சக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜூலை, 2014

குளுகோஸ் எப்படி சக்தியாக மாறுகிறது ?


நாம் சாப்பிடும் உணவானது நமது உணவுக் குழாயில் குளுகோஸாக மாறி இரத்தத்தில் கலக்கிறது என்று முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இந்த குளுகோஸ் இரத்தத்தின் மூலமாக நமது உடம்பின் ஒவ்வொரு திசுக்களுக்கும் சென்று அடைகிறது. (மனித உடலில் சுமார் 10 லட்சம் கோடி திசுக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்).

ஒவ்வொரு திசுவும் ஒரு ரசாயனத் தொழிற்சாலை போல செயல்படுகிறது. இரத்தத்தின் மூலம் இவைகளுக்கு மனிதனின் எரிபொருளான குளுகோஸ் மற்றும் பிராணவாயு சென்று அடைகின்றன. இரத்தத்திற்கு பிராணவாயு நுரையீரலிலிருந்து கிடைக்கிறது என்ற ரகசியம் உங்களுக்கு முன்பே தெரியும்.

நாம் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விறகு எரிதலைப் பார்த்திருக்கிறோம். அதிலுள்ள ரசாயன மாற்றத்தைப் பற்றி எத்தனை பேர் சிந்தித்திருப்போம? விறகில் உள்ளது கரிமம் அதாவது கார்பன். அது எரிகின்றபோது ஆகாயத்தில் உள்ள பிராணவாயுவுடன் சேர்ந்து கரியமலவாயுவாக மாறுகிறது.  கூடவே உஷ்ணமும் வெளி வருகிறது. இந்த உஷ்ணத்திற்காகத்தான் நாம் விறகை எரிக்கிறோம்.

ஒரு உண்மையைப் பாருங்கள். விறகு வெட்ட வெளியில் கிடக்கிறது. வெட்ட வெளியில் தேவையான பிராணவாயுவும் இருக்கிறது. ஆனால் விறகு எரிவதில்லையே? ஏன்? விறகு எரிய ஆரம்பிக்க முதலில் ஒரு தூண்டுதல் வேண்டும். ஒரு சிறிய நெருப்பினால் அந்த விறகில் தீ மூட்ட வேண்டும். பிறகு அந்த விறகு தானாக எரியத் துவங்கும்.

நம் உடலிலும் ஏறக்குறைய 24 மணி நேரமும்  இந்த மாதிரி ஒரு எரிதல் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் நாம் அதை உணர்வதில்லை. ஏனெனில் இந்த எரிதல் அமைதியாகவும் ஆர்ப்பாட்டமில்லாமலும் நடக்கிறது.

நாம் சாப்பிட்ட உணவு குளுகோஸாக மாறி நம் உடம்பிலுள்ள அனைத்து திசுக்களுக்கும் இரத்த ஓட்டத்தின் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது என்று பார்த்தோம். இந்த குளுகோஸ் திசுக்களை அடைந்ததும் சில என்சைம்கள் இந்தக் குளுகோஸை இரண்டு துண்டாக்குகின்றன. பிறகு இந்த இரண்டு துண்டங்களும் வேறு என்சைம்களினால் தாக்கப்பட்டு பிராணவாயுவுடன் சேர்க்கின்றன. இவ்வாறு சேரும்போது சக்தியும், உஷ்ணமும், கரியமலவாயுவும் உண்டாகின்றன.

விவரமாகத் தெரிந்து கொள்ள இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களைப் பார்க்கவும். தலை சுற்ற ஆரம்பிக்கும்போது நிறுத்திவிடவும்.





இவ்வாறு உண்டாக்கப்பட்ட சக்தி ஒரு வேதியல் மூலகத்தில் இருக்கும். இந்த சக்தி உடலின் எந்தப் பகுதிக்குத் தேவையோ அங்கு இரத்தத்தின் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. சக்தி தேவையில்லாத சமயத்தில், அதாவது தூங்கும்போது பெரும்பாலான திசுக்கள் ஓய்வெடுத்துக்கொள்ளும். தூங்கும்போது தேவைப்படும் குறைந்த அளவு சக்தியே உற்பத்தியாகும்.


இந்த ஒழுங்குகள் எல்லாம் நம்முடைய எண்ணம் இல்லாமல் தானாகவே நடக்கின்றன. இந்த வேலைகள் நின்றுபோனால் நம் உடலை எரியூட்டவேண்டி வரும்.

இப்படி உற்பத்தியாகும் சக்திதான் நாம் வேலை செய்யும்போது பயன்படுத்தப்படுகின்றது.