வியாழன், 29 ஆகஸ்ட், 2013

நெதர்லாந்தில் என் அனுபவம்.


நான் ஒரு முறை ஸ்வீடன் சென்றிருந்தேன். நெதர்லாந்தில் "வேகனிங்கன்" என்கிற ஊரில் சர்வதேச மண் ஆராய்ச்சி நிலையம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஸ்வீடனில் உள்ள என் ஒருங்கிணைப்பாளரிடம் சொன்னதற்கு அவர் "அதற்கென்ன, ஏற்பாடு செய்துவிடலாம்" என்றார்.

இரண்டு நாளில் பதில் வந்து விட்டது. மொத்தம் நான்கு நாட்கள் நெதர்லாந்தில் இருப்பதாக புரொக்ராம். இரண்டு நாள் வேகனிங்கனிலும் இரண்டு நாள் ஆம்ஸ்டர்டாமிலும் புரொக்ராம். எப்படி போகவேண்டும், எங்கு தங்கவேண்டும் என்கிற விவரங்களெல்லாம் துல்லியமாக குறிப்பிட்டு ஒரு ஃபேக்ஸ் வந்தது.

நினைவுக்கு வந்த வரை அதை ஆங்கிலத்தில் அப்படியே தருகிறேன்.

After alighting from flight at Schipol Airport, walk to the aerodrome Railway Station. Take ticket to Amersfort. Change train at Central. Get down at Amersfort, take Bus No.21 and come to Wageningen. From Bus Station, you can see International Student Centre where a room is reserved for you. Come to Soil Centre next day at 9 AM.

மிகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் அந்த செய்தி இருந்தது. நான்கே வரிகள்தான். அதில் சொன்ன மாதிரியே ஏர்போர்ட்டில் இறங்கி ரயில் ஸடேஷன் போனேன். லக்கேஜை டிராலியில் வைத்துக்கொண்டு நடந்தே போய்விடலாம். அப்படி ரயில் ஸ்டேஷன் ஏர்போர்டை ஒட்டியே இருக்கிறது.

அந்த செய்தியில் சொன்ன மாதிரியே நான் போக வேண்டிய இடத்திற்குச் சென்று என் காரியத்தைக் கவனித்தேன்.

இதை எதற்காக இப்போது நினைவு கூர்ந்தேன் என்றால் வழி சொல்வது எப்படி சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

இரண்டாவது அங்குள்ள வழிகாட்டும் போர்டுகளும் தெளிவாக இருக்கின்றன. ஏரோப்ளேனில் இருந்து இறங்கியதிலிருந்து நான் தங்குமிடம் செல்லும் வரை யாரையும் வழி கேட்க வேண்டுய தேவையே ஏற்படவில்லை.



ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

சென்னை பதிவர் சந்திப்பு - ஒரு வேண்டுகோள்.

பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக நான் 1-9-2013 காலை ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்து சேர்கிறேன். என்னைப் போல் அன்று காலையில் பல பதிவர்கள் வரும் வாய்ப்பு இருக்கலாம்.

நான் ஒரு விஐபி யாக இருந்திருந்தால் என்னைக் கூட்டிக்கொண்டு போய் ஒரு தங்குமிடத்தில் தங்க வைத்து காலைக்கடன்களை முடித்த பின் டிபன் சாப்பிடவைத்து, சந்திப்பு நடக்குமிடத்திற்கு கூட்டிப்போய் விடுவதற்கு ஆட்கள் வருவார்கள். அப்படி ஒரு காலம் இருந்தது.

இன்று நான் அதைப்பற்றி கனவு கூடக் காண முடியாது. தேவையுமில்லை. ஆனாலும் பணத்தைக் கணக்குப் பார்க்காமல் சில ஆயிரங்கள் செலவு செய்தால் அந்த சௌகரியம் இன்றும் கிடைக்கும். அப்படி ஆயிரக்கணக்கில் செலவு செய்யக்கூடிய சூழ்நிலையில் நான் வளராததினால் இன்றும் அப்படி செலவு செய்ய மனம் வருவதில்லை. தவிர அப்படி செலவு செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் இல்லை.

ஆகையினால் எனக்கு வேண்டியது இரண்டே இரண்டு செய்திகள்தான். இந்தச் செய்திகள் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

1. சென்னை ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் முன்பு, அதாவது இருபது முப்பது வருடங்களுக்கு முன், குளிப்பதற்கு வெந்நீருடன் பாத்ரூம் கிடைக்கும் என்று வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள ஓட்டல்களில் போர்டுகள் தொங்கும். அன்று பத்து ரூபாய் வாங்குவார்கள். இன்று ஐம்பது அல்லது நூறு ரூபாய் கேட்பார்கள். அப்படிப்பட்ட வசதி இன்றும் இருக்கிறதா?

2. சென்னை சென்ட்ரலிலிருந்து வடபழனி வருவதற்கு டவுன் பஸ் நெம்பர் என்ன? (17ம் நெ. பஸ் என்று பழைய ஞாபகம்.)

சென்னைப் பதிவர்கள் யாராவது இந்த இரண்டு செய்திகளையும் கொடுத்தால் உதவியாயிருக்கும்.

நாங்கள் இங்கே ரூம் போட்டிருக்கிறோம், அங்கு வந்து விடவும் என்கிற மாதிரி விவரங்கள் வேண்டாம். நான் யாருக்கும் (என்னை உட்பட) சிரமம் கொடுக்க விரும்பவில்லை. இந்த விவரங்கள் இல்லாவிட்டாலும் சமாளிக்க முடியும் என்கிற தைரியம் இருக்கிறது. காலை 9 மணிக்கு டாண் என்று சந்திப்பு நடக்கும் இடத்திற்கு வந்து விடுவேன்.

இந்த விவரங்கள் என் தைரியத்தை இன்னும் கொஞ்சம் கூட்டும்.

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

புலம்பல் எங்களது பிறப்புரிமை.


வீட்டில் வயதானவர்கள் இருந்தால் நீங்கள் இதை அனுபவித்திருப்பீர்கள். "அந்தக் காலத்தில ரூபாய்க்கு மூன்று படி அரிசி வித்தப்போ" என்று ஆரம்பித்தால் நான்-ஸ்டாப்பாக மூன்று மணி நேரம் அந்த பிரசங்கம் ஓடும்.

வயதானவர்கள் மட்டும்தான் புலம்புகிறார்கள். இளம் வயதில் புலம்புவர்கள் மிகவும் அரிது. ஏன் இப்படி வயதானவர்கள் மட்டும் புலம்புகிறார்கள் என்று (எனக்கும் வயதாகிவிட்டதால்) ஒரு ஆராய்ச்சி செய்தேன். அதில் கண்டு பிடித்த உண்மைகளை உங்களுக்குச் சொல்லாவிட்டால் என் தலை வெடித்து விடும்போல் இருக்கிறது. அதனால் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமெல்லாம் என்ற தத்துவப்படி உங்களையும் வாதிக்கிறேன்.

இளம் வயதுக்காரர்கள் ஏதாவது ஒரு வேலையில் இருப்பார்கள். தவிர குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பும் இருக்கும். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு வேறு எதிலும் சிந்தனை இருக்காது.

வயதாகி ரிடையர் ஆகி வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மனது வேலை செய்து கொண்டேயிருக்கும். அப்போது பேசுவதற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். மனதின் எண்ணங்களை செயல்படுத்தும் தென்பும் போயிருக்கும். வாய் மட்டும் வேலை செய்யும். அப்போது நிகழ்வதுதான் இந்தப் புலம்பல்.

மனதின் எண்ண ஓட்டங்களை வாய் வழியாக வெளியில் வருகின்றன. மற்றவர்கள் இதைக்கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, இந்தப் புலம்பல் நடந்துகொண்டே இருக்கும்.

