சமைஞ்ச சீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமைஞ்ச சீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஜூலை, 2011

சமைஞ்ச சீர் செய்யற மொறை.


சமைஞ்ச சீர் செய்யற மொறை.


மொத நாளு சமைஞ்ச புள்ளைக்கு தண்ணி வாத்து தனியா உக்கார வச்சுட்டாங்களா? அடுத்த நாளு,  இல்லீன்னா அதுக்கு மறுச்சு நாள்லெ சீரு வச்சுருவாங்க. மாமமாரு, பங்காளிங்க, அப்பறம் நெருங்கின சொந்த பந்தங்களுக்கெல்லாம் ஆளு மூலமா, இன்ன கெளமீல புள்ளக்கி சீர் வைக்கிறோம்னு சேதி சொல்லி அனுப்பிச்சுருவாங்க.

பொதுவா சீரு பொளுதோட நேரம்தான் வப்பாங்க. அப்பத்தான் காடுகரைக்கு போனவங்க எல்லாம் வேலைகளைப் பாத்துட்டு திரும்பி வரமுடியும். எல்லாரும் பொளுது சாயறதுக்கு முன்னாடியே சீரூட்டுக்கு வந்துருவாங்க. தோட்டத்தில இருந்து பச்ச தென்னை ஓலைகளெ வெட்டிட்டு வந்து வச்சிருப்பாங்க. பொம்பளைக எல்லாம் சேந்து சோறு ஆக்கிட்டிருப்பாங்க.

வண்ணான், நாசிவன் ரெண்டு பேரும் குடும்பத்தோட கண்டிப்பா வேணுமுங்க. அப்பறம் பண்ணயத்து ஆளுங்க, மத்த குடிபடையெல்லாம் வந்திருவாங்க. தோட்டத்திலிருந்து வாளக்கொலை, தென்னம்பாளையெல்லாம் வந்திருங்க. வந்தவிய எல்லாம் ஆளுக்கு ஒரு வேலைய எடுத்து செய்வாங்க. வூட்டுக்கு முன்னாலெ ஒரு அம்பாரிப்பந்தல் போட்டு அதுல கொலக்கம்பம், பாளை எல்லாம் வச்சுக்கட்டுவாங்க. பண்ணெயத்து ஆளு, தென்னை ஓலையையெல்லாம் எடுத்து தடுக்கு பின்னி வச்சுருவாங்க. கொஞ்சம் மூங்கத்தப்பையும் தோட்டத்திலிருந்து கொண்டு வந்திருப்பாங்க.

மாமனூட்டிலிருந்து சீருக்கு வேண்டிய தட்டச்சாமான்கள், புது துணிமணிகள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, தங்களோட சொந்த பந்தங்களையும் கூட்டிக்கிட்டு நேரத்தோட வந்துருவாங்க. எல்லா சொந்தக்காரங்களும் சக்கரெ பளம் கொண்ட்டுட்டு வரது வழக்கமுங்க. எல்லாத்தையும் தனித்தனியா தட்டத்துல எடுத்து வைப்பாங்க. ஒம்பது தட்டு, பதினொரு தட்டுன்னு ஒத்தப்படைக் கணக்குலதான் தட்டுகளை வைப்பாங்க.

அப்புறமா எல்லாத்தட்டுகளையும் பொம்பளைங்க ஆளுக்கு ஒண்ணா எடுத்துக்கிட்டு பக்கத்தில இருக்கிற புள்ளாகோவிலுக்கு போவாங்க. ஆம்பிளைங்களும் கூடப்போவாங்க. அங்கெ சாமிக்கு முன்னாலெ எல்லாத்தட்டையும் வச்சு பண்டாரம் பூசெ பண்ணி. தட்டுகளுக்கெல்லாம் தீத்தம் தொளிப்பாருங்க. அப்பறம் கொண்டுட்டு போனமாதிரியே எல்லாத் தட்டுகளையும் பொம்பளைங்க எடுத்துட்டு ஊட்டுக்கு வருவாங்க. அதுக்குள்ள ஊட்டு உள்வாசல்லெ வண்ணான் மாத்து விரிச்சு, முக்காலி வச்சு, புள்ளாறு புடிச்சு வச்சிருப்பானுங்க. இந்த தட்டுகளை எல்லாம் அந்த மாத்து மேல வைப்பாங்க. ரெண்டு குத்துவெளக்கு வச்சு, எண்ணைஊத்தி, பொருத்தி வச்சிருப்பாங்க. 

அதுக்குள்ள மொறைக்கார பசங்க எல்லாம் சேர்ந்து ஊட்டுத்திண்ணைலெ ஒரு ஓரத்தில பச்ச தென்னை மட்டைகள வச்சு ஒரு மறைப்பு கட்டி அதுக்கு ஒரு திட்டி வாசலும் வச்சிருப்பாங்க. இதுக்கு பச்சக்குடிசன்னு பேருங்க.
அப்பறமா சமஞ்ச புள்ளயக்கூட்டிட்டு வந்து  மறைவா உக்கார வைச்சு அத்தைக்காரிக எல்லாம் தண்ணி வாத்துவுடுவாங்க. அப்பறம் ஊட்டுக்குள்ள கூட்டிட்டுப்போய் புதுத்துணிகள உடுத்தி, அலங்காரம் பண்ணி, கூட்டிட்டு வந்து மாத்து மேல போட்டிருக்கிற முக்காலிலெ உக்கார வப்பாங்க. வண்ணாத்தி தீப்பந்தம் புடிச்சுட்டு இருப்பாங்க. நாசுவனும் கூட இருப்பானுங்க. மாமனூட்டில இருந்து வந்திருக்கிறதில வயசான சுமங்கலி பொம்பளதான் சீரு பண்ணுமுங்க. தெரியாததெ அப்பப்ப நாசிவப்பையன்தான் சொல்லிக் குடுப்பானுங்க. (இந்த நாசிவன் எங்க ஆளுகளுக்கு சேந்தவன்தானுங்க. அவன எதுக்காக நாசுவனா வச்சாங்க அப்படீங்கறதுக்கு ஒரு கதெ இருக்குதுங்க. அதெ அப்றமாச்சொல்றனுங்க).



சீர்க்காரம்மா தட்டுகளுக்கெல்லாம் தண்ணி சுத்திப்போட்டு, கப்பூரம் பத்தவச்சு எல்லாத்துக்கும் சுத்திக்காட்டிட்டு, புள்ளக்கும் காட்டிட்டு துண்ணூரு வச்சு உடுமுங்க. எல்லாரும் சாமி கும்பிட்டுக்குவாங்க. அப்பறமா அத்தைமாருங்க, நங்கையா, கொளுந்தியா எல்லாரும் புள்ளக்கி கன்னம், கையிலெ எல்லாம் மஞ்சப்பூசி, பொட்டு, பூவு எல்லாம் வச்சு உடுவாங்க. இதெல்லாம் முடிஞ்சு புள்ளயக்கொண்டுபோயி திண்ணையில கட்டி வச்சிருக்கிற அந்தப்பச்சக்குடிசைல உடறதுக்கு கூட்டிட்டுப்போவாங்க. சீரு பண்ணின புள்ள அந்தப்பச்சக்குடிசைல அஞ்சு நாளெக்கி இருக்கோணுமுங்க.

இப்பத்தானுங்க அந்த மொறை மாப்பிள்ளைங்க இருக்காங்களே, அவுங்க பெரிசா ரகளை பண்ணுவாங்க பாருங்க.....

மீதி அடுத்த பதிவில்