செவ்வாய், 11 மார்ச், 2014

என் கம்ப்யூட்டர் மானிட்டருக்கு வந்த சோதனை


போன வாரத்திலிருந்தே என் கம்ப்யூட்டருடைய மானிட்டர் உயிரை விடுவதற்கான அறிகுறிகளைக் காண்பிக்க ஆரம்பித்தது. மானிட்டர் லைட் விட்டு விட்டு எரிந்தது. பிறகு ஒரேயடியாக அணைந்து விட்டது.

எனக்குத் தெரிந்த கை வைத்தியம் ஒன்றே ஒன்றுதான். அது கேபிள்களை கழட்டி மாட்டுவதுதான். அதை செய்தேன். மானிட்டரும் சாதுவாக வேலை செய்தது. இப்படி இரண்டு நாள் செய்தது. மூன்றாம் நாள் திரும்பவும் மக்கர் செய்தது.

கூகுளில் தேடினேன். சிபியுவில் குப்பைகள் இருந்தாலும் இப்படி செய்யும் என்று போட்டிருந்தது. சிபியூ புதிதாக வாங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆயிற்று. சரி, அதையும் செய்து பார்த்து விடலாமென்று ஒரு மாலைப்பொழுதில் சிபியுவை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.

சிபியுவை சுத்தம் செய்வது ஒரு பெரிய இந்திர ஜால வேலை என்பது உங்களுக்குத் தெரியும். முதலில் அதில் செருகியிருக்கும் ஒரு டஜன் கேபிள்களை பிடுங்க வேண்டும். பிடுங்குவது சுலபம். மாட்டும்போதுதான் அதில் உள்ள வம்பு புரியும். எந்த கேபிளை எங்கு மாட்டுவது என்பதில் குழப்பம் ஏற்படும்.

முன் அனுபவம் காரணமாக கேபிள்களை கழட்டும்போதே அவற்றிற்கு ஒவ்வொன்றிற்கும்  லேபிள் எழுதி அது அதில் சொருகி வைத்து விட்டேன்.
பிறகு வேகுவம் கிளீனரை எடுத்து வைத்துக் கொண்டேன். சிபியுவில் உள்ள சைடு கதவைத் திறந்தேன். அது ஒன்றும் பெரிய வேலை இல்லை. இரண்டே ஸ்க்ரூதான். திறந்தால் உள்ளே ஏகப்பட்ட தூசு, குப்பைகள் மண்டிக்கிடந்தன.

நல்ல காலம் இந்த வேலையை வீட்டு வாசலில் வைத்து செய்தேன். வீட்டிற்குள் இந்த வேலையைச் செய்திருந்தால் வீட்டு அம்மாள் சிபியுவை அப்படியே தூக்கி எறிந்திருப்பார்கள். முதலில் ஒரு பழைய துணியைக் கொண்டு முடிந்த வரை துடைத்தேன். பிறகு வேகுவம் கிளீனரில் புளோயரை ஆன் செய்து புளோயர் நாசிலை சிபியுவின் உள்ளே எல்லா இடங்களிலும் காண்பித்தேன்.

உள்ளேயிருந்து அவ்வளவு தூசிகள் வெளியேறின. வீட்டுக்குள் வைத்திருக்கும் கம்ப்யூட்டருக்குள் இவ்வளவு தூசிகள் எப்படி புகுந்தன என்பது ஒரு ஆச்சரியமான விஷயமே. அவைகளை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு மறுபடியும் புளோயரால் கிளீன் செய்தேன். இப்படி நாலைந்து முறை செய்த பின் உள்ளேயிருந்து தூசிகள் வருவது நின்று விட்டது.

பிறகு உள்ளேயிருக்கும் விசிறிகளைக் கவனித்தேன். அதில் இறக்கைகளுக்குப் பின்னால் தூசிகள் அடை அடையாய் ஒட்டிக்கொண்டு இருந்தன. அவைகளை எல்லாம் நைசாக ஒரு குச்சியின் மூலம் அகற்றி வெளியே எடுத்தேன். பிறகு அந்த விசிறிகளுக்கு புளோயர் மூலம் காற்று அடித்தேன். மேலும் தூசிகள் வெளியே வந்தன.