இரண்டாவது, அவர்கள் சொல்வதைக் கேட்க யாரும் முன் வருவதில்லை. எனக்கு எவ்வளவு அனுபவம் இருக்கிறது. ஒரு பயலும் என்னிடம் யோசனை கேட்க மாட்டேன் என்கிறானே என்பதுதான் பெரும்பாலானவர்களின் புலம்பலாக இருக்கும். காலம் மாறி விட்டது. அவர்களின் பழைய கால அனுபவம் இந்த அவசர யுகத்திற்குப் பொருந்தாது என்பதை அவர்கள் உணர மறுப்பதுதான் இந்தப் புலம்பலுக்கு காரணம்.

இன்று மூன்று வயதுக் குழந்தை இன்டர்நெட்டில் விளையாடுகிறது. செல் போன் பேசுகிறது. விமானத்தில் பயணிக்கிறது. இந்த கிழங்கள் எல்லாம் தங்கள் இளம் வயதில் விமானம் பறப்பதை வாயில் ஈ புகுவது தெரியாமல் வேடிக்கை பார்த்த கேஸ்கள். பேரன் விமானத்தில் போனதைப் பற்றிப் பேசினால், ஆஹா, நாங்கள் பார்க்காத விமானமா, ராமன் காலத்திலேயே புஷ்பக விமானம் இருந்ததாக்கும் என்று ஆரம்பிப்பார்கள். பேரன் அப்போதே ஓடிப்போய் விட்டிருப்பான். ஆனாலும் இவர்கள் அவன் முன்னால் இருப்பதாகப் பாவித்துக் கொண்டு தங்கள் பிரலாபத்தை இரண்டு மணி நேரம் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்.

இந்தக் கேஸ்களை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் காலத்தில் கிராமபோன் மெஷினில் ரெக்கார்டைப் போட்ட மாதிரி, நான் ஸ்டாப்பாக இவர்கள் புலம்பல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். காதில் விழாத மாதிரி எல்லோரும் அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

டாக்சியென்றால் எனக்குப் பயம் ?


உலகம் முழுவதும் உள்ள டாக்சிக்காரர்களின் (ஆட்டோக்காரர்களும் இதில் சேர்த்திதான்) பொதுவான ஒரு குணம் என்னவென்றால் நீங்கள் போகவேண்டிய இடத்திற்கு எவ்வளவு சுற்ற முடியுமோ அவ்வளவு சுற்றித்தான் போவார்கள். உங்களை எப்படி எல்லாம் ஏமாற்ற முடியும் என்பது அவர்களுக்கு கைவந்த கலை. நீங்கள் எப்பேர்ப்பட்ட ஜகஜாலக் கொம்பனானாலும் உங்கள் கண்ணில் மிளகாய்ப்பொடி போட அவர்களுக்குத் தெரியும்.

இதை இரண்டொரு தடவை நேரடியாக அனுபவித்ததின் பலன்தான் எனக்கு டாக்சிக்காரர்களின் பேரில் ஏற்பட்ட பயம். அவர்களுடைய அனுபவத்தின் காரணமாக ஊருக்குப் புதியவர்களை உடனே இனம் கண்டு கொள்வார்கள். நாம் போக வேண்டிய இடம் பக்கத்தில் இருந்தால் "அங்க எல்லாம் நம்ம வண்டி வராது சார்" என்பார்கள்.

ஒரு டாக்சிக்காரனிடம் பேரம் பேசி படியாவிட்டால், அடுத்து இருக்கும் எல்லா டாக்சிக்காரன்களும் முதல் டாக்சிக்காரன் எவ்வளவு கேட்டான் என்பார்கள். நாம் உண்மையைத்தானே சொல்வோம். இளிச்சவாயனுக்கு அதுதானே அடையாளம். அந்த இரண்டாவது டாக்சிக்காரன் முதல் டாக்சிக்காரன் கேட்டதை விட அதிகம் கேட்பான். என்னப்பா, முதல் டாக்சிக்காரனை விட அதிகம் கேட்கிறாயே என்றால், அப்போ அந்த டாக்சியிலேயே போங்கள் என்று சொல்வான்.

