார்பவர்களுக்கெல்லாம் காதில் என்ன என்று பதில் கூறவேண்டும்.

ஒரு சுகம் வேண்டுமென்றால், ஒரு துக்கத்தை அனுபவித்துத்தானே ஆகவேண்டும். இது உலக நியதிதானே.

இப்படி காது குடைவதினால்  "ஈஎன்டி'' டாக்டர்களுக்கு அதிக வருமானம்தானே தவிர, அவர்களுக்கு எந்த விதத்திலும் நஷ்டம் இல்லையே. பின் ஏன் அவர்கள் காது குடையாதீர்கள் என்று சொல்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. ஒரு சமயம் காது குடைவது அவர்களது ஏகபோக உரிமை என்று நினைக்கிறார்களோ, என்னமோ?


வெள்ளி, 18 ஜனவரி, 2013

கால் கழுவுவது எப்படி?

இந்தியன் டைப் அல்லது வெஸ்டர்ன் டைப், இதில் எதில் நீங்கள் காலைக் கடனைக் கழித்தாலும் "கால் கழுவ" வேண்டும். "கால் கழுவுதல்" என்றால் என்ன என்று புரியும் என்று நினைக்கிறேன். புரியாதவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் நேரடி டெமான்ஸ்ட்ரேஷனுக்கு ஏற்பாடு செய்யப்படும்.


இந்தியன் டைப் டாய்லெட் உபயோகப்படுத்திய பின் கால் கழுவுவது எப்படி என்று பார்ப்போம். வலது கையில் "மக்" கில் தண்ணீர் எடுத்துக்கொண்டு பின்புறம் கொண்டு சென்று அந்த நீரை முக்கிய இடத்தில் மெதுவாக ஊற்றி, இடது கையால் அந்த பாகத்தை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். இரண்டாவது முறையும் இதே மாதிரி செய்யலாம். அது நல்லதே. ஒரு முக்கிய குறிப்பு. இவ்வாறு நீங்கள் கால் கழுவும்போது அந்த தண்ணீர் முழுவதும் டாய்லெட் பேசினுக்குள் விழுமாறு கழுவ வேண்டும். இது முக்கியம். பாத்ரூம் முழுவதையும் அசிங்கப் படுத்தி விடக்கூடாது.  இதற்குப் பிறகு மக்கில் தண்ணீர் எடுத்து டாய்லெட் சீட்களை கழுவி விடவும்.

எனக்கு முன்னாடியே ஒரு அன்பர் இந்தப் பிரச்சினையை அலசி, ஒரு டெமான்ஸ்ட்ரேஷன் செய்திருக்கிறார். அந்தக் கோணொளியைக் காணுங்கள்.
http://www.youtube.com/watch?v=dKkryfdtMNQ

இதன் பிறகு நம் ஆட்கள் செய்வதுதான் கொடுமையின் உச்ச கட்டம். இந்தக்காரியம் முடிந்தபின் அப்படியே அல்லது இடது கையை வெறும் தண்ணீரில் கழுவிவிட்டு மற்ற வேலைகளுக்குச் சென்று விடுவார்கள். மனிதக் கழிவில் எவ்வளவு நோய்க் கிருமிகள் இருக்கின்றன என்ற அறிவு இல்லாததால் அவர்கள் செய்யும் காரியம் இது. கால் கழுவிய பின், இரு கைகளையும் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். கழுவிய பின் ஒரு சுத்தமான துவாலையில் கைகளை ஈரம் போகத் துடைக்கவேண்டும்.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்று கேட்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், தினம் ஒரு முறைதான் இதைச் செய்யவேண்டி வரும். அதற்குக் கூட சோம்பல்பட்டால் உங்கள் சுகாதார உணர்வை என்ன சொல்லி, எப்படித் திருத்துவது? வட இந்தியாவில் ஒவ்வொருவரும் டாய்லெட் உபயோகிக்கச் செல்லும்போது தவறாமல் சோப்பு டப்பாவை எடுத்துச் செல்வார்கள். அவர்கள் இரண்டு கையாலும் சாப்பிடுபவர்கள், அவர்களுக்கு இந்த முன்ஜாக்கிரதை அவசியம்.

