ஈமு கோழி பித்தலாட்டம்
என்ற என் பதிவை 1000 பேருக்கு மேல் பார்த்துள்ளார்கள். அவர்களுக்கு என் கடமை ஒன்று
இருக்கிறது. களத்தில் (Field) உள்ள நிலைமை என்ன என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டியது
என் கடமையல்லவா? நான் ஒரு கடமை வீரன் என்பது உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை
என்பது வேறு விஷயம்!
ஈமு கோழி ஆஸ்திரேலியாவின்
பறவை. அவைகளை ஐரோப்பியர்கள் இனம் கண்டு அவைகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் ஈமுவின்
மாமிசத்தை விரும்பி உண்டார்கள். இந்த மாமிசம் கொழுப்புச் சத்து குறைந்தது. ஆகவே இருதய
நோயாளிகளும் உண்ணலாம். மேலும் இந்த மாமிசம் பல மருத்துவ குணங்கள் பொருந்தியது என்று
சொல்கிறார்கள். ஆனால் இந்த குணத்தை யாரும் ஆராய்ச்சி செய்து பார்க்கவில்லை. இந்த மாமிசம்
கிலோ 400 ரூபாய்க்கு விற்கும் என்று சொல்லுகிறார்கள். ஆனால் இதை இந்தியாவில் யாரும்
இன்னும் சாப்பிட ஆரம்பிக்கவில்லை.
ஈமு கோழியை இந்தியாவுக்கு
யார் கொண்டு வந்தார்கள் என்று அதிகாரபூர்வமான தகவல் ஏதும் இல்லை. 1998 வாக்கில் ஆந்திர
பிரதேசத்தில் இதை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். தற்போது அங்கு பெரிய ஈமு பண்ணைகள்
இருக்கின்றன. சுமார் பத்து வருடங்களுக்கு முன் இந்த ஈமு தமிழ்நாட்டில் அறிமுகமாயிருக்கிறது. தற்போது பரவலாக தமிழ் நாட்டின் மேற்கு மாவட்டங்களில் பலர் ஈமு வளர்க்கிறார்கள். இதைப்
பற்றிய ஒரு விழிப்புணர்வு விவசாயிகளின் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
இந்த விழிப்பணர்வை
வியாபார ரீதியில் உபயோகப்படுத்த பலரும் ஆரம்பித்திருக்கிறார்கள். நான் ஈரோடு சங்கமத்திற்கு
போய்வந்த வழியெங்கிலும் நிறைய விளம்பரங்களையும் இரண்டொரு ஈமு பண்ணைகளையும் பார்த்தேன். விளம்பரங்கள் எப்போதும் மக்களை ஈர்க்கும். அதுவும் நல்ல வாசகங்களை உபயோகப்படுத்தினால்
அவைகளின் ஈர்ப்பு இன்னும் அதிகம். “குறைந்த முதலீட்டில் மாதம் ஆறு ஆயிரம் பணம் ஈட்டுங்கள்”
என்று ஈமு கோழியின் படத்தைப் போட்டு விளம்பரம் செய்து இருக்கிறார்கள். இவர்கள் என்ன
திட்டம் வைத்து இருக்கிறார்கள், அதில் உள்ள ஓட்டைகள் என்ன என்று வேறு ஒரு பதிவு போடுகிறேன்.
என்னுடைய உறவினர்
ஒருவர் ஆறு வருடங்களுக்கு முன்பு ஈமு பண்ணை ஆரம்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் சென்று பார்த்ததில்லை. அதற்கு அவசியம் வந்ததால் (பதிவு போடத்தான்-வேறு என்ன அவசியம்?) இன்று சென்று பார்த்து வந்தேன். அங்கு நான் அறிந்து கொண்டவைகளை இங்கு உங்கள் பார்வைக்கு
வைக்கிறேன்.
ஈமு வளர்ப்பு ஏறக்குறைய
கோழி வளர்ப்பு மாதிரிதான். ஏற்கனவே கோழி வளர்ப்பு பரவலாக இருக்கும் நாமக்கல், சேலம்,
ஈரோடு, கோவை மாவட்டங்களின் சீதோஷ்ண நிலையில் இவைகள் நன்கு வளரும். ஆண் பெண் இணைந்த
ஜோடிகளாகத்தான் இவைகளை வளர்க்க வேண்டும். வளர்ந்த ஜோடிகள் விலை ரூ. 30000.00 வரை இருக்கும். பொதுவாக மூன்று மாதக் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதுதான் நல்லது. அவைகள்தான் சூழ்நிலைக்கு ஏற்ப
அனுசரித்து வளர்ந்துவரும்.
