திங்கள், 31 மார்ச், 2014

நாய் பெற்ற தங்கப் பழம்


தங்கப் பழம் ஒரு விலை மிகுந்த பொருள்தான். ஆனால் ஒரு நாய்க்கு அது கிடைப்பதால் அதற்கு என்ன பயன்? அதுபோல் நான் பலவற்றைச் சேமித்து வந்தேன். பைகளைச் சேர்த்த கதையை சென்ற பதிவுகளில் பார்த்தோம். இப்போது அது போக சேகரித்த மற்றவை என்னவென்று பார்ப்போம்.

சிறு வயதில் மகாத்மா காந்தியின் சுய சரிதையைப் படித்திருக்கிறேன். சத்திய சோதனை என்பது அதன் பெயர். அது போக அவரைப்பற்றிய பல துணுக்கு செய்திகளையும் படித்திருக்கிறேன். அதில் என் மனதில் தைத்த ஒரு செய்தி - அவர் எந்தப் பொருளையும் வீண் பண்ணமாட்டார் என்பதே.

உடுத்தும் வேஷ்டி கிழிந்து விட்டால் அதை கிழித்து துண்டாக உபயோகப்படுத்துவார். அதுவும் கிழிந்தால் அதை இன்னும் சிறிய துண்டுகளாக்கி கைக் குட்டையாகப் பயன்படுத்துவார்.

அதே மாதிரி, எழுதும் காகித விஷயத்திலும் அவர் எந்தவொரு துண்டுக் காகிதத்தையும் வீணாக்க மாட்டார். தபால்கள் வரும் உறைகளையும் கூட கிழித்து அதன் உள் பக்கத்தை எழுதுவதற்கு உபயோகப்படுத்துவார்.

நான் மகாத்மா காந்தியின் சீடன் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவருடைய கொள்கைகளை கடைப்பிடிப்பவன் அல்ல. இருந்தாலும் இந்த காகிதம், துணி விஷயங்கள் என்னை உடும்புப்பிடி போல் பிடித்துக்கொண்டன.

ஒரு பக்கம் காலியாக இருக்கும் காகிதங்கள், நன்றாக இருக்கும் கவர்கள், பழைய நோட்டுகளில் எழுதாமல் இருக்கும் காகிதங்கள், பழைய டைரியில் காலியாக இருக்கும் காகிதங்கள், ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட பிட் நோட்டீசுகள், சாமான் வாங்கிய பில்கள், இப்படி எந்தக் காகிதத்தைப் பார்த்தாலும் அவைகளை சேகரித்து, ஒரே அளவாக வெட்டி, அதை நூலால் தைத்து பின்னால் உபயோகப்படும் என்று வைத்துக் கொள்வேன்.

இப்படியே சில கம்பெனிகள் ரெடி மேடாக சிறிய, நடுத்தர சைசில் நோட்டுப் புத்தகங்கள் போட்டு தங்கள் கஸ்டமர்களுக்கு கொடுப்பார்கள். அத்தகைய நோட்டுகள் கிடைத்தால் விடுவதில்லை. முடிந்தால் இரண்டு அல்லது மூன்று வாங்கி விடுவது வழக்கம். இவைகளையும் சேமித்து வைத்துக் கொள்வேன்.

எங்காவது வெளியூர் போனால் அங்கு பிளாட்பாரக் கடைகளில் இந்த மாதிரி சிறிய பாக்கொட் நோட்டுகள், குறிப்பெடுக்கும் நோட்டுகள் விற்பதைப் பார்த்தால், அந்த இடத்தை விட்டு கால்கள் நகருவதில்லை. இரண்டு மூன்று ஐட்டங்கள் வாங்கினால்தான் மனம் அமைதிப்படும். இவ்வாறு சேமித்த நோட்டுகள் ஏராளம்.

ஆபீஸ் விஷயமாக பல மீட்டிங்குகள் நடக்கும். அந்த மீட்டிங்குகளில் எழுதுவதற்காக நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பார்கள். இவைகளை விடுவதில்லை.(கூடவே ஒரு பால் பாய்ன்ட் பேனாவும் கொடுப்பார்கள் - பேனாக்கள் கதை தனிக்கதை, அடுத்த பதிவில் கூறுகிறேன்)

வெளி நாடுகள் போகும்போது அங்கு ஆபீசில் கிடைக்கும் நோட்டுகளை ஒன்றுக்கு நான்காக லவட்டிக் கொண்டு வருவேன்.

