சனி, 15 ஆகஸ்ட், 2015

நான் ஒரு சர்வாதிகாரி - பாகம் 1

                                       Image result for chemistry lab
நான் மண்ணியல் துறையில் முதுகலைப் படிப்பு (1959-61) படித்து முடித்தவுடன் இரண்டு வருடங்கள் பரம்பிக்குளம் - ஆளியார் பாசனப் பகுதியில் மண் ஆய்வுத்திட்டத்தில் பணி புரிந்தேன். அந்த ஆய்வுத்திட்டம் முடியும் வரை அதில் இருந்து அதன் இறுதி அறிக்கையையும் தயார் செய்தேன். அந்த அறிக்கை பலராலும் பாராட்டப்பெற்று, உலக வங்கிக்காரர்கள்  அந்த அறிக்கையின் பல பிரதிகளை வாங்கிப்போனார்கள். பரம்பிக்குளம் - ஆளியார் பாசனத் திட்டம் உலக வங்கியின் உதவியுடன்தான் செயல்படுத்தப் பட்டது.

பிறகு என்னை ஆசிரியப் பகுதிக்கு மாற்றினார்கள். முதலில் ஆய்வகத்தில் செயல்முறைப் பயிற்சி கொடுக்கும் உதவிப் பேராசிரியராக பணியாற்றினேன்.
விஞ்ஞானப் படிப்புகளில் இந்த வேதியல் செயல்முறைப் பயிற்சிகள்தான் கடினமானவை மற்றும் ஆபத்து நிறைந்தவை. குறிப்பாக கந்தக அமிலம் பல சோதனைகளுக்கு உபயோகப்படுத்த வேண்டி வரும்.

அந்த கந்தக அமிலத்தை சோதனைக் குழாயில் அரை சிசி எடுத்து ஒரு சோதனை செய்யவேண்டும். அதற்குள் நாங்கள் கொடுக்கும் ஒரு ரசாயனத்தை ஒரு சிட்டிகை அளவு போட்டு அந்த சோதனைக்குழாயை "புன்சன்பர்னரில்" காய்ச்ச வேண்டும். காய்ச்சின பிறகு அதை வெளியில் எடுத்து முகர்ந்து பார்க்கவேண்டும். அதில் வரும் வாசனையை வைத்து அந்த ரசாயனம் என்னவாக இருக்கலாம் என்று யூகிக்கலாம்.  நிச்சயமாக அது என்ன ரசாயனம் என்று உறுதி செய்ய வேறு பல சோதனைகள் செய்யவேண்டும்.
                         
                                                          Image result for test tube

இப்படி செய்யும்போது பல மாணவர்கள் அரை சிசி கந்தக அமிலம் எடுப்பதற்குப் பதிலாக 2 அல்லது 3 சிசி எடுத்து விடுவார்கள். அதைக் காய்ச்சி முகரும்போது அந்த அமிலம் கொதித்து வெளியே சீறி அடிக்கும். அது நேராக அந்த முகரும் மாணவனின் கண்ணுக்குள் போகும்.

கந்தக அமிலத்தின் குணங்கள் தெரியாதவர்களுக்காக ஒரு வார்த்தை. அமிலங்களிலேயே வீரியம் மிகுந்ததுவும் மனித உடலுக்கு மிகவும் கேடு விளவிக்கக் கூடியதுவும் கந்தக அமிலமே ஆகும். உங்கள் உள்ளங்கையில் மூன்று சொட்டு கந்தக அமிலத்தை விட்டுவிட்டு அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு இரண்டு நிமிடம் நின்றீர்களேயானால், உங்கள் உள்ளங்கையை ஓட்டை போட்டுவிடும்.

இதே கந்தக அமிலம் ஒரு பங்கு, நைட்ரிக் அமிலம் மூன்று பங்கு சேர்த்து கலக்கினால் வரும் திரவத்திற்கு "ராஜ அமிலம்" (Aqua regia)  என்று பெயர். இதைத்தான் தெருவில் தங்க நகை பாலீஷ் போடுகிறவர்கள் கொண்டு வருவார்கள். உங்கள் மனைவியின் 10 பவுன் நகையை இதில் ஐந்து நிமிடம் போட்டு எடுத்தால் அந்த நகை அப்படியே பளபளக்கும். கூடவே அந்த நகை இரண்டு பவுன் எடை குறைந்திருக்கும். அந்த ஐந்து நிமிடங்களில் இரண்டு பவுன் தங்கத்தைக் கரைத்துவிடக்கூடிய ஆற்றல் அந்த அமிலத்திற்கு உண்டு.
                                      Image result for gold chain design images

