ஞாயிறு, 2 மார்ச், 2014

பேங்க் விவகாரங்கள் - கடைசி பகுதி


ஏன் தலைப்பில் விவகாரங்கள் என்று போட்டேன் என்றால், பேங்க் கணக்குகளில் ஏதாவது குளறுபடி வந்து விட்டது என்றால் அதைத் தீர்ப்பதற்குள் உங்கள் தாவு தீர்ந்து விடும். எப்போது குளறுபடி வரும்? அது உங்கள் தலையெழுத்தைப் பொருத்தது.  ஆகவே இறைவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு கணக்கைத் தொடருங்கள்.

எனக்கு ஒரு முறை என்னுடைய பிபிஎப் கணக்கில் வட்டியைத் தவறுதலாக கணக்கிட்டு விட்டார்கள். சில ஆயிரங்கள் விட்டுப்போயின. சும்மா இருக்க முடியுமா? போய்க்கேட்டேன். எழுதிக்கொடுங்கள் என்றார்கள். எழுதிக்கொடுத்தேன். பாஸ் புக் நகல் எடுத்துக் கொடுங்கள் என்றார்கள். எடுத்துக் கொடுத்தேன். சில நாட்கள் ஆகும், பொறுத்திருங்கள் என்றார்கள்.

ஒரு மாதம் கழித்துப் போய் கேட்டேன். அப்படியா, எழுதிக்கொடுங்கள் என்றார்கள். முன்பே எழுதிக்கொடுத்தேனே என்றேன். அது அந்த மேனேஜர் மாற்றலாகிப் போய்விட்டார், அதனால் பழைய விண்ணப்பங்களும் அவருடன் போய் விட்டன. நீங்கள் ஒன்று செய்யுங்கள். இப்போது புதிதாக ஒரு விண்ணப்பம் கொடுத்து விடுங்களேன் என்றார்கள். புதிதாக ஒரு விண்ணப்பம் எழுதி பாஸ் புக் காப்பியுடன் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்றார்கள்.

இரண்டு வாரம் கழித்து போனேன். திரும்பவும் விண்ணப்பம் கொடுத்தீர்களா என்றார்கள். என்னடா இது, திரும்பவும் முதலிலிருந்தா என்று யோசித்தேன். விண்ணப்பம் எழுதி பத்து காப்பி சீராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டேன். கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு காப்பியாக கொடுத்து வந்தேன். ஏறக்குறைய ஒரு வருடம் ஆகி விட்டது. மூன்று மேனேஜர்கள் மாறி விட்டார்கள்.

புதிதாக வந்த மேனேஜருக்கு என்ன தோன்றியதோ, ஒரு நாள் இன்று மாலை 4 மணிக்கு வாருங்கள் சார் என்றார். மாலை 4 மணிக்குப் போனேன். கம்ப்யூட்டரில் என்னமோ பண்ணி பத்து நிமிடத்தில் கணக்கை நேர் செய்து விட்டார். மிகவும் நன்றி என்று சொல்லி விட்டு என் அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

இதிலிருந்து தெரிந்து கொள்ளும் நீதி என்னவென்றால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பொறுமை, விடாமுயற்சி, சாதுர்யம் என்பவை எல்லாம் தேவை என்பதே. இரண்டு பேங்கில் கணக்கு வைத்திருந்தீர்களானால் இவையெல்லாம் உங்களுக்கு கை வந்து விடும். வாழ்க வையகம், வாழ்க வளமுடன். 

14 கருத்துகள்:

  1. சில வருடங்களுக்கு முன் பேங்க் கவுண்டரில் வாங்கிய பணத்தை அப்போதே அப்படியே வேறொரு அக்கவுண்டுக்குப் போட வேண்டிய நிர்ப்பந்தம் வந்தபோது பணத்தைக் கொடுத்தால் அதில் ஒரு 500 ரூபாய் கள்ள நோட்டு, வாங்க மாட்டேன் என்றார்கள். 15 நிமிடங்கள் முன்பு உங்களிடமிருந்து வாங்கியதுதான் என்றால் அதைப்பற்றியே பேசவில்லை. அப்புறம் சண்டை போட்டு நிரூபித்தால், என்னிடமிருந்து ஒரு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு, (ரிசர்வ் பேங்க்குக்கு அனுப்புவார்களாம், சரி என்றால் பிரச்னை இல்லையாம் , இல்லா விட்டால் என் அக்கவுண்டில் கழித்து விடுவார்களாம்! - என் பாஸ் புக்கில் பார்த்துக் கொண்டே வந்தேன். கழிக்கவில்லை) வாங்கிக் கொண்டார்கள்.