புது வருட ஆரம்பத்தில் கம்பெனிகள் டைரி கொடுப்பது உங்களுக்குத் தெரியும். இப்படி நமக்கு யாராவது டைரி கொடுக்க மாட்டார்களா என்று ஏங்கியிருந்த காலம் போய், வருடத்திற்கு குறைந்தது அரை டஜன் டைரிகள் வரும் பொற்காலம் துவங்கியது. டைரிகள் எல்லாம் கோல்டு கில்ட் போட்டவைகள். பொதுவாக டைரிகளை பத்து நாளைக்கு மேல் எழுதுபவர்கள் மனித இனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.

நான் சாதாரண மனிதன். வந்த டைரிகளில் சாதாரணமாக இருக்கும் ஒன்றில் வெகு வேகமாக டைரிக் குறிப்புகள் எழுதுவேன். பத்து நாள் இது நடக்கும். அத்தோடு நின்று விடும். மற்ற டைரிகளை பத்திரமாக அலமாரியில் வைத்துக்கொள்வேன். ஏன் அப்படி டைரிகளை சேகரித்தேன் என்று இன்று யோசித்தால் ஒரு விடையும் கிடைக்க மாட்டேன் என்கிறது. எது கிடைத்தாலும் சேகரித்து வைத்துக் கொள்ளும் பைத்தியக்காரன் போல்தான் நடந்து கொண்டிருக்கிறேன்.

இப்படி சேர்த்த டைரிகள், நோட்டுப் புத்தகங்களை நான் ஒழுங்காக எந்த வேலைக்கும் பயன்படுத்திய ஞாபகமே இல்லை. பின்னால் உபயோகப்படும், அதனால் இப்போது வேண்டும். அவ்வளவுதான்.

இப்படிச்சேர்த்த நோட்டுப் புத்தகங்கள் இரண்டு மூன்று பெட்டிகள் ஆகி விட்டன. இப்போது அலமாரி, மற்றும் அட்டாலிகளை (Loft) சுத்தம் செய்யும்போது திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டது. இவைகளை இனிமேல் என்ன செய்யப்போகிறோம்? என் சிற்றறிவிற்கு எட்டியவரையில் எந்த உபயோகமும் தெரியவில்லை. அப்புறம் எதற்கு இந்தக் கண்றாவிகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்று பட்டது.

இதில் என்ன கஷ்டம் வந்தது என்றால் இவைகளை என்ன செய்வது என்பதுதான். சிலவற்றை எதிரில் உள்ள மளிகைக் கடையில் கொண்டு போய் அவர்கள் பில் போட உதவுமென்று கொடுத்தேன். கொஞ்சம் நன்றாக இருப்பவைகளை அக்கம் பக்கம் இருக்கும் பள்ளிக்குழந்தைகளுக்குக் கொடுத்தேன். இப்படியாக எப்படியோ கஷ்டப்பட்டு எல்லா நோட்டுப் புத்தகங்களையும் தானம் கொடுத்து முடித்தேன்.

டைரிகள் மட்டும் இன்னும் என் புத்தக அலமாரியில் இருக்கின்றன. அவைகளை கொடுத்துவிட்டால் அப்புறம் அலமாரி காலியாக இருக்கும். ஒரு முனைவர் பட்டம் வாங்கின ஆராய்ச்சியாளரின் அலமாரி காலியாக இருந்தால் பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்? இவருடைய மேல் மாடியும் காலிதான் போலிருக்கிறது என்று நினைக்க மாட்டார்களா? வக்கீல் வீட்டு அலமாரியில் சட்டப் புத்தகங்கள் இல்லாவிட்டால் அந்த வக்கீலுக்கு கேஸ்கள் வருமா? ஆகவே டைரிகள் இன்னும் இருக்கின்றன.

நோட்டுப் புத்தகங்களை தானம் கொடுத்து முடித்தவுடன் ஏதோ தலைமேல் இருந்த பெரிய சுமை இறங்கினது போல் உணர்ந்தேன். அடுத்த பதிவில் நான் துணிகள் வாங்கி சேகரித்த கதை (உண்மைக் கதைதான்) சொல்கிறேன்.

24 கருத்துகள்:

  1. பொருத்தமான தலைப்பு. எல்லோருக்குமே இது பொருந்தும்!



    பதிலளிநீக்கு
  2. //பொதுவாக டைரிகளை பத்து நாளைக்கு மேல் எழுதுபவர்கள் மனித இனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்//

    ஹா...ஹா..ஹா...

    பதிலளிநீக்கு
  3. நாய் பெற்ற தெங்கம்பழம். நல்ல வேளை, சிறு வயதுமுதல் இந்த hoarding பழக்கம் எனக்குக் கிடையாது.

    பதிலளிநீக்கு
  4. பள்ளிக்குழந்தைகள் உட்பட பலரையும் சந்தோசப்படுத்தி விட்டீர்கள் ஐயா...

