கடைசி பகுதி.
பச்சக்குடிசைக்குள்ள விடுவதற்காக சமஞ்ச புள்ளயக்கூட்டிட்டு வரப்போறாங்கன்னு தெரிஞ்ச உடனே முறை மாப்பிள்ளைகள் அந்த குடிசைக்குள் போய் உட்கார்ந்து கொள்வார்கள். புள்ள வந்து குடிசவாசல்ல நிக்கும். இந்தப்பசங்களெ வெளில வாங்கடான்னா, எனக்கு இந்தப்புள்ளய கட்டிக்கொடுக்கறேன்னு சொன்னாத்தான் வெளில வருவேன்னுட்டு ஒரே ரவுசு பண்ணுவாங்க.
பொண்ணோட அம்மா “சரி, பொண்ணக்கட்டிக்குடுக்கிறன்னு”சொன்னா, பொண்ணோட அப்பா சொல்லோணும்னுட்டு ரகளை பண்ணுவாங்க. பொண்ணாட அப்பனும் “சரி, மாப்ள, பொண்ணக்கட்டிக்குடுக்கறம்”னு சொன்ன பிறகும் இதெல்லாம் பத்தாது, பொண்ணுப்புள்ளயே கட்டீக்கறன்னு சொன்னாத்தான் நான் வெளில வருவேன்னு ஒரே ரகளையாக்கிடக்குமுங்க. அப்றமேல் நாலுபேரு சமாதானம் பண்ணி, அவங்கவங்க சக்திக்கு தகுந்தாமாதிரி. நூறோ, ஆயிரமோ இல்லைன்னா ஒரு பவுன் காசோ குடுத்து அவங்களெ வெளியில வரவைப்பாங்க.
அப்பறம் அந்த சீர் பண்ணுன புள்ளய பச்சக்குடிசைக்குள்ள உக்கார வைப்பாங்க. தொணைக்கு அஞ்சாறு சோடிப்புள்ளைங்களும் இருக்குமுங்க. அந்த சமைஞ்ச புள்ள அந்தக்குடிசைக்குள்ள மூணு நாளு அல்லாட்டி அஞ்சு நாளு இருக்கோணுமுங்க.
அப்பறம் வந்திருக்கற ஒரம்பறைக்கெல்லாம் விருந்து நடக்குமுங்க. விருந்தில ஒப்பிட்டு கட்டாயமா இருக்குமுங்க. சாப்பிட்டு முடிச்சுட்டு எல்லாரும் அவங்கவங்க ஊட்டுக்கு போயிருவாங்க.
இந்த நாளுகள்ல சொந்தக்காரங்க எல்லாம் பலகாரம் பட்சணம் எல்லாம் கொண்டுவந்து புள்ளக்கி கொடுப்பாங்க. எல்லாம் புள்ள தாட்டியா வளருட்டும்னுதானுங்க. யாராச்சும் மொறக்காரங்க பலகாரம் கொண்டுவல்லீன்னா, இந்தப் புள்ளயோட அம்மாக்காரி பேசற பேச்சு நாண்ட்டுட்டு சாகலாம்போல இருக்குமுங்க. “இவ புள்ள சமஞ்சப்ப நாம்போயி கோயமுத்தூரு கடைவீதியிலெ துணியெடுத்துட்டு அய்யரு கடெலெ பலகாரம் வாங்கீட்டு போயீஈ, மூணு நாளு அவ ஊட்டுலெ இருந்து, புள்ளக்கி வேணுமுங்கறதெச் செஞ்சுபோட்டுட்டு வந்தேன். இவளுக்கு இப்ப ராங்கியாப்போச்சு. சமஞ்ச புள்ளக்கி ஒரு வடைவாளக்காயி வாங்கிட்டு வர்ரதுக்கு முடியலயாக்கும்?” இப்படி நீட்டி மொளக்கீட்டு இருக்கறப்பவே அவ வந்திருவா.
ஒடனே இவ பேச்சு திரும்பும் பாருங்க, “நங்கேஏஏ (அண்ணி), எங்க உன்னயக்காணம்னு இப்பத்தான் சொல்லி வாய் மூடலே, நீங்க வந்துட்டீங்க. சேதி கெடச்சா நிக்கமாட்டீங்களே, எங்கயாச்சும் ஒடம்புக்கு முடியாமப் போச்சோன்னு ஒரே கவலையாப்போச்சுங்க. ஊட்லெ அண்ணன், கொளந்தைக எல்லாம் நல்லா இருக்காங்கல்லோ, வந்து பாரு ஒன்ற மருமகளெ” என்று வரவேற்பு பெரமாதமாயிருக்குமுங்க.
வர்ற ஒரம்பறைங்க எல்லாம் புள்ளக்கி புத்தி சொல்லுவாங்க. “இத பாரு, இப்ப நீயி பெரிய புள்ள ஆயிட்ட, இனி வெளயாட்டுப்புத்தியெல்லாம் உட்டுடோணும். சோறாக்கிப்பளகிக்கோணும், நாளெக்கி போற எடத்துல “புள்ள வளத்துருக்கா பாருன்னு” யாரும் ஒங்கம்மாவெ சொல்லீரப்படாது, பாத்துப்பளகிக்கோ” அப்படீன்னு புத்தி சொல்லிட்டுப்போவாங்க.
இந்த நாட்களில் இந்தப்பொண்ணை எம்பையனுக்கு கட்டிக்குடு, எம்பையனுக்கு கட்டிக்குடுன்னு, ஒரே கேடியமா இருக்குமுங்க. நெறய சமயங்களிலெ கலியாணமே முடிவு ஆகிடுமுங்க. அப்படி மொற மாப்பிள்ளைக்கு குடுக்கமாட்டேன்னு சொல்லீட்டா அப்பவே சண்டை வந்திருமுங்க. ஜாக்கிரதையாப் பேசோணுமுங்க. இப்படித்தானுங்க எங்க அத்தைக்கு சீர் செய்யறப்போ பொண்ணு கேக்கற ஞாயத்துல வெவகாரம் பெரிசா ஆகிப்போயி, எங்க குடும்பமே ஊரைவுட்டுட்டு கோயமுத்தூரு வந்துட்டமுங்க.
இப்படி சமைஞ்ச புள்ள அந்தப்பச்சக்குடிசைலெ மூணு நாளு இல்லாட்டி அஞ்சு நாளு இருக்குமுங்க. சோறு தண்ணி எல்லாம் அந்தக் குடிசக்குள்ளதானுங்க. அந்த நாளு முடிஞ்ச அன்னிக்கு பொளுது உளுந்தபொறவு அந்தக்குடிசய பிரிச்சு நாசிவப்பையன், புள்ள, கூட அஞ்சாறு பேரு எல்லாருமா ஊருக்கு வெளியிலெ கொண்டு போயி அத தீ வச்சு எரிச்சுப்போட்டு வருவாங்க. முட்டலும் எரியற மட்டும் இருக்கமாட்டாங்க. ஊட்டுக்கு வந்ததும் புள்ளக்கி தலயோட தண்ணி வாத்து ஊட்டுல சேத்திக்குவாங்க. அப்புறம் மறுச்சு நாளைலிருந்து அந்தப்புள்ள வழக்கம் போல வேலயப்பாத்துட்டு இருக்குமுங்க.