அடுத்து வெஸ்டர்ன் டைப் டாய்லெட்டில் நம் காரியத்தை முடித்தபின் கால் கழுவுவது எப்படி என்று பார்ப்போம். இதற்கு பல வழிகள் இருக்கின்றன.

முதல் வழி - டாய்லெட் பேப்பர் உபயோகிப்பது. இது நம் ஊருக்கு சரிப்பட்டு வராது. ஆகையால் அதை விட்டு விடுவோம். 

இரண்டாவது வழி - இந்தியன் டாய்லெட்டில் கடைப்பிடிப்பது போலவே, மக்கில் தண்ணீர் எடுத்துக்கொண்டு கால் கழுவுவது. இதற்கு நீங்கள் டாய்லெட் சீட்டில் சிறிது முன் நகர்ந்து உட்காரவேண்டும். கால் கழுவும் தண்ணீர் முழுவதும் பேசினுக்குள்ளேயே விழ வேண்டும். பின்பு டாய்லெட்டை மற்றுமொரு முறை பிளஷ் செய்யவேண்டும். பின்பு எழுந்து டாய்லெட்டை மூடிவிட்டு, கைகளை சோப்பு போட்டு கழுவிக் கொள்ளவேண்டும்.

மூன்றாவது வழி - "பிடெட்" உபயோகிப்பது. 


இதை எடுத்து பின்புறம் கொண்டுபோய் அந்த லிவரை அழுத்தினால் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும். நாம் கழுவ வேண்டிய பகுதிக்கு தண்ணீர் செல்லுமாறு சிறிது நேரம் பிடித்துக்கொண்டு இருந்தால் அந்தப் பகுதி நன்றாகச்சுத்தமாகிவிடும்.
நம் கை அசுத்தமாகாது. ஆகவே இது மிகுந்த சுகாதாரமானது. இது மாதிரியே டாய்லெட்டுடன் சேர்ந்தே இருக்கும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் குழாய்களும் உண்டு.

இப்படியாக நாம் கால் கழுவும் படலத்தை முடித்தோம். ஏதாவது குறிப்புகள் விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் மக்களுக்கு உபயோகப்படும். 

அடுத்த பதிவில் "வாஷ் பேசினை" உபயோகிப்பது பற்றியும் மற்ற குளியல் விஷயங்களையும் பார்ப்போம்.

புதன், 16 ஜனவரி, 2013

நவீன டாய்லெட்களை உபயோகிப்பது எப்படி?



அதி நாகரிக சுந்தரர்கள் - சுந்தரிகள், மற்றும் மென்மையான இருதயம் படைத்தவர்கள் இந்தப் பதிவைப் படிக்கவேண்டாம். அவர்கள் இதில் எழுதப்பட்டிருக்கும் விளக்கங்களைப் படித்து அருவருப்படைவார்கள். ஏனெனில் அவர்கள் தேவலோகத்திலிருந்து நேரடியாக பூமிக்கு வந்தவர்கள். அவர்களுக்கு இந்த மாதிரி காலைக் கடன்களுக்கு அவசியம் இல்லை.

இந்தப் பதிவு, காலைக் கடன்களில் அதிமுக்கியமானதைப் பற்றியது. இதைப் பற்றிய தெனாலிராமனின் வேடிக்கைக் கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக இந்தப் பதிவில் அந்தக் கதையை போட்டிருக்கிறேன்.

உங்கள் சொந்த வீடானாலும் அடுத்தவர் வீடானாலும் இந்த செயலில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் ஒன்றே.

நெ.1 மற்றும் நெ.2 என்று மறைபொருளாகக் குறிப்பிடப்படும் இந்த "வெளிக்குப் போதல்" என்ற காலைக் கடனைப் பற்றி ஒரு பெரிய புத்தகமே எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் இதில் இருக்கின்றன. "லண்டனுக்குப் போய்ட்டு வரேன்" என்றும் இதைக் குறிப்பிடுவதுண்டு.

