ஏமாற்றுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏமாற்றுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 மார்ச், 2016

10.விவசாயிகள் தற்கொலைகள் ஏன்?

Image result for விவசாயி தற்கொலை


10. மறுமலர்ச்சிகள் - விவசாயம்

அடுத்த வாரம் மீட்டிங் கூட்டினபோது பிரதம மந்திரியின் முகம் வாட்டமடைந்திருந்தது. ஏன் இப்படி டல்லாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். மக்கள் எல்லோரும் என்னைக் குறை கூறுகிறார்கள் என்றார். பெரும்பான்மை மக்களுக்கு நன்மை செய்யும்போது சிறுபான்மையினர் வருத்தப்படுவது இயற்கைதானே, நீங்கள் இதற்கெல்லாம் வருந்தலாமா, எது வந்தாலும் நான் இருக்கிறேன், உங்களை ஒரு பயலும் ஒன்றும் செய்ய முடியாது, சிறிது நாட்கள் கழித்து எல்லாம் சரியாகிவிடும் என்று அவருக்கு ஆறுதல் சொன்னேன்.


நிதி மந்திரியிடம் நாம் இப்போது மூன்று விஷயங்களை ஆலோசித்து தீர்மானங்கள் எடுக்கவேண்டும். அவை விவசாயம், கல்வி, தொழில் ஆகியவை. இந்த மூன்றிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும். அப்போதுதான் இந்தியா வல்லரசாக முடியும் என்றேன். அவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.


முதலில் விவசாயத்தைப் பார்ப்போம். இதில் முக்கியமான சங்கடம் என்னவென்றால், விவசாயத்திற்கு வேண்டிய நீர்வளம் இல்லை. இரண்டாவது விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. மூன்றாவது விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைப்பதில்லை. இது தவிர வேறு பிரச்சினைகள் உண்டா என்றேன். நிதி மந்திரி, சில சமயங்களில் அதிகமாக விளையும் பொருட்களுக்கு மார்க்கெட் இல்லாமல் போகிறது என்றார்.

இவை எல்லாவற்றிற்கும் நாமே தீர்வு கண்டுபிடிப்பதை விட விவசாய நிபுணர்கள், விவசாயிகள், அந்தந்த மாநில விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாய மந்திரி ஆகியவர்கள் இருந்தால் நலமாக இருக்குமே என்றேன். பிரதம மந்திரி அதுதான் சரியாக இருக்கும் என்றார். அப்டியானால் டில்லி போனதும் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்புங்கள். அந்தந்த மாநிலங்களில் இருக்கும் பிரச்சினைகளையும் அவற்றிற்கு என்ன தீர்வு இருக்கிறது என்றும் அவர்கள் முதலில் மீட்டிங் போட்டு தீர்மானிக்கட்டும். அடுத்த வாரம் இங்கு நமது தூதரகத்தில் அதில் முக்கியமானவர்களை எல்லாம் வரச்சொல்லி முடிவு எடுப்போம் என்றேன்.

அவர்கள் அதற்கு சரி, இது நல்ல யோசனை என்றார்கள். நான் அப்படியே கல்வி, தொழில் இது சம்பந்தமாகவும் மீட்டிங்குகள் போட்டு அதைப்பற்றி கான்பரன்ஸ் போடவும் ரெடியாக இருக்கச்சொல்லுங்கள். விவசாய கான்பெரன்ஸ் முடிந்ததும், அடுத்தடுத்து இந்த இரண்டு கான்பெரன்ஸ்சுகளையும் வைத்துக்கொள்ளலாம் என்றேன்.

அவர்கள் சரி என்றார்கள். அவர்களைப் போகச் சொல்லிவிட்டு, நான் ஓய்வு எடுக்கப்போனேன்.

