தமிழ் கூறும் நல்லுலகில் ‘இன்டெர்நெட்’ என்னும் கணினி வசதி வந்தவுடன் எழுத்தார்வமிக்க இளைஞர், முதியோர், மகளிர், சிறார் என்று பலரும் தங்களின் பொங்கி வரும் கற்பனைப்படைப்புகளை வலைப்பதிவில் பதிய ஆரம்பித்து விட்டார்கள். பாரதி சொன்னதுபோல் ‘’சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கொணர்ந்திடுவீர் செல்வமனைத்தும்’’ என்ற கொள்கைப்படி பல பல செய்திகளைக்கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.
இவர்கள் அனைவரும் தமிழ் மொழியை எப்பாடு பட்டாவது முன்னேற்றியே தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாடு படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த முயற்சியிலே அவர்கள் ஈடுபடும்போது நாம் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டாமா? அதற்காகவே இந்த பதிவு.
ஒரு மொழி எவ்வாறு வளர்கிறது? ஆங்கில மொழி ஒரு நல்ல உதாரணமாக இருக்கும். எந்த மொழியிலிருந்து வேண்டுமானாலும் சொற்களை தங்கள் மொழியில் சேர்த்துக்கொள்வார்கள். எந்தப்பாகுபாடும் இல்லை. தமிழிலிருந்து கூட பல சொற்கள் ஆங்கிலத்திலே இருக்கின்றன. அவை ஆங்கில அகராதியிலும் கூட சேர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் இப்போது உலகப்பொது மொழியாக இருக்கிறது.
ஆனால் பிரஞ்சு மொழியைப்பாருங்கள். அவர்கள் மிகுந்த தன்மானம் உள்ளவர்கள் (தமிழர்களைப்போல). வேற்று மொழி சொற்கள் ஒன்று கூட தங்கள் மொழியில் கலவாமல் வைத்திருக்கிறார்கள். தமிழர்களும் அப்படித்தான் இருந்தார்கள். செந்தமிழே எங்கள் மூச்சு என்றுதான் இருந்தோம். ஆனால் இந்த வலைப்பதிவுகள் வர ஆரம்பித்தவுடன் தமிழர்களுக்கு தமிழ் மொழியை எப்பாடு பட்டாவது வளர்த்து விடுவது என்ற முடிவில் இருக்கிறார்கள். ஆங்கிலத்தைப்போல் மற்ற மொழிகளில் இருந்து வார்த்தைகளைக்கொண்டு வரலாம். ஆனால் அதற்கு மற்ற மொழிகளில் புலமை வேண்டும். அதுதான் நம்மிடம் கிடையாதே? ஆகவே ஒரு சுலபமான வழியை கண்டு பிடித்திருக்கிறார்கள். அதாவது இப்போது இருக்கும் சொற்களையே மேம்படுத்துவது! எப்படி?
இப்போது வரும் சில விளம்பரங்களில் எழுத்துக்களை மாற்றிப்போட்டு இருப்பார்கள். பார்ப்பவர்கள் ‘என்னடா இவன் தப்பாக எழுதியிருக்கிறான்’ என்று நினைத்துக்கொண்டு போவார்கள். அதுதான் விளம்பர உத்தி. விளம்பரம் மக்கள் மனதில் பதியவேண்டும். அவ்வளவுதான்.
அது போல் நம் பதிவர்கள் தமிழை எப்படி முன்னேற்றுகிறார்கள் என்று பாருங்கள்.
என் உல்லம், தமில் வால்க, பயிர்ச்சி, மறு அழைப்பிதல்
ல,ள.ழ = இந்த மூன்றுக்கும் வேறுபாடு இல்லை.
ரகரமும் றகரமும் ஒன்றே
எப்படியோ தமில் வலர்ந்தால் சறிதான்! வால்க தமில், வளர்க தமிலன்!