    அடுத்து பேனாக்கள் கதை அல்லவா வர வேண்டும்...? ஹிஹி...

    பதிலளிநீக்கு
  5. //பொதுவாக டைரிகளை பத்து நாளைக்கு மேல் எழுதுபவர்கள் மனித இனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.//

    சரியாக சொன்னீர்கள். டைரி வாங்கியவர்களில் பெரும்பான்மையோர் முன்பக்கம் தங்கள் பெயரை எழுதுவதோடு சரி. அதற்குப்பிறகு எதுவும் எழுதாமல் விட்டுவிடுவார்கள். அடுத்த ஆண்டு புதிய டைரி வந்ததும் பழையதை தூக்கி எறிந்துவிடுவார்கள் (ஆனால் நீங்கள் இந்த இரகத்தை சேர்ந்தவர் இல்லை!) பதிவை இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. பொருத்தமான தலைப்பு.

    டைரி விஷயத்தில் நான் முன் ஜாக்கிரதை முத்தண்ணா. கொடுக்கும்போதே வேண்டாமென்று சொல்லிவிடுவேன். சிலர் பிடிவாதமாகக் கொடுத்தாலும் அதை வேறு யாருக்காவது கொடுத்துவிடுவேன். அப்படியும் சில டைரிகள், எழுதப்படாத டைரிகள் என்னைப் பார்த்து பல்லை இளிக்கின்றன - புத்தக அலமாரியிலிருந்து.....

    பதிலளிநீக்கு
  7. ஐயோ......... குச் காம் கோ ஆயேகான்னு ( எப்போதாவது தேவைப்படும் என்று சொல்வது '- ஹிந்தி) இப்படி சேர்த்து வைக்கிறோமே இதுவும் மனம் சார்ந்த ஒன்றுதான்.

    Obsessive–compulsive disorder என்று பெயர் வச்சுருக்காங்க, இங்கே.

    பதிலளிநீக்கு
  8. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம், எதுவும் தேவைக்கு அதிகமானால் பயனில்லை. என்னிடமும் இவ்வாறு நிறைய துணிகள், புத்தகங்கள், சஞ்சிகைகள் இருந்தன. சஞ்சிகைகளை எல்லாம் இலவசமாய் வாசிக்க கொடுத்துவிட்டேன், தேவையான புத்தகங்கள் தவிர மற்றவற்றை நூலகங்களுக்கு கொடுத்து விட்டேன், அவசியமற்ற உடைகளை உடை தானம் செய்துவிட்டேன். அதன் பின் வீடும் அறையும் காலியாக இருந்தது, மூன்று நாள் அடக்கி வைத்த மலத்தை வெளியேற்றி விட்ட ஆசுவாசம், ஒரு வகை ஜென் நிலை எட்டியதை உணர்ந்தேன். அனாவசியங்களை அப்புறப் படுத்துவதில் ஆனந்தம் உண்டு.

    பதிலளிநீக்கு
  9. . பின்னால் உபயோகப்படும், அதனால் இப்போது வேண்டும். அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  10. எனக்கும் இந்த மாதிரி பில் களில் நோட்டீசுகளில் காலியாக இருக்கும் பக்கத்தைசேர்த்து வைத்து டெலிபோன் பேசும்போது கிறுக்க என் ஜப்பானிய மொழிப் பாடங்களை எழுதிப் பார்க்க என உபயோகிப்பேன் .சேர்த்து வைத்ததை பிறருக்குக் கொடுத்து உதவியது நல்ல செயலே

    பதிலளிநீக்கு
  11. முன்பெல்லாம் டைரிகள் கிடைக்காத காலத்தில் நாட்குறிப்புகளை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வந்தேன். ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் டைரி எழுதிவந்திருக்கிறேன்.பிறகு டைரிகள் கிடைக்க ஆரம்பித்தபோது ஆலுவலகக் குறிப்புகளுக்காக உபயோகித்தேன் அவற்றை எல்லாம் எடுத்துப் படித்துப் பார்க்கும் போது அந்த நாள் நினைவுகள் துல்லியமாய் நடை போடும்.

    பதிலளிநீக்கு
  12. என்னிடம் பழைய வார இதழ்களில் இருந்து கதைகள் சேகரித்து தொகுக்கும் பழக்கம் இருந்தது! பின்னர் நிறைய சேர்ந்து போக எடைக்கு போட்டுவிட்டேன்! இப்போது பதிவுலகம் வந்த பின் செய்தது தவறு என்று தோன்றுகிறது! நல்ல பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அந்தப் பழக்கம் வைத்திருந்தேன். அந்தக் காலத்துப் பத்திரிக்கைகள் அச்சிட்ட காகிதம் நியூஸ் பிரின்ட் காகிதம் ஆனதால் சில வருடங்களுக்குப் பிறகு மக்கிப்போய் விட்டன. நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. அவை இன்று இருந்தால் உங்களால் பயன் படுத்த முடியாத அளவிற்கு காகிதங்கள் மக்கிப்போயிருக்கும்.