காலை பொழுது விடிவதற்கு முன் எழுந்து காலாற கம்மாய்க் கரைக்குப் போய் "உட்கார்ந்து" விட்டு கம்மாயில் "கால் கழுவி" விட்டு, வரும் வழியில் ஒரு வேப்பங்குச்சியை முறித்து வாயில் வைத்துக் கொண்டு எதிரில் வருபவர்கள் எல்லோருடனும் ஊர் வம்பு, வழக்கு பேசிவிட்டு, வீட்டிற்கு வந்து வாய் கொப்பளித்து விட்டு, கால்கை கழுவிவிட்டு, காப்பி குடிக்கும் அனுபவமே தனி சுகம். சொர்க்கத்தில் கூட இத்தகைய சுகம் கிடைக்காது என்று சத்தியம் செய்யும் பெரிசுகள் இன்றைக்கும் நம் கிராமங்களில் உண்டு.

ஆனால் இன்றைய நகர (நரக) வாழ்க்கையில் இந்த சுகத்திற்கு இடம் இல்லை. "டாய்லெட்" என்று நாகரிகமாக அழைக்கப்பெறும் நவீன கக்கூஸ்கள் தவிர்க்க முடியாதனவையாக ஆகிவிட்டன.


இவைகளில் "இந்தியன் டைப்" எனப்படுபவை இந்திய பாணிக்காக வடிவமைக்கப்பட்டவை. குத்துக்காலிட்டு உட்காரும் வழக்கத்திற்கேற்ப உள்ளவை. வெட்டவெளியில் காலைக்கடனைக் கழிப்பது போன்றது. என்ன, இது நாலு சுவர்களுக்குள் இருக்கும். இவைகளில் நம் காரியம் முடிந்து வெளியில் வரும்போது தண்ணீர் விட்டு கிளீன் செய்து விட்டு வெளியில் வரவேண்டும். (இப்போதெல்லாம் தானியங்கி பிளஷ்கள் வந்து விட்டன). ஆனாலும் அவைகளை இயக்குவதற்கு உண்டான பட்டனை அழுத்தவேண்டும் அல்லது செயினை இழுக்கவேண்டும்.


இங்குதான் நம் "கனவான்கள்" சொதப்பும் இடம். தண்ணீர்விட்டு பேசினை கழுவ மாட்டார்கள். வெட்ட வெளியில் வெளிக்குப் போனபின் எழுந்து நடையைக் கட்டுவது போலவே இங்கும் போய்விடுவார்கள். அடுத்து அங்கு செல்லும் நபர் என்ன பாடுபடுவார் என்று சிறிது கற்பனை பண்ணிப் பாருங்கள்.

இந்த நிலை மறதியால் ஏற்படுவது அல்ல. அறியாமையினால் ஏற்படுவது. அதற்காகத்தான் இந்தப் பதிவு. பல பொது இடங்களில் இதைப் பற்றிய ஒரு அறிவிப்பு வைத்திருப்பார்கள். "டாய்லெட்டை உபயோகித்தபின் பிளஷ்ஷை உபயோகியுங்கள்" என்று அறிவிப்பு இருக்கும். பலர் அந்த அறிவிப்பு தங்களுக்குத்தான் என்று உணராமல் டாய்லெட்டை உபயோகித்த பின் அப்படியே வந்து விடுவார்கள். இதைப் போன்ற கொடுமை வேறு இல்லை.


அடுத்தது "வெஸ்டர்ன் டைப்" டாய்லெட்டுகள். WC என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். வெளி நாடுகளில் இந்த சௌகரியம் உள்ள பொது இடங்களில், இதை Comfort Room, Rest Room என்று பலவாறாக அழைப்பது உண்டு. Rest Room என்றால் ஏதோ ஓய்வு எடுப்பதற்கான இடம் என்று தவறாகப் புரிந்து கொள்ளவேண்டாம்.


இதை உபயோகப் படுத்துவதில் உலகம் முழுவதும் கொஞ்சம், கொஞ்சம் என்ன, நிறையவே, குளறுபடிகள் உண்டு. இந்தப் படத்தைப் பார்க்கவும்.


நாகரிகமடைந்த மேலை நாடுகளிலேயே இப்படி படம் போட்டு விளக்க வேண்டியிருக்கிறது என்றால், நம் நாட்டைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

டாய்லெட்டில் உட்காருவதற்கு முன், அதன் அமைப்பை சற்று பாருங்கள்.


1 = டாய்லெட் மூடி
2 = டாய்லெட் சீட்
3 = டாய்லெட் பேசின் (மேல் பாகம் மட்டும் காட்டியிருக்கிறது)


டாய்லெட் சாதாரண நிலையில் இப்படி இருக்கும்.



நீங்கள் டாய்லெட்டை உபயோகிக்கு முன் டாய்லெட் கவரை மேலே தூக்கி விடவேண்டும். இந்த நிலையில் டாய்லெட் மேல் உட்கார்ந்து கொண்டு, வெளிக்குப் போவதும் சிறுநீர் கழிப்பதும் செய்யலாம். எக்காரணம் கொண்டும் இந்த நிலையில் ஆண்கள், நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக்கூடாது. டாய்லெட் சீட்டில் சிறுநீர் பட்டு அதை அசுத்தம் செய்தால் அடுத்து வருபவர்கள் எப்படி அதன் மேல் உட்கார முடியும்? பொது கழிப்பறைகளில் இந்த சீட்டில் உட்காரும் முன், இந்த சீட்டை தண்ணீரால் நன்கு கழுவிவிட்டு பின்பு உட்காருவது நல்லது.



ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதானால், டாய்லெட் சீட்டையும் மேலே தூக்கி வைத்து விட்டு உபயோகிக்க வேண்டும். இந்த நிலையில் வெளிக்குப் போகும் அன்பர்கள் டாய்லெட் பேசின் மேல் நேரடியாக உட்காருவது ஏற்படலாம். அது மகாத் தவறு.

இதன் பிறகு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. (அடுத்த பதிவில்)

இந்த டாய்லெட்டை உபயோகப் படுத்திய பின் தவறாமல் டாய்லெட்டை பிளஷ் செய்யவேண்டும். பிளஷ் செய்த பின் டாய்லெட் பேசின் சரியாக சுத்தமாய் விட்டதா என்று பார்த்து, ஏதாவது அசுத்தம் இருந்தால் பிரஷ் உபயோகித்து சுத்தம் செய்ய வேண்டும். பின்பு டாய்லெட் சீட்டையும் கவரையும் கீழ்நோக்கி தள்ளி டாய்லெட்டை மூடி விட்டு வரவும்.

வெளிநாடு செல்லும் அன்பர்களுக்காக இன்னொரு குறிப்பு. எல்லா ஊர்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான கழிப்பறைகள் உண்டு. குறிப்பாக விமான நிலையங்களில். இந்தக் கழிப்பறைகளுக்கு உண்டான அடையாளங்களைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இதில் தவறு ஏற்பட்டால் பெரும் சங்கடங்கள் ஏற்படும். இந்தப் படத்தைப் பாருங்கள்.

பெண் ஆண்

இந்தப் படத்திலும் சந்தேகம் ஏற்பட்டால், யாராவது டாய்லெட்டை உபயோகிக்க வரும் வரையிலும் காத்திருந்து அவர்கள் பின்னால் போகவும்.

பதிவு நீளமாகி விட்டதால் அடுத்த பகுதியில் பாக்கியை விளக்குகிறேன். பாக்கி எது என்பதை யூகித்து வைக்கவும்.

செவ்வாய், 15 ஜனவரி, 2013

தெனாலிராமனின் எது சுகம் கதை

தெனாலிராமன் கிருஷ்ணதேவராயர் அரசவையில் ஆஸ்தான விகடகவியாக இருந்து, அரசரையும், அரசவையில் இருந்தோரையும் சிரிக்கவைத்த பல கதைகளைக் கேட்டிருப்பீர்கள். அவ்வளவாக பிரபலம் ஆகாத கதை ஒன்றை இந்தப் பதிவில் சொல்ல ஆசைப் படுகிறேன்.