இது டாக்சிக்காரர்களிடையே எழுதப்படாத ஒப்பந்தம். ஒரு டாக்சிக்காரனிடம் நீங்கள் பேசி விட்டால் அடுத்த டாக்சிக்காரன் ஒருவனும் உங்களுக்கு வரமாட்டான். சில இடங்களில் இந்த டாக்சிக்காரன்கள் புரோக்கர் வைத்திருப்பார்கள். அவர்கள் நம்மிடம் நைசாகப் பேசி ஒரு ஓட்டை டாக்சிக்குக் கூட்டிப்போவான். இவர்களிடம் சிக்கினால் மீளமுடியாது.

எப்படியோ ஒரு டாக்சியில் பேசி ஏறி விட்டீர்களானால் அவன் தன் இஷ்டத்திற்குத்தான் சுற்றிக்கொண்டு போவான். நீங்கள் ஓரிரு தடவை அங்கு சென்ற பழக்கத்தினால் இந்த வழியில் போகலாமே என்றால் சார், அந்த ரோட்டை மெட்ரோவிற்காக தோண்டிப் போட்டிருக்கிறார்கள் சார் என்பான். எப்படியோ நீங்கள் போகவேண்டிய இடத்திற்கு வந்த பிறகு மீட்டரைப் பார்த்தால் வழக்கமாக ஆவதைப் போன்று இரண்டு மடங்கு ஆகியிருக்கும். பேசாமல் கோடுத்தீர்களானால் தப்பித்தீர்கள். இல்லாவிட்டால் சென்னை பாஷையில் அர்ச்சனை வாங்கவேண்டி இருக்கும்.

கோயமுத்தூரில் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கையாளும் விதமே தனி. ரயில்வே ஸ்டேஷனில் எப்படியோ பேரம் படிந்து ஏறிவிடுவார்கள். அவர்கள் கையில் அவர்கள் போகவேண்டிய இடத்தின் விலாசம் தெளிவாக இருக்கும். ஆனால் இந்த ஆட்டோ டிரைவர் முக்கால்வாசி தூரம் வந்த பிறகு அவன் அந்த ஊருக்கே புதிசு மாதிரி டிராமா போடுவான். போகவேண்டிய இடத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தாண்டிப்போய் ரோட்டில் போகும் யாராவது இடம் விசாரிப்பான். அந்த இடம் மிகவும் பிரபலமான இடமாயிருக்கும். ஆனால் அவன் ஒன்றும் தெரியாதமாதிரி கமுக்கமாக இருப்பான்.

இப்படி அவர்களை தெற்கும் வடக்குமாக அலைக் கழித்து கடைசியில் அவர்களைக் கொண்டு போய் சேரவேண்டுய விலாசத்தில் சேர்த்துவான். வந்தவர்களும் ஆஹா, டிரைவர் எவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டார் என்று உருகிப்போய் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விடுவார்கள்.

நான் எந்த ஊருக்குப் போவதாயிருந்தாலும் அந்த ஊரிலுள்ள டவுன் பஸ் ரூட்களை நன்கு விசாரித்து அறிந்து கொள்வேன். மும்பாய், டில்லி, கல்கத்தா, பெங்களூர் ஆகிய நகரங்களில் ஏர் போர்ட்டிலிருந்து டவுன் வரைக்கும் வர பஸ் ரூட்கள் நன்கு தெரியும். இது வரை அங்கெல்லாம் நான் டாக்சி வைத்ததே கிடையாது. பஸ்சில்தான் போவேன். டவுனுக்குள் வந்த பிறகு போகவேண்டிய இடத்திற்கு ஆட்டோ வைத்துக் கொள்வேன்.

உலக முழுவதும் உள்ள டாக்சிக்காரர்கள் ஒரே மாதிரி இருப்பதுதான் எட்டாவது உலக அதிசயம்.

சனி, 10 ஆகஸ்ட், 2013

இந்தியாவின் எதிர்காலம்


அவர்கள் -உண்மைகள் பதிவின் ஆசிரியர் "இந்தியாவின் எதிர்காலம்" என்பதைப் பற்றி என் கருத்துகளைக் கேட்டார்.
http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post_7219.html

என்னுடைய அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பிறந்தவன் என்கிற நிலையில் நான் இந்திய நாட்டின் வளர்ச்சியை பார்த்துக்கொண்டு வருகிறேன்.

இந்தியா சுதந்திரம் வாங்கியபோது இருந்த ஜனத்தொகை 33 கோடி. இன்று இருப்பது 120 கோடி. ஜனத்தொகை குறைவாக இருந்த காலத்தில் உணவுப் பஞ்சம் அவ்வப்போது இருந்து கொண்டிருந்தது. கடைசியாக வந்த உணவுப் பஞ்சம் 1943 ம் வருடம் என்று நினைக்கிறேன். அதற்குப்பிறகு ஜனத்தொகை பலமடங்கு பெருகியிருந்த போதிலும் உணவுப் பஞ்சம் ஏற்படவில்லை.

இது விவசாயத்துறையில் ஏற்பட்ட மகத்தான புரட்சி. அதே போல் தொழில் துறையிலும் மகத்தான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. சுதந்திரம் கிடைத்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நம் நாட்டில் இருந்த கார்கள் இரண்டேதான், பியட் மற்றும் அம்பாசிடர் மட்டும்தான். இன்று எத்தனை வகை கார்கள், மற்ற கனரக வாகனங்கள், சிறு சரக்கு வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என்று அந்த துறையிலேயே இருப்பவர்களுக்கு கூட சரியாகத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

ஆடை உலகிலே நாட்டில் பெரும் புரட்சியே நிகழ்ந்திருக்கிறது என்று சொல்லலாம். பருத்தியிலிருந்து நூல் நூற்பதிலிருந்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாவது வரை, நடந்துள்ள மாற்றங்கள் மிகவும் வியக்கத்தக்கதாகும்.

இவ்வாறே கல்வி, மருத்துவம், போக்குவரத்து, சாலைகள் ஆகியவைகளும் பன்மடங்கு முன்னேற்றமடைந்துள்ளன. தொலை தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அபரிமிதமானதாகும்.

தனி மனிதனின் பொருளாதார வசதிகள் பன் மடங்கு பெருகியிருக்கின்றன. நல்ல வீடு, நல்ல துணிகள், வாகன வசதி என்று ஒவ்வொருவரும் முன்னேறியிருக்கிறார்கள். ஜனத்தொகை இன்று பலமடங்கு பெருகியிருந்த போதிலும் அத்தனை பேருக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஆள் தேவை என்ற அறிவிப்புப் பலகை தென்படுகிறது.

இந்த மாற்றங்களெல்லாம் நாடு முன்னேறுவதைக் குறித்தாலும் சில எதிர்மறை சக்திகள் இந்தியா வல்லரசாகும் வாய்ப்பைத் தடுக்கின்றன.

அதில் முதலிடம் வகிப்பது இந்நாட்டின் அரசியல். இதைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே போகலாம். எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்வதால் ஒரு பயனும் இல்லை.

அடுத்தது ஊழல். இதற்கு முன்னோடிகள் யாரென்று தனியாகச் சொல்லவேண்டிதில்லை.

கடைசியாக மக்களின் ஒழுக்கம். இது சீர்கெட்டு வருவதை அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கிறோம். இந்திய மக்களுக்கு என்று எந்த வித ஒழுக்க அடையாளங்களையும் என்று சுட்டிக்காட்ட முடியவில்லை.

இந்த மூன்று குறைகள் மட்டும் இல்லாதிருந்தால் இந்தியா என்றோ வல்லரசு வரிசையில் சேர்ந்திருக்கும். இந்தக் குறைகள் இருந்தாலும் நம் நாடு முன்னேறிக்கொண்டு இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். இந்தியாவின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

பிரபல பதிவர் ஆக ஏழு வழிகள்.

