மேற்குத்தொடர்ச்சி மலைகளின் நடுவே இந்த அமைதிப் பள்ளத்தாக்கு இருப்பதை பலரும் அறிந்திருப்பார்கள். பல வருடங்களுக்கு முன்பு நான் இங்கு சென்றிருக்கிறேன். இப்போது இரண்டு நண்பர்கள் இந்தப் பள்ளத்தாக்கைப் பார்க்க விரும்பியதால் 9-7-2011 அன்று நாங்கள் புறப்பட்டோம். அன்று சனிக்கிழமையானதால் போகும் வழியில் இருந்த பெருமாளைச் சேவித்து விட்டு சென்றோம்.
அமைதிப் பள்ளத்தாக்கை இரண்டு வழிகளில் அடையலாம். கோவையிலிருந்து ஆனைகட்டி வழியாக அட்டப்பாடி, அகழி வழியாக முக்காலி என்னும் இடத்திற்குச் செல்லவேண்டும். இதே முக்காலியை பாலக்காடு, மன்னார்க்காடு வழியாகவும் அடையலாம். இரண்டு வழியாகவும் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன. சாலை வசதிகளும் நன்றாக இருக்கின்றன.
இந்த முக்காலியில்தான் அமைதிப்பள்ளத்தாக்கின் வன அலுவலர் அலுவலகம் இருக்கிறது. இங்கிருந்து வன இலாக்காவின் தனி வாகனங்களில்தான் அமைதிப் பள்ளத்தாக்குக்கு உள்ளே போகமுடியும். தனியார் வாகனங்கள் போக அனுமதி இல்லை, போகவும் முடியாது. சாலை மிகவும் மோசம்.
மேலும் வரும் சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்திருக்கவேண்டும். நாங்கள் மூன்று பேர் என்பதால் எங்களுக்கு தனி அனுமதி கொடுத்தார்கள்.
மேலும் வரும் சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்திருக்கவேண்டும். நாங்கள் மூன்று பேர் என்பதால் எங்களுக்கு தனி அனுமதி கொடுத்தார்கள்.
அனுமதிக்கு தொடர்பு கொள்ளவேண்டிய விலாசம்:
போன்: 04924-253225
போஸ்ட்; Assistant Wildlife Warden,
Anquinde Information Centre,
Mukkali Post,
Mannarkad – 678582
Kerala State
வன இலாக்கா வாகன கட்டணம் – நபர் ஒன்றுக்கு ரூ.175.00
அமைதிப் பள்ளத்தாக்குக்குப் போகவர 4 மணி நேரம் ஆகும். பொதுவாக டூர் 11 மணிக்கு மேல்தான் ஆரம்பிக்கும். ஆகவே கையில் மதிய உணவுக்கு ஆகாரம், தேவையான தண்ணீர் ஆகியவை பயணிகளே கொண்டு செல்லவேண்டும். வனத்திற்குள் எந்தவிதமான கடைகண்ணிகளும் கிடையாது. மழை காலத்தில் செல்வதாக இருந்தால் குடை அவசியம். குளிர் அதிகமில்லை. தேவைப்படுபவர்கள் ஒரு ஸ்வெட்டரோ அல்லது ஒரு சால்வையோ கொண்டு செல்வது நல்லது.
இந்தப் பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால் எந்த விதமான பிளாஸ்டிக் பொருள்களும் கொண்டு செல்ல அனுமதியில்லை.