ஒரு நாள் அரசவையில் எல்லோரும் கூடியிருக்கும்போது அரசர் ஒரு கேள்வியை எழுப்பினார். "மனிதனுக்கு மிகவும் சுகமான அனுபவம் எது?" என்பதுதான் அந்தக் கேள்வி. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய பதில்களைச் சொன்னார்கள்.

ஒருவர் "நல்ல அழகிகளுடன் பேசிக்கொண்டு இருப்பதுதான் சுகமானது" என்றார். இன்னொருவர் "நல்ல அறுசுவை விருந்து சாப்பிடுவதுதான் சுகமானது" என்றார். மற்றொருவர் "நல்ல சங்கீதத்தைக் கேட்பதுதான் சுகமானது" என்று சொன்னார். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மனதிற்குப் பிடித்ததைச் சொன்னார்கள்.

அரசர் தெனாலிராமனைப் பார்த்து, "என்ன நீ ஒன்றுமே சொல்லவில்லையே" என்று கேட்டார். அதற்கு தெனாலிராமன் "நான் நினைப்பதைச் சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள்" என்றான். அரசர், "பரவாயில்லை, எதுவானாலும் சொல்" என்றார்.

அப்போது தெனாலிராமன் சொன்னான். "உலகிலேயே சுகமானது வெளிக்குப் போவதுதான்" என்றான். இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். அரசருக்குக் கோபம் வந்துவிட்டது. "அரசவையில் இப்படிப்பட்ட அருவருப்பான சமாசாரத்தை சொன்ன நீ அறிவற்றவன்" என்று அவனைத்திட்டினார். அப்போது தெனாலிராமன் சொன்னான் - நான் இதை நிரூபிப்பேன் என்று சொன்னான். அரசரும் நீ அவ்வாறு நிரூபிக்காவிட்டால் உனக்கு சிறைத் தண்டனை கொடுப்பேன் என்றார். தெனாலிராமன் ஒத்துக் கொண்டான்.

இரண்டு நாட்கள் கழித்து தெனாலிராமன் ஒரு பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்தான். அரசவையின் முக்கிய பிரமுகர்களையெல்லாம் அந்த விருந்திற்கு அழைத்திருந்தான். அரசரும் வந்திருந்தார். விருந்து மிகவும் தடபுடலாக நடந்து முடிந்தது. இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. அதனால் அரசரைத் தவிர மற்ற அனைவரையும் தெனாலிராமன் அரண்மனையில் ஒரு அறையில் தங்க வைத்தான். அந்த அறையின் கதவைப் பூட்டி சாவியை தன்னிடமே வைத்துக் கொண்டான். காலையில் விடிந்த பிறகு வெகு நேரம் கழித்தே அவன் அந்த அறைப் பக்கம் சென்றான்.

அந்த அறையில் சிக்கிய அனைவரும் காலைக் கடனைக் கழிக்க முடியாமல் மிகுந்த வேதனையில் இருந்தார்கள். தெனாலிராமனைப் பார்த்தவுடன் எல்லோரும் அவனைக்  கதவைத்திறந்து விடுமாறு கெஞ்சினார்கள். தெனாலிராமன் அவர்களிடம் நான் சொன்ன பிரகாரம் கேட்பதாக இருந்தால் கதவைத் திறந்து விடுவேன் என்று சொன்னான். அவர்கள்,நீ என்ன சொன்னாலும் கேட்கிறோம் என்று உறுதி கூறிய பின்பே கதவைத் திறந்து விட்டான். அனைவரும் ஓடிப்போய் காலைக்கடனைக் கழித்து விட்டு அப்பாடா என்று ஆசுவாசப் படுத்திக்கொண்டார்கள்.

அப்போது தெனாலிராமன் அவர்களிடம் கேட்டான். இரவு சாப்பிட்ட விருந்து சுகமா அல்லது இப்போது வெளிக்குப் போய்விட்டு வந்தீர்களே இது சுகமா என்று கேட்டான். அப்போது அவர்கள் எல்லோரும் ஏகமனதாக, அப்பனே தெனாலிராமா, இதுதான் சுகம் என்றார்கள். தெனாலிராமன் அப்படியானால் இதை அரசரிடம் சொல்லுவீர்களா என்று கேட்டான் சொல்லுகிறோம் என்று ஒப்புக்கொண்டார்கள்.