இப்படிப்பட்ட கந்தக அமிலம் கண்ணில் பட்டால் கண் என்ன ஆகும்? அந்த மாதிரி யாராவது மாணவனுக்கு கண் பாதிக்கப்பட்டால் அந்த விளைவிற்கு யார் பொறுப்பு? அந்த வகுப்பில் இருக்கும் ஆசிரியர்தான் பொறுப்பாவார். கந்தக அமிலத்தை எச்சரிக்கையாக கையாள்வதற்கு மாணவனுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு வரும்.
இதனால் நான் என்ன செய்வேனென்றால் அப்படி யாராவது அரை சிசிக்கு மேல் கந்தக அமிலத்தை சோதனைக்குழாயில் எடுத்திருந்தால் உடனே அவனை அழைத்து உன் பெயர் என்ன என்று கேட்டு வருகைப் பதிவேட்டில் அவனுக்கு ஆப்சென்ட் போட்டு அவனை சோதனைச்சாலையிலிருந்து வெளியே அனுப்பி விடுவேன். இதை மற்ற மாணவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்தத் தவற்றை எப்போதும் செய்ய மாட்டார்கள். வெளியில் அனுப்பிய மாணவனும் ஆயுளுக்கும் இதை மறக்க மாட்டான்.

வெளியில் அனுப்பிய மாணவன் சோதனைச்சாலைக்கு வெளியில்தான் நான்று கொண்டிருப்பான். ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அவனை உள்ளே கூப்பிட்டு சோதனைகளைத் தொடரும்படி கூறுவேன். ஆனால் ஆப்சென்ட் போட்டது போட்டதுதான்.


மாணவர்களுக்கு ஒவ்வொரு செயல்முறை வகுப்பிலும் நான் சொல்வது. இங்கு நான் சொல்வது போல்தான் செய்யவேண்டும் மாற்றிச்செய்தால் உங்களை வகுப்புக்கு வெளியில் அனுப்பி விடுவேன் என்பதுதான்.

அந்தக் காலத்தில் நானும் என்னுடன் பணிபுரிந்த மற்ற ஆசிரியர்களும்
இவ்வாறு சர்வாதிகாரம் செலுத்திக் கொண்டு இருந்தோம். மாணவர்களும் எங்கள் கண்டிப்பின் பின் உள்ள மாணவர்களின் நலனை உணர்ந்திருந்தார்கள்.   பல ஆண்டுகள் கழித்துப் பார்க்க நேரும் மாணவர்கள் "சார், நீங்கள் அன்று அவ்வளவு கண்டிப்புடன் இருந்ததால்தான் நாங்கள் ஒழுங்காகப் படித்தோம், நீங்கள் சொல்லிக் கொடுத்தவைகள் இன்றும் மறக்காமல் இருக்கிறது" என்பார்கள். ஒரு ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன விருது வேண்டும்?

மாணவர்களின் குணங்கள் பற்றி நன்னூலில் சொல்லியிருப்பது.



கோடன் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்
திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவ னன்னவார் வத்த னாகிச்
சித்திரப் பாவையி னத்தக வடங்கிச்
செவிவா யாக நெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
போவெனப் போத லென்மனார் புலவர்.

இந்த நன்னூல் சூத்திரத்தை வருட ஆரம்பத்தில் மாணவர்களுக்கு சொல்லி இதன் பொருளையும் கூறுவேன். இதுதான் மாணவர்களுன் இலக்கணம். அப்புறம் நாங்கள் நடந்து கொள்வது உங்கள் விருப்பம். ஆனால் என் வகுப்புகளில் நான் சொல்வதுபோல்தான் நடக்கவேண்டும் என்று சொல்லி விடுவேன்.

பயிற்சி வகுப்புகளுக்கு காக்கி அரை டிராயரும் காக்கி அரைச் சட்டையும்தான் யூனிபார்ம். வேறு சட்டை, பேன்ட் போடுடக்கொண்டு வந்தால் அனுமதி இல்லை. சட்டையின் அனைத்து பட்டன்களையும் போட்டிருக்கவேண்டும். மேல் பட்டன்களைப் போடாமல் திறந்த மார்புடன் வருகிறவர்களை வெளியே அனுப்பப்படும்.. வருகைப் பதிவேட்டில் பெயர்கள் வாசித்து முடித்தவுடன் பரிசாதனைச்சாலையின் கதவு மூடப்பட்டு விடும். அதற்குப் பின் வருபவர்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால் அது அந்தக் காலம். இன்று அப்படியெல்லாம்  செய்தால் அடுத்த நொடியில் மாணவர்கள் அனைவரும் கூட்டாக வெளியில் போய் வாத்தியார் ஒழிக என்று கோஷம் போடுவார்கள். அதிகாரிகளும் மாணவர்களுக்குச் சாதகமாகவே பேசுவார்கள்.

தொடரும்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

என் அப்பா எனக்குக் கொடுத்த தண்டனை


                                                           Image result for நன்னூல்
நான் சிறுவனாக இருந்தபோது தவறுகள் செய்தால் என் அப்பா எனக்கு கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா? எங்களை வீட்டில் தேவாரம் திருவாசகம் முதலான புத்தகங்கள் இருந்தன. அவற்றில் நன்னூல் என்று ஒரு பத்தகமும் உண்டு. அது என்ன, அதன் முக்கியத்துவம் என்ன என்ற விவரங்கள் எல்லாம் அறியாத காலம் அது. அதை எடுத்து ஆரம்பத்திலிருந்து 25 வரிகள் படித்து ஒப்புவிக்கவேண்டும் என்று சொல்லிவிடுவார்.