    இன்னொருமுறை என் கையெழுத்து மாறியிருக்கிறது என்று சொல்லிவிட்டு மறுபடி புதிதாக ஸ்பெஸிமன் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். அப்புறம் சிலநாட்கள் கழித்து பாஸ்புக் என்ட்ரி போட்டபோது அகாரணமாய் 125 ரூபாய் கழிக்கப்பட்டிருக்கிறதே என்னவென்று கேட்டால் ஸ்பெஸிமன் கையெழுத்து வாங்கியதற்குக் கட்டணமாம்!

    பதிலளிநீக்கு
  2. உங்களின் அனுபவம் அனைவருக்கும் ஒரு பாடம் ஐயா...

    பதிலளிநீக்கு

  3. //வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பொறுமை, விடாமுயற்சி, சாதுர்யம் என்பவை எல்லாம் தேவை.//

    உண்மைதான். ஆனால் உங்களுக்கு சேரவேண்டிய பணத்திற்கு இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கவேண்டியதில்லை. முதல் தடவை உங்களை அலைக்கழித்தபோதே வங்கியின் வட்டார அல்லது தலைமை அலுவலகத்திற்கு உங்களது பிரச்சினையை எழுத்துமூலம் தெரிவித்திருக்கலாம். (யாருக்கு புகார் தெரிவிக்கவேண்டும் என்று ஒவ்வொரு கிளையில் உள்ளே நுழைதந்தும் தெரியும்படி எழுதிவைத்திருப்பார்கள்.) அப்போதும் உங்களது குறையை தீர்க்க யாரும் முன் வராவிடில் சென்னை ரிசர்வ் வங்கியில் உள்ள Banking Ombudsman க்கு எழுதலாம். பொறுமை கடலினும் பெரிதுதான். ஆனால் சமுத்திரம் அளவு அல்ல!

    பதிலளிநீக்கு
  4. இரண்டு பேங்கில் கணக்கு வைத்திருந்தீர்களானால் இவையெல்லாம் உங்களுக்கு கை வந்து விடும்

    சித்திரமும் கைப்பழக்கம் மாதிரி .. வங்கிக் கணக்கும் கைவந்த கலைதான் ...!

    பதிலளிநீக்கு
  5. //இதிலிருந்து தெரிந்து கொள்ளும் நீதி என்னவென்றால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பொறுமை, விடாமுயற்சி, சாதுர்யம் என்பவை எல்லாம் தேவை என்பதே. //

    சரியாக அழகாக வேடிக்கையாகச் சொன்னாலும் அதுதான் உண்மை.

    எனக்கு இதிலெல்லாம் நிறைய அனுபவம் உண்டு. நான் அங்கு போய்ப்போய் அலையவே மாட்டேன்.

    எல்லாவற்றையும் தெளிவாக மெயிலில் எழுதி TOP to BOTTOM எல்லாப்பயல்களுக்கும் மெயில் அனுப்பி வைப்பேன்.

    இவனுக்கு அனுப்பியது அவனுக்குத்தெரியாது. அவனுக்கு அனுப்பியது இவனுக்குத்தெரியாது.

    அதாவது BCC Copy யாக, சூடாக உறைக்கும்படியாக எழுதி விட்டு பேசாமல் இருப்பேன்.

    அலறிப்பிடித்துக்கொண்டு காரில் அவனே என்னைத்தேடி என் வீட்டுக்கே வருவான்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு


  6. இப்படி ஏமாற்றி விட்டீர்களே அய்யா
    பாகம் 5 ல் "ஏடிஎம் கார்டு, கடன் அட்டை இரண்டும் அடுத்த பதிவில்" என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் கடைசி பகுதியில் பிஎப் பற்றி மட்டும் சொல்லி விட்டு ஏடிஎம் கார்டு, கடன் அட்டை பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டீர்களே. போதுமடா சாமி இந்த வங்கிகளோடு என்று ஒரு எண்ணம் தோன்றி விட்டதா?
    addenda ஒன்று போட்டு இவை இரண்டையும் பற்றி சொன்னால் நாங்கள் தன்யந்தர்கள் ஆவோம்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு இரண்டையும் பற்றி எழுதலாம் என்று ஆரம்பித்தேன். அப்போது மண்டையில் ஒரு ஸ்பார்க் அடித்தது. இந்தக் கார்கு வைத்திருப்பவர்கள் இதைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். அவர்களுக்கு அன்வைஸ் தேவையில்லை.

      இந்தக் கார்டுகள் இல்லாதவர்களுக்கு எதற்கு அட்வைஸ்?

      ஆகவே அந்த டாபிக்கை விட்டு விட்டேன்.

      குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை, பார்த்தீர்களா சேலம் குரு!!!!!!!!!!!!!

