கவர்ச்சிகரமாக பேக் செய்யப்பட்ட பொருட்கள் வாங்குபவர்களை அதிகமாக ஈர்க்கின்றன என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. பொருட்களின் தரம் அந்த பேக்கேஜிங்க்கின் கவர்ச்சியைப்போல் நன்றாக இருக்கும் என்று மக்களின் உள்மனது சொல்வதே இதற்குக் காரணம்.
தெருவில் நடந்து போகும்போது ஒரு பெண் கவர்ச்சியாக உடை அணிந்து சென்றால் அவளைத் திரும்பிப் பார்க்காத ஆண்களும் உண்டோ? ஜவுளிக் கடைக்குச் செல்வதாக இருந்தால் கவர்ச்சியாக அலங்காரம் செய்து வைத்துள்ள கடைக்கே நாம் போகிறோம். ஓட்டல், சினிமா, எதுவாக இருந்தாலும் கவர்ச்சியாகத் தோற்றம் அளிக்கும் இடத்திறகே எல்லோரும் போகிறோம்.
பதிவுலகம் நிஜ உலகின் ஒரு நீட்சியே அல்லவா? அப்புறம் இங்கும் மனிதன் கவர்ச்சியை எதிர்பார்ப்பதில் தவறு என்ன? பதிவுகளில் கவர்ச்சி எதில் இருக்க முடியும்? தலைப்பில்தானே! ஆகவே தங்கள் பதிவிற்கு அதிக வரவேற்பு வேண்டுவோர் தலைப்பை கவர்ச்சிகரமாக வைப்பதில் தவறு என்ன? தலைப்பைப் பார்த்துதான் வாசகர்கள் அனைவரும் பதிவிற்குள் வருகிறார்கள். என்னுடைய போன பதிவில் அப்படியொரு தலைப்பை வைத்ததினால்தான் மளமளவென்று ஹிட்கள் ஏறின.
இது ஒரு வகை ஏமாற்று அல்லவா என்று கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை. நீங்கள் அலுவலகத்திற்குப் போகும்போதும் அல்லது ஒரு கல்யாணத்திற்கு போகும்போதும் எப்படி உடை உடுத்துகிறீர்கள்? வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அதே உடையில் இருக்கிறீர்களா?
இல்லையல்வா? அது ஒரு வகை ஏமாற்றல்தானே?
இதனால்தான் அந்தக்காலத்தில் யாரோ ஒருவன் "உலகமே ஒரு நாடக மேடை" என்று சொல்லிவிட்டுப் போனான். அந்த நாடக மேடையில் நாம் ஒவ்வொருவரும் அந்தந்த பாத்திரத்திற்குத் தகுந்தமாதிரி வேடம் போடுகிறோம். அது மாதிரிதான் பதிவிற்கும் அந்தந்த நேரம் போல் தலைப்பு வைக்கலாம். தவறில்லை.