அந்த வரிகள் வருமாறு.

சிறப்புப் பாயிரம்

மலர் தலை உலகின் மல்கு இருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவை உம் விளக்கும்
பரிதி இன் ஒரு தான் ஆகி முதல் ஈறு
ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த
அற்புத மூர்த்தி தன் அலர்தரு தன்மையின்
(5)
மன இருள் இரிய மாண் பொருள் முழுவது உம்
முனிவு அற அருளிய மூ அறு மொழி உள் உம்
குண கடல் குமரி குடகம் வேங்கடம்
எனும் நான்கு எல்லையின் இரும் தமிழ் கடல் உள்
அரும் பொருள் ஐந்து ஐ உம் யாவர் உம் உணர
(10)
தொகை வகை விரியின் தருக என துன்னார்
இகல் அற நூறி இரு நிலம் முழுவது உம்
தனது என கோலி தன் மத வாரணம்
திசை தொறு உம் நிறுவிய திறல் உறு தொல் சீர்
கரும் கழல் வெண் குடை கார் நிகர் வண் கை
(15)
திருந்திய செங்கோல் சீயகங்கன்
அரும் கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தனன் ஆக முன்னோர் நூலின்
வழி ஏ நன்னூல் பெயரின் வகுத்தனன்
பொன் மதில் சனகை சன்மதி முனி அருள்
(20)
பன்ன அரும் சிறப்பின் பவணந்தி
என்னும் நாமத்து இரும் தவத்தோன் ஏ 

இதில் கொஞ்சம் சந்தி பிரித்து எழுதியிருக்கிறது. நான் படித்த புத்தகத்தில் இவ்வாறு சந்தி பிரிக்கப்படவில்லை. அந்தத் தமிழைப் படிப்பதே கடினம். பிறகு எவ்வாறு அதை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது? வீட்டின் ஒரு மூலையில் சப்பணம் இட்டு உட்கார்ந்து கொண்டு இந்த நன்னூலைப் படிக்கவேண்டும். இவ்வாறு அடிக்கடி சப்பணமிட்டு உட்கார்ந்து பழகியதால் இன்றும் கூட நான் சப்பணமிட்டு ஒரு மணி நேரம் வரை உட்காருவேன்.

இப்படி ஒரு மணி நேரம் கழிந்த பிறகு என் அப்பா இதைப்பற்றி அப்புறம் கேட்க மாட்டார். நானும் எழுந்திருந்து மற்ற வேலைகளைப் பார்க்கப் போய்விடுவேன். இவ்வாறு நன்னூல் எனக்கு அறிமுகமாயிற்று. பிற்காலத்தில் நான் கல்லூரி சென்ற பிறகு இந்த நூலை எப்போதாவது புரட்டுவேன்.

அதில் ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும், மாணவன் எப்படி இருக்கவேண்டும், பாடம் கேட்பது எப்படி என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. கல்லூரிப்படிப்பு முடிந்து நான ஆசிரியனான பிறகு இதையெல்லாம் மீண்டும் படித்து வகுப்பில் மாணவர்களுக்கும் சொல்லுவேன்.

இந்த நூல்கள் எப்படி என் வீட்டில் இருந்தன என்பதை பிற்காலத்தில் என் பாட்டியிடமிருந்து தெரிந்து கொண்டேன். அந்தக் கதைகளில் என்னைப் பற்றிய ஒரு முக்கியமான குறிப்பு இருக்கிறது. அதை கடைசியில் சொல்லுகிறேன்.

என் தகப்பனாருடன் பிறந்த ஒரு மூத்த சகோதரர் இருந்திருக்கிறார். அவருக்கு தமிழ் ஆர்வம் மிகுதி. ஒரு தமிழ்ப்புலவரிடம் பாடம் கற்றிருக்கிறார். அப்போது வாங்கிய புத்தகங்கள்தாம் அவை. அந்தப் புத்தகங்கள் எல்லாம் திருநெல்வேலி சைவ சிந்தாந்த சபையினரால் பிரசுரிக்கப்படவை. அவைகளின் விலை ரூ.1-2-0 அல்லதி ரூ. 1-7-6 என்று போட்டிருக்கும். இந்த விலைகளின் அர்த்தம் இந்தக்கால இளைஞர்களுக்கு விளங்காது. ரூபாய், அணா, பைசா இருந்த காலம் அது. நான் கல்லூரிப் படிப்பு முடித்து வேலைக்குப் போகும் வரை இந்த நாணயமுறைதான் அமுலில் இருந்தது.