அன்று அரசவை கூடிய பின், தெனாலிராமன், அரசே, இப்போது இங்கு கூடியுள்ள பிரமுகர்களை எது சுகம் என்று கேளுங்கள் என்றான். அரசர் அவ்வாறு கேட்டதற்கு அனைவரும் வெளிக்குப் போவதுதான் சுகம் என்றார்கள். அரசரும் தெனாலிராமனின் சாதுர்யத்தை மெச்சி அவனுக்குப் பரிசுகள் கொடுத்தார்.

இந்தக் கதையின் முக்கியத்துவத்தை என்னுடைய அடுத்த பதிவுகளில் தெரிந்து கொள்வீர்கள்.

திங்கள், 14 ஜனவரி, 2013

நல்ல குளியல் அறை அமைப்பது எப்படி?

நான் கட்டிடப் பொறியாளன் இல்லை. ஆனால் கட்டிட அமைப்புகளில் ஆர்வம் மிக்கவன். எங்கள் வீட்டுக் குளியலறையில் நானே டிசைன் செய்து அமைத்தவைகளை இங்கே பகிர்ந்துள்ளேன். இதற்கு மேல் பலமடங்கு வசதிகளும் டிசைன்களும் கொண்ட பாத் ரூம்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் ஒரு நடுத்தரக் குடும்பத்தில், பாத்ரூமை அதிக செலவில்லாமல் எப்படி அமைக்கலாம் என்று இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் படம் மட்டும் கூகுளில் இருந்து எடுத்தது.
மற்ற படங்கள் அனைத்தும் என் வீட்டில் எடுத்தது.

குளியலறை குறைந்தது 50 சதுர அடியாவது இருக்கவேண்டும். அதில் ஒரு புறம் டாய்லெட் இருக்கும். வெஸ்டர்ன் டைப் டாய்லெட்டே சிறந்தது. வயதானபின் இந்த உண்மையை எல்லோரும் உணர்வார்கள்.

அதை அடுத்து குளிப்பதற்கான இடம். அதற்கடுத்து உடை மாற்றுவதற்கான இடம். இந்த இடம் குளிக்கும் இடத்தைவிட சிறிது உயரமாக இருக்கவேண்டும். அப்போதுதான் இந்த இடம் ஈரமாகாமல் இருக்கும்.

குளியலறையில் தண்ணீர் எங்கும் தேங்காமல் வடிந்து போகவேண்டும். இதை பாத்ரூம் தரை அமைக்கும்போது கூடவே இருந்து சரி பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் கொத்தனார்கள் சொதப்பி விடுவார்கள்.

இந்தப் பதிவில் கொடுத்திருக்கும் வசதிகள் ஒரு மத்தியதரக் குடும்பத்திற்கானது.

1.  வெஸ்டர்ன் டைப் டாய்லெட். (மூடியிருக்கிறது)


உபயோகத்திற்காக திறந்திருக்கும்போது


பிளஷ் டேங்க்



2. குளிக்கும் இடமும் அதற்கான வெந்நீர், தண்ணீர் பைப்புகளும். (மிக்சிங்க் டைப்)


புதிதாக உபயோகப்படுத்துபவர்கள் வெந்நீர் மற்றும் தண்ணீர் எதில் வரும், இந்தப் பைப்புகளை உபயோகப்படுத்துவது எப்படி என்று கேட்டுத் தெரிந்து கொள்வது நலம். இது தெரியாமல் உபயோகப்படுத்தினால் பைப்புகள் உடைந்து போகும். ரிப்பேர் செய்வது எளிதல்ல. அதிகம் செலவு ஆகும்.

அருகில் செல்லும் குழாய் கையில் பிடித்துக்கொள்ளும் ஷவருக்காக.


சாதாரண ஷவர்




3. முகம் கழுவும் பேசின்.


இரு பக்கத்திலும் கூடுதலாக கண்ணாடி ஸ்டேண்டுகள் இருப்பதைக் கவனிக்கவும். இந்த ஸ்டேண்டின் உபயோகத்தைக் காணுங்கள்.


4. அன்றாடம் மாற்றும் உள் ஆடைகளுக்காக தனி ரேக்குகள். இதில் தேவையான டாய்லெட் ஐட்டங்களையும் வைத்துக் கொள்ளலாம். குளிக்கப் போன பிறகு "அதை எடுத்து வா, இதை எடுத்து வா" என்று பெண்டாட்டியை ஏவ வேண்டியதில்லை.



ஒரு கடிகாரம் இருப்பதைக் கவனிக்கவும். இரவில் பாத்ரூம் உபயோகப்படுத்தும்போது நேரம் தெரிவதற்காக.

5. துண்டு போடுவதற்கான ராடு.


6. பாத்ரூம் கிளீன் செய்வதற்கான பலவகை மருந்துகள். 



குளியலறையில் எக்ஹாஸ்ட் பேனும் வெளிச்சம் வருவதற்காக கிரவுன்ட் கிளாஸ் போட்ட, திறக்க முடியாத ஜன்னலும் அவசியம். 

7. கிளீன் செய்யத் தேவையான பிரஷ்களும் அதை தொங்க விடத்தேவையான ஸ்டேண்டும்.


8. குளிக்குமுன் உடுத்தியிருந்த துணிகளைப் போட்டு வைக்க ஒரு தொட்டி அமைப்பு.


9. வழுக்கலில்லாத தரை அமைப்பு







ஒரு புறம் தரை சிறிது உயரமாக இருப்பதைக் கவனியுங்கள்.


10. வயதானவர்களுக்கு இன்றியமையாத ஒரு அமைப்பு. வயதானவர்கள் தடுமாறினால் பிடித்துக்கொள்ள வலுவான கைப்பிடிகள்.



கைப்பிடிக்கு வலது பக்கத்தில் இருப்பதுதான் "பிடெட்"

11. கால் கழுவ - பிடெட் (இதன் உபயோகம் பற்றி அடுத்த பதிவில்)


இப்பொழுதெல்லாம் தரை முதல் சீலிங்க் வரை டைல்ஸ் ஒட்டுவது என்பது அடிப்படைத் தேவையாக மாறி விட்டது. அதனால் அதைப்பற்றி தனியாகச் சொல்லவில்லை.


இந்த வகையான குளியலறையைக் கட்டுவது பெரிதல்ல. அதை முறையாகப் பயன்படுத்துவதுதான் மிகவும் முக்கியம். அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். 

சனி, 12 ஜனவரி, 2013

குளியல் அறை எப்படி இருக்கவேண்டும்?


முன்னொரு காலத்தில் மனிதர்கள் கிராமங்களில் வசித்தார்கள். அவர்களின் முக்கிய தொழில் விவசாயம். அந்தக் காலத்தில் ஜனங்கள் விடிவதற்கு முன் எழுந்தார்கள். எழுந்தவுடன் கம்மாய்க் கரைக்கோ, வாய்க்கால் கரைக்கோ சென்று காலைக் கடன்களை முடித்து விட்டு அப்படியே அவரவர் கழனிகளுக்குச் சென்று அன்றாட வேலைகளை ஆரம்பிப்பார்கள்.

பொழுது விடிந்து சூரியன் பனைமரம் உயரம் போன பிறகுதான் அவர்களுக்கு பழைய சோறு வந்து சேரும். இப்படியாக அன்று முழுவதும் பாடுபட்டு முடித்தபின், பொழுது சாய்ந்த பிறகு வீடு வந்து சேர்வார்கள். அதன் பிறகுதான் குளியல் நடக்கும். வீட்டு வாசலில் ஒரு கல் இருக்கும். அதன் மேல் இவன் கோமணத்தைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து கொள்வான். இவன் ஊட்டுக்காரி வெந்நீர்த் தவலையில், காய்ச்சிய வெந்நீரைக் கொண்டுவந்து சொம்பில் மோண்டு ஊற்றி, இவனைக் குளிப்பாட்டுவாள். முதுகு தேய்த்து விடுவதென்று ஒரு பழக்கம் அந்தக் காலத்தில் உண்டு. குளித்து விட்டு அங்கேயே துணி மாற்றிக்கொள்வான்.