இந்த விசிறிகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அப்போதுதான் சிபியுவில் காற்றோட்டம் சரியாக ஏற்பட்டு டெம்பரேச்சர் கன்ட்ரோலில் இருக்கும். இல்லையென்றால் டெம்பரேச்சர் அதிகமானால் சிபியு ஸ்ட்ரைக் செய்து விடும். இப்படி சிபியுவை வருடம் ஒரு முறையாவது சுத்தம் செய்வது அவசியம்.

இப்படி சிபியூவை சுத்தம் செய்த பிறகு எல்லா கேபிள்களையும் சிபியுவில் மாட்டினேன். ஒரு கேபிளும் அநாமத்தாக கிடக்கவில்லை என்று சுற்றுமுற்றும் பார்த்து உறுதி செய்து கொண்டேன். பிறகு சிபியுவிற்கு கரண்ட் கனெக்ஷன் கொடுத்தேன். பழைய குருடி கதவைத்திறடி என்ற கதையாக மறுபடியும் மானிடர் வம்பு செய்தது.

ஓஹோ, இது கொஞ்சம் சீரியசான விவகாரம் போல இருக்கிறது என்று அப்போதுதான் ஞானோதயம் ஏற்பட்டது. இனி ஸ்பெஷலிஸ்ட்டைக் கூப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்தேன்.

எனக்கு என்று ஒரு ஆஸ்தான வித்வான் இருக்கிறார். அவரைக் கூப்பிட்டு விவரம் சொன்னேன். நான் வந்து பார்க்கிறேன் என்று சொன்னார். இரண்டு மணி நேரத்தில் வந்து பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். வந்தது வம்பென்று நினைத்துக் கொண்டு என்னவென்று கேட்டேன். அவர் ஒன்றுமில்லை, இதை இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் (வொர்க் ஷாப்பில்) சேர்த்து ஒரு ஆபரேஷன் செய்தால் சரியாய்ப்போகும் என்றார்.

சரி, அப்படியே செய்யுங்கள் என்றேன். அவர் மானிட்டரை எடுத்துச்சென்று விட்டார். எனக்கு ஒரு கை ஒடிந்தது போல் ஆயிற்று. விடிந்ததும் கம்ப்யூட்டர் முகத்தில் விழித்தே பழக்கமாகிப் போனதால் இப்போது என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. ஏறக்குறைய பைத்தியம் பிடிக்காத குறைதான்.

எப்படியோ மூன்று நாட்களுக்குப் பிறகு மானிட்டர் நேற்று மாலை வந்து சேர்ந்தது. கம்ப்யூட்டர் மெக்கானிக் எல்லாவற்றையும் இணைத்து பவர் ஆன் செய்தார். கம்ப்யூட்டர் பழையபடி வேலை செய்ய ஆரம்பித்தது. போயிருந்த என் உயிர் திரும்ப வந்தது.

40 கருத்துகள்:

 1. அப்படி என்ன கோளாறாம்?

  சி பி யு சுத்தம் செய்வதை நினைத்தால் நடுக்கமாகத்தான் இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதாவது மானிட்டருக்கு ஒரு பவர் போர்டு இருக்கிறதாம். அது பழுதடைந்ததால்தான் இத்தனை வம்பும். அதை மாற்றிவிட்டார்கள். அதற்கு 500 ரூபாய். கம்ப்யூட்டர் மெக்கானிக்குக்கு 250 ரூபாய். ஆக மொத்தம் 750 ரூபாயில் மானிடர் ரிப்பேர் ஆகி இருக்கிறது.

   எலெக்ட்ரானிக் சாதனங்கள் எல்லாம் "நித்திய கண்டம் பூர்ணாயுசு" வகைதான். எப்போதும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.

   நீக்கு
  2. அந்த பவர் போர்டு பழுது சரி. ஆனால் ஏன் பழுதடைந்தது இனிமேல் ஆகாமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் இந்த கம்புயுடர் சம்பந்தப்பட்ட ஆட்கள் எப்போதும் சொல்வதே இல்லையே ஏன்? இன்று வரை எனக்கு புரியாத புதிர். ஒரு வேலை அவர்களுக்கே தெரியாதோ என்னவோ என்று நினைத்துக்கொள்வேன்.

   திருச்சி அஞ்சு

   நீக்கு
  3. "நித்ய கண்டம் பூர்ண ஆயுசு" என்பது இந்த மாதிரி எலெக்ட்ரானிக் சமாச்சாரங்களை பொறுத்த வரை நூற்றுக்கு நூறு உண்மைதான். அனால் காலேஜில் படிக்கும் போது என்னவோ ரெலியபிளிட்டி 90% -99% (நம்பகத்தன்மை) என்றெல்லாம் படிக்கிறோம். அதெல்லாம் வெறும் ஏட்டு சுரைக்காய்தானா? இன்னமும் அமுல் படுத்தப்படவில்லையா?

   திருச்சி தாரு

   நீக்கு
 2. சிபியூவை எப்படி கவனமாக சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டீர்கள்...

  கைபேசியிலே முந்தைய பதிவு போட வைத்த மானிட்டருக்கு நன்றி சொல்லிட்டீர்கள் தானே...? ஹிஹி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கைபேசி ஸ்மார்ட் போன் வகையில் சமீபத்தில்தான் வாங்கியிருந்தேன். வீட்டிற்கு சக்களத்தி வந்து விட்டாளே என்ற வயிற்றெரிச்சலில்தான் மானிட்டர் வம்பு செய்திருக்கிறது போலும். அதற்கு தேங்க்கஸ் சோல்லுவதா? இரண்டு உதைதான் கொடுக்கவேண்டும்.

   நீக்கு
  2. சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். ரெண்டாவது பொண்டாட்டி (ஸ்மார்ட் போன்) வந்துவிட்டால் முதல் பொண்டாட்டிக்கு (கம்பியுடர்) உதைதானே கிடைக்கும். உலக நியதிதானே

   சேலம் குருப்ரியா

   நீக்கு
  3. //கைபேசி ஸ்மார்ட் போன் வகையில் சமீபத்தில்தான் வாங்கியிருந்தேன் //

   உங்களை பாராட்டியே ஆக வேண்டும். ஸ்மார்ட் போன் வாங்கி விட்டு அதில் பட்டனை தட்டுவதற்குள் நமது உயிர் போய்விடுகிறது. ஒன்றை தட்டினால் இன்னொன்றும் சேர்ந்து விழுகிறது. கேட்டால் உங்கள் விரல்கள் குண்டு என்கிறார்கள். இதற்காக இளைக்கவா முடியும்? ஆனால நீங்கள் இந்த வயதில் ஸ்மார்ட் போன் வாங்கியதோடு அதில் ஒரு பதிவும் போட்டு விட்டீர்களே. பிடுங்கல் எங்கள் "Ever Youthful Kavundar" என்ற பட்டத்தை.
   பின்னால் உங்கள் பார்யாள் பெருமையுடன் புன்முறுவல் பூப்பதை பார்க்கமுடிகிறது

   சேலம் குரு

   நீக்கு
 3. நாம் செய்வதை விட அந்த பணியைத் தெரிந்தவர் செய்து நல்லது.எப்படியோ உங்களுடைய கணினி திரையகம் சரியாகிவிட்டது. இனி காலையில் எழுந்ததும் அதனுடைய முகத்தில் விழிக்கலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நடனசபாபதி. என்னுடைய க்யூரியாசிடி எதையும் முயற்சி செய்து பார்க்கத் தூண்டுகிறது.

   நீக்கு
  2. //என்னுடைய க்யூரியாசிடி எதையும் முயற்சி செய்து பார்க்கத் தூண்டுகிறது//

   இதை க்யூரியாசிடி என்று சொல்வதை விட்ச் உங்களுடைய அதீத inquisitiveness என்று சொல்லலாம். எதையும் விடக்கூடாது உள்ளே புகுந்து பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தை பாராட்டியே ஆக வேண்டும். அத்தகைய inquisitiveness உங்கள் மகன் மகளிடமும் இருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் ஒரு முறை பாராட்டுக்கள்

   திருச்சி அஞ்சு

   நீக்கு
  3. //ஏறக்குறைய பைத்தியம் பிடிக்காத குறைதான்.எப்படியோ மூன்று நாட்களுக்குப் பிறகு மானிட்டர் நேற்று மாலை வந்து சேர்ந்தது//

   உண்மையிலேயே அந்த மூன்று நாட்கள் உங்கள் பார்யாள் சந்தோஷபட்டிருப்பார்கள். மீண்டும் என் ஆம்படையான் எனக்கே எனக்கு. அந்த பாழப்போன கணினியை கட்டிக்கொண்டு அழாமல் என் கூட இருக்கிறார் என்ற எண்ணத்திலிருந்திருப்பார்கள்.

   திருச்சி தாரு

   நீக்கு
  4. ஒரு வேளை வள்ளுவரே இப்படி அவஸ்தை பட்டிருப்பாரோ?
   அதனால்தான் \
   "இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து
   அதனை அவன் கண் விடல்"
   என்று சொல்லிவிட்டு போய் இருக்கிறார்.

   சேலம் குருப்ரியா

   நீக்கு
  5. //ஒன்றுமில்லை, இதை இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் (வொர்க் ஷாப்பில்) சேர்த்து ஒரு ஆபரேஷன் செய்தால் சரியாய்ப்போகும் என்றார்.//

   எந்த நிலையிலும் உமது நகைச்சுவை உம்மை விட்டு போகவில்லை. அதனால்தான் கணினியும் தன உடம்பை சரி செய்து கொண்டு உங்களிடமே திரும்பி வந்து விட்டது.

   திருச்சி அஞ்சு

   நீக்கு
  6. //அவர் மானிட்டரை எடுத்துச்சென்று விட்டார். எனக்கு ஒரு கை ஒடிந்தது போல் ஆயிற்று. விடிந்ததும் கம்ப்யூட்டர் முகத்தில் விழித்தே பழக்கமாகிப் போனதால் இப்போது என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. ஏறக்குறைய பைத்தியம் பிடிக்காத குறைதான்.//

   ஏனய்யா கோயம்பத்தூர் கவுண்டரே, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தாலி கட்டி கூட்டிக்கொண்டு வந்த பார்யாள் ரெண்டு நாள் அம்மா வீட்டுக்கு போனால் "ஹய்ய்ய்யா என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா" என்று சந்தோஷப்படுவது. நேற்று வந்த கணினி ஒரு மூன்று நாள் ரிப்பேர் என்று போனால் பைத்தியம் பிடித்தது போல இருக்கிறதா? ஒன்றுமே புரியவில்லையா? இருக்கட்டுங்கானும் உமது பார்யாளிடம் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி வைக்கிறேன். அப்போது தெரியும் கணினி பெரிதா இல்லை பாரில் பெரிதா என்று.

   திருச்சி காயத்ரி மணாளன்

   நீக்கு
  7. //பழைய குருடி கதவைத்திறடி என்ற கதையாக மறுபடியும் மானிடர் வம்பு செய்தது.//

   அதெல்லாம் அப்படித்தான்.
   செய்ய வேண்டியவர் செய்தால்தான் எல்லாமே நன்றாக இருக்கும். மனைவி ஊருக்கு போயிருக்கும் போது கைப்பக்குவமாக சமைக்கலாம் என்று சமையல் அறையில் நம்மை போன்ற ஆண்கள் சமையல் என்ற பெயரில் செய்யும் விபரீத பரிசோதனைகள் என்றாவது நல்ல பலனை கொடுத்ததுண்டா? அப்படியே எடுத்து கொட்டி விட்டு நேரங்கெட்ட நேரத்தில் ஓட்டலுக்குத்தானே செல்கிறோம். அதே போலத்தான் இத்தகைய முயற்சிகளெல்லாம்.
   ஒவ்வொரு முறை சமையல் செய்யும்போதும் இதே "பழைய குருடி கதவை திறடி" கதைதான்.

   சேலம் துளசிமைந்தன்

   நீக்கு
  8. //பழைய குருடி கதவைத்திறடி என்ற கதையாக மறுபடியும் மானிடர் வம்பு செய்தது.//

   நல்ல வேளை.
   புதிதாக ஒன்றும் தொந்திரவு வராமல் போயிற்றே.
   பிள்ளையார் பிடிக்க அது குரங்காய் முடிந்திருந்தால் ?
   உங்களை எல்லாம் யார் சார் கை வைக்க சொன்னது, இப்போது ஒன்றும் பண்ண முடியாது. தூக்கிப்போட்டுவிட்டு புது கணினி வாங்க வேண்டியதுதான் என்று சொல்லாமல் வெறும் 750 ரூபாயோடு ரிப்பேர் செய்து முடித்து விட்டாரே உங்கள் ஆஸ்தான வித்வான் என்று சந்தோஷபட்டுக்கொள்ளுங்கள்.

   நீக்கு
  9. // கம்ப்யூட்டர் மெக்கானிக் எல்லாவற்றையும் இணைத்து பவர் ஆன் செய்தார்//

   அப்போது உங்கள் ஹார்ட் பீட் எப்படி இருந்தது.
   இல்லாத சாமிகளை எல்லாம் மனசுக்குள்ளே கும்பிட்டுக்கொண்டிருந்தீர்களா?

   திருச்சி தாரு

   நீக்கு
  10. //இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் (வொர்க் ஷாப்பில்) சேர்த்து ஒரு ஆபரேஷன் செய்தால் சரியாய்ப்போகும் என்றார்.//

   நமது உடம்புக்கும் கணினிக்கும் வித்தியாசம் அதிகமில்லை.

   நாம் படுத்து விட்டால் ஆபரேஷன் செய்துவிட்டு 48 மணி நேரம் கழித்து எல்லாம் சரியாகிவிடும் என்பார்கள்.
   இவரோ கணினிக்கு 48 மணி நேரம் ஆபரேஷன் செய்யலாம். சரியாக போய்விடும் என்கிறார்.
   அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி 48 மணி நேரம் என்பது ரெண்டு பேருக்குமே போதுதான்.

   திருச்சி காயத்ரி மணாளன்

   நீக்கு
 4. மிகவும் சுவாரஸ்யமான அனுபவத்தை, தூசு ஏதும் இல்லாமல் படு சுத்தமாகச் சொல்லியுள்ளது, ரஸிக்கும்படியாக இருக்குது. பாராட்டுக்கள், ஐயா.

  பதிலளிநீக்கு
 5. //இந்த வேலையைச் செய்திருந்தால் வீட்டு அம்மாள் சிபியுவை அப்படியே தூக்கி எறிந்திருப்பார்கள்.//

  அண்ணே உண்மையச் சொல்லுங்க..சிபியூவை தூக்கின் எறிந்திருப்பார்களா? உங்களையவா ? :)

  பதிலளிநீக்கு
 6. சிபியூ வை சுத்தம் பண்ணும் வேலையை என் மகன் பார்த்துப்பான். எனக்கு கவலை இல்லை.

  பதிலளிநீக்கு
 7. //எனக்குத் தெரிந்த கை வைத்தியம் ஒன்றே ஒன்றுதான். அது கேபிள்களை கழட்டி மாட்டுவதுதான். அதை செய்தேன்.//

  கை வைத்தியம் செய்ய தெரிந்த ஆட்கள் - அது மானிட்டர் ஆனாலும் சரி ஆட்கள் ஆனாலும் சரி - குறைந்து கொண்டே வருகிறார்கள். "உடனே டாக்டரிடம் ஓடு. மணிக்கணக்காக காத்திரு. அவருக்கு பீஸ் கொடு. மருந்து கடைக்கு கப்பம் கட்டு" என்பதுதான் இன்றைய நிலை. நீங்கள் என்னடாவென்றால் மானிட்டருக்கும் கை வைத்தியம் பார்த்திருக்கிறீர்கள். இப்படிப்பட்ட நபர்கள் அருகி வருகிறார்கள்.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 8. //சிபியுவை சுத்தம் செய்வது ஒரு பெரிய இந்திர ஜால வேலை என்பது உங்களுக்குத் தெரியும். //

  அது ஒரு இந்திரஜால வேலை என்றால் எங்கள் கவுண்டர் ஒரு ஜெகஜ்ஜால கில்லாடியாச்சே. விடுவாரா?
  இருந்தாலும் இந்த வயதில் இவ்வளவு ஆர்வம் பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான்.

  சேலம் குருப்ரியா

  பதிலளிநீக்கு
 9. இம்புட்டு வித்தை கத்து வச்சிறீக்களே ....

  பதிலளிநீக்கு
 10. //பிடுங்குவது சுலபம். மாட்டும்போதுதான் அதில் உள்ள வம்பு புரியும். //

  மிக மிக உண்மை. சும்மாவா சொன்னார்கள். ஆக்குபவுக்கு பல நாள் வேலை அழிப்பவனுக்கு ஒரு நாள் வேலை என்று. நன்கு அனுபவித்துத்தான் சொல்லியிருக்க வேண்டும். நானும் வீட்டில் ரிப்பேர் செய்கிறேன் என்ற பேரில் எதையாவது குடைந்து விட்டுசரி செய்ய தெரியாமல் (அதற்குரிய டூல்ஸ் நம்மகிட்ட இல்லையில்லையா அதுதான் இப்படி என்று ஒரு அசட்டு சிரிப்புடன்) பின்னர் ரிப்பேர் செய்ய ஆளை கூட்டி வருவேன். வீட்டுக்கு வீடு வாசப்படிதான். இருந்தாலும் அடுத்த முறையும் இதே கதைதான் நடக்கும்

  திருச்சி காயத்ரி மணாளன்

  பதிலளிநீக்கு
 11. //வீட்டிற்குள் இந்த வேலையைச் செய்திருந்தால் வீட்டு அம்மாள் சிபியுவை அப்படியே தூக்கி எறிந்திருப்பார்கள். //

  சிபியுவை மட்டுமா எறிந்திருப்பார்கள்?

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 12. //வேகுவம் கிளீனரில் புளோயரை ஆன் செய்து புளோயர் நாசிலை சிபியுவின் உள்ளே எல்லா இடங்களிலும் காண்பித்தேன்.//

  நல்ல வேளை. புளோயரை உபயோகித்தால் சில நேரங்களில் உள்ளே "இன்னைக்கோ நாளைக்கோ" என்ற நிலையில் இருக்கும் சில சோல்டர் செய்த இணைப்புகள் விட்டு விடும். உங்களுக்கு அப்படி ஏதும் நடக்காமல் இருந்தது நீங்கள் இல்லையில்லை உங்கள் பார்யாள் செய்த புண்ணியம்தான்.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 13. //ஒரு கேபிளும் அநாமத்தாக கிடக்கவில்லை என்று சுற்றுமுற்றும் பார்த்து உறுதி செய்து கொண்டேன்//

  இருந்தாலும் உங்கள் நகைச்சுவைக்கு குறைவே இல்லை. இந்த வாக்கியத்தை மட்டும் பத்து முறையாவது படித்து படித்து சிரித்திருப்பேன். நல்ல வேளையாக பக்கத்தில் யாரும் இல்லை. இருந்திருந்தால் இவருக்கு என்ன ஆயிற்று என்று நினைத்திருப்பார்கள்.

  திருச்சி காயத்ரி மணாளன்

  பதிலளிநீக்கு
 14. //போயிருந்த என் உயிர் திரும்ப வந்தது.//

  உங்கள் உயிர் மட்டுமா? எங்கள் உயிரும்தான் திரும்பி வந்தது. கவுண்டரோட நகைச்சுவையை படிக்காமல் இருக்க முடியவில்லை.
  தொடரட்டும் உங்கள் பனி.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 15. வீட்டுக்குள் வைத்திருக்கும் கம்ப்யூட்டருக்குள் இவ்வளவு தூசிகள் எப்படி புகுந்தன
  என்பது ஒரு ஆச்சரியமான விஷயமே.

  பதிலளிநீக்கு
 16. //வீட்டுக்குள் வைத்திருக்கும் கம்ப்யூட்டருக்குள் இவ்வளவு தூசிகள் எப்படி புகுந்தன என்பது ஒரு ஆச்சரியமான விஷயமே.//

  அப்படியென்றால் நாள் முழுவதும் வெளியே சுற்றும் நமது உடம்பில் மூக்கு வழியாக எவ்வளவு தூசு தும்பு உள்ளே போயிருக்கும். அதனால்தான் சுற்றுப்புறசூழ்நிலை சுத்தமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.
  சுற்றுப்புற சூழ்நிலையை சுத்தமாக வைத்திருக்க ஆகும் செலவு அதிகமா இல்லை எல்லா கருமத்தியும் சகித்துக்கொண்டு வாழ்ந்து வரும் வியாதிகளுக்கு மருத்துவரிடம் சென்று செய்யும் செலவு அதிகமா என்பது ஒரு பதில் இல்லாத ஒரு கேள்வி.
  முதல் வேலைக்கு ஒரு சமுதாய மாற்றமே வேண்டும். இரண்டாம் வேலைக்கு நாம் மட்டுமே போதும் ஆனால் அது வருங்கால சமுதாயத்தையே பாதிக்கும்.
  சுத்தம் சோறு போடும், கந்தையே ஆனாலும் கசக்கி கட்டு, போன்ற பழமொழிகள் எல்லாம் இருந்த நமது நாட்டில் இப்போது சுத்தத்தை சுத்தமாக காணோம்.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 17. சி.பி யு சுத்தம் செய்வதை சுவாரஸ்யமாக கூற உங்களால்தான் முடியும்! எப்படியோ எழுநூற்று ஐம்பது ரூபாயோடு முடிந்ததே சந்தோஷப்படுங்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 18. சிபியூவை எப்படி சுத்தம் செய்வது என்பதை நுணுக்கமாகக் சொல்லிவிட்டீர்கள்...
  750 ரூபாயோடு போனது குறித்து சந்தோஷமப்படுங்கள் ஐயா....

  பதிலளிநீக்கு
 19. வீட்டுக்குள் இருக்கும் கம்ப்யூட்டரில் இவ்வளவு தூசி. நானும் இதை உணர்ந்தவன்/ என் கம்ப்யூட்டர் மானிடர் ஸ்ட்ரைக் செய்தபோது வேறு மாற்றிவிட்டேன்

  பதிலளிநீக்கு
 20. கம்ப்யூட்டர்தான் சரியாகி விட்டதே. பின்னர் ஏன் இவ்வளவு நீண்ட மௌனம்?
  ஸ்மார்ட் போன் எனும் மூன்றாவது பொண்டாட்டியோடு குலவிகொண்டிருக்கிறீர்களா என்ன?
  முதல் பொண்டாட்டி உங்கள் பார்யாள்
  ரெண்டாவது பொண்டாட்டி கம்ப்யூட்டர்
  மூன்றாவது பொண்டாட்டி ஸ்மார்ட் போன்
  வாசகர்களாகிய எங்களை நாலாவது பொண்டாட்டியாக நினைத்துக்கொண்டு எங்களையும் கொஞ்சம் கவனியுங்களேன்

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்கவேண்டும். கொஞ்சம் சோம்பல், கொஞ்சம் சலிப்பு. பதிவெழுதி என்னத்தைச் சாதிச்சோம் என்கிற விரக்தி. இவை எல்லாம் சேர்ந்துவிட்டது. வருகிறேன். எப்பொழுது என்று சொல்ல முடியவில்லை,

   நீக்கு
  2. உண்மையிலேயே மனது கஷ்டமாக இருக்கிறது.
   உடல் நிலை ஏதாவது சரியில்லையா?
   இல்லை மன சோர்வா?
   இன்றைய கால கட்டத்தில் வாழ்க்கை முறையில் இவை இரண்டுமே தவிர்க்க முடியாதவை.
   முதல் காரணத்துக்கு டாக்டர் இருக்கிறார் (ஆனால் நாம் இருப்போமா என்ற கேள்வி மனதுக்குள் வருவது தவிர்க்க முடியாததுதான்)
   இரண்டாம் காரணமாக இருக்கும் பட்சத்தில் எனது பதில் இதுதான். என்னை மாதிரி எத்தனை எத்தனையோ பேருக்கு மன சோர்வை போக்கி சிரிப்பை வரவழைத்த உங்களுக்க மன சோர்வு என்ற கேள்வி எழுகிறது. உங்கள் பழிய பதிவுகளை எடுத்து படித்தாலே போதுமே. தப்பித்தேன் பிழைத்தேன் என்று அந்த மன சோர்வு ஓடி விடாதா என்ன?

   என்றும் நாங்கள் உங்களுடன்;
   உங்கள் உடல் & மன நலம், நீண்ட ஆரோக்கியம் வேண்டி பிரார்த்திக்கும் அனைத்து வாசகர்கள் சார்பாகவும்
   சேலம் குரு

   நீக்கு
 21. நல்ல பதிவு பிற்காலத்தில் எனக்கு இந்த பிரச்சினை வந்தால் சமாளிக்க இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்

  மிக்க நன்றி அய்யா

  பதிலளிநீக்கு