அந்தப் பெரியப்பாவிற்கு உடல் நலம் சரியில்லாததால், தான் கல்யாணம் செய்து கொள்ளாமல், தன் தம்பிக்கு (அதாவது என் அப்பாவிற்கு) கல்யாணம் செய்து வைத்தார். நான் பிறந்து ஓராண்டு வரைக்கும் உயிருடன் இருந்தார். அவர் என் பிறந்த தேதி, நட்சத்திரம், அங்க லட்சணங்கள் இவற்றைப் பார்த்து இவன் நன்றாகப் படித்து நல்ல உத்தியாகம் பார்த்து நன்றாக இருப்பான் என்று சொல்லியிருக்கிறார். அவருடைய ஆரூடப்படி நான் இப்போது நன்றாக இருக்கிறேன்.

நன்னூலை நான் எவ்வாறு என் வகுப்புகளில் பயன் படுத்தினேன் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.

புதன், 12 ஆகஸ்ட், 2015

ஆட்டோக்களும் டாக்சிகளும்


இந்தப் பதிவை பிளாக்கரில் போடுவதற்காகத்தான் எழுதினேன். பல அன்பர்கள் விக்கிபீடியாவிலும் எழுதுங்கள் என்று அன்புக் கட்டளை இட்டபடியால் இதையே விக்கிபீடியாவில் போடுவதாக இருந்தால் எப்படி இருக்கவேண்டும் என்று ஒரு மாதிரி (Sample) தயாரித்திருக்கிறேன். பார்த்து ரசியுங்கள். 

                                                Image result for ஆட்டோ ரிக்சா
Ref: Google Images. No permission obtained. No idea whether copyright rules will apply.

ஆட்டோ மற்றும் டாக்சிகள் எல்லா ஊர்களிலும் மக்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றன.(1) ஆனாலும் எனக்கு இவைகளின் மேல் ஒரு தனிப்பட்ட வெறுப்பு இருந்து கொண்டே இருக்கிறது.(2)

(1) பார்க்க. தமிழ்நாடு அரசு கெஜட் அறிவிப்பு தேதி 22-3-1967
(2) பார்க்க. பழனி கந்தசாமியின் சுயசரிதம்.வானதி பதிப்பகம், சென்னை. பக்.54,

நான் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சராசரி மனிதன். அத்தியாவசியத் தேவைகளுக்கு மேல் எந்த சௌகரியமும் கிடைக்காமல் வளர்ந்தவன். நான் சிறுவனாக இருந்தபோது போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு. 1940-50 களில் கோயமுத்தூரில் டவுன் பஸ், ஆட்டோக்கள் முதலியன கிடையாது.(3) டாக்சிகளைக்கூட நான் பார்த்த நினைவு இல்லை. குதிரை வண்டி, மாட்டுவண்டி, சைக்கிள் இவைகள்தான் சாதாரண மக்களின் போக்குவரத்து சாதனங்கள்.(4)

(3) பார்க்க: கோயமுத்தூர் மாவட்ட District Gazetteer, 1935. பக்.672. பத்தி 4
(4) பார்க்க: கோயமுத்தூர் நகராட்சி வரி வசூல் ரசீது எண்  BZ 267539/ தேதி14-8-1924

ஆனால் இவைகளை உபயோகிக்க பணம் வேண்டும். (5) அது ஒரு ஆடம்பரச் செலவாகக் கருதப்பட்ட காலம். மூன்று நான்கு மைல் தூரத்தை எல்லாம் நடந்துதான் போய் வரவேண்டும். அதை ஒரு கஷ்டமாகக் கருதாத காலம் அது. இப்படி வளர்ந்த நான் எங்கு போவதென்றாலும் நடந்தே போய்வந்தேன். டவுன் பஸ் வந்த பிறகும் கூட நான் கல்லூரிக்கு (2 1/2 மைல் = 3 1/2 கி.மீ.) நடந்துதான் போய் வந்தேன்.(6)

(5) Reserve Bank of India - Report on National Policy on Currency Affairs published by Govt. Of India,,Printed at National Security Prison, Eravada, 1942, page 3675.
(6) கோயமுத்தூர் கலைக் கல்லூரி ஆண்டு விழா மலர்,1952. பக்.23

பிற்காலத்தில் நான் வேலைக்கு சேர்ந்த பிறகு (7) கூட ஆட்டோ, டாக்சிகளை மிகமிக அவசரமாக இருந்தால் தவிர உபயோகித்தது கிடையாது. இதற்கு என்ன காரணம் என்றால் இந்த ஆட்டோ மற்றும் டாக்சிக்காரர்கள் எல்லோரும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதே ஆகும். போகவேண்டிய இடத்தை நாம் சரியாகச் சொன்னாலும் தெரியாத மாதிரியே பாவனை செய்து ஊரைச் சுற்றிக் கொண்டு போய் அந்த இடத்தை அடைவார்கள்.(8)

(7) பார்க்க: விவசாய இலாக்கா டைரக்டர் அவர்களின் 12-7-1956 தேதியிட்ட வேலைக்கான நியமன ஆணை, தமிழ்நாடு கெஜட் தேதி 17-7-1956 பக்.417 
(8) பார்க்க: கோயமுத்தூர் பஜார் போலீஸ் ஸடேஷன் FIR நெ. 26578390 தேதி 19-8-1945

