இமிக்ரேஷன் விசா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இமிக்ரேஷன் விசா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஏப்ரல், 2013

13. இமிக்ரேஷன் விசா

முதல் ட்ரிப்பில் போய் வந்த அனைத்துப் பதிவர்களும் தங்கள் தங்கள் தளங்களில் தேவலோகத்தை வானளாவப் புகழ்ந்திருந்தார்கள். அதைப் படித்த மற்ற பதிவர்கள் தங்களை ஏன் கூப்பிடவில்லை என்று கோபமாக பதிவுகள் போட்டார்கள். இப்படியாக ஒரு வாரம் முழுவதும் தேவலோகத்தைப் பற்றிய பதிவுகள்தான் இடப்பட்டன.  சினிமா விமர்சனப் பதிவுகள் காணாமல் போய்விட்டன.

ஓரிரு நாளில் இமிக்ரேஷன் விசாவிற்காக ஜனங்கள் வரத்தொடங்கினார்கள். ஒவ்வொருவராக உள்ளே அழைத்து வரப்பட்டு என் ரூமுக்கு கொண்டுவரப்பட்டார்கள். அவர்களைப் பற்றி நன்கு விசாரித்து விட்டு, எனக்கு திருப்தியானவுடன், அவர்களிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினேன். பிறகு அவர்களை பேங்குக்கு சென்று பணத்தைக் கட்டி விட்டு அந்த செலானைக் கொண்டுவரச்சொன்னேன்.

அவர்கள் பணம் கட்டி வந்தவுடன் செலானை வாங்கி அவர்களுடைய ஒப்பந்தத்தில் பின் பண்ணி  தேவலோகத்திற்குப் போகும் தபால் பையில் போட்டேன். அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை இமிக்ரேஷன் விசா பற்றிய விபரங்களைக் கூறிவிட்டு, அவர்களுக்கு விருந்து கொடுத்து, பிறகு அவர்களைத் திருப்பி அனுப்பினேன்,

முதல் நாள் பத்துப் பேர்கள் மட்டுமே வந்தார்கள். நாளாக நாளாக கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்ததைப் பார்த்ததும், இன்டர்நெட்டில் இமிக்ரேஷன் விசாவிற்காக ஒரு தளம் ஆரம்பித்தோம். இமிக்ரேஷன் விசா வேண்டுபவர்கள் இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும். அவர்களுக்கான நாள் மற்றும் நேரம் அலாட் செய்யப்பட்டு இன்டர்நெட்டில் வெளியிடப்படும். அதன்படிதான் வரவேண்டும் என்று நிர்ணயித்தோம்.

இப்படியாக ஆறு மாதத்தில் 1500 பேர்களுக்கு விசா கொடுத்திருப்போம். வரவு செலவு கணக்குகளைப் பார்த்தோம். மொத்த வரவு 1,50,000 கோடி அதாவது ஒன்றரை லட்சம் கோடி. இதில் இந்திய அரசுக்கு வரி கட்டினது 75,000 கோடி. மீதி 75,000 கோடியில் எங்கள் ஊதியமாக எடுத்துக் கொண்டது  15,000 கோடி. இதில் என் பங்கு 7500 கோடி. பொதுவிற்கும் செக்குவிற்கும் ஆளுக்கு 3750 கோடி.

இப்படி கணக்குப் பார்த்ததில் எங்கள் ஊதியத்தொகையைக் கண்டு மலைத்துப் போய் விட்டோம். இந்தப் பணத்தை என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. பொதுவைக் கூப்பிட்டு, வெளியில் போய் ஒரு நல்ல ஆடிட்டர், அனுபவம் மிக்க ஒரு வக்கீல், இவ்வளவு பணத்தை டீல் பண்ணக்கூடிய ஒரு அரசியல்வாதி ஆகியோரைக் கூட்டிக்கொண்டு வரும்படி அனுப்பினேன்.

அவர்கள் வந்தவுடன் அவர்களை வரவேற்று உபசரித்த பிறகு விவரங்களைச் சொன்னோம். அரசியல்வாதி எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். நாங்கள் தொகையைச் சொன்னவுடன் அவர் "பூஊஊஊ, இவ்வளவுதானா, இதற்கா என்னை வரச்சொன்னீர்கள், முதலிலேயே விவரத்தைச் சொல்லியிருந்தால் நான் என் வட்டச் செயலரை அனுப்பியிருப்பேனே, அவரே இந்த மாதிரி தொகைகளை எல்லாம் டீல் பண்ணியிருப்பாரே என்றார்.

அப்படீங்களா, எங்களுக்கு அனுபவம் போதாதாகையால் உங்களை வரவழைத்து விட்டோம், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவரைத் தாஜா பண்ணினேன். பிறகு எல்லோரும் கலந்து ஆலோசித்தோம். இந்தப் பணத்தில்  எனக்கு 500 ஏக்கர் நிலமும், மற்றவர்கள் இருவருக்கும் ஆளுக்கு 250 ஏக்கர் நிலமும் அவரவர்கள் ஊர்களில் வாங்கிப்போடுவது என்று முடிவு செய்தோம்.

அரசியல்வாதி ஊருக்குப் போனதும் தனது வட்டத்தை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லிவிட்டு மூவரும் கிளம்பிப் போனார்கள். மறுநாள் "வட்டம்" தனது எடுபிடிகளுடன் வந்தார். விஷயத்தைக் கேட்டார். இவ்வளவுதானே. ஒரு வாரத்தில் முடித்துக் கொடுத்து விடுகிறேன். கவலைப் படாதீர்கள் என்று சொல்லி விட்டுப் பணத்தைக் கொடுக்கும்படி கேட்டார்.

பேங்க் மேனேஜரைக் கூப்பிட்டு எங்கள் பணத்தை முழுவதையும் வட்டத்திடம் கொடுக்கச் சொன்னோம். அவர் அந்தப் பணத்தை இரண்டு லாரிகளில் ஏற்றி வட்டத்துடன் அனுப்பினார்.

பிறகு நடந்ததுதான் நாங்கள் எதிர்பாராதது! விவரங்கள் அறியக் காத்திருங்கள்.