நீங்கள் புதிதாகப் பதிவு எழுத வந்திருக்கிறீர்களா? பதிவுலகில் நீங்கள் பிரபல பதிவர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? மேலே படியுங்கள்.

நீங்கள் பிரபல பதிவர் ஆவதற்கு எனக்குத் தெரிந்த சில வழிகள் கொடுத்திருக்கிறேன். வடிவேலு சொன்ன மாதிரி "நானும் ரவுடிதான்" என்கிற மாதிரி பதிவுலகில் பிரகாசிக்க இவை உதவும். ரிசல்ட்டுக்கு உத்திரவாதம் உண்டு. பதிவுலகில் பிரபலம் ஆகி என்ன செய்யப் போகிறேன் என்று கேட்பவர்கள் இந்தப் பதிவைப் படிப்பதால் பயனில்லை.

1. பதிவு எப்படியிருந்தாலும் அதன் தலைப்பு        அட்டகாசமாக இருக்கவேண்டும்.
பதிவைப் படிக்க வருபவர்கள் பதிவின் தலைப்பைப் பார்த்துத்தான் வருகிறார்கள். தலைப்பு அவர்களுக்குப் பிடித்திருக்கவேண்டும். அவர்களை சுண்டி இழுக்கவேண்டும். தெருவில் போகும் ஒரு பெண்ணிடம் ஒருவன் நகையை பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டான் என்று வைத்துக்கொள்ளுங்கள். "பெண்ணிடம் நகை திருட்டு" என்று தலைப்பு வைத்தால் எத்தனை பேர் உங்கள் பதிவைப் படிக்க வருவார்கள்?

"தெருவில் இளம் பெண்ணிடம் அத்து மீறல்" என்று தலைப்பு வையுங்கள். அப்புறம் பாருங்கள். ஹிட்ஸ் அள்ளிக்கொண்டு போகும்.


2. பதிவு எழுதும் டாபிக் மிகவும் முக்கியம். 

தலித் மற்றும் வன்னியர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இதில் முன்னுரிமை பெறுகின்றன. இந்த விஷயம் சாகாவரம் பெற்ற விஷயம். தமிழன் இருக்கும் வரை இது உயிருடன் இருக்கும். அவர்களை சாதி வெறியர்கள் என்று குற்றம் சாட்டி எழுதவேண்டும். ஒரு பதிவில் வன்னியர்களைத் திட்ட வேண்டும். அடித்த பதிவில் தலித்துகளைத் திட்டவேண்டும்.

3. அடுத்து தமிழீழம்.

இதுவும் ஒரு சாகாவரம் பெற்ற சப்ஜெக்ட். ஏனென்றால் தமிழீழம் எப்போதும் வரப்போவதில்லை. இதை மட்டும் சொன்னாலே போதும். பின்னூட்டங்களில் உங்களை திட்டு திட்டென்று திட்டுவார்கள். அவைகளைப் படிக்காதீர்கள். சும்மா பப்ளிஷ் பண்ணிவிட்டு வேறு வேலையைப் பாருங்கள்.

மாத த்திற்கு ஒரு முறை இந்தப் பதிவுகள் வெளிவரவேண்டும்.

4. அரசியல் தலைவர்கள், சினிமா நடிகைகள், பதிவர்கள் இவர்களின் தனிப்பட்ட கசாமுசா விஷயங்கள்.

மனிதனுக்கு எப்பொழுதும் அடுத்தவர்களுடைய அந்தரங்கங்களைத் தெரிந்து கொள்வது என்பது இரத்தத்தில் ஊறியுள்ள ஒரு குணம். ஒரு சினிமா நடிகை ஒரு நடிகனுடன் ஐந்து நிமிடம் பேசி விட்டால் போதும். அதற்கு கண், காது, மூக்கு எல்லோம் வைத்து ஒரு கதை கட்டி விடுவார்கள். இத்தகைய செய்திகளுக்குத்தான் இன்று மார்க்கெட் இருக்கிறது.

வாரப் பத்திரிக்கைகள் அனைத்தும் இத்தகைய செய்திகளை வைத்துத்தான் தங்கள் பிழைப்பை ஓட்டிக்கொண்டு இருக்கின்றன.

"ஜில்ஜில் ரமாமணி இன்று ...?' அப்படீன்னு ஒரு தலைப்பு வைத்துப்பாருங்கள்! உங்கள் பதிவின் ஹிட்ஸ் எங்கேயோ போய்விடும். மேட்டர், ஜில்ஜில் ரமாமணி இன்று சாப்பிட்டாள் அப்படீன்னு இருந்தாப்போதும்.

5. அரசியல் ஆரூடங்கள்

அரசியலில் பதிவுகள் போட அன்றாடம் எவ்வளவோ விஷயங்கள் கிடைக்கும். அன்றைய தினத்தந்தியைப் பாருங்கள். முதல் பக்கத்தில் என்ன செய்தி வந்திருக்கிறதோ அதை அப்படியே பதியுங்கள். கடைசியில் ஒரு பாரா உங்கள் கருத்துகளை சொல்லி பதிவை முடித்து விடுங்கள். உங்கள் கருத்து கொஞ்சம் ஏறுமாறாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.


6. பெண்களை மட்டம் தட்டும் பதிவுகள். 

காதலாவது கத்தரிக்காயாவது அப்படீன்னு இன்றைய காதலை ஒரு பிடி பிடியுங்கள். சரமாரியாக பின்னூட்டங்கள் வரும். அடுத்த பதிவில் காதலைப் போன்று புனிதமானது உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்று ஒரு பதிவு போடுங்கள்.

7. அடுத்து மாணவர்களைப் பற்றி

மாணவர்கள் ஏதாவது போராட்டம் நடத்தினால் அதைப்பற்றி உடனே பதிவு போட்டு விடுங்கள். இந்தக்காலத்து மாணவர்களுக்கு பொறுப்பே கிடையாது என்று எழுதினால் போதும். உங்களை அனைவரும் (மாணவர்களைத்தவிர மற்றவர்கள்- உங்கள் பதிவை எந்த மாணவனும் படிக்கப்போவதில்லை.) பிலுபிலு வென்று பிடித்து உலுக்குவார்கள்.

கடைசியாக முக்கிய குறிப்பு

 உங்கள் தோல் தடிப்பாக, எருமைத்தோல் மாதிரி இருக்கவேண்டும். பின்னூட்டங்களில் உங்களை வாய்க்கு வந்த படியும் வாயில் வராதபடியும் அர்ச்சனை செய்வார்கள். அத்தனையையும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்.

இன்னும் பல வழிகள் இருக்கலாம். இந்த யுத்திகளெல்லாம் என்னால் நேரடியாக சோதித்து அறிந்த அரிய உண்மைகள். ரிசல்ட்டுக்கு உத்திரவாதம் தருகிறேன். அதனால் அவைகளை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன். மற்ற வழிகளை பிற பதிவுகளுக்குப்போய் அறிந்து கொள்ளவும்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ரூபாய் நோட்டுகள் குட்டி போடும் அதிசயம்


தெனாலிராமன் கதைகளில் பாத்திரங்கள் குட்டி போட்டதை நீங்கள் அறிவீர்கள். அந்த கதையை மிஞ்சிய ஒன்று இந்திய ரிசர்வ் பேங்கில் நடந்திருக்கிறது.

இன்றைய டைம்ஸ் ஆப் இண்டியா பேப்பரில் வந்த செய்தி. ரிசர்வ் பேங்க் கஜானாவில் பிரஸ்சில் அச்சடித்த ரூபாய் நோட்டுகளை விட அதிகமாக இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த மாதிரி ரூபாய் நோட்டுகள் கஜானாவில் குடித்தனம் நடத்தி குழந்தைகள் பெறுவதை வேறு எந்த நாட்டிலாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?