இது எல்லாம் அந்தக் காலத்து மாமூல். இதையெல்லாம் ஒருவரும் விகல்பமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பெண்கள் குளிப்பதற்கென்று ஒவ்வொரு வீட்டு புடக்களையிலும் தட்டி வைத்து ஒரு மறைப்பு செய்திருப்பார்கள். பெண்கள் அங்கு அவர்களுக்கு நேரம் இருக்கும்போது குளித்துக் கொள்வார்கள். அன்றாடம் குளியல், காலையில் எழுந்தவுடன் குளியல், சோப்பு, ஷாம்பு குளியல் என்பதெல்லாம் நவயுக நாகரிகம். அந்தக் காலத்தில் ராஜாக்கள் அரண்மனையில் இப்படி நடந்திருக்கலாம். சாதாரண மனிதனுக்குத் தெரியாதவை இவைகள்.

இன்று நகரங்களிலும் கிராமங்களிலும் குளியலறை இல்லாத வீடுகள் இல்லை. குளியலறை என்றால் இன்றும் பெரும்பாலானோர் நினைப்பது, நான்கு சுவர்களும் ஒரு கதவும்தான். இன்றும் பல குளியலறைகளில் குளிக்கப் போனால் துண்டைப் போடுவதற்கு ஒன்றும் இருக்காது. குளியலறைக்கதவின் மேல் போட்டு விட்டுத்தான் குளிக்கவேண்டியிருக்கும். அதுவும் ஒரு வகையில் நல்ல ஏற்பாடுதான், ஏனென்றால் குளியலறைக்கு உட்புறம் தாட்பாள் போடும் வசதி இருக்காது. கதவின் மேல் துண்டு இருந்தால் உள்புறம் ஆள் இருக்கிறார்கள் என்று அனுமானித்துக் கொள்ள வேண்டியதுதான்.

குளியலறையில் வெளிக்குப் போகும் வசதியை அமைப்பது இன்றும் பலருக்கு ஒத்துக் கொள்ள முடிவதில்லை. அதற்கு வீட்டை விட்டு வெளியில் தனியாக ஒரு அறை கட்டியிருப்பார்கள். அதை நவீன முறையில் அவரவர்களுக்குத் தோன்றின மாதிரி அமைத்திருப்பார்கள். அந்த அறை எப்படி இருக்கும் என்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.

இப்படிப்பட்ட பின்புலத்தில் பழக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய நவீன குளியலறையைப் பார்த்தால் "பணக்கொழுப்பைப் பார்" என்றுதான் சொல்லத்தோன்றும். இன்றைய நாகரிக உலகில் குளியலறைக்கு சில லட்சங்கள் செலவு செய்ய யாரும் தயங்குவதில்லை. ஆனால் அப்படி பல லட்சங்கள் செலவு செய்து கட்டிய குளியலறையை எவ்வாறு பயன்படுத்துவது என்று பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் கொடுமையை அமெரிக்காவில் வாழும் நம் ஆட்கள், அவர்கள் வீட்டிற்கு இந்தியாவில் இருந்து விருந்தாளிகள் வரும்போது தவறாமல் அனுபவித்திருப்பார்கள்.

இந்த பிரச்சினை உலகளாவிய ஒன்று. ஆகவே குளியலறையை எவ்வாறு அமைக்கவேண்டும், எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்று எனக்குத் தெரிந்த வகையில் சொல்லுகிறேன். ஒரே பதிவில் சொல்ல முடியாதாகையால் தொடர் பதிவுகளாக எழுதுகிறேன். ஏற்கனவே குளியலறை உபயோகத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இந்த குறிப்புகள் தேவையில்லை. தெரியாதவர்கள் பலர் இருக்கலாம். அவர்களுக்காகத்தான் இந்தத் தொடர்.