      நீக்கு
  7. இது எப்போதும் நடக்க கூடிய சங்கதிதான். ஆனால் அதைப்பற்றி கிஞ்சித்தும் சலனமடையாத மன கிலேசம் அடையாத ஒரு கூட்டம் இருக்கிறது என்றால் அது வங்கி அதிகாரிகள்தான். (இப்படி strong ஆக சொல்வதற்கு வங்கி அதிகாரிகள் பொறுத்துக்கொள்ளவேண்டும்)

    ஓரிரு வருடங்களுக்கு முன்பு land line, mobile இரண்டுக்கும் ECS வழியாக பில் கட்டிக்கொண்டிருந்தேன். இல்லையென்றால் பில் கட்ட வண்டி எடுத்துக்கொண்டு ஓட வேண்டுமே. ECS என்றால் நேரமும் மிச்சம் பெட்ரோல் செலவும் மிச்சம். அதில் விழுந்தது ஒரு இடி.

    ஒரு மாதம் நீங்கள் இன்னும் பில் கட்டவில்லை. கடைசி தேதிக்குள் கட்ட வில்லை என்றால் அபராதக்கட்டணத்துடன் சேர்த்து காட்டவேண்டும் என்றார்கள். உங்கள் வங்கி ECS நிறுத்திவிட்டது என்று சொன்னதால் நேராக வங்கி சென்று விசாரித்தேன். பேசாமல் ஒத்துகொண்டிருந்தால் பரவாயில்லை ஆனால் "நாங்கள் ஏன் நிறுத்தப்போகிறோம் உங்கள் போனுக்கும் மொபைலுக்கும் எங்களுக்கு பிடித்தம் செய்வதற்கு தகவலே இல்லையே" என மீண்டும் டெலிபோன் துறைக்கு ஓட, அவர்கள் பிடித்தம் செய்ய அனுப்பப்பட்ட சீட்டை காட்டினார்கள். அவர்களை கெஞ்சி ஒரு நகல் எடுத்துகொண்டு வந்து வங்கியில் காட்டினால் "சரி நாங்கள் பார்த்துகொள்கிறோம்" என்றார்கள். ஆனால் ஒன்றும் செய்யவில்லை. ஓடு வங்கிக்கு. :"எங்களுக்கு ஒன்றுமே வரவில்லையே" பாட்டு வங்கியிடமிருந்து. "நங்கள் அனுப்பி விட்டோம்" பாட்டு டெலிபோன் துறையிடமிருந்து. சலித்துபோய் நான் பில் கட்டுவதற்குள் 100 ரூபாய் அபராதம் வந்து விட்டது. இதில் நான் வங்கிக்கும் டெலிபோன் துறைக்கும் மாறி மாறி அலைந்த பெட்ரோல் செலவு வேறு. பின்னர்தான் தெரிந்தது. வங்கிக்கும் டெலிபோன் துறைக்கும் அவர்கள் பணத்தை டெபாசிட் செய்வதில் ஒரு சின்ன தகராறாம். அதனால் டெலிபோன் துறை அந்த மாதம் டெபாசிட் செய்யாததால் வங்கி அவர்களோடு மல்லுக்கு நின்றிருக்கிறது. இதில் அப்பாவி நான் மாட்டிகொண்டேன். தென்னை மரத்துல தேள் கொட்ட பனை மரத்துல நெறி கட்டிச்சாம் என்டர் பழ மொழி மாதிரி எனக்கு அபராத தொகையும் நேரமும் வான் அலைச்சலும்தான் மிச்சம்.

    இவ்வளவு தூரம் நடந்தும் - விசாரிக்கும் போது டெலிபோன் துறை சரியான நேரத்தில்தான் பிடிப்புக்கான சீட்டு அனுப்பியிருக்கிறார்கள். வங்கிதான் அதை ஹானர் செய்ய வில்லை என்று நிரூபித்த பிறகும் - வங்கி அதிகாரியிடம் ஒரு சலனம் இருக்க வேண்டுமே. எங்கள் வங்கியில் கணக்கு வைத்துகொண்டிருப்பதற்கு இப்படி நீங்கள் அனுபவிக்கத்தான் வேண்டும். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அது உங்கள் தலைஎழுத்து என்பது மாதிரிதான் இருந்தது.

    கணக்கை முதலில் வேறு வங்கிக்கு மாற்றினேன். தொந்திரவு ஒழிந்தது.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  8. இனி கொஞ்சம் இல்ல நிறையவே ஜாக்கிரதையா இருக்கணும் போல இவங்க கிட்ட

    எச்சரிக்கைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  9. அரசாங்க அலுவலகங்களில் இந்த பொறுமை இல்லாததால்தான் லஞ்சம் ஊழல் எல்லாம் தவிர்க்க முடியாததாய் விடுகிறது.

    பதிலளிநீக்கு
  10. //இறைவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு கணக்கைத் தொடருங்கள்.//

    உண்மைதான். நமது வாழ்க்கையில் சில விசயங்கள் தவிர்க்க முடியாதவை. வங்கி கணக்கு, நமது பார்யாள் போன்றன அப்படிப்பட்ட necessary evils . இறைவனை நம்புவதை தவிர வேறு வழியில்லை

    சேலம் குரு

    பதிலளிநீக்கு