மறுவாரம் விவசாய மகாநாடு தேவலோக தூதரகத்தில் தொடங்கியது. அனைத்து மத்திய மந்திரிகள், மாநில முதலமைச்சர்கள், விவசாய மந்திரிகள், விவசாயத்துறை முக்கிய அதிகாரிகள், விவசாயிகள்,  விவசாயப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள், விவசாய விஞ்ஞானிகள், நீர்ப்பாசனத்துறை மந்திரிகள், அதிகாரிகள், கால்நடைத்துறை மந்திரிகள், அதிகாரிகள், இப்படியாக ஏறக்குறைய பத்தாயிரம் பேர் வந்து விட்டார்கள்.

இத்தனை பேரை வைத்துக்கொண்டு என்ன உருப்படியான முடிவுகள் எடுக்க முடியும் என்ற சந்தேகம் வந்தது. சரி பார்ப்போம் என்று மகாநாட்டைத் துவங்கினோம். பொது வரவேற்புரை வாசித்தார். நான் மகாநாட்டின் நோக்கத்தைக்குறித்து பேசினேன்.

அப்போது நான் சொன்னேன். இந்த மகாநாடு கூட்டப்பட்டதன் நோக்கம் இந்தியா விவசாய நாடென்று சொல்லப்பட்ட பொதும் விவசாயத்தில் மிகவும் பின் தங்கியிருக்கிறது. விவசாயம் செய்து ஒரு விவசாயி தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறான். இப்படியே போனால் இந்தியாவில் விவசாயமே அழிந்து போய்விடும்போல் இருக்கிறது.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவுகள் எடுப்பதற்காகவே இந்த மகாநாட்டைக் கூட்டினோம். நீங்கள் எல்லோரும் இதைப் பற்றி உங்கள் மாநிலத்தில் பேசி சில முடிவுகளுடன் வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் அவர்கள் மாநிலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி எடுத்துரைப்பார்கள். ஒவ்வோருவரும் 15 நிமிடங்களில் அவர்கள் சொல்லவேண்டியதை சொல்லி முடித்தால் நல்லது.

பிறகு பிரதம மந்திரியின் தலைமையில் மகாநாடு தொடங்கியது. மாநில முதலமைச்சர்கள் பேசினார்கள். ஒவ்வொருவரும் 1 மணி நேரம் முதல் 1 1/2 மணி நேரம் வரை பேசினார்கள். 15 நிமிடம் கழித்து பிரதம மந்திரி மணி அடித்துப் பார்த்தார். ஒருவரும் அந்த 
நேரத்திற்குள் பேச்சை முடிக்கவில்லை. முன் அனுபவம் காரணமாக அவர் இரண்டாவது தடவை மணி அடிக்கவில்லை.

காலை 11 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரையில் ஏழு முதல் மந்திரிகள் மட்டுமே பேசி முடித்தார்கள். நான் பிரதம மந்திரியிடம் சொன்னேன். அனைத்து மாநில முதலமைச்சர்கள் பேசி முடிக்கும் வரை மகாநாடு தொடரட்டும் என்றேன். அவரும் சரியென்றார். இப்படியாக மகாநாடு நான்கு நாட்கள் நடந்து அனைத்து முதல் மந்திரிகளும் பேசி முடித்தார்கள். அவர்கள் பேசியது முழுவதும் அரசியல்தானே ஒழிய விவசாயத்தைப் பற்றி ஒன்றும் இல்லை.

இதைப் பார்த்த நான் அன்று இரவு நான்கைந்து விவசாய நிபுணர்களையும் பத்து விவசாயிகளையும் தனியாக அழைத்துப்போய், இந்த முதல் அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கட்டும். அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. நீங்கள் தனியாக உட்கார்ந்து என்ன தீர்மானங்கள் போடலாம் என்று விவாதித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அவைகளை மகாநாட்டுத் தீர்மானங்களாக நிறைவேற்றி விடுவோம் என்றேன். அவர்களும் சரியென்று அவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள ரூமுக்குப் போய்விட்டார்கள்.

ஐந்தாம் நாள் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் நாள். என்னென்ன தீர்மானங்கள் நிறைவேறின என்று அடுத்த பதிவில் பார்க்கவும்.