மூன்று மாதக்குஞ்சுகள்
ஒரு ஜோடி 12000 முதல் 15000 வரை விற்கிறது. ஏன் இவ்வளவு விலை என்றால் இவைகளின் முட்டைகளின்
தற்போதைய மார்க்கெட் விலை முட்டை ஒன்றுக்கு 1250 ரூபாய். என் உறவினர் ஆறு வருடங்களுக்கு
முன் 15 ஜோடி (ஜோடி 15000 ரூபாய்) வாங்கி வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். அதற்கு நல்ல
கெட்டியான வலைக்கம்பி வேலி போட்டிருக்கிறார். ஒரு ஈமு கோழிக்கு சுமார் 20 ச.அடி இடம்
வேண்டும். மொத்தம் 600 சதுர அடி. தரையைச் சுத்தமாக வைக்கவேண்டும். இதற்கு ரூ.30000 செலவு செய்திருக்கிறார்.
ஈமு கோழிகளுக்கு
சாதாரண கோழித்தீவனமே போடலாம். நன்கு வளர்ந்த கோழிகள் ஒரு நாளில் ஒரு கிலோ (20 ரூ.) தீவனம் சாப்பிடும். தண்ணீர் நிறையக் குடிக்கும். நல்ல தண்ணீர் சுத்தமான பாத்திரத்தில்
வைக்க வேண்டும். மூன்று வருடங்களில் கோழிகள் முட்டையிட ஆரம்பிக்கும். அக்டோபர் முதல்
பிப்ரவரி வரையிலான காலத்தில்தான் முட்டையிடும். மூன்று நாட்களுக்கு ஒரு முட்டை வீதம் 100 நாட்களில் சுமார் 30 முட்டைகள் இடும். முட்டை கரும் பச்சை நிறத்தில் 600 கிராம்
எடையில் இருக்கின்றன. முட்டையை தற்போது பெரிய அடைகாக்கும் நிறுவனங்கள் முட்டை ஒன்றுக்கு 1250 ரூபாய் என்று விலை கொடுத்து பண்ணைக்கே வாரம் ஒரு முறை வந்து வாங்கிச் செல்லுகிறார்கள்.
இந்தக் கோழிகள் 40 வருடம் வரை வாழும் என்று சொல்கிறார்கள்.
வரவு செலவு விவரங்கள்: 30 கோழிகளுக்கு.
வேலி அமைக்க : ரூ. 30,000
30 கோழிகளின் விலை : ரூ. 1,80,000
30 கோழிகளை 3 வருடம்
வளர்க்க : ரூ. 3,00,000
---------------------------
மொத்தம் : ரூ. 5,10,000
ஏறக்குறைய 5 லட்சம்
நான்காவது வருடத்திலிருந்து
வரவு செலவு;
30 x 20 x 365 : ரூ. 2,19,000
தினம் ஒரு பெண்
கூலியாள் @ 150 ரூ. : ரூ
555,000
வேறு சிலவுகள் : ரூ 26,000
----------
மொத்தம் 3,00,000
அதாவது 3 லட்சம்
கோழி ஒன்றுக்கு 30 முட்டை வீதம் 15 பெட்டைக்கோழிகள் இடும்
முட்டைகள் @ 1250 ரூ.= 15 x 30 x 1250= ரூ. 5,62,500
நிகர லாபம் ரூ. 2,62,500
அதாவது 2.5 லட்சம்
மொத்தம் 5 லட்சம்
முதலீட்டுக்கு வருடம் ஒன்றுக்கு 2.5 லட்சம் லாபம் கிடைக்கிறது.
இது மிகவும் லாபகரமான
தொழிலாகத்தான் தெரிகிறது. ஆனால் இதில் கண்ணுக்குத் தெரியாத நுணுக்கங்கள் இருக்கின்றன. இந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் ஊக்கமளித்தால் அடுத்த பதிவில் அந்த விவரங்களை
எழுதுகிறேன்.