திங்கள், 17 பிப்ரவரி, 2014

பேங்கில் பணம் போடும் இதர (நேர்) வழிகள் - பாகம் 4


இது வரை ரொக்கமாக அல்லது செக்/டிராப்ட் மூலமாக உங்கள் கணக்கில் பணம் செலுத்துவது எப்படி என்று பார்த்தோம். இதுதான் பழைய காலத்திலிருந்து வரும் பாரம்பரிய முறை. சிக்கலில்லாதது. நேரடி முறை. நம் கண்ணுக்கு முன்னால் நடப்பது. இதற்கு அதிகார பூர்வமான அத்தாட்சிகள் வைத்துக்கொள்ளலாம். பத்து வருடங்கள் கழித்து கூட ஏதாவது சந்தேகம் வந்தால் இந்த அத்தாட்சிகள் மூலமாக அவைகளை சரி பார்க்கலாம்.

ஆனால் தற்போது கலி முற்றிக்கொண்டு வருகிறது. அதற்கேற்றார்ப்போல பல கலியுக சமாச்சாரங்களும் பேங்கில் புகுந்துள்ளன. அவைகளில் முக்கியமானது இன்டர்நெட் பேங்கிங்க் என்ற மாயப்பிசாசு. "பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு" என்ற பட்டினத்தார் பாடலை அறிந்திருப்பீர்கள். அறிந்திராதவர்களுக்காக லிங்க் கொடுத்திருக்கிறேன்.

"இன்டர்நெட்" அல்லது வெறும் "நெட்" அல்லது தூய தமிழில் "இணையம்" என்று அழைக்கப்படும் கம்ப்யூட்டர் உத்தியை  அனைவரும் அறிவீர்கள். ஏறக்குறைய பேங்க் நடவடிக்கைகள் அனைத்தும் இதன் மூலமாகத்தான் தற்போது நடக்கின்றன. எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் நடந்து விடும். இது எல்லோருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லாம்..

குறிப்பாக பேங்க் திருடர்களுக்கு. முன் போல் கடப்பாரை, மம்முட்டி (கேரள சினிமா நடிகர் அல்ல) + கூட்டாளிகளுடன்/அல்லது துப்பாக்கி, கத்தி சகிதம் பேங்க்கிற்குப் போய் கொள்ளையடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கம்ப்யூட்டரும் இணைய இணைப்பும்தான். அவர்கள் வீட்டிலிருந்தவாறே, படுக்கையில் படுத்துக் கொண்டே சௌகரியமாகத் திருடலாம்.

இந்த வம்பெல்லாம் நமக்கு வேண்டாம். இணையத்தின் மூலமாக நாம் செய்யக்கூடிய சட்த்திற்குட்பட்ட காரியங்களைப் பார்ப்போம்.

இன்டர்நெட் பேங்கிங்க் வசதி வாங்குவதற்கு முன் ஒருவர் நன்றாக யோசித்து முடிவு செய்யவேண்டும். வீட்டில் ஒரு நல்ல கம்ப்யூட்டர் வேண்டும். நெட் வசதி வேண்டும். (பிராட் பேண்ட் ஆக இருந்தால் நல்லது) இந்த சாதனங்களை நன்கு பயன்படுத்தும் அனுபவம் வேண்டும். இவை இல்லாமல் நெட் பேங்கிங்க் வசதி பெறுவது வீண் வம்பை விலை கொடுத்து வாங்குவதற்குச் சமம்.

ஒருவர் தன்னுடைய பேங்க் கணக்கில் இன்டர்நெட்  பேங்கிங்க் வசதி வேண்டுமென்றால் பேங்கிற்கு அதற்குரிய படிவத்தில் விண்ணப்பிக்கவேண்டும். அப்படி விண்ண்ப்பித்த பிறகு ஒரு பத்து இருபது நாளில் உங்களுக்கு ஒரு தபால் அல்லது கூரியர் தபால் வரும். அதில் உங்களது உபயோகிப்பாளர் பெயரும் கடவுச்சொல்லும் இருக்கும். அதாவது யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு இருக்கும்.