      நீக்கு
  13. இந்த ஆண்டு நாட்குறிப்பு அடுத்த ஆண்டு எழுத முடியாதே! அதை பல ஆண்டு வைத்து இருந்து பயன்படாது என்று தெரிந்து அடுத்தவருக்கு கொடுத்ததால் அதன் முழுப்பயன் கிடைக்காது.வேறு கணக்கு ,முகவரிகள் எழுதிவைக்க இப்படி மட்டுமே பயன்படும். அடுத்தவர் பெற்று கொள்ளும் போது அவர் அடையும் மனமகிழ்ச்சி கிடைத்தது போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை, ஸ்ரீனிவாசன். அதனால்தான் அவைகளை புஸ்தக அலமாரியில் அலங்காரமாக அடுக்கி வைத்திருக்கிறேன்.

      நீக்கு
  14. அருமையான அனுபவப் பகிர்வு.

    என்னால் இன்று இப்போது தான் படிக்க நேர்ந்தது.

    எழுதாத பேப்பர்கள் விஷயத்தில் நானும் தங்களைப்போலவே இருந்தவன் என்பதால் என்னால் இதை மிகவும் ரஸிக்க முடிந்தது.

    யோசித்துப்பார்த்தால் எல்லாமே அவசியம் தான்.

    ஞானோதயம் ஏற்பட்டு நன்கு ஆழ்ந்து யோசித்தால் எல்லாமே வெளியேற்றப்பட வேண்டிய குப்பைகள் மட்டுமே தான்.

    இது நமக்குப் புரிபடுவதற்குள் வாழ்நாளின் பெரும்பகுதியும் கடந்து போய் விடுகிறது. ;)

    பதிலளிநீக்கு
  15. மின்னஞ்சல்:

    செல்வம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் அதை நன்கு பயன்படுத்தத் தெரிந்தவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் அச்செல்வம் பயனின்றி அழியும். எப்படித் தெரியுமா?
    ஒரு நாயின் கையில் முழுத் தேங்காய் கிடைத்தது. அதை உண்ண நாய்க்கு அளவிட முடியாத ஆசை. ஆனால் அதை உரித்துத் தின்னும் வழியறியாது. மற்றவர்க்குக் கொடுக்கவும் மனமில்லாமல் தானும் உண்ண முடியாமல் உருட்டிக் கொண்டே இருக்கும். அதுபோலத்தான் மற்றவர்க்குக் கொடுக்கவும் தான் அனுபவிக்கவும் அறியாதவர் பெற்ற செல்வமும் பயனின்றி அழியும்.

    வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
    முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி
    வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
    நாய்பெற்ற தெங்கம் பழம்

    வாழ்த்துகளுடன்,
    banama | irfhan@dumbstick.com

    பதிலளிநீக்கு
  16. ஐயா... காகிதங்கள், நோட்டுகள், டைரிகள் சேகரித்த கதை சொன்னீர்கள், சுவாரஸ்யமாக.
    ஒரு சந்தேகம்: அடுத்த பதிவில் த(வ)ரப் போவது...
    1. பேனாக் கதை
    2. துணிக் கதை.
    சரியான விடை எது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு நண்பருக்கு,
      இரண்டையும் தர உத்தேசித்திருக்கிறேன். கட்டாயம் தருவேன். அதற்குள் ஒரு அவசர பதிவு போடவேண்டிய அவசரம் வந்து விட்டது. திருச்சியின் ஒரு இளைஞரைப்பற்றிய பதிவு போடவேண்டும்.

      நீக்கு
  17. உங்களைபோல நிறைய பேர்கள் இருக்கிறார்கள். என் அம்மா இப்படித்தான். ஒரு நூலகம் ஆரம்பிக்கும் அளவிற்கு பழைய கதைகளை சேர்த்து, தானே தைத்து, தானே பைண்டு பண்ணி வைத்திருந்தார். நீங்கள் சொன்னதுபோல எல்லாமே மக்கிப் போய்விட்டது.
    அம்மாவைப்போல இருக்கக்கூடாது என்று நினைத்திருப்பதால் என்னிடம் அத்தனை குப்பை சேரவில்லை. ஆனாலும் சேர்ந்துதான் இருக்கிறது. டைரிகள் யாராவது கொடுத்தால் வேண்டாமென்று சொல்லிவிடுவேன்.
    நீங்கள் எழுதியிருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு