ஈமு பண்ணைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈமு பண்ணைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 டிசம்பர், 2011

எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் - ஈமு வளர்ப்பு


எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்

இந்தப் பழமொழி பிடிக்கலைன்னா இதைப் பாருங்க.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

இதுவும் வேண்டாமா? அப்ப இங்கிலீசுக்குப் போலாமா?

Make hay while sun shines.

இத்தனை பீடிகை எதுக்குன்னா, எல்லாம் நம்ம ஈமு கோழிக்காகத்தான்.

இன்றைய நிலவரப்படி ஈமு கோழிகளை வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்று வியாபாரக் கம்பெனிகள் சொல்லும் தகவல்களை கீழே கொடுத்திருக்கிறேன். முக்கியமான பாய்ன்ட் என்னவென்றால் அவர்கள் சொல்வது அனைத்தும் இன்றைய தேதியில் 100 சதம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை. அப்படியானால் அதில் என்ன தவறு கண்டேன் என்று கேட்கிறீர்களா? அதுதான் பெரிய சிதம்பர ரகசியம். தொடர்ந்து படியுங்கள்.

  1.   ஈமு கோழிகள் வளர்க்க சுலபமானவை.
  2.   அவை மூன்று வருடத்தில் முட்டை இட ஆரம்பிக்கும்.
  3.   முட்டைகள் சுலபமாக, ஒரு முட்டை ரூ.1250 வீதம் விற்பனையாகின்றன. உங்கள் பண்ணைக்கே வந்து கொள்முதல் செய்யப்படும்.
  4.   ஈமு கோழிகளின் இறைச்சி கிலோ 400 ரூபாய்க்கு விலைக்குப் போகும்.
  5.   அவைகளின் தோலிலிருந்து விலை உயர்ந்த கைப்பைகள், அலங்காரப் பொருள்கள் செய்யலாம். அதனால் தோலுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது.
  6.   அவைகளின் இறகுகளிலிருந்து பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
  7.   அவைகளின் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணை பல்வேறு மருத்துவக் குணங்கள் உடையது.
  8.   இப்படி ஈமு கோழியின் ஒவ்வொரு பாகமும் பல உபயோகங்களுக்கு மூலப் பொருளாகப் பயன்படுவதால் அவைகளிலிருந்து நல்ல பலன் உண்டு.
  9.   உங்கள் முதலீட்டுக்கு வேறு எந்தத் தொழிலிலும் கிடைக்க முடியாத அளவு நல்ல லாபம் எடுக்கலாம்.
 10. எப்போது வேண்டுமானாலும் பண்ணையைக் கலைத்துவிட்டு நீங்கள் போட்ட முதலீட்டை திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.

இந்த விளம்பரங்களைப் பார்க்கும் எந்த விவசாயிக்கும் ஆசை வருவது இயற்கையே. அவர்கள் உடனே இந்தக் கம்பெனிகளைப் படையெடுக்கிறார்கள். இந்தக் கம்பெனிக்காரர்கள் கில்லாடிகள். முதலில் சொன்ன பழமொழிகள் எல்லாம் இவர்களை மனதில் வைத்துத்தான் சொல்லப்பட்டவை. வசீகரமான, நல்ல விற்பனைத் திறமை கொண்டவர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் திட்டம் விவசாயிகளின் காதில் தேன் பாய்வது போல் இருக்கும். உடனே கடன் வாங்கியாவது அவர்கள் கேட்கும் டெபாசிட் தொகையைக் கட்டி விடுவார்கள்.

அவர்களின் திட்டம் என்னவென்று முன்பே எழுதியிருக்கிறேன். இருந்தாலும் இன்னொரு முறை சொல்கிறேன்.

  1.   விவசாயிகள் ஒன்றரை லட்சம் ரூபாய் இந்தக் கம்பெனிகளிடம் டெபாசிட்டாகக் கொடுக்கவேண்டும்.
  2.   கம்பெனி, விவசாயிகளுக்கு மூன்று ஜோடி, மூன்று மாதமான ஈமுக் குஞ்சுகள் கொடுக்கும்.
  3.   அந்தக் குஞ்சுகளுக்கு வேண்டிய கம்பி வேலி கம்பெனி சிலவில் அமைத்துக் கொடுக்கப்படும்.
  4.   குஞ்சுகளுக்குத் தேவையான தீனி அவ்வப்போது தேவைக்கேற்ப கொடுக்கப்படும்.
  5.   இந்தக் குஞ்சுகளைப் பராமரிப்பதற்காக அந்த விவசாயிக்கு மாதம் ஆறு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும். சில கம்பெனிகள் எட்டாயிரம் வரை கொடுப்பதாகச் சொல்லுகின்றன.
  6.   டாக்டர், இன்சூரன்ஸ் ஆகியவைகளைக் கம்பெனி கவனித்துக்கொள்ளும்.

இதில் கோழிகள் முட்டை வைக்க ஆரம்பித்த பின்னர் என்ன கண்டிஷன் என்பதைப் பற்றிய விவரங்கள் ஒன்றும் சொல்லப் படவில்லை. அவர்கள் போடும் பத்திரத்தில் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கலாம்.

பிறகு நடப்பவைகளைப் பற்றி எனக்கு நேரடி அனுபவம் இல்லை. இதைப் பற்றி ஒரு சர்வே எடுக்க வேண்டும். பிறகு அதைப்பற்றி எழுதுகிறேன். இதற்கு முன் இதைப்போல் பல கம்பெனிகள் தேக்கு மரம் வளர்க்கிறேன், அரிசி தருகிறேன், சர்க்கரை தருகிறேன் என்றெல்லாம் சொல்லி மக்களை மொட்டை போட்ட வரலாறு மறந்திருக்காது என்று நம்புகிறேன்.

ஈமு வளர்ப்பில் இருக்கும் இன்னொரு சிதம்பர ரகசியம் என்னவென்றால், இந்த மார்க்கெட் நிலை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பதுதான். இப்பொது எல்லோரும் ஈமு பண்ணை வைப்பதில் மும்முரமாக இருப்பதால் முட்டைகளும் கோழிகளும் இந்த விலைக்கு விற்கின்றன. எதிர்காலத்தில் பண்ணை வைக்க முடிபவர்கள் எல்லாம் பண்ணை வைத்தான பிறகு, இதே விலை நிலவரம் இருக்குமா என்பது பெரிய கேள்விக்குறி. எல்லாப் பண்ணைகளிலிருந்தும் வரும் முட்டைகளை யார் வாங்குவார்கள்? கோழியை கறிக்காக விற்க முடியுமா? முட்டைகளின் விலையும் கறியின் விலையும் எவ்வளவு இருக்கும்? அவைகளுக்கு எவ்வளவு தேவை இருக்கும்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் கண்டு பிடிப்பது கடினம். காலம்தான் பதில் சொல்லவேண்டும். ஆனாலும் தற்போதைய மார்க்கெட் நிலை இன்னும் பத்து வருட காலத்திற்கு நீடிக்கலாம். அது வரை கம்பெனிகள் விவசாயிகளை ஏமாற்றலாம். புத்திசாலி விவசாயிகள் சொந்தமாக பேங்கில் கடன் வாங்கியோ அல்லது சொந்த சேமிப்பில் இருந்தோ ஈமு பண்ணை அமைத்தால் ஓரளவு பணம் ஈட்டலாம்.