இவை இரண்டும் மிக முக்கியமானவை. அவைகளை யாரிடமும் சொல்லாமல் இருக்கவேண்டும். தவிர அந்த பாஸ்வேர்டை முதல் முறை இன்டர்நெட் உபயோகிக்கும்போது மாற்றிவிடவேண்டும்.

அடுத்தது நீங்கள் அந்த பேங்கின் இன்டர்நெட் பேங்கிங்க் தளத்திற்கு சொல்லவேண்டும். அங்கு சென்று உங்களுக்கு பேங்க் கொடுத்துள்ள யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டைக்கொண்டு அந்த தளத்திற்கு உள்ளே செல்லவேண்டும். உள்ளே சென்றதும் முதல் வேலையாக உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.

இந்த இரண்டும் ஓரளவிற்கு பாதுகாப்பானதாக இருக்கவேண்டும். மற்றவர்கள் எளிதில் யூகிக்கும்படியாக, உங்கள் பெயர் அல்லது உங்கள் குழந்தைகள் பெயர் இவைகளை உபயோகப்படுத்தாமல் இருப்பது நலம். இந்த யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை எங்கும் எழுதி வைக்காதீர்கள் என்று பேங்க்கில் சொல்லுவார்கள். அதற்கு காரணம் வேறு. அதை பிற்பாடு சொல்கிறேன். இப்போதைக்கு நான் சொல்வதை கேளுங்கள். அந்த யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை ஒரு தனி நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அந்த தளத்திலிருந்து லாக்அவுட் செய்யுங்கள். பிரவுசரை குளோஸ் செய்துவிட்டு திரும்பவும் ஓபன் செய்யுங்கள். பேங்க்கின் தளத்திற்கு சென்று இன்டர்நேட் பேங்க்கிங்க் தளத்திற்கு செல்லவும். யூசர்நேம் பாஸ்வேர்டு உபயோகித்து தளத்தினுள் செல்லவும். இப்போது தளத்தினுள் சென்று விட்டீர்கள் என்றால் நீங்கள் ஒரு சாதனையாளர் என்று மார் தட்டிக்கொள்ளலாம். இப்போது நீங்கள் உங்கள் கணக்கின் விபரங்கள் அனைத்தும் பார்க்கலாம்.

ஒரு முக்கியமான விஷயம். பொது இடங்களில் உள்ள பிரவுசிங்க் சென்டர்களில் அல்லது உங்கள் அலுவலக கம்ப்யூட்டரில் அல்லது உங்கள் நண்பர்கள் கம்ப்யூட்டர்களில் இந்த இன்டர்நெட் பேங்கிங்க் வேலைகளை செய்யவேண்டாம். ஒரு நாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் நீங்கள் வம்பில் சிக்கிக்கொள்வீர்கள்.

அடுத்தது. எப்போதும் இன்டர்நெட் பேங்கிங்க் வேலைகள் முடிந்தவுடன் மறக்காமல் லாக்அவுட் செய்து விட்டே பிரவுசரை மூடவேண்டும். வீட்டில் குழந்தைகள் இருப்பவர்கள் தயவு செய்து அவர்களுக்கு இந்த இன்டர்நெட் பேங்கிங்க் முறைகளை கற்றுக்கொடுக்காதீர்கள். அவர்கள் சம்பாதிக்கும்போது கற்றுக்கொள்ளட்டும்.

இந்த இன்டர்நெட் பேங்க்கிங்க் வசதி பெற்றபின் நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய சமாசாரம் என்னவென்றால் உங்கள் உயிரே போவதானாலும் இந்த பாஸ்வேர்டை யாரிடமும் சொல்லக்கூடாது. நீங்கள் பாஸ்வேர்டு எழுதிவைத்துள்ள நோட்டுப்புத்தகம் யார் கையிலும் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதற்காகத்தான் பேங்க் ஆட்கள் இந்த யூசர்நேம், பாஸ்வேர்டை எங்கும் எழுதி வைக்காதீர்கள் என்று சொல்கிறார்கள்.

