கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஜூன், 2016

ஊர்ல விசேஷமுங்க !

                                Image result for சென்னை நாடார் கடை

திருநெல்வேலியிலிருந்து ரொம்ப காலத்துக்கு முன்னாலே ஒரு பையன் வீட்ல கோவிச்சிக்கிட்டு மெட்ராஸுக்கு ரயில் ஏறிட்டான். (வித்அவுட்லதான்). கையில காலணா கிடையாது. ரயில்  சென்னை வந்தது. இவன் ரயிலை விட்டுக் கீழே இறங்கி திருதிருவென்று முளித்துக்கொண்டிருந்தான்.

அதே ரயில்ல வந்த தனபால் நாடார் இந்தப் பையனைப் பார்த்தார். அவரும் இந்த மாதிரி திருநெல்வேலியிலிருந்து ரயில் ஏறி சென்னை வந்தவர்தான். இப்போது அவர் ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு அதிபதி. இந்தப்பையனைப் பார்த்ததும் அவருக்கு விவரம் புரிஞ்சு போச்சு. பையனைக் கூப்பிட்டு டிபன்காப்பி வாங்கிக்கொடுத்தார். வா, வீட்டுக்குப் போகலாம் என்று கூட்டிக்கொண்டு போனார்.

அவனுக்கு வீட்டில் இருந்த அவருடைய சின்னப்பையனின் இரண்டு பழைய டிரஸ்ஸைக்கொடுத்து போட்டுக்கொள்ளச்சொல்லி, அவர் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போகும்போது அவனையும் கூட்டிச்சென்றார். அங்கிருந்த மேனேஜரிடம் இவனை ஒப்படைத்து வேலையில் பழக்கும்படி சொன்னார்.

அந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு வீடு எடுத்து அங்கேயே சாப்பாடு போட்டு தங்க வைத்திருந்தார்கள். இதுதான் தெற்கத்திக்காரர்களின் வழக்கம். இந்தப் பையனும் அப்படியே அந்த விடுதியில் தங்கி சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான், பையன் மிகவும் சூட்டிக்கை. வேலைகளை நன்றாக கற்றுக்கொண்டு வெகு சீக்கிரத்தில் முதலாளியின் அபிமானத்திற்கு உள்ளானான்.

இவன் 25 வயது ஆகும்போது சூப்பர் மார்க்கெட்டின் நெளிவு சுளிவுகள் இவனுக்கு அத்துபடியாய் இருந்தன. முதலாளி இவனை அந்த நிறுவனத்தின் மேனேஜராக பதவி கொடுத்து வைத்திருந்தார். அவருக்கும் வயது ஆகிவிட்டது. முன் போல் சூப்பர் மார்க்கெட்டைக் கவனிக்க முடியவில்லை. பையன் படித்து முடித்து வெளி நாட்டுக்கு வேலயாகப் போய்விட்டான்.

அவருக்கு ஒரு பெண். 20 வயதில் அவள் திருமணத்திற்கு தயாராக இருந்தாள். முதலாளி யோசித்தார். இந்த மேனேஜர் பையன் பல வருடங்களாக நம்மிடம் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். எந்த தப்புத்தண்டாவும் இல்லை. அவனை ஏன் நம் மாப்பிள்ளையாக்கிக் கொள்ளக்கூடாது என்று யோசித்தார். மனைவி மற்றும் மகளிடம் கலந்து ஆலோசித்தார். அவர்கள் சம்மதம் தரவே அந்தப்பையனிடம் கேட்டார். அவனும் சம்மதம் தரவே கல்யாணத்தை ஜாம் ஜாமென்று முடித்து, சூப்பர் மார்க்கெட்டை அவன் பெயருக்கே மாற்றி எழுதி விட்டார்.

சில வருடங்கள் கழித்து முதலாளியும் அவர் மனைவியும் காலமாகி விட்டார்கள். இந்தப் புது முதலாளியும் வியாபாரத்தை நன்றாக கவனித்து விருத்தி பண்ணினான். மனைவியையும் நன்றாக வைத்திருந்தான். ஒரு பெண், ஒரு பையன் பிறந்தார்கள். குடும்பம் சந்தோஷமாக நடந்து கொண்டிருந்தது.

இவன் இப்படி நன்றாக இருக்கும்போது ஊரில் இருந்த இவனுடைய பழைய சொந்தங்களைப் பார்த்து உறவுகளைப் புதுப்பித்துக்  கொண்டான். பிறகு ஊரில் நடக்கும் விசேஷங்களுக்கு இவனுக்கு அழைப்பு வைத்தார்கள். இவனும் கெத்தாக போய்வந்து கொண்டிருந்தான்.

இப்படி இருக்கையில் ஊர்ல ஒரு விசேஷம் ஞாயிற்றுக்கிழமை வைத்திருந்தார்கள். இவனும் சனிக்கிழமை மாலை பத்து மணி வரையில் சூப்பர் மார்கெட் விவகாரங்களைப் பார்த்து முடித்து விட்டு வீட்டுக்குப்போய் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு இரவு 11 மணிக்கு திருநெல்வேலிக்கு தன் காரில் புறப்பட்டான்.

கார் புதிதாக 40 லட்சத்திற்கு வாங்கின சொகுசு கார். ஏக்சலேட்டரை லேசாக அழுத்தினாலே 100 கிமீ ஸ்பீடில் போகும். கொஞ்சம் பலமாக அழுத்தினால் 150 கிமீ ஸ்பீடில் போகும். டிரைவர் நல்ல வாலிபம். 22 வயதுதான் ஆகிறது. முதலாளி டிரைவரிடம் கேட்டார். என்னப்பா, ராத்திரி தூங்காம கார் ஓட்டுவியா? இரண்டு நாள்கூட தூங்காமல் வண்டி ஓட்டுவேன், சார் என்று டிரைவர் பதிலளித்தான்.

குடும்பம் முழுவதும் காரில் ஏறினார்கள். டிரைவரும் 150 கிமீ வேகத்தில் ஓட்டி திருநெல்வேலிக்கு காலை 6 மணிக்கு அவர்ளைக் கொண்டு வந்து சேர்த்தான். ஒரு பெரிய லாட்ஜில் முதலிலேயே ரூம் ரிசர்வ் செய்திருந்தார்கள். அங்கு சென்று காலைக் கடன்கள், குளியல்கள் இத்தியாதிகளை முடித்து விட்டு 8 மணிக்கு விசேஷம் நடக்கும் வீட்டிற்குப் பாய் சேர்ந்தார்கள்.

விசேஷம் நடத்தும் வீட்டுக்காரருக்கு வாயெல்லாம் பல். அண்ணாச்சி, வாங்க, வாங்க என்று தடபுடலான வரவேற்பு. பார்த்தவர்களிடமெல்லாம் "நம்ம அண்ணாச்சி" என்று அறிமுகம் செய்து வைத்தார். அண்ணாச்சியைக் கூட்டிக்கொண்டு போய் டிபன் சாப்பிட வைத்தார்கள். விசேஷம் நடந்து முடிந்தது. டிரைவரும் திவ்யமாகச் சாப்பிட்டான். டைம்11 மணி. சாப்பாட்டுப் பந்தி போட்டார்கள். விசேஷம் நடத்தும் வீட்டுக்காரர் அண்ணாச்சியை சாப்பிடாமல் போகக்  கூடாது என்று கூட்டிப்போய் பந்தியில் உட்கார வைத்து விட்டார்.

விருந்தில் பிரியாணி, ஆடு, மாடு, கோழி, பறப்பன, ஊர்வன எல்லாத்தையும் புடிச்சுப் போட்டிருந்தார்கள். அண்ணாச்சி நன்றாகச் சாப்பிட்டார். டிரைவர் வாலிப வயது இல்லையா? அவனும் ஒரு பிடி பிடிச்சான். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு 2 மணிக்கு திரும்பப் புறப்பட்டார்கள்.

வரும் வழியில் மதுரை மீனாட்சியம்மன் தரிசனம். திருச்சியைத் தாண்டும்போது நல்ல மாலை வேளை. சூரியன் மறைந்த நேரம். காருக்கு லைட் போட்டு ஓட்டவேண்டிய கட்டம். அப்படி லைட் போட்டவுடன் கண்கள் அந்த லைட்டுக்கு அட்ஜஸ்ட் ஆக கொஞ்ச நேரம் ஆகும். அந்த நேரத்தில் இந்தக் காருக்கு முன்னால் ஒரு லாரி போய்க்கொண்டிருந்தது.

டிரைவர் அந்த லாரியை முந்திப்போக முயன்றான். யாருடைய தவறு என்று தெரியவில்லை. கார் லாரியின் பின் பக்கம் டமார் என்று மோதியது. அடுத்த நாள் செய்தித்தாள்களில் திருச்சிக்குப் பக்கத்தில் கார் விபத்தில் ஐந்து பேர் மரணம் என்று செய்தி பிரசுரமானது.

யாரைக் குற்றம் சொல்ல முடியும்?
               

எந்தக் கதையானாலும் அதில் ஒரு நீதி சொல்லப்படவேண்டும். இந்தக் கதைக்கு அவரவர்கள் இஷ்டம்போல் நீதி வைத்துக்கொள்ளலாம்.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ஒரு வெள்ளரிக்காய் கதை

                                                     

பழைய காலத்தில் கிராமங்களில் காலைக் கடனைக் கழிக்க ஊருக்கு வெளியில் பொட்டல் காட்டுக்கு செல்வார்கள். அப்படி ஒரு ஊரில் பொட்டல் காட்டுக்குப் போகும் வழியில் ஒரு வெள்ளரித்தோட்டம் இருந்தது. அந்த ஊரில் ஒருவன் பொட்டல் காட்டுக்குப் போகும் வழியில் ஒரு வெள்ளரிக்காயைப் பறித்து அதைத் தின்றுகொண்டே காலைக் கடனைக் கழித்துக் கொண்டிருந்தான்.

அந்த வழியில் போன அந்த ஊர்க்காரன் ஒருவன் இவனைப் பார்த்து வெளிக்குப் போகும்போது வெள்ளரிக்கயைத் திங்கலாமா? என்று கேட்டான். அதற்கு அந்த வெள்ளரிக்காயைத் தின்று கொண்டிருந்தவன் சொன்னான்.        "நான் வெள்ளரிக்காயை எப்படிச் சாப்பிட்டால் உனக்கென்ன?  "நான் வெள்ளரிக்காயை சும்மா சாப்பிட்டாலும் சாப்பிடுவேன்,அதில் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் சாப்பிடுவேன், நீ யார் அதைக்கேட்க" என்றானாம். (இங்கு "அதில்" என்றால் எது என்பது வாசகர்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்.

இது ஒரு கதை மட்டுமே. இந்தக் கதையை இங்கு சொல்வதற்கான காரண காரியங்களை யோசித்து உங்கள் மூளையை வீணாகக் கசக்கி வருத்தப்படவேண்டாம்.