தவிர அவர்களிடத்தில் ஒரு சிநேக பாவத்தைப் பார்ப்பது அரிது. நம்முடைய வாடிக்கையாளராச்சே, அவர் கொடுக்கும் காசில்தானே நம் பிழைப்பு ஓடுகிறது என்ற எண்ணம் கொஞ்சம் கூடக் கிடையாது. ஒரு விரோதியிடம் பேசுவது போல்தான் பேசுவார்கள்.(9)

(9) பார்க்க: ஒரு ஆட்டோ ஓட்டுனரின் பேட்டி, குமுதம் வார இதழ் தேதி 9-8-1924 பக் 456 பத்தி 2 

அரசு என்ன சட்டம் போட்டாலும் இவர்கள் மீட்டர் சார்ஜுக்கு எங்கும் வரமாட்டார்கள். (10) இவர்களிடம் பேரம் பேசுவதற்குள் மனிதனுக்கு போதும் போதும் என்றாகிவிடும். இவர்களில் எங்காவது நூற்றில் ஒருவர் மனச்சாட்சியுடன் நடந்து கொள்ளலாம். அப்படிப்பட்டவர்கள் அபூர்வம்.

(10) G.O. Ms 1878 dated 26-6-2012, Transport Department, Fort St.George, Chennai

ஆகவே நான் எங்கு போனாலும் பொது போக்குவரத்து வசதிகளையே பயன்படுத்துவேன். முன்கூட்டியே இந்த பொது போக்குவரத்துகளின் விவரங்களைச் சேகரித்து வைத்துக் கொள்வேன். பணிக்காலத்தில் பல ஊர்களுக்கு பணி நிமித்தமாகப் போய்வந்திருக்கிறேன். டில்லி, மும்பாய், கல்கத்தா போன்ற ஊர்களுக்குப் போனாலும் அங்கிருந்து நான் தங்கவேண்டிய இடத்திற்குப் போக பஸ்  அல்லது லோகல் ரயில் விபரங்களை அறிந்து வைத்திருப்பேன். அவைகளில்தான் போய்வருவேன்.(11)

(11) Railway Time Table, Indian Railways, 2014

சமீபத்தில் பெங்களூர் சென்றிருந்தபோது நண்பர் ஜிஎம்பி அவர்களைப் பார்க்க வேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன். கூகுள் மேப்பில் பார்த்தால் நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து அவர் வீடு 25 கிமீ தூரத்தில் இருந்தது. இதற்கு ஆட்டோ வைப்பதாயிருந்தால் அந்த ஊரில் குறைந்தது 500 ரூபாய் கேட்பான். பேரம் பேசினாலும் 400 ரூபாய்க்கு குறைந்து வரமாட்டான். போக வர 800 ரூபாய் ஆகும். இது ஒரு அனாவசிய செலவாக எனக்குப் பட்டது.

ஆகவே நான் இருக்குமிடத்திலிருந்து பஸ் ஸ்டேண்டிற்கு ஆட்டோவில் 50 ரூபாய் கொடுத்து போனோம். (நானும் என் மனைவியும்). அங்கிருந்து ஜலஹள்ளி கிராஸ் என்னும் இடத்திற்கு பஸ்சில் போனோம். அங்கு இறங்கி ஜிஎம்பி வீட்டிற்கு இன்னொரு ஆட்டோ 50 ரூபாய்க்குப் பேசி போய்ச் சேர்ந்தோம்.(12)
(12) பார்க்க. பிளாக்கரில் ஜிஎம்பி பதிவிட்ட பதிவு லிங்க்;http://gmbat1649.blogspot.in/2015/07/blog-post_22.html

இதைச் சிலர் கஞ்சத்தனம் என்று சொல்லலாம். ஆனால் இந்த மாதிரி பண விரயம் செய்ய மாட்டேன். இந்த குணம் ரத்தத்தில் ஊறிப் போய்விட்டது. ஆனால் என் பேரன்கள் செலவு செய்யும் விதத்தைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. சமீபத்தில் என் பேரன் ஒருவன் 3000 ரூபாய் கொடுத்து ஒரு செருப்பு (ஷூ அல்ல) வாங்கியிருக்கிறான். நான் வாயைத் திறக்கவில்லை. நமக்கு எதற்கு வம்பு. (13)

(13) பார்க்க: பாட்டா கடை விலைப் பட்டியல், பாட்டா ப ப்ளிஷிங்க் கம்பெனி, மும்பாய் -123456.

இதுதான் தலைமுறை இடைவெளி. வயசான காலத்தில் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தால்தான் நிம்மதி நிலைக்கும்.


பதிவர்கள் இந்தப் பதிவை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள் உங்கள் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ஆதாரம் வேண்டும். ஆதாரம் இல்லாத செய்திகளை விக்கிபீடியாவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அது 100 சதம் உண்மை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்தாலும் அங்கே செல்லுபடியாகாது.

இன்னொரு அறிவிப்பு: ஆதாரங்கள் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம். பழனி கந்தசாமியை அணுகுங்கள். எவ்வளவு ஆதாரங்கள் வேண்டுமென்றாலும் தரப்படும். ஆதாரம் ஒன்றுக்கு விலை. 100 ரூபாய். மொத்த ஆர்டர்களுக்கு சலுகை காட்டப்படும்.

எப்படி?


செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

தமிழ் இளங்கோவும் நானும்.

                               Image result for five star hotel
தமிழ் இளங்கோவை அறியாதவர்கள் பதிவுலகில் யாரும் இருக்க மாட்டார்கள். அவருக்கு என் மேல் ஒரு பூனைக்குட்டி விசுவாசம் இருக்கிறது. அடிக்கடி என் பதிவுகளைப் படிப்பார் போல இருக்கிறது !  அப்படி படிக்கும்போது என்னுடைய பழைய பதிவு ஒன்றை படித்திருப்பார் போல் இருக்கிறது.

அந்தப் பதிவு.

"வயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும்":   இதைச்சுட்டினால் அந்தப் பதிவைப் பார்க்கலாம். படிப்பது உங்கள் சௌகரியம்.

இந்தப் பதிவு நீண்ட நாட்களுக்கு முன் போட்ட பதிவு. நானும் அந்தப் பதிவை இப்போது போய்ப் படித்தேன். என்னால் நம்ப முடியவில்லை. இந்தப் பதிவை எழுதியது நான்தானா என்று சந்தேகம் வந்து விட்டது.


எனக்கு சில சமயம் என்னை அறியாமல் சில மேதைத்தனமான கருத்துகள் தோன்றி விடும். இது சாதாரணமாக நடக்காது. அபூர்வமாக நடக்கும் ஒரு நிகழ்வு. அப்படிப்பட்ட சமயத்தில் இந்த பதிவை எழுதியிருப்பேன் போல இருக்கிறது.

தமிழ் இளங்கோ அவர்கள் இதைப் படித்தவுடன், "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பெரு நோக்கில் இந்தக் கருத்துகளைத் தொகுத்து என்னை ஒரு புத்தகமாக வெளியிடச்சொல்லி ஒரு அன்பு மடல் எழுதியிருக்கிறார்.

அதற்கு நானும் தனிப்பட்ட முறையில் ஒரு பதில் அனுப்பினேன். அப்புறம்தான் எனக்கு ஒரு யோசனை வந்தது. திரு தமிழ் இளங்கோ மாதிரி இன்னும் பல பதிவர்கள் என்னை ஒரு பெரிய மேதை என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட தவறான எண்ணங்களைப் போக்குவது என் கடமை என்று கருதுகிறேன்.

அதனால் தமிழ் இளங்கோவின் மடலையும் அதற்கு நான் எழுதின பதிலையும் இங்கே கொடுக்கிறேன். என்னைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் என்னை சரியாகப் புரிந்து கொள்ள இந்தக் கடிதம் பயன்படும் என்று நம்புகிறேன்.

தி.தமிழ் இளங்கோ உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்"வயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும்":

இன்று மீண்டும் இப்பதிவை படிக்க நேர்ந்தது. இதுபோன்ற உங்களது வாழ்வியல் சிந்தனை பதிவுகளை தொகுத்து ஒரு புத்தகமாக வரும் வலைப்பதிவர் திருவிழாவில் புதுக்கோட்டையில் வெளியிட்டால் என்ன? (அதிகம் அச்சடித்து கையை சுட்டுக் கொள்ள வேண்டியதில்லை. சிக்கன முறைகளை கரந்தை ஜெயக்குமாரிடம் கேட்டால் சொல்லுவார்)

வெளியிடு
நீக்கு
ஸ்பேம் என குறி

இந்த வலைப்பதிவின் கருத்துரைகளை மதிப்பாய்வு செய்க

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 9:03:00 முற்பகல் IST அன்று மனஅலைகள் இல் தி.தமிழ் இளங்கோ ஆல் உள்ளிடப்பட்டது

DrPKandaswamyPhD drpkandaswamy1935@gmail.com

9:45 AM (0 minutes ago)
to தி.தமிழ்
அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ அவர்களுக்கு,
உங்கள் அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி.

என் முக்கிய குணத்தைப் பற்றி சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் சரித்திரத்திற்காக சொல்லித்தானாக வேண்டும். நான் ஒரு வாழைப்பழ சோம்பேறி. ஏதோ என் மண்டைக்குள் களிமண் அதிகம் இல்லாததினால் பெரிய சாதனையாளன் மாதிரி உலகிற்கு ஒரு பாவ்லா காட்டிக்கொண்டு வாழ்ந்து வருகிறேன். அவ்வளவுதான். நான் ஒரு மேதை அல்ல. மூளை மட்டும் எப்போதாவது சில சமயம் சுறுசுறுப்பாக வேலை செய்யும். மற்ற சமயங்களில் நன்றாக குறட்டை விட்டுத் தூங்கும்.

புத்தகம் எழுதி, அதை அச்சிட ஏற்பாடுகள் பண்ணி, அதை புரூப் பார்த்து, புத்தகங்கள் வந்தவுடன் அதை வீட்டில் வைத்துப் பாதுகாத்து (வீட்டுக்காரி தினமும் அவைகளைப் பார்த்து முணுமுணுப்பாள்) அதை வருகிறவர் போகிறவர்களுக்கெல்லாம் கொடுத்து, ஐயா, எனக்கு வேண்டாம் இந்த புத்தகம் போடும் வேலையும் அதனால் வரக்கூடிய புகழும்.

ஒரு நல்ல பைஃவ் ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு ஓரு வாரம் நன்றாகச் சாப்பிட்டு (சோமபானம் உட்பட) தூங்கச் சொல்கிறீர்களா? இப்பவே ரெடி. இந்தப் புத்தகம் போடற வேலையெல்லாம் வேண்டாங்க. அதுக்குன்னு சில ஆட்கள் இருக்கிறார்கள். அது அவர்கள் வேலை. அவர்கள் செய்யட்டும். எனக்கு அது ஒத்துக் கொள்ளாது.

அன்புள்ள,
பழனி. கந்தசாமி

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

தமிழ் விக்கிபீடியா - கையைச் சுட்டுக்கொண்டேன்.

Kanags விக்கிப்பீடியாஇல் உங்களுக்கு ஒரு புதிய செய்தியினை விட்டுச்சென்றுள்ளார்

அனுப்புனர் : விக்கிப்பீடியா wiki@wikimedia.org

கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்[தொகு]

Stop hand nuvola.svg
வணக்கம்பழனி.கந்தசாமி!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்றுஎன்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.

புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.

ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

என்னுடைய கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட சுட்டிக்குப் போகவும்.
http://swamysmusings.blogspot.com/2011/08/1.html

தமிழ் விக்கிபீடியா

                                             Image result for தமிழ் விக்கிபீடியா

விக்கிபீடியா என்ற சொல்லை அன்பர்கள் கேளவிப் பட்டிருக்கலாம். இது ஒரு கலைக் களஞ்சியம். இது பல வருடங்களாக ஆங்கிலத்தில் இருக்கிறது. இதில் கிடைக்காத விவரங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு விளக்கமான கட்டுரைகள் இருக்கின்றன. சமீப வருடங்களில் தமிழிலும் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது நாள் வரை நான் இதை எப்போதாவது உபயோகித்து வந்திருக்கிறேனே தவிர இதில் கட்டுரை எல்லாம் எழுதியதில்லை. பதிவர் முனைவர் ஜம்புலிங்கம் இதைப் பற்றி இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பதிவு போட்டிருக்கிறார். விக்கிபீடியாவில் பயனராகி அதில் கட்டுரைகள் எழுதிவது எப்படி என்று விளக்கங்கள் அளித்திருக்கிறார்.

பல பதிவர்கள் அதில் தாங்களும் சேர்வதாகப் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்கள். நான் இன்னும் ஒரு படி மேலே சென்று இந்த தமிழ் விக்கிபீடியாவில் பயனராக இணைந்து ஒரு கட்டுரையையும் அதில் பதிந்து விட்டேன். (இந்த மாதிரி அவசரங்களுக்குத் தேவைப் படும் என்று சில கட்டுரைகளை கைவசம் வைத்திருப்பேன்)

இதன் தொடர்பு: https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D&redirect=no

முடிந்தவர்கள் சென்று பார்க்கவும்.

 பதிவர் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் கடிதத்தைப் பாருங்கள்.

அன்புடையீர், 
வணக்கம்.
தமிழ் விக்கிபீடியாவில் அண்மையில் 200ஆவது பதிவினை (article) நிறைவு செய்ததை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டபோது, வலைப்பூ நண்பர்கள் தமிழ் விக்கிபீடியாவில் எழுதும் முறையைப் பற்றி ஒரு பதிவினைப் பதியும்படிக் கேட்டிருந்தனர். எனது அனுபவத்தில் நான் கற்றவற்றைப் பகிர்கிறேன். இன்னும் பல நான் கற்கும் நிலையில் உள்ளேன். இப்பதிவில் விக்கிபீடியாவில் பயனராவதைப் (User) பற்றி அறிவோம். பயனராவோம். வாருங்கள்.
அன்புடன்,ஜம்புலிங்கம்
இணைப்பு : 


பதிவுகள் எழுதினால் அதற்கு உடனேயே கருத்துகள்  வந்து விடும். அப்படியேதான் முகநூல், ட்விட்டர் போன்றவைகளும். ஆனால் விக்கிபீடியாவில் எழுதினால் அதை யாராவது படித்தார்களா இல்லையா என்கிற விவரங்கள் நமக்கு உடனடியாகத் தெரியாது. அது ஒன்றே இதில் உள்ள குறைபாடு. 