இப்படி எழுதி வைக்காமல் பாஸ்வேர்டை நீங்கள் மறந்து விட்டால் பாஸ்வேர்டை மாற்றியமைக்க நீங்கள் பேங்க்கின் உதவியை நாடவேண்டி வரும். அதற்கு அவர்கள் ஒரு கட்டணம் வசூலிப்பார்கள். பேங்கின் வருமானத்தைப் பெருக்க இது இன்னுமோர் வழி. ஏன் பேங்க்குக்காரர்கள் யூசர்நேம், பாஸ்வேர்டை எழுதி வைக்கவேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று புரிந்ததல்லவா.(திரு நடனசபாபதி கண்டனம் தெரிவிக்க மாட்டார் என்று நம்புகிறேன்)

மொபைல் பேங்க்கிங்க் பற்றியும் இப்போதே சொல்லிவிடுகிறேன். இதுவும் இன்டர்நெட் பேங்க்கிங் மாதிரியேதான். என்ன, இதற்கு மொபைல் போன் வேண்டும். அதுதான் இப்போது மொபைல் போன் எல்லோரும் ஒன்றுக்கு இரண்டாக வாங்கி  வைத்திருக்கிறார்களே.

இதில் இரண்டு வகை உண்டு. உங்கள் மொபைல் போன் நெம்பரை பேங்கில் ரிஜிஸ்டர் செய்து விட்டால் உங்கள் கணக்கில் நடக்கும் அனைத்து பரிமாற்றங்களும் எஸ்எம்எஸ் மூலமாக உங்கள் மொபைல் போனுக்கு வந்து விடும். இது ஒரு நல்ல சௌகரியம். இது சாதாரண மொபைல் போன் வைத்திருக்கும் ஏழைகளுக்கு ஏற்படுத்தப்பட்ட உதவி.

இன்னொரு வகை - நீங்கள் ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் மொபைல் பேங்க்கிங்க் வசதிக்கு விண்ணப்பிக்கலாம். இன்டர் நெட் போன்றே யூசர்நேம், பாஸ்வேர்டு தருவார்கள். உங்கள் மொபைலில் உங்கள் பேங்கிகிற்கான App ஐ மொபைல் ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்து, அந்த App மூலம் இந்த யூசர்நேம், பாஸ்வேர்டு உபயோகித்து உங்கள் கணக்கில் நுழையலாம். இந்த வசதி மூலம் நீங்கள் இன்னொருவருக்கு பணம் அனுப்பலாம், மொபைல் ரீசார்ஜ் செய்யலாம், DTH  க்கு டாப்-அப் செய்யலாம், ரயில், சினிமா டிக்கட்டுகள் வாங்கலாம், இன்னும் என்னென்னமோ  .....லாம்.

ஒன்றை மட்டும் நன்றாக கவனம் வைத்துக்கொள்ளுங்கள். இன்டர்நெட் சமாச்சாரம் முழுவதும் சர்க்கஸில் கம்பி மேல் நடக்கிறார்களே அதே மாதிரிதான். கரணம் தப்பினால் மரணம்தான். நாளைக்கு உங்கள் பணத்தை யாராவது லவட்டிக்கொண்டு போன பிறகு பழனி. கந்தசாமியைக் குறை கூறிப் பயனேதுமில்லை.

இப்படி இன்டெர்நெட் கணக்கும் மொபைல் பேங்கிங் கணக்கும் வைத்திருப்பவர்கள் அவர்கள் கணக்கில் இருந்து உங்கள் கணக்கிற்கு பணம் போடலாம். அதேபோல் ஏடிஎம் கார்டு உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இருந்தால் ஒருவர் கணக்கிலிருந்து இன்னொருவர் கணக்கிற்கு பணபரிவர்த்தனை செய்யலாம்.

