கல்யாணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் என்று ஒரு சடங்கு இருக்கிறது. வெகு நாட்களுக்கு முன் பொதுவாக பிரம்மண சமூகத்தில்தான் இந்த வழக்கம் நடைமுறையில் இருந்தது. பிறகு மற்ற சமூகத்தினரும் இந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள்.
இந்த சடங்கைப் பற்றி ஆழ்ந்து யோசித்தீர்களேயானால் ஒரு உண்மை புலப்படும். அந்தக் காலத்திலேயே பெண்ணுரிமையைப் பற்றி தீவிரமாக யோசித்தவர்தான் இந்தச் சடங்கை நடைமுறைப் படுத்தியிருக்க வேண்டும்.
கல்யாணம் என்று நடந்து விட்டால் புருஷன் என்ன அடித்தாலும் உதைத்தாலும் பெண் திருப்பி அடிக்க முடியாத சூழ்நிலைதான் அன்று இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் இந்தச் சடங்குகள் நடந்தன. ஒரு புத்திசாலிப் பெண்ணாக இருந்தால் இந்தச் சடங்கின் பொருளை உணர்ந்திருப்பாள்.
அந்தக் காலத்தில் அம்மியும் குழவியும் இல்லாத வீடே கிடையாது. பிற்காலத்தில் மிக்சி, கிரைண்டர் வந்த பிறகும் கூட அம்மி தொடர்ந்து வீடுகளில் இருக்கிறது. காரணம் நமது கடைசி யாத்திரையின்போது இது கண்டிப்பாகத் தேவைப்படும். தவிர இந்த அம்மியும் குழவியும் எளிதில் கண்ணில் படக்கூடிய இடத்தில்தான் போடப்பட்டிருக்கும்.
ஒரு நிலையில் புருஷன் தொந்தரவு சகிக்க முடியாமல் போகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த அபலைப் பெண் என்ன செய்வாள்? பெண்களுக்கு கண்ணீரே ஆயுதம் என்றாலும் அந்தக் கல் நெஞ்சுக்காரன் அந்த ஆயுதத்திற்கு மசியாமல் போனால் என் செய்வது?
இங்குதான் அந்தப் பெண் கல்யாணத்தின்போது நடந்த அம்மி மிதித்த காட்சியை நினைவு கூர்வாள். ஆஹா, இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் உதவுவதற்காக அல்லவா அந்தச் சடங்கை வைத்தார்கள். இந்த ஞானம் எனக்கு இது வரையில் தோணாமல் போயிற்றே என்று ஞானோதயம் பிறக்கும்.
அன்று இரவு புருஷன் என்கிற மிருகம் குடித்து விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் போது அம்மிக் குழவியை எடுத்து அவன் தலையில் ஒரே போடாகப் போட்டு விட்டால் வேலை முடிந்தது. அவளிடம் கத்தியோ, துப்பாக்கியோ இருக்க வாய்ப்பு இல்லை. உடனே கிடைக்கக்கூடிய ஆயுதம் அம்மிக்குழவி ஒன்றுதான். அதை உபயோகிக்க வேண்டியதுதான்.
நான் ஏதோ கற்பனையில் இந்த மாதிரி சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். நான் சிறுவனாக இருக்கும்போதே இந்த மாதிரிக் கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்றிலிருந்து இது வரை இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி பல கணவர்களை அவர்கள் பெண்டாட்டிகள் மேலுலகம் அனுப்பியிருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு கூட செய்தித்தாள்களில் இந்த மாதிரி செய்தி ஒன்று படித்த நினைவு இருக்கிறது.
பெண்டாட்டிகள் மட்டுமல்ல. பல புருஷர்களும் தங்கள் எதிரிகளை இவ்வாறுதான் தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள். "16 வயதினிலே" சினிமாவில் கமலஹாசன் வில்லனைத் தீர்ப்பதற்கு இந்த டெக்னிக்கைத் தான் கையாண்டது நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆகவே இந்த அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு மிகவும் அர்த்தமுள்ளது என்று கூறிக்கொண்டு பதிவை நிறைவு செய்கிறேன்.