நாம் விக்கிபீடியாவில் எழுதுகிறோமோ இல்லையோ, அதை பல விவரங்கள் சேகரிப்பதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். என் மாதிரி பதிவர்கள் பதிவுகளுக்கு விசயம் இல்லையென்றால் உடனே இங்கு சென்று ஏதாவது ஒரு கட்டுரையை காப்பி பேஸ்ட் செய்து ஒரு பதிவை உடனடியாகத் தேத்திக்கொள்ளலாம். பதிவுலகில் சிலர், ஐயோ, என் பதிவைக் காப்பி அடிச்சிட்டான் என்கிற மாதிரி இந்த விக்கிபீடியாவில் யாரும் புலம்ப மாட்டார்கள். அது ஒரு பெரிய சௌகரியமல்லவா?

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

பசித்தவன் பழங்கணக்கு பார்த்தானாம்

                                            

சில நாட்கள் முன்பு பிரபல பதிவர் திரு. வை கோபாலகிருஷணன் ஒரு சிறுகதை விமரிசனப்போட்டி வைத்தது எல்லோரும் அறிந்ததே. சிறுகதைகளுக்கு விமரிசனம் எழுதுவது என்பது சிறுகதை எழுதுவதை விடக் கடினமானது என்பதை இந்தப் போட்டியில் பங்கு பெற்றபோதுதான் அறிந்தேன்.

நான் சிறுகதைகளை ஆவலுடன் படிப்பேன். சில சமயம் இந்த எழுத்தாளர்கள் எப்படி துளியூண்டு கருவை வைத்துக்கொண்டு இம்மாம் பெரிய கதைகளை எழுதுகிறார்கள் என்று ஆச்சரியப்பட்டுக் கொள்வேன்.

திரு வைகோ அவர்கள் வைத்த 40 சிறுகதை விமரிசனப் போட்டியில் எல்லாவற்றிலும் கலந்து கொண்டேன். ஒரே ஒரு மூன்றாம் பரிசும் ஒரு ஆறுதல் பரிசும் மட்டுமே கிடைத்தன. இருந்தாலும் போட்டியில் கலந்து கொண்டேன் என்ற மனத்திருப்தி கிடைத்தது. நான் எழுதின விமரிசனங்கள் சிலவற்றை சில காலம் முன்பு இந்தத் தளத்தில் வெளியிட்டேன். பிறகு ஏனோ பல காரணங்களால் நின்று விட்டது.

இப்போது தொடர்ந்து அந்த விமரிசனங்களை வெளியிடப்போகிறேன். அதற்கு என்ன திடீர் என்று ஞானோதயம் வந்து விட்டது என்று கேட்பவர்களுக்காக இந்த பதில். ஞானோதயம் ஒன்றும் வரவில்லை. பதிவு எழுத விஷயம் இல்லை. அதனால் பழைய சோற்றை சூடாக்கிக் கொடுக்கிறேன். அவ்வளவுதான்.

இந்த விமரிசனத்திற்கு உண்டான கதை வைகோவின் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

VGK 17 - சூ ழ் நி லை

விமர்சனம்.

மனிதர்கள் அனைவரும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களே. அதுவும் போனில் பேசம்போது எதிர்பக்கத்திலிருந்து வரும் செய்திக்கேற்ப உணர்ச்சிகளை காட்டாமலிருப்பவர்கள் அபூர்வம்.

அப்படிப்பட்ட ஒரு மனிதரை நமக்கு படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் திரு. வைகோ அவர்கள். அலங்காரத்திற்காக இரண்டு உப-பாத்திரங்கள். மனவியும் மகளும். ஆனால் அவர்கள் இந்த மனிதருடன் பல காலம் பழகியும் இவருடைய அந்தரங்கத்தை படிக்கவில்லையே என்பது கதையின் ஒரு குறை.

கடைசியில் சிக்கல்கள் தீர்ந்து கதை சுபமாய் முடிவது மனதிற்கு சந்தோஷத்தைத் தருகிறது. மணப்பெண் ஜெயா சகல சௌபாக்கியங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ மனதிற்குள் வாழ்த்துகிறோம்.


சனி, 8 ஆகஸ்ட், 2015

ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயசு



இந்த வசனத்தை கிராமங்களில் உள்ள வயசானவர்கள் அடிக்கடி சொல்வார்கள். ஏனென்றால் இந்த வயசில் உள்ளவர்கள் எந்த விளைவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் காரியங்கள் செய்வார்கள்.

அது என்ன வயசு என்று கேட்கிறீர்களா? 16 முதல் 22 வரையிலான வயசுதான் ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயசு.

செய்தித் தாள்களில் இப்போது இருவகையான விபத்துகள் அடிக்கடி வருகின்றன. ஒன்று இருசக்கர வாகனங்களின் விபத்து. இன்னொன்று தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களைப் பற்றிய செய்தி.

இந்த இருவகை விபத்துகளிலும் உயிரிழப்பவர்களின் வயதைப் பார்த்தால் இந்த ஒடுகிற பாம்பை மிதிக்கும் வயசாகத்தான் இருக்கிறது. விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் இவ்வாறு விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் இந்த இளைஞர்களுடைய பெற்றோரின் நிலை எப்படியிருக்கும்?

ஏன் இளைஞர்கள் இவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள்? ஆண்டவனுக்கே வெளிச்சம்.