இதுவரை உங்கள் கணக்கில் பணம் எந்தெந்த வகைகளில் போடலாம் என்று பார்த்தோம். அப்படி போட்ட பணத்தை எப்படி எடுப்பது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

12 கருத்துகள்:

 1. இந்த பாஸ்வர்ட் எழுதி வைக்கும் கஷ்டம்தான் பெரிய கஷ்டம். எங்கு எழுதி வைத்தோம் என்பதற்கு ஒருநோட் போட வேண்டும்! அந்த நோட்டை எங்கு வைத்தோம் என்பதை வேறொரு இடத்தில் எழுதி வைக்கவேண்டும். அந்த வேறொரு இடம் எது என்பதைப் பிறிதொரு இடத்தில் குறித்து வைக்க வேண்டும்!.... கடைசியாக அதை எல்லாம் ஞாபகமாகப் பார்க்க வேண்டும்! :)))

  இந்த நெட் பேங்கிங் சமாச்சாரம் எல்லாம் நான்கைந்துமுறை செய்து பழகினால்தான் கொஞ்சமாவது புரிய ஆரம்பிக்கிறது! நினைவில் வைக்க எத்தனை பாஸ்வர்ட்கள்! நோட்டில் எழுதி வைக்கும் அந்தப் பாஸ்வர்ட்களையும் மற்றவருக்குப் புரியாமல் நமக்கு மட்டும் புரியும்படி எழுதி வைக்க வேண்டுமாம். என் பேங்க் உறவினர் சொன்னது! எதை நினைத்து எப்படி மாற்றி எழுதினோம் என்பது மறந்து விட்டால்....? :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்கிற கதைதான்.

   நீக்கு
  2. //உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.//

   பல வங்கிகளில் யூசர் நேமை மாற்றமுடியாது. பாஸ்வேர்டை மாற்றலாம். அது மிக முக்கியம்.

   //திரு நடனசபாபதி கண்டனம் தெரிவிக்க மாட்டார் என்று நம்புகிறேன்.//

   ஐயா எல்லாவற்றிற்கும் எதிர்ப்பு (கண்டனம்!) தெரிவிக்கமாட்டேன். ஆனால் ஒன்று சொல்வேன். வங்கிகள் தங்கள் வருமானத்தைப் பெருக்க இதைவிட வேறு வழிகள் உள்ளன!

   நீக்கு
  3. சரிதான், பல பேங்க்குகளில் யூசர் நேமை மாற்றமுடியாது.

   நீக்கு
 2. இன்டர்நேட் பேங்க்கிங் தளத்திற்கு சென்றாலே பெரிய சாதனை என்பது உண்மை...!

  பதிலளிநீக்கு
 3. விரிவான தகவல்கள்..நன்றிகள்..

  புலி வால் பிடித்த கதையாக பயமுறுத்துகிறது..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்தேகமே வேண்டாம் சகோதரி, நிச்சயம் இது புலிவால் பிடித்த கதையேதான்.

   நீக்கு
 4. இப்போதெல்லாம் நெட் பேங்கிங் முறைதான் எளிதாகத் தெரிகிறது ஐயா. பேங்க் போயி, வரிசீல நின்னு... அப்பப்பா....

  பதிலளிநீக்கு
 5. விளக்கங்களைப் பொறுமையாகவும் அருமையாகவும் நகைச்சுவை ததும்பச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. எல்லோரும் தெரிந்து கொள்ள நல்ல தகவல் தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 7. இணைய வங்கி கணக்கு தொடங்கும் போது வாங்கி விடலாம் . ஆனால் கணக்கில் பணம் குறைவாக இருந்தால் மேலாளர் ஒரு பார்வை பார்ப்பார் , இது தேவையா என்பது போல :)

  பதிலளிநீக்கு
 8. அது சரி..இருக்கிறவங்களுக்குத் தானே நீங்க சொல்றதெல்லாம்..
  என்ன மாதிரி அன்றாடம்காய்ச்சி எல்லாம் எதுக்கு கவலைப் படணும் சுவிஸ் பேங்க் இருக்கும் போது!

  பி.கு. அன்றாடம் காய்ச்சி என்கிற இடத்தில் அன்றாடம் கஞ்சா காய்ச்சி என்று எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு