சட்டம் ஒரு கழுதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்டம் ஒரு கழுதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 ஜூன், 2013

வருமானவரி - மேலும் சில விவரங்கள்.

பதிவுகளைப் படிக்கும் பெரும்பான்மையானவர்கள் என்னைப்போல் சட்டங்களுக்கு பயப்படும் நடுத்தர வர்க்க மக்கள் என்று நம்பி இந்தப் பதிவை எழுதுகின்றேன். அப்படி இல்லாதவர்கள் இந்தப் பதிவைப் படித்து உங்கள் பொன்னான நேரத்தை பாழ்படுத்திக்கொள்ளாமல், இன்னும் இரண்டு காசு பார்க்கும் வேலையைச் செய்யவும்.

வருமான வரி என்றால் என்ன என்று கேட்கும் பல கோடீஸ்வரர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த சட்டம் ஒன்றும் செய்யாதா என்ற கேள்வி கேட்பவர்களுக்கு விடை இதுதான். நாயை கண்டு பயந்து ஓடுபவனைத்தான் நாய் துரத்தும். தைரியமாக எதிர் நிற்பவனைப் பார்த்து வாலை சுருட்டிக்கொண்டு ஓடும்.

சட்டமும் இப்படித்தான். என்ன,  நாயை கல்லால் அடிக்கவேண்டும். சட்டக் காவலர்களை பணத்தால் அடிக்கவேண்டும். அவ்வளவுதான். நாம் எல்லோரும் நாயைக்கண்டு பயந்து ஓடும் ஜாதி.

வருடத்திற்கு இரண்டு லட்சத்திற்கு மேல் உங்களுக்கு வருமானம் இருந்தால் நீங்கள் வருமான வரி கட்டவேண்டும் என்று பார்த்தோம். மாமனார் வீட்டிலிருந்து வரும் வருமானத்தை இதில் காட்டவேண்டியதில்லை. மாமனார் என்பதற்கு அர்த்தம் எல்லோருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். (நமக்கு வருமானம் தரும் ஒவ்வொருவரும் மாமனாரே.)

இப்படி கணக்குப்போட்டு வரும் வருமான வரி 10000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அந்த வரியில் 30 சதத்திற்கு குறையாமல் செப்டம்பர் 30 ம் தேதிக்குள் கட்டவேண்டும். 60 சதத்திற்கு குறையாமல் டிசம்பர் 31 க்குள் கட்டவேண்டும். மீதி வரியை துல்லியமாக கணக்குப் போட்டு மார்ச் 15ம் தேதிக்குள் கட்டவேண்டும். இதுதான் சட்டம்.

ஆனால் இப்படி ஒரு சட்டம் இருக்கிறதென்றே பலருக்குத் தெரியாது. மார்ச் 31 க்குள் வரி கட்டினால் போதும் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நடைமுறையிலும் அதையே கடைப்பிடிக்கிறார்கள்.

நானும் என் நண்பர்களும் இப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். போனவருடம் கொடுத்த வருமான வரிப் படிவத்தில், என் நண்பர் தவறுதலாக ஒரு ஆயிரம் ரூபாயைக் குறைத்துக் கட்டிவிட்டார். இந்த ரிடர்ன் எப்படியோ ஒரு வருமானவரி அதிகாரியின் பார்வையில் சிக்கியிருக்கிறது. அதற்கு அவர் என் நண்பருக்கு ஒரு "ஓலை" அனுப்பி விட்டார்.

அந்த ஓலையில் எழுதியிருந்ததாவது. நீங்கள் உங்கள் வருமானவரியில் 1000 ரூபாய் குறைவாகக் கட்டியிருக்கிறீர்கள், அதற்கு 750 ரூபாய் வட்டி சேர்த்து உடனடியாக பேங்கில் கட்டி, கட்டின ரசீதை இந்த ஆபீசுக்கு அனுப்பவும்.

இது என்ன, மீட்டர் வட்டி மாதிரி இருக்கிறதே என்று வருமான வரி அலுவலகத்தில் போய் விசாரித்தோம். அதற்கு அவர்கள் சொன்னது. நீங்கள் உங்கள் வரி முழுவதையும் மார்ச் மாதம்தான் கட்டியிருக்கிறீர்கள், எங்கள் விதிகளின்படி மூன்றில் ஒரு பாகத்தை செப்டம்பர் மாதத்திலும், இன்னொரு மூன்றில் ஒரு பாகத்தை டிசம்பர் மாத த்திலும் கட்டியிருக்கவேண்டும். இந்த தாமதத்திற்குத்தான் இவ்வளவு வட்டி என்றார்கள்.

ஐயா, இந்த சமாசாரம் எங்களுக்குத் தெரியாதே என்றோம். நீங்கள் இந்தியக் குடிமகன்தானே என்று கேட்டார்கள். ஆம் என்றோம். அப்படியானால் உங்கள் நாட்டுச் சட்டங்களையே நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையே, அது உங்கள் குற்றமல்லவா? என்றார்கள். நாங்கள் ஒரு பதிலும் பேசமுடியவில்லை.

பேசாமல் அவர்கள் சொன்ன பணத்தைக் கட்டிவிட்டு வந்தோம்.

அப்புறம் எங்களுக்குத் தெரிந்த வக்கீல் ஒரு பொன்மொழி சொன்னார்.

Ignorance of rules is no excuse for not following.

திங்கள், 10 ஜூன், 2013

டிராபிக் ரூல்ஸ்


சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானவை என்றுதான் நாம் அனைவரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நடைமுறை அப்படியில்லை என்பதை பலர் தங்கள் அனுபவத்தில் அறிந்திருப்பார்கள்.

சமீபத்தில் என் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவம்.

கோவையில் உள்ள ஒரு முக்கிய ரோட்டில் ஒரு பக்கத்தில் "நோ பார்க்கிங்க்" போர்டுகள் வைத்திருக்கிறார்கள். அந்த போர்டுகள் ஒரே சீரான இடைவெளியில் இல்லை. ஒரு இடத்தில் அந்த மாதிரி போர்டு இல்லாத இடம் இருந்திருக்கிறது. அங்கு சில கார்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். என் நண்பர் "இந்த இடத்தில் கார்களை நிறுத்தலாம் போல் இருக்கிறது" என்று தன்னுடைய காரை நிறுத்திவிட்டு அவர் வேலையை கவனிக்கப் போய்விட்டார்.

திரும்பி வந்து பார்க்கையில் அவர் கார் சக்கரத்திற்கு ஒரு பூட்டுப் போட்டிருந்தது. கார் கண்ணாடியில் ஒரு போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் உங்கள் கார் "நோ பார்க்கிங்" இடத்தில் நிறுத்தி வைத்திருப்பதால் உங்கள் காரை லாக் செய்திருக்கிறோம். இந்த போலீஸ் ஸடேஷனுக்கு வந்து உங்கள் காரை ரிலீஸ் செய்து கொள்ளவும் என்று எழுதியிருந்தது.

அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற கார்களை எனது நண்பர் பார்த்தார். அந்தக் கார்களுக்கு இந்த மாதிரி பூட்டு போடவில்லை. இவர் சிரமப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விசாரித்தார். அந்த டூட்டியில் இருக்கும் போலீஸ்காரர் இந்த ரோட்டில் இப்போது இருக்கிறார், அங்கு சென்று பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இவரும் அங்கே சென்று சிரமப்பட்டு அவரைக்கண்டுபிடித்து கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு கூட்டிவந்தார்.

அவர் 300 ரூபாய்க்கு பைன் எழுதி பணத்தை வாங்கிக்கொண்டு பூட்டை திறந்துவிட்டார். என் நண்பருக்கு வயித்தெரிச்சலும் கோபமும் ஒரு சேர வந்தன. அவர் போலீஸ்காரரிடம் "இங்கே இன்னும் நாலு கார்கள் இருக்கின்றனவே, அவைகளுக்கு ஏன் பூட்டு போனவில்லை, என் காருக்கு மட்டும் ஏன் பூட்டு போட்டீர்கள்" என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த போலீஸ்காரர் சொன்ன பதில் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியவை. "சார், இப்போ விவகாரம் எனக்கும் உங்களுக்கும் மட்டும்தான், அடுத்தவர்களைப்பற்றி நீங்கள் பேசவேண்டாம்" என்று சொல்லியிருக்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவல்ல. ஆளாளுக்கு மாறுபடும் என்பதுதான். இதைப் புரிந்து கொண்டால் நீங்கள்தான் உண்மையான இந்தியப் பிரஜை.

புதன், 28 நவம்பர், 2012

சட்டமும் மனிதாபிமானமும்

சட்டம் பெரிதா? மனிதாபிமானம் பெரிதா?

நீதி அறிந்தவர்கள் எப்பொழுதும் மனிதாபிமானத்திற்கே முதலிடம் கொடுத்துள்ளார்கள். இந்திய நீதித்துறையின் கோட்பாடுகளின்படி, சட்டத்திலுள்ள ஓட்டைகளினால் 99 சதம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பித்தாலும் சரி, ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான். அதனால்தான் பெரிய குற்றங்களில் கூட குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெறுவதில்லை.

மாவட்ட ஆட்சியர்களுக்குள்ள வரம்பற்ற அதிகாரங்களைப் பற்றி சாதாரண குடிமகன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த அதிகாரங்களை அவர் சாதாரண நேரங்களில் பயன் படுத்துவதில்லை. பேரிடர் காலங்களில் மட்டுமே பயன்படுத்துவார். இது முற்றிலும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் செயல்பட அவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள்.

ஒவ்வொரு உயர் அதிகாரிக்கும் இப்படிப்பட்ட அதிகாரங்கள் உண்டு. ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் பயம். நாளைக்கு யாராவது கேள்வு கேட்டால் என்ன சொல்வது என்ற பயம். இன்ன காரணத்திற்காக பொது நன்மைக்காக அல்லது ஒரு தன் மனிதனின் உரிமையைக் காக்க, இந்த முடிவை நான் எடுத்தேன் என்று சொல்லக்கூடிய தார்மீக பலம் அவர்களுக்கு இல்லை.

சமீப காலத்தில் பல கொலைகளில், அவை தற்காப்பிற்காக செய்யப்பட்டவை என்று பட்டவர்த்தனமாகத் தெரிந்தபோது உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை அரெஸ்ட் கூட செய்யாமல் விட்டிருக்கிறார்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் சட்டத்தை விட மனிதாபிமானம்தான் உயர்ந்தது என்று அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் சரித்திரம் நினைவு கொள்கிறது.

என் சர்வீசில் நடந்த ஒரு சம்பவம். நான் தஞ்சாவூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் இரவு 8 மணிக்கு ஆபீஸ் ஜீப்பில் என் இருப்பிடத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தேன். நான் அப்போது தஞ்சாவூர் அவுட்டரில் ஒரு வீட்டில் குடியிருந்தேன். அப்பாது லேசாக மழை தூறிக்கொண்டு இருந்தது. மின்சாரமும் இல்லை. ரோடு முழுவதும் இருட்டு.

என் வீட்டிற்கு சமீபத்தில் வந்து கொண்டிருக்கும்போது ஒரு வயதான அம்மா கையைக் காட்டி என் வண்டியை நிறுத்தினார். நான்தான் ஜீப்பை ஓட்டிக்கொண்டு வந்தேன். நான் வண்டியை நிறுத்தி என்ன விஷயம் என்று கேட்டேன். அதற்கு அந்த அம்மா, "என் மகளுக்கு பிரசவ வலி வந்திருக்கிறது. உடனே ஆஸ்பத்திருக்குப் போகவேண்டும். இந்த இருட்டிலும் மழையிலும் ஒரு ஆட்டோ கூட இந்தப் பக்கம் வரவில்லை. நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்" என்றார்கள்.

அரசு வண்டியை சொந்தக் காரியங்களுக்கு பயன் படுத்தக்கூடாது என்பது சட்டம்.  ஆனால் அங்கு நான் எதிர்கொள்வது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. நான் அதிகம் யோசிக்கவில்லை. சரி, வாருங்கள் என்று அந்த அம்மாவின் வீட்டிற்குச் சென்று அந்தக் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு, நான்கு கி.மீ. தூரத்திலுள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தேன். அந்த அம்மா பலமுறை நன்றி சொல்லிவிட்டு ஐந்து ரூபாய் கொடுத்தார்கள். நான் அந்தப் பணத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

நான் செய்தது சட்டத்திற்குப் புறம்பாயிருக்கலாம். ஆனால் என் மனச்சாட்சியின்படி அது ஒரு மனிதாபிமானச் செயல். அதை நான் செய்திருக்காவிடில் என் ஆயுள் முழுவதும் என் மனச்சாட்சி என்னைக் குத்திக்கொண்டு இருந்திருக்கும். இந்த காரியத்திற்காக எனக்கு ஏதும் தண்டனை வந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தேன். என்னுடைய பெரிய அதிகாரியை அடுத்த முறை சந்தித்தபோது இதைச் சொன்னேன். அவர் நீ செய்தது சரிதான், ஆனால் வண்டியின் லாக்புக்கில் எழுதாதே, பின்னால் ஆடிட்டர்கள் வீணாக தொந்திரவு செய்வார்கள் என்று சொல்லிவிட்டார்.

ஒவ்வொரு உயர் அதிகாரியும் இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக, மனிதாபிமான அடிப்படையில், முடிவுகள் எடுக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் அவ்வாறு செயல்படுவதில்லை என